03 பிப்ரவரி 2015

சாலையை கடக்கும் பூனை!



அந்தப் பூனை எதையோ
கண்டு மிரண்டு ஓட்டம் பிடித்தது

அந்த நேரத்தில் ஓட வேண்டுமா..
அப்படி ஓடுவது அங்கே மிகத்தேவையா
என்பதெல்லாம் அதற்கு சிந்தனைக்கே எட்டாத ஒன்று.

ஏதோ எலியை வேட்டையாடும் தருணத்தை யொத்த
அத்தனை ஆயத்தங்களையும் மேற்கொண்டு எத்தனித்தது
ஆனால் ஒரே சனப்பொழுதில்!

அதற்கு முன்னங்கால்கள் முதலிலா
பின்னங்கால்கள் முதலிலா என்ற சிறிய சந்தேகம்
ஊடுருவியே இருந்ததை
அந்தப் பூனை காட்டிக்கொள்ளவில்லை.

சரி, ஓட்டம் எடுக்கும் அந்தப் பூனை
ஆயத்தமாகும் முன்பு
அதன் உயிர் கேள்விக்குறியாக்கபடும் அளவுக்கு
அத்தனைக்கும் அது முட்டாளாய் இருப்பதால்
சாலையை இருமறுங்கும் பார்க்கவில்லை

விரண்டு வரும் வாகனத்தை
மிரண்ட பூனை பார்த்திருந்தும்
வாகனத்தின் வலிமை அறியாத அது
இருந்தும் ஓட்டம் பிடித்தது!

வாகனத்தின் சக்கரமும் பூனையின் கால்களும்
ஒரு புள்ளியில் சந்தித்தால் சிந்தப்போவது எது
அதன் உயிரா.. அதன் குருதியா
எது முதலில் என பார்க்கும்
யாரோவின் நெஞ்சு
படபடத்து அதிர்ந்தது..
பூனையின் மீது வைத்தக் கண் வாங்கவில்லை!

இதே புள்ளியில் இப்படி சந்தித்து தான்
இதே பூனையில் சந்ததியில் வந்த பல பூனைகள்
சின்னாபின்னப்பட்டு உயிர் பறந்திருக்கிறது!
அப்படித்தான் நாமுமா என்று கணம் அது
சிந்தித்ததா என சாலையோரத்தில் நின்ற
அவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

சக்கரமும் பூனையின் கால்களும்
ஒரே புள்ளியில் சந்தித்த போது
சாவின் கயிற்றை வீசி எமன்
பூனையின் முன்னே எருமையில் நின்றான்

இந்தப்பூனை ஏதோ ஒரு அருள் பெற்றிருக்கிறது
புலியின் வாரிசுகள் தான் பூனையும் என்பதை
அதன் சாவின் நுனிச்சனம் உந்தி அழுத்தி யாபகப் படுத்த
நொடிக்கும் குறைவான பொழுதில்
குபீரென பாய்ந்து சாவின் புள்ளியை
சாவில் தள்ளப் பார்த்தது.

ஆயினும் லட்சத்தின் ஒரு பகுதியில்
அந்தப்புள்ளியில் பாய்தல் சற்று தாமதப்பட
அகப்பட்டுக்கொண்ட வாலின் மிக நுணி
சக்கரத்தில் மாட்ட
உயிர் மீண்டும் கடைசி நேர சர்ச்சைக்குள்ளானது.

வாலறுந்தாலும் பரவாயில்லை நான் வாழனும் என
பூனை நினைத்தச் சனம் சக்கரத்திலிருந்து விடுபட்டது
பூனையின் உயிர்..

ஆபத்து நிறைந்த சாலையை மிகப் பயந்து பார்த்து
மீண்ட பூனை எங்கோ பதுங்கியது
மீண்டும் சாலையை கடக்கவேண்டும் என்ற கவலையில்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: