17 மே 2021

ஃபக்கீர் லியாக்கத் அலி மறைவு:


தஞ்சை மாவட்டம் எங்கள் வழுத்தூரில் ரிபாயிய்யா ஃபக்கீர் கலீபா லியாக்கத் அலி அவர்கள் (10-05-2021) மறைந்ததை அறிந்து அதிர்ச்சியுற்றேன்,
இஸ்லாமிய சூஃபி வழி முறையில் ரிபாயியா என்ற ஞானப்பாட்டை(தரீக்கா)யின் தமிழகத்தின் முக்கிய கலீபாவாக திகழ்ந்தவர் அவருக்கு ரஹ்மத்துல்லாஹ் ஷாஹ் என்று பட்டம் சூட்டப்பட்டு அந்த ஞானப்பாட்டையினர் மகிழ்ந்தனர். ரிபாயாயியா பக்கீர்மார்கள் தனக்கென்று எதையும் சேமித்து கொள்ளாதவர்கள் பேராசை இல்லாதவர்கள் வழிப்போக்கர்களைப் போல வாழ்பவர்கள். அந்த பாட்டையின் கோட்பாட்டிற்கு அப்படியே தன்னை ஆட்படுத்திக் கொண்டு இயற்கையோடு இயற்கையாய் எதாரத்தமாய் வாழ்வை வாழ்ந்த பெருமகனார் தான் மறைந்த லியாக்கத் அலி மாமு.
ரிபாயா ஃபக்கீர்மார்கள் "தஃப்" என்ற ஒலிப்பறையை இசைத்து பாடல்களாக ஆன்மீக கருத்துக்களையும் இறைநேசர்களின் புகழ்களையும் பாடி அதன் மூலம் கிடைக்கப் பெறும் அன்பளிப்புகள் மூலம் தங்கள் வாழ்வை நடத்தக் கூடியவர்கள்
(இது போன்ற ரிஃபாயிய்யா பக்க்கீர்கள் தான் நாட்டினுடைய சுதந்திரப் போராட்டத்தில் சுதந்திர வேட்கையை தங்கள் பாடலிசை மூலம் பரப்புவதில் பெரும் சேவை செய்தவர்கள்).
அந்த வகையில் ரிபாயிய்யா தரீக்காவின் கலீஃபாவாக இருந்த லியாக்கத் அலி மாமு அவர்கள் அவருடைய ரிபாயிய்யா குழுவிற்கு தலைமை ஏற்று தமிழகத்தில் எல்லா திக்கு திசைகளும் சென்று அங்குள்ள இறைநேசர்களின் கந்தூரி விழாக்களில் பங்கெடுத்து தங்கள் ஆன்மீக பணியை திறம்பட நடத்தியவர், ஞான பாடல்களையும் ராத்திபு என்ற இறை நினைவை கூறும் கூட்டங்களான திக்ரு மஜ்லிஸுகளையும் ஏராளமாக நடத்தியவர்.
லியாக்கத் அலி மாமு அவர்கள் வாள் வீச்சு சிலம்பம் போன்ற பல கலைகளில் வித்தகர் தங்களுடைய முன்னோடிகளின் வழிமுறையை பிசகாது பிறழாது பற்றிப்பிடித்து அந்த கலை வடிவங்களுக்கு கடைசி சாட்சியாய் இருந்தவர், தங்களது வாழ்நாளில் எண்ணிறந்த பேர்களுக்கு அந்த கலையை கற்றுக் கொடுத்தவர்.
இன்று சிலம்பம், வாள்வீச்சு போன்ற கலைகளை கற்று கொடுப்பவர்களும், இது போன்ற வீர கலைகளும் மறைந்து போன அல்லது அருகிப் போன சூழலில் லியாக்கத் அலி மாமு அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
எங்கள் வழுத்தூரில் நடக்கும் மெய்ஞான பேரொளி முஹ்யித்தீன் ஆண்டகையின் விழாவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே சிலம்ப ஒத்திகையும் மற்றபிற வீர கலைகளின் ஒத்திகைகளும் தொடங்கிவிடும் அந்த காலங்களில் தெரு நிறைய இளைஞர்கள் கூட இரவு நேரங்களில் இளைஞர்களுக்கு சிலம்பக் கலையை அவர் கற்றுக் கொடுத்த பசுமை மாறாத நினைவுகளை நான் எண்ணிப் பார்க்கிறேன்.
சமீபத்தில் அவருக்கு ஏதும் நோய்நொடி என்று ஏதும் அறிந்திருக்கவில்லை, ஆனாலும் அவரின் திடீர் மறைவு பெரும் மன வலியை ஏற்படுத்தியது, நேற்று கடைத்தெருவில் பார்த்ததாக என் மகன் கூறினார்; நேற்று முன்தினம் என்னைப் பார்த்து சிரித்தார் என்று எனது தங்கை மகன் கூறினார் இன்றோ எல்லோரையும் அழவைத்து விட்டு சிரித்த முகத்துடனே கண் மூடிக் கொண்டார் லியாக்கத் அலி மாமு.
நோன்பு கால கட்டங்களில் சஹர் நேரங்களில் மக்களை துயிலெழுப்பும் பாரம்பரிய நிகழ்வைதவறாமல் ஆண்டாண்டு காலமாய் செய்து வந்த லியாக்கத் அலி அவர்கள் இந்த ஆண்டும் பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் வரை அதையே செய்து முடித்திருக்கிறார்.
லியாக்கத் அலி மாமு அவர்கள் சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழும் பாக்கு போட்டு கரை படிந்த பற்கள் வாயின் இருபுறமும் கடைசிவரை தெரியும் அந்த வெள்ளந்தி மனிதரின் சிரிப்பு பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கும் கள்ளம் கபடமில்லாத அற்புத மனிதர் அவரை நினைத்தாலே அந்தக் கபடமற்ற சிரிப்பு மட்டும் தான் நினைவில் வரும்.
அதுபோல ஊர் பக்கீர்ஷா என்ற முறையில் எல்லா நல்லது கெட்டதுகளிலும் கலந்து கொண்டு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. ஊரில் யார் இறந்தாலும் அவர்களுக்காக குழி வெட்டுவதிலிருந்து இறுதி காரியங்களை மிக நேர்த்தியாக செய்வது வரை அவரின் அர்பணிப்பான சேவை மனம் வேறு யாருக்கும் வராது.
வீண் ஜம்பம் காட்டும் சிலர் வார்த்தைகளால் அவரை துளைக்கும் போதும்கூட; ஊரார் முன்னால் தன் வறட்டு ஆளுமையை காட்ட வேண்டும் என்று கீழாக நடத்திய போதும் கூட அந்த புன்னகை மாறாமல் சிரித்துக்கொண்டே ஏற்கும் அவரது பெருந்தன்மையும் பக்குவமும் அரிதினும் அரிதானது.
லியாக்கத் அலி மாமு அவர்களது இழப்பு இஸ்லாமிய பாரம்பரிய சமூக பண்பாட்டு கலாச்சாரத்திற்கான பெரும் பேரிழப்பு. பக்கீர்கள் குறைந்துவிட்ட அல்லது முற்றும் அருகி விட்ட இந்த காலத்தில் அந்த துறைக்காக அப்பழுக்கற்ற வெள்ளை மனத்தோடு சேவை செய்த வித்தகரின் மறைவு என்றுமே ஈடு செய்யமுடியாதது.
அவரது வாழ்க்கையில் தான் எத்தனை சோகங்கள் எத்தனை இடர்பாடுகள் எல்லாவற்றையும் மெய்ஞானிகளின் பேரின்ப வழிகாட்டுதல்களாலும் அவர்களின் நினைவுகளாலும் கழித்து இன்பத்தையும் துன்பத்தையும் ஒருவாறே அணுகி வெற்றி அடைந்த அந்த உயர்ந்த நல்ல மனிதரின் ஆன்மா இன்று இறையேகி பரிபூரணத்தில் நிறைந்துவிட்டது; அவர் ஆன்மா அத்தர் ஜவ்வாது போன்று மணக்கிறது; அவர் சதா காலமும் நினைத்துக்கொண்டிருந்த முஹைய்யதீனிய பெருஞானநிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார். அவரின் சூக்குமம் ரிஃபாயிய்யாவின் ஞானக்கூத்தை ஆடி மகிழ்ந்து கொண்டிருக்கும்.
இனி அவரின் தாயிரா "தஃப்" (ஒலிப்பறை) ஏகாந்த நிறைவில் எந்நாளும் இடையறாது இசைத்துக்கொண்டே இருக்கும்.
அல்ஹம்துலில்லாஹ். அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் வ அலா ஷைகு முஹையத்தீன் குத்புல்லாஹ்.
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
11-05-2021
1:34 அதிகாலை.

கருத்துகள் இல்லை: