அற்புதம் அம்மாளை நினைத்தால்..
நம்பிக்கையற்ற கேள்விகளே
விடையாய் விரியும்.
அற்புதம் அம்மாளை நினைத்தால்..
வாழ்வை வெறுத்த..
சோர்ந்த மனதின்
அவநம்பிக்கை மலைகள் தான்
மலைப்பாய் தெரியும்.
அற்புதம் அம்மாளை நினைத்தால்..
நேர்மையற்ற அரசியல்வாதிகளின்
மீதான கோபம் ஊற்றெடுக்கும்
அற்புதம் அம்மாளை நினைத்தால்..
குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி
ஒரு காலமும்
தன்னை நிரூபிக்க
இந்தியாவில் இடம் இல்லையே
என ரணமாகும்
அற்புதம் அம்மாளை நினைத்தால்..
ஆயிரம் உடல் கோளாறு உள்ள
கைதியாய் இருந்தும்
"அவன் வெளிவந்தால்..."
என அச்சுறுத்தும்
செய்திக்காக வாய் கூசாது
பொய் பேசிப்பேசியே
விடுதலையைத் தடுத்த கேடுகெட்ட
வடபுலத்து ஊடகங்களின்
ஊளை ஞாபம் வரும்
அற்புதம் அம்மாளை நினைத்தால்..
புரிந்துகொண்டும்
புரிந்துகொள்ளாது கொல்லும்
நீதித்துறையின் மீதிருந்த
நம்பிக்கை கரைந்துருகும்
அற்புதம் அம்மாளை நினைத்தால்..
அலைந்து தேய்ந்த கால்கள்,
அழுதழுது உப்புக்கறைத் துடைத்து
உப்பிய முகம்
நயவஞ்சர்களையே கண்டு
அலுத்த மனம்
இதெல்லாம் தான்
நினைவில் வரும் எனினும்
இவர் சரிவதற்குள்
ஏதாவது சரியாக
நடந்திடுமா என்ற
ஏக்கமும் கூட வரும்.
அம்மா!
இந்தியாவில் நம்ப முடியாத
அதிசயம் நடந்தே விட்டது
இன்று உங்கள் சட்டப் போராட்டம்
வெற்றியாகி நிற்கிறது
தமிழ்நாட்டின் வீதியெங்கும்
அவ்வளவு மகிழ்ச்சி வெள்ளம்
உங்கள் அன்பு மகன்
பேரறிவாளன் விடுதலையாகிவிட்டார்.
-ஜா.மு
18-05-22
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக