வசந்த காலங்களில்
வாழக் கொடுத்து வைக்காத கலியுகத்துக் குயில்கள்
வெயில் காலங்களைச் சிலாகித்து
வெண்பா படிக்கிறது.
***
வெல்வெட்டுத் தோற்கும்
அன்றலர்ந்த கோழிக்குஞ்சுகளின்
மென் ஸ்பரிசம் உணராத
கல்வெட்டுச் சிலைகள்
வல்லூறுகளின் நகக்கூர்மையின்
நாசூக்கு பிராண்டல்கள் பற்றி
வள்ளுவம் சொல்லி வகுப்பெடுக்கிறது.
***
ரசகுல்லாக்களென பரிமாறப்பட்ட
விசவுணவுப்பண்டங்களைச் சுவைத்து
திகட்டாத இந்த தீஞ்சுவை
தெய்வீக திவ்யப்பிரசாதம்
திசைதோறும் தேடினாலும்
அதிஷ்டம் உள்ளவர்கன்றி
ஆண்டவன் அருளான் என்று
நண்பன் வீட்டுக்கு வந்த
விருந்தாளிகள் பேசிச் செல்கின்றனர்.
***
தொண்ணூறு வயது முதியவர் மடியில்
முன்னூறு நிமிடத்திற்கு முன்
பிறந்த குழந்தை ஒன்று
சிரித்துப் பார்த்து சிறுநீர் கழிக்கிறது
முதுமை அதையும் பேறாய் மகிழ்ந்து
மெச்சிப் பேசி உச்சி முகர்ந்து
இறையை நிறைய துதிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக