காப்பியக்கோ Ahamed Jinnahsherifudeen அவர்கள் இம்முறை துபாய் வந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் சந்திக்க முடியாத சூழல்; நிலவிவந்த பெருந்தொற்று அச்சம், உடல்நிலை வயது காரணமாக சந்திப்பு நிகழவில்லை.
நிலைமை தற்போது சீராக மீண்டிருப்பதாலும், காப்பியக்கோ அவர்கள் தடுப்பூசிகள் இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்டுவிட்டதாலும், அடுத்தமாதம் ஆஸ்திரியா பயணம் இருப்பதாலும் சந்திக்க மிக ஆவல் பூண்டிருந்தார். எங்களுக்கும் ஆவல் மிகுந்திருந்தாலும் மேற்சொன்ன விசயங்களை கருத்திற்கொண்டு அமைதி காத்தோம்.
ஆனாலும் தேடிடும் வாஞ்சை நெஞ்சங்களின் கூடல் ஆத்ம மகிழ்விற்கு வழிவகுக்குமென்பதாலும், சந்திப்பு மனக்களைப்பை நீக்குமென்பதாலும் "அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும்" என்ற ஒப்பற்ற காவியத்தின் கூட்டணிச் சந்திப்பு மீண்டும் நிகழ்ந்தது.
காப்பியக்கோவின் அன்பிற்கும் ஆவலுக்கும் இணங்க காப்பியக்கோவை அவர்தம் மகனார் முஜீப் மிகுந்த கனிவோடு அழைத்துவந்திருந்தார், நேற்று எமீரெட்ஸ் டவரில் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் கழித்து, புரவலர் வெள்ளம்ஜி முகம்மது இக்பால் Jamal Mohamed Mohamed Iqbal அவர்களும் நானும் காப்பியக்கோவை நேரில் சந்தித்த்து அகமகிழ்ந்தோம்.
நேரம் போனதே தெரியாமல் பற்பல நினைவுகளையும் "அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும்" என்ற எங்கள் காவியம் குறித்தும் பேசி இன்புற்றோம்.
பிறகு காப்பியக்கோ தற்போது புதிதாக ஆக்கியிருக்கும் "மைவண்ணன்" என்ற இராமபிரானின் காவியத்தைப் பற்றியும் ஒரு இஸ்லாமியர் எழுதியுள்ள இராமகாதைக்காய் இலங்கை கம்பவாரிதி அவர்கள் தமக்கு செய்த தகைமை குறித்தும் பகிர்ந்தார் செய்திகள் செவிவழி புகுந்து உள்ளம் நிறைந்தது.
மேலும், இறைவனிடம் நபிகள் நாயகத்தின் வஸீலாவை முன்னிறுத்தி காப்பியக்கோ அவர்களால் எழுதப்பெற்றிருக்கும் இறையருள் மாலை குறித்தும் உரையாடினோம். அதை புரவலர் வெள்ளம்ஜி முஹம்மது இக்பால் அவர்களின் பெற்றோர் ஹாஜி.ஜமால் முஹம்மது - தாவூத் பேகம் இவர்களுக்கு சமர்ப்பணம் செய்த விருப்பத்தை பொருத்தத்தை அன்பை நெகிழச் சொன்னார். பிறகு அதை புரவலருக்கு அன்பாய் அளித்து மகிழ்ந்தார்.
இனிய உணவுகள் அன்பின் இசை நிறைந்த பகிர்வுகள் என உள்ளம் பூரிக்க சில புகைப்படங்கள் எடுத்து பிரியமாய் இனியொரு ஒன்று கூடலில் சந்திப்போமென விடைபெற்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக