06 ஆகஸ்ட் 2017

சமரசம் செய்யாத கருத்தாளர் எச்.ஜி. ரசூல்



ஊன்றிய கருத்தால்
உள்ளத்துள் சமரசமானவர் என்பதால்
உலகத்தோரே எதிர்த்த போதும் அவர்
கருத்தில் சமரசம் செய்யாதவர்
தீட்டும் இலக்கியத்தில்
தீவிரம் காட்டினார்
திட்டும் உலகத்தினை
தரமறிந்து விட்டுக்கொடுத்தார் - ஆனாலும்
அவர்கள் நலம்பெற
ஆக்கங்கள் பலவால்
கற்றுக்கொடுத்தார்
சூஃபியிச கருத்துலகில்
ராஜாளியென பறந்தார்
சூஃபியாக்களின் பாதங்களை
பலமாக பற்றி நின்றார்
அறியாது எதிர்த்தோர்
புரியாது போரிட்டோர்
எவரையும் விட்டதில்லை யவர்
நையபுடைப்பார் பதில்படையெடுத்து அவர்
அதியற்புத கவிதைகள் செய்வார்
அதனினில் பொதிந்திருக்கும்
அத்தனை பொருள்வளம்
வித்தகம் செய்யும்
கற்பனையும் சேர்த்து
சிற்பம் செதுக்குவது போல
செதுக்கிவைப்பார்
தம் படைப்புகள் அனைத்தையும்
எல்லாம் ஒன்றென பேசிய கவிஞர்
வல்ல ஒன்றில்
வகையாய் இணைந்தார்
அதனோடு நிறைந்திட
உடல் கொஞ்சம்
தடையாயிர்ருந்தது
உயிரது உடல்விட்டேக
அத்தடையும் நீங்கிற்று
அதிர்ச்சி செய்தி சொன்ன போது
அந்தோ இங்கனம் நேர்ந்ததே என
அழுதார் ஓர் தோழர்
பின்னர் உரைத்தார்
நிச்சயம் அவருக்கு நிறைந்த
சுவர்க்கம் உண்டென்று!
கவிஞரவர்
சொர்க்கம் தாண்டி
நரகம் தாண்டி
மெய்ப்பொருளின் நடனத்தில்
மெய்மறந்தவர்
ஆதலால் இப்போதும்
அதனிலே தன்மெய்யை கலந்திட்டார்
மெய்யுறவே கலந்திட்டார்
இனி அவருக்கு கவலையில்லை
எதன் குறித்த வருத்தமும் இல்லவேயில்லை
என்று தோழரிடம் நான் உரைத்து
இன்னொன்றும்
திண்ணமாய் சொல்லிவைத்தேன்
"அவரை உலகில் இழந்ததனால்
அவரின் சிந்தனை முத்துக்களை
நாளை நாம் பெறப்போவதில்லை
அவர் பெற்ற ஞானமுதிர்ச்சியில்
எந்தப் புதிய பழத்தினையும்
இனி ருசித்தல் இயலாது
இவ்வாறான வெற்றிடத்தை
இனி யாராலும் நிறப்பிட முடியாது
இது தான் இழப்பு..
அதற்கே தவிப்பு"
***
- ஜா.முஹையத்தீன் பாட்ஷா
6-8-2017 அதிகாலை.

கவிஞர் எச்.ஜி. ரசூல் அவர்களின் மறைவு மிக வருத்தம் தந்தது, அண்ணன் அபுஹாசிமா அவர்கள் கவிஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தியை பகிர்ந்திருந்தார் ஆனால் இத்தனை விபரீதமாய் முடியும் என நினைக்கவில்லை, மாலை (5-8-17)  கவிஞர் தஞ்சாவூரான் அவரின் பிரிவுச்செய்தியை சொன்னபோது மனம் மிக வாடினேன். இறக்கும் வயதல்ல இன்னும் நிறைய இலக்கியம் தரவேண்டியவர், என்ன செய்வது இறைவன் நியதி.
மறைந்த உயர்வான சிந்தனையாளரின் வியாபகத்தை நேற்றிலிருந்து முகநூலில் உணரமுடிந்தது. ஏனோ எப்போதும் அறிஞனை, கவிஞனை செத்த பிறகே போற்றும் சமுகமாய் இது உள்ளது என்ற கேள்வியும் என்னுள் அழமாய் விழுந்தது.
அன்னாரை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதலை வழங்கப்போதுமானவன்.

கருத்துகள் இல்லை: