23 பிப்ரவரி 2026

மழை

மனிதனின்பால் 
பொழியும்
இறைவனின் அருட்பால்.
*
சூல் கொண்ட காற்றுக்கு பிறந்த
கால் கொண்ட மேகக்குழந்தைகள்.
*
பூலோக வனத்தின் 
அன்னைக்கரங்கள் 
"கண்ணே வா" என்றழைக்க 
தாவி வரும் தண்ணீர் குழந்தைகள்.
*
வெளியே தெரியாத 
வேர்களின் வேண்டுதல்களை ஏற்ற 
வானத் தாயின் அமுதம்.
*
தண்ணீர் வடிவில் 
தனிப் பெருங் கருணை.
*
பூமி உயிர்க்க வரும் சாமி.
*
ஜா.மு.
21-02-2026



06 பிப்ரவரி 2026

வீண்



காலையில் கண் பட்டதெல்லாம் மலர்மாலை தந்தது
சாலையோர புல் கூட சலாம் சொன்னது
அடி வைத்த மண் அருமை மகனே என்றணைத்தது
காற்றின் இறகுகள் மனதை வருடி இதமான ஊற்றைத் திறந்தது
வேற்று கிரகமாயிருதும் விடியல் நிலா வாழ்த்திசைத்தது.
அகமது குளிர முகமது பூத்தது.

இப்படியாக இனிதே செல்கையில்..

நாளின்  இனிமை எல்லாம் கொன்ற
வெற்று மனிதன்  இவனை மட்டும்
ஏன் பார்த்தோமென்றானது.
*
உள்ளூர புன்னகைத்தாலும்
எள்ளு வெடிக்கும் முகம் காட்டுகிறான்,
வீணானது அவன் மானுடப்பிறப்பு.

-ஜா.மு
06-02-2026