28 செப்டம்பர் 2021

சுல்தான் பாட்ஷா மாமு



அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் என்பது குறள். அது போல பொறாமையோ, பேராசையோ, வெறுப்போ, தீஞ்சொற்களோ பேசாத மிக பாமரத்தனமான மனிதர்.

வயது பார்த்து பழக்கம் கொள்வதெல்லாம் இவருக்கு தெரியாது சிறியவர்கள் முதல் எல்லோரும் இவரின் கூட்டாளிகள்.

என் மிகச்சிறுவயதில் பள்ளி விடுமுறை நாட்களில் இவரோடு என்போன்ற சின்னஞ்சிறுவர்கள் கூட்டம் பின்னால் போகும். காடோ செடியோ வயலோ வரப்போவெனச் சுற்றுவோம்..

அந்நாளில் ஒரு மொட்டை தென்னை மரத்தில் கிளிக்குஞ்சுகள் இருக்க, வளர்க்க விருப்பமா?வேண்டுமா எனக் கேட்டு எனக்கு பரிசளித்தவர். முடியோ சிறகுகளோ முளைக்காத அதை பிள்ளை போல வளர்த்ததும், ஈராண்டுக்கு பின் பெரிதாக பின் பறந்து சென்றதும் தனிக்கதை.

சென்றமுறை ஊர் சென்றபோது கூட சந்தித்து மகிழ்ந்தேன் (போட்டோ அப்போது எடுத்தது தான்11th SEP'2020) இவர் போன்றோரை சந்திக்கும் போது தான் நம் ஆன்மாவே மகிழ்வது போல உணரலாம்.

சூதுவாதற்று மனதில் ஏதும் வைக்காமல் இருப்பவர்கள் இறைவனின் செல்லப்பிள்ளைகள். எவருக்குத் தான் இவரோடு ஆசை தீர கதைக்கவும், நேரம் செலவிடவும் அவாவிருக்காது. அவனும் விரும்பினான் போல..

செல்ல ஆன்மா விடை பெற்றுச் சென்றுவிட்டது.
இன்று சுல்தான் பாட்ஷா மாமு காலமாகிவிட்டார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
(அவனிடமிருந்தே வந்தோம் அவனிடமே மீள்வதுமாகும்.)

துஆ செய்வோம்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: