27 மார்ச் 2021

நியாஸ்

தற்காலம் கொடுங்காலமாகத்தான் தோன்றுகிறது, அது இரக்கமே இல்லாமல் ஜீரணிக்கவே முடியாத அளவிற்கு அகால மரணத்தால் நம் அன்பிற்கினியவர்களை ஒரு அரக்க சுனாமி போல வாரி கொண்டு செல்கிறது, இதுவரை இல்லாத அளவிற்கு சமீபகாலமாக மிகச்சிரிய வயது மரணங்கள் தொடர்ந்து தொடர்கதையாகிவருகிறது..
அப்படித்தான், இன்று கூட அன்பிற்கினிய சகோதரர் முஹம்மது நியாஸ் அவர்களின் இறப்பு பேரதிர்ச்சியாய் வந்து சேர்ந்தது. அவருக்கு வெறும் நாற்பத்து நான்கு அல்லது நாற்பத்து ஐந்து மட்டுமே அகவை இருக்கும், அதற்குள் அகால மரணம் சம்பவித்து அனைவரையும் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆக்கிவிட்டது.
நியாஸ், இஞ்சினியரிங் படித்துவிட்டு சிங்கப்பூரில் பணி செய்தவர். அங்கு சென்ற ஒருசில ஆண்டுகளிலேயே அது நமக்கானது அல்ல என்று உணந்த அவர் உடனே ஊர் வந்து MSM பில்டர்ஸ் என்ற கட்டுமான கம்பெணியை நிறுவி எல்லோரும் வியக்கும் வண்ணம் அதிகமதிகம் வீடுகளை பார்ப்போர் வியக்கும் அழகில் கட்டிக்கொடுத்து மக்களின் நன்மதிப்பை பெற்றார். அவர் தொழிலை முழுமனதாக பக்தியோடு செய்த காரணத்தால் கட்டுமானத்துறையில் பெரும்பாலும் நம்மூர்களில் பின்பற்றப்படாத காலவரையறை மற்றும் பொருட்செலவு வரயறையை மிகவும் கவனமெடுத்து பின்பற்றி தன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்போடு நன்முத்திரையை பெற்றுச்சிறந்தார். இவரது நிறுவனம் மிகச்சிறந்த குழுவினரால் சிறந்த கட்டிடங்களை உரிய நேரத்தில் கொடுப்பதால் மற்ற எல்லா நிறுவனத்தைவிட அதிகம் அதிகம் மக்களை ஈர்த்து தொழில் ரீதியாக ஏறுமுகமாகவே இருந்தார்.
தொழிலையும் தாண்டி எல்லோரிடத்திலும் இன்முகம் மாறாது பழகுபவர், எனது கட்டிடப்பணிகள் சம்பந்தமாக சில ஆலோசனைகளை கேட்டபோதும் அவர் கட்டாத எனது கட்டிடத்திற்கும் ஆலோசனைகளை அன்போடு பகிர்ந்து கொண்டவர். நியாஸும் நானும் ஒன்றாக குர்ஆனை வழுத்தூர் மதஸா பள்ளியில் பாவா அப்துல் ஹை அவர்களிடத்தில் ஓதியவர்கள் என்ற அடிப்படையில் பாலிய நட்புணர்வு எங்களிடம் உண்டு அதை என்றும் நினைவு கொண்டு நட்பு பாராட்டியவர்.
அவர் தந்தை முஹம்மது சுல்தான் எனது தந்தையாரின் மிகநெருங்கிய நண்பர் மிகச்சிறந்த குணநலம் கொண்டவர், அவர் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த போது ஐம்பத்தெட்டு அறுபது வயதிற்குள் இறந்தபோதே இப்படி சிறுவயதில் இறந்துவிட்டாரே என்ற அதிர்ச்சி எங்களை ஆட்டிபடைத்தது, ஆனால் நியாஸ் வெறும் நாற்பத்து சொச்சம் வயதிலேயே இறையழைப்பை ஏற்றதை என்னவென்று சொல்வது.. அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு எவ்விதம் ஆருதல் வந்து சேரும்..???? இது அவர்களுக்கு பெரும் துயரத்தின் பெருங்கடல் அல்லவா!!!
இறைவா! அன்னாருக்கு ஆத்ம சாந்தியை கொடுத்து நித்திய ஜீவனாக்கு. அவரின் குடும்பத்தாரை அரவணைத்து உதவு.
நண்பர்களே, இவ்வாறான அகால மரணங்கள் உணவுக்கலாச்சாரம் வாழ்வியல் முறைகளில் மாறி உடல்நிலையை பராமறிக்காது குருட்டாம்போக்கில் போகும் நமக்கு நம் உடல் நலத்தை பேணுதல் என்ற ஒற்றை அலாரத்தை தொடர்ந்து அடித்துக்கொண்டிருக்கிறது, அதற்கு செவியும் கொடுத்து உணர்ந்து செயல்படுவோம். இது நமக்காக இல்லாவிட்டாலும் நம் குடும்பத்திற்காகவாது காலத்தின் கட்டாயம் ஆகும்.
- ஜா.மு.
05-02-2021
6:26 pm

கருத்துகள் இல்லை: