எங்கும் குழலோசை கேட்கிறது
என்னை அதனுள் அழைக்கிறது..!
மெல்ல.. மெல்ல..
என்னை ஆட்கொ(ல்)ள்கிறது
அந்த குழல்!
குழலால் கொ(ல்)ள்ளப்பட்ட நான்
கரைந்து அதனோடே வசனிக்கிறேன்
.
.
.
உயிரை அறுக்கும்
இந்த இசைமொழி
எங்கு கற்றாய் குழலே!
என் ஜீவனை
பறித்துக்கொண்டு போகிறாய்!
இசைக்கும் இந்த குழலோசை
உடலின் எல்லா மைக்ரோ துவாரங்களிலும்
உள்நுழைந்து உயிரோசை மீட்டுகிறது
அணுக்களிலெங்கும்
அணுக்கமாய் நீ பரவ
செயலற்று கிடக்கிறது
என் "நான்".
ஓ...குழலிசையே!
நான் கொஞ்சம்
மிஞ்சவேனும்
பார்த்துக்கொள்,
எல்லா வற்றையும்
நீயே திருடிச்செல்லாதே.
செவிப்புலன்கள் தானே
இசை நுகரும்..
இங்கே உடலெங்கும் காதுகளாக
உன் காதலில் மயங்கிக்கிடக்குதே
அது உயிரினூடே உயிர் வருட
அதே ரீங்காரத்தின் எதிரொலியில்
மோனம் பூத்து நிறையுதே!
குழலில் நுழைவது
வெறும் காற்றானால்
எப்படி இந்தப் பிரபஞ்சத்தையே
அதிரவைக்கிறது..?
அதை யாரோ
இசைக்கிறாயெனினும்
அதன் உயிரருந்தும்
நுணுக்கமாய் ஆகியது எது..?
எனக்கோ
உன் முகவரி தெரியாது...
மிக நெருங்கிக்கலந்ததால் உன்னிடம்
என்னை இழந்து
சம்பாசனை புரிந்தேன் தான்
அதனால் என்னையே நீ
நித்தியமாய் கேட்கிறாய்
உன்னை பிரியவும் முடியாமல்
என்னை இழக்கவும் முடியாமல்
தவிக்கவிட்டு விட்டு
என்னை ஏன் இம்சிக்கிறாய்?!
இனி நானெப்படி தரையிறங்குவேனாம்...!!!
உன்னோடு வெளியெங்கும் விரவி விட்டபிறகு,
ஐயோ! உன் இசையை கேட்குமுன்னே
இதை நான் யோசித்திருக்கவில்லை!
பேய்க்கு பயப்படாதவன்
முதன் முதலாய்
உன் நோய்க்கு பயப்படலாகினேன்.
நீயே வந்து என்னை
கடைத்தேற்று..
இம்முறை நீ
குழலெடுத்து வராதே!
என்னை கிரங்கவைத்த
லைலாவே.. என் குழலே...
செத்துவிட்ட என்னைஉயிரூட்டி
மீண்டும்..மீண்டும் சாகடி
உன்னில் சாவது தான்
எனக்கு எத்தனை இன்பம்.
இப்போது தான் உணர்கிறேன்
ஜலாலுத்தீன் ரூமியிடம்
எப்படி நெருங்கினாய்,
கண்ணனோடு எப்படி
ஐக்கியப்பட்டாய் என்று.
குழலின் மொழி தெரியாதவர்கள்
தப்பித்த அதிஷ்டசாலிகள்.
யாரேனும் வாருங்கள்
என் சுயம் பற்றி எனக்கு
நினைவூட்ட..!
நனவுக்கும் நினைவுக்கும்
இடைபட்ட ஏதோவொரு வெளியில்
நான் கிடத்தப்பட்டிருக்கிறேன்..
உதவிடுவீர்களா..
உங்களில் யாரேனும்?
அந்த குழலோசை
இந்நிலைக்கு கொணர்ந்துவிட்டது.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
2 கருத்துகள்:
லைலா ஒரு பிள்ளை பெறட்டும் ,குழலை விட எது இனிதென்று புரிந்து விடும் :)
உண்மை தோழர், நான் மழலை இன்பத்தை குறித்து பாடவில்லை அது நிகரற்றது இப்பாடல் குழலோசை வாயிலாக இறைக்காதலை சொல்லவந்தது
கருத்துரையிடுக