16 ஜனவரி 2015

மனசெல்லாம் மாட்டுப் பொங்கல்


மனசெல்லாம் மாட்டுப் பொங்கல்:

சின்னஞ்சி
று வயதினிலே
பொங்கல் திருநாள் வந்தாலே
குதூகளித்து நிற்போம்;
மறுநாள் மாட்டுப்பொங்கல்
மட்டில்லா மகிழ்ச்சியில்
கட்டில்லாது ஆடிடும் மனம்!

****
எங்கள் வீட்டில்
மாடுகள் இருந்தது
காலையிலேயே  உற்ச்சாகம் ஊஞ்சலாடும்,
வண்டிக்காரர்கள் வருவார்கள்
காளைகளை குளத்திற்கு ஓட்டிச்சென்று
நீரில் முங்கி ஊறவிட்டு 
வைக்கோலால் தேய்த்துக்குளிப்பாட்டி
சாலையோரம் ஓட்டிவர…..
மாடுகளில் மனமிழந்து
என்னையே  நான் மறந்து -கூடவே
பின்னால்  நானும் நடப்பேன்.

****
குளிப்பாட்டிய மாட்டிற்கு
களிப்பூட்டிடும் மகிழ்ச்சியுடன்
புதுக்கயிறு மாற்றி
வண்ணவண்ணமாய்
வாங்கிவந்த காகிதமாலையை
அய்யாசாமி மூப்பனாரும், ராஜேந்திரனும்
கலியபெருமாளும் காளிமுத்துமாக
நேர்த்தியாக கட்டுவார்கள்.
உடலெங்கும் வண்ணப்பொட்டிட்டு
கொம்பிற்கும் கம்பீர அலங்காரங்கள் செய்ய
பக்கத்திலிருந்து மெய்மறந்து 
பார்க்கும் எனக்கு பரவசம் கூடிடும் 
பறவையாய் மனம் மாறிடும்.
அடடா.. அத்தனை  செலவையும்
முத்தென ஒரு புன்னகையோடு
அத்தாவெனும் என் பாட்டன்
அழகுறவே செய்வார்!

****
எங்கள் வீட்டுக்
கன்றுக்குட்டிக்கு மட்டும்
நானே  அதைக் குளிப்பாட்டி
நயனுற அத்தனையையும் செய்து
அத்தைத் திருநாள்தனிலே
கையில் கயிறுபிடித்து
தெருவழியாய் வீட்டிற்கு ஓட்டிவருவேன்
கன்றுக்குட்டியென துள்ளிடும் மனதெனது.

****
குடியாவனவர் வீதிகளுக்கு சென்றாலோ
விடிகாலையிலேயே அத்தனை மாடுகளுக்கும் 
அமர்க்கள  அலங்காரம்
கழுத்துகளில் சலங்கைச்சாரம்
கொம்புகளுக்கு எண்ணைத்தடவி
பளபளக்கும் சில மாடு
வண்ணங்கள் பல தீட்ட
பலக்கொம்பில் அழகொளிரும்.

****
வண்ணச்சாயம் 
வகைவகையாய் தோரணம்
தொகைத் தொகையாய் எழிற்கூட்டும்
மாட்டுவண்டி ஏர்கலப்பை
எல்லாவற்றுக்கும் கூட.

****
பிறகு,
காலையிலேயே அன்றைக்கு
காளைகளுக்கு சிறப்பு உணவு
வாழைப்பழம்
பருத்திக்கொட்டை 
புண்ணாக்கில் பலவகைகள்
என எல்லாமும் கொடுப்போம்!
மாடுகளும் மகிழும்
மனமெல்லாமும் மகிழும்

****
இன்றோ..!மாடும் இல்லை
மாட்டு வண்டியும் இல்லை
பசுவும் இல்லை கன்றும் இல்லை
நிலமும் இல்லை விவசாயமும் இல்லை
அப்படியே இருந்தாலும்
உழுவதற்க்குக் கூட வாகனங்கள் தான்
பிறகு ஏன் மாட்டுப்பொங்கல்?
பெயரில் மட்டும்!

****
அந்தோ!
அந்தநாளின் அழகிய நினைவுகளை
எங்கனம் கடப்பதாம்!
மனசெல்லாம் இருந்து
மனசினை இறுக்கும் கனவுகளை
எவ்விடம் துறப்பதாம்!


 -வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: