பல்லவி:
சிங்கத்தின் கம்பீரம் வெல்லும்
பாடகர் பெருந்திலகம் - குரல்
வங்கக்கடல் முழக்கம் - போலே
என்றும் காற்றினில் எதிரொலிக்கும் நெஞ்சம்
நொடியினில் தனை இழக்கும்
அனுபல்லவி:
சிம்மக்குரலோனே..
சீர்மிகு இசைமுரசே..
தமிழர் தம் தவக்குரலே..
தீனிசைத் தேம்பாகே..
சிம்மக்குரலோனே..
சீர்மிகு இசைமுரசே..
ஈ எம் ஹனீபாவே..
எங்களின் இதயத்தில் நிறைந்தவரே..
சரணங்கள்:
1.
மொழியையும் மண்ணையும்
விழியென நேசித்த மாபெரும் போராளி
வழியினை வாழ்வினில்
சுயமரியாதைச் சுடர்விட வாழ்ந்திருந்தார்
தந்தைப் பெரியார் அறிஞர் அண்ணா
கொள்கையை தினம் வளர்த்தார்
நண்பர் கலைஞர் அரசியல் வாழ்வில்
குரலாய் ஒலித்திருந்தார் - கழகத்தின் குரலாய் ஜொலித்திருந்தார்
திராவிடச்சிந்தனை நாடாள நாட்டில்
குரலாய் ஒலித்திருந்தார்
இசையென்னும் கலையால்
மதபேதம் கடந்து
விசைமிகு புரட்சி செய்தார் - ஹனீபா
திசை எல்லாம் புரட்சி செய்தார்
2.
ஆருயிர் நபிகள் அழகிய சரிதத்தை
பாங்குடன் அவர் பாடி
இன்னலை இறையருள்
இனிதே வென்றதை இசையினில் நிதம்பாடி
பாமரர் மனதிலும் பயகம்பர் பேரன்பை
ஏற்றியத் திருமகனே
இறைநேசச் செல்வர்கள் முறையான திருவாழ்வைப்
போற்றிய பெருமகனே - பாடலில்
ஏற்றிய பெருமகனே
3.
தீனிசைப் பாடகர் தினம் நூறு வந்தாலும்
இவர் தான் முன்னோடி
எவர் முயன்றுச் சிறந்து பாடுவோரானாலும்
இவருக்கே பின்னாடி
உச்சஸ்தாயில் இப்போதும் பாட
இவர்போல் ஒருவரில்லை
லட்சோப லட்சம் மக்களின் மனதில்
விருட்சமாய் நிலைப்பெற்றார்
நூற்றாண்டின்
கலை விளக்காய் நிலைப்பெற்றார்.
-ஜா.முஹையத்தீன் பாட்ஷா
26-11-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக