10 ஆகஸ்ட் 2020

தேஜஸ் காணும் ஹாஜத்!

ஸல்லு அலல் முஸ்தபா யா ரசூலல்லா எங்கள்
சர்தாரே ஹாமீம் நபி யா ஹபீபல்லா

சங்கைமிக ஓங்கும் எங்கள் யா நபியல்லா 
தங்கள் திங்கள் முகம் காண்பதென்னாள்
யாசஃபியல்லாஹ்

அண்ணலுங்கள் காலத்திலே
பாவி நானும் வாழவும் வில்லை
அழகு வதனம் காணுகின்ற
அரியபேற்றை பெறவும் இல்லை
அன்பு முகம் நானும் காணும்
அந்தச் சனம் மெய்ப்படுமா
அண்ணலரின் பொற்பதத்தை
கண்ணில் முத்த வாய்த்திடுமா

ஆவல் கூடி வாடுகின்றேன்
அழுதழுது தேடுகின்றேன்
தூயவரை பார்த்திடவே 
துடித்து நிதம்  வேண்டுகின்றேன்
பூசரிக்கு கனவில் வந்தீர்
பூமானே நாயகமே
பாசத்தால் தவிக்கும் எனக்கும்
மாசில்லா தரிசனம் தரூவீர்

ஒருமுறையேனும் எங்கள்
கனவினிலே வாருங்கள் 
உன்னத திருகரத்தால்
உச்சந்தலைத் தடவுங்கள்
தேஜஸ் வடிவை காணும் எங்கள்
ஹாஜத்தை நிறைவேற்றுங்கள்
ராஜருக்கு ராஜரான 
ரஹ்மத்துலில் ஆலமீனே

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
05-08-2020




ஞானத்தின் பாடம் (கொரானா காலப் பாடல்)

ஞானத்தின் பாடத்தை நாயன் நடத்துகிறான்
அடங்காத ஆட்டம் முடங்கியே ஒடுங்கியது
நுண்மக்கிருமியினால் நூதனம் நடக்கிறது
மாயத்தில் இருந்த மனங்கள் திறக்கின்றது

கனவிலுமே நினைக்காத
கண்களுமே நோக்காத
கொடிய காலம் நொடியினிலே வந்ததுவே
நம்முடைய திட்டமொன்று
அவன்போட்ட திட்டமொன்று
தலைகீழாய் எல்லாமும் மாறியதே
பரவும் கொரனாவின் பீதியிலே வாழும்
இரவுப் பகலெல்லாம் இரட்சிப்பை தேடும்

நமக்கு மட்டும் உலகமில்லை
இருக்கும் யாவும் சொந்தமில்லை
அனைத்துயிரும் வாழ்திடவே நாடுவோமே
உறவின் அருமை அறியாமல்
 உற்ற நட்பை நாடாமல்
பணமொன்றே வாழ்வென்றே வாழ்ந்தோமே
பறந்த றெக்கைகளை இழந்துவிட்ட நாமும்
உணர்ந்து கொண்டோம் இப்போது வாழ்க்கையின் நாதம்.

ஆதரவு அற்றவரும்
அன்றாடங் காய்ச்சிகளும்
வாடுகின்ற இடர்மிகுந்த காலத்திலே
இரக்ககுணம் உள்ளவரே
இனிய அண்ணன் தம்பிமாரே
விரைந்து சென்று மனிதத்தோடு உதவிசெய்வீர்
நடக்கும் கொடுமைகளால் வைக்கின்றான் பரிச்சை
நாமும் தேர்வாகி வென்றிடுவோம் 
இறைவனின் பரிசை.

ஜா.முஹையத்தீன் பாட்ஷா
19-04-2020
12.14 am

பாடகர் அபுல் பரக்காத் பாடி முகநூலில் பகிரப்பட்டது.


இறைவா என்னை காப்பாற்று..!

பல்லவி: 
இறைவா என்னை காப்பாற்று -இந்த 
இருளில் இருந்து கடைத்தேற்று

 அனுபல்லவி: 
வழிந்திடும் கண்ணீர் துளிதுடைத்து
முறையிடும் மனதை நீ தேற்று.

சரணம்: 1 
அருளாய் கொஞ்சம் பார்த்திடடா - என் 
அழுகையை நீயும் தீர்த்திடடா
பொருளால் சூழ்ந்த பெருஞ்சோகம்
எனை புரட்டி எடுத்து வதைக்குதடா

நான்கு திக்கிலும் துயர் வெள்ளம்
தாங்கிடமுடியா பெருந் தவிப்பு
ஓங்கிடும் உன்கரம் என்றே தான்
இக்கணம் வரையென் உயிர்துடிப்பு
** 
 சரணம்: 2 
அருமை பெருமை சிந்தனைகள்
ஆயிரந்தான் என்ன லாபமடா
சிறுமை காசு இல்லையென்றால்
எந்த திறமையும் உலகில் சாபமடா

வறுமை எனும் பெரும் நோயதிலே
யாரும் வீழ்திடவேனும் கூடாதடா
பொறுமை இழந்திடும் நெஞ்சிற்கு
மருந்திடும் உன் கை வேண்டுமடா
**
 சரணம்: 3 
கவலை நெஞ்சத்தில் விளக்கேற்றி
நிம்மதி வெளிச்சம் நீ காட்டு
குறையாய் நானும் வாழ்ந்துவிட்டால்
பிழையாய் ஆகுமே என் பாட்டு

நிலமதில் நிலமையை  நீ மாற்றி 
வளமான வாழ்வால் மகிழ்வூட்டு  
திரையை கலைந்து நீ பார்த்து
எனக்கு திரவியங்களால் அணிகூட்டு.


 ஜா.முஹையத்தீன் பாட்ஷா
26-06-2020



நபியே..

சரணம்: 

நபியே..
நான் என்றும் உங்கள் அன்பனல்லவா
கதியே..
நீங்கள் என்றிருக்கும் அடிமையல்லவா 

அனுபல்லவி: 

நிதியே..
அருட்பார்வை யன்றி வேறு இல்லையே
பதியாம்..
மதினா எனக்கு புனித சுவனமல்லவா

சரணம் 1 
சின்னஞ்சிறு வாழ்வில் கிடைத்த பெரிய பொக்கிசம்
எண்ண மெலாம் ஊறிகிடக்கும் இஷ்கின் மதுரசம்
நபி இஷ்கின் மதுரசம்
எண்ண எண்ண நானும் இல்லை என்னில் என்வசம்
எண்ணி விட்டால் அடைந்திடுவேன் மோட்சபரவசம்
நபியால் மோட்சப்பரவசம்

எது இருந்த போதும் வாழ்வின் நிரப்பம் இல்லையே
நபியருள் போதும் வேறு வேண்டியில்லையே
வேறெதுவும் வேண்டியில்லையே
காசுபணம் பாசமெல்லாம் மாயை அல்லவா
காசினியை தாண்டி வரும் நேசமல்லவா
அழியா நேசமல்லவா

சரணம் 2 
காலதூரம் எம்மை நபியை பிரித்திருக்கலாம்
வாழும்நபி காலங்கடந்தும் அணைக்கும் அன்னையே 
நபி அணைக்கும் அன்னையே
நாளும் என்னில் சுவாசம் போல வாழும் நாதரே
காலமெல்லாம் ஆளுமுங்கள் புகழைப்பாடுவேன். 
என்றும் புகழைப்பாடுவேன்

கற்றுத்தந்த தெல்லாமும் ஞானமல்லவா மெய்ஞ் ஞானமல்லவா
பெற்று பெற்று வாழ்வதெனது வாழ்க்கையல்லவா 
நபியிடம் பெற்று பெற்றே வாழ்வதெனது வாழ்க்கையல்லவா.
முற்று பெறா ஆத்மஉறவின் தூயவடிவமே
வெற்றிபெற தயவு வேண்டும் மறைந்த பின்புமே. 
நான் மறைந்த பின்புமே

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
07-07-2020

பாடகர் அபுல் பரக்காத்திற்காக எழுதியது.






14 ஜூலை 2020

நல்ல நல்ல தலைவர்களை




*தொகைரா:*

சாரேஜஹான்ஸே அச்சான்னு
நம்ம அல்லாமா இக்பால் பாடினாரு
பாரே புகழ்ந்த திருநாட்ட
யாரு காப்பாத்த வருவாரு..

*பல்லவி:*

நல்ல நல்ல தலைவர்களை பார்த்திருந்த தேசம்
சொல்லிக்கொள்ள ஒண்ணுமில்லே இப்ப எல்லாம் வேசம்

*அனுபல்லவி:*

காந்தி ஆசாத் நேருவெல்லாம் தந்து சென்ற தேசம்
சாந்தியின்றி தவிக்குதடா நடப்பதோ துவேசம்

*சரணம் 1:*

அப்துல் கலாம் -நம்ம
அப்துல் கலாம் -அவர்
கண்ட கனா
இப்ப பெரிய வினா
நாட்டின் நிலை நம்ம
நாட்டின் நிலை - எந்தன்
பாட்டில் சொல்ல
ஒரு  மண்ணும் இல்லை
நல்ல பட்ஜெட் போட்டு பப்ளிக்கோட நிலை உயர்த்தாம
தினம் பெட்ரோல் ரேட்ட உயர்த்தி வெல வாசிஏத்துறாங்க..

*சரணம் 2:*

பட்டேல் சிலை -வல்லபாய்
பட்டேல் சிலை - முரட்டு
முவாயிரம் கோடி தின்ன சிலை
பட்டினிநிலை - மக்களின்
பட்டினிநிலை
மாற்றும்படி உருப்படி
திட்டம் இல்லை
பள்ளிவாசல இடிச்சு மக்கள ஏச்சு ஆட்சிக்கு வந்தவங்க
பெரும் நடிப்பு நடிச்சு சட்டத்த வளைச்சு ஆட்டம் ஆடுறாங்க

*சரணம் 3:*
சங்கம் வச்சான் -பரிவார்
சங்கம் வச்சான் - அதனால்
பங்கம் செஞ்சான் நாட்டுக்கே
பங்கம் செஞ்சான்
மாமன் மச்சான் - நாம
மாமன் மச்சான்
போல வாழ்ந்து வந்த உறவுக்கு
வேட்டு வச்சான்
நம்ம இந்துமுஸுலீம் கிருஸ்தவரெல்லாம் ஒருதாய்மக்கள்
இந்த உண்மை உணர்ந்து அன்பாயிருந்து (இந்திய) நாட்ட காப்போங்க


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
11-07-2020

பழம்பெரும் பாடகர் அபுல் பரக்காத்திற்காக எம்.எஸ்.வி இசையமைத்த "பட்டணத்து மாப்பிள்ளைக்கு பெங்களூரு பொண்ணு" என்ற பாடலின்   மெட்டிற்கு  எழுதியது.

தலைப்பிள்ளை!


எட்டி நிற்கும்
ஆனால்
விட்டுவிடாமல்
சுடரும் ஒரு தாரகை!

பள்ளிப்பருவத்தில்
எனை அள்ளிக்கொண்டு
தினம் சொல்லிச்சொல்லி
மகிழும் மனவழகர்!

நூல் கேட்டால்
நொடியில் தேடி
முடியில் சுமந்து
என் மடியில் வைக்கும்
படிப்பு குணம்!

ஆசான் வாழ்வில்
ஆயிரம் பூக்கள்-இது
வாசம் குறையாத
வாஞ்சைப்பூ!

எழுதிமாளாத
இளங்கவி!
சிறிதும் புழுதி ஏறாத
ஏடுகளில்
இவர் எழுத்து!

கலைப்பிள்ளை
கருத்தான
பெற்றோர்க்கு
கரும்புப்பிள்ளை
எனக்கும் இவர்
தலைப்பிள்ளை!
🌙

பிறந்தநாள்
வாழ்த்துகள்
தம்பி முகைதீன்
பாட்சா!

அழகு பிறைகள்
ஆயிரம்  காண்க!

-அன்பு ஆசான் அரசு ஐயாவின் வாழ்த்து.

சலாம் சூழட்டும்


இறைவனின் பெருங்கிருபை கொண்டு
நிம்மதி அடைந்தேன்.

சுவாசம் இலகுவாகி விட்டது.

நாடிநரம்புகளின் இறுக்கம் களைந்து
தளர்வாகி சீரானது.

குறுகுறுவென இருந்தநிலை விடுத்து
வழக்கம் போல ஆகினேன்.

அவன் என் சுமைகளை
என்னிலிருந்து இறக்கிவிட்டான்.

அமைதியானேன்.
அமைதியான கணங்கள்
அற்புதம் மிக்கவை
அதன் மதிப்பை
அமைதி இழந்த கணங்கள் தான் உணர்த்துகின்றன.

ஆதலால் எதார்த்தமாகவே
நம்மோடு இருக்கும்அமைதியை
ஒரு தேன்சொட்டு
நாவில் படும் சனம்
மனம் இழப்பதைப்போல;
சுவையான தேனீரில்
கணம் நம்மை மறப்பது போல;
அலாதி பிரியமானவளோடு
 கலவி களிக்கும்நேரம்
விழிதிறந்தும் நிலைமறப்பதைப்போல;
உணர்ந்து மகிழ்ந்து லயிப்போம்.

சலனமற்ற நீரோடை
மனதில் சலசலக்கும்
அமைதி கிடைக்கப்பெறுவது ஓர் பேறு
அது இறைவனின் பெரும் வரம்

நமக்குள் எப்போதும்
அமைதி எனும் சலாம் சூழட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
என்பது அது தான்.

எனக்கு மட்டுமல்ல
உன்னிலும் அமைதி நிலவட்டும்
என்பதே பரோபகார பதில் மொழி
வ அலைக்கும் சலாம்.

அதை எதிர்படும்
யாரைப்பார்த்தும்
எத்தருணத்திலும்
சொல்லவைத்த
வள்ளல் நபிக்கும்
இந்நேரத்தில் எந்தன்
பணிவின் சலாம்.

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு
அலைக்க யா ஸய்யிதி யா ரசூலல்லாஹ்.
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
23-06-2020 10:27pm


ஆன்ராய்டு அளவு

உதடு குவித்து- மோக
உணர்வு குவித்து பேரழுத்தமாய் ஓர் முத்தம் புதைக்க விரைகிறாய் முட்டி உடைகிறது நம் காமம் செல்போனின் சின்னத் திரையில். அடி போடி நமக்கு 'வாய்'த்தது ஆன்ராய்டு அளவு தான்.
'தா'மதமாய் பதியப்பட்ட "முத்த'மத" 💋 கவிதை.(ஜுலை6 உலக முத்தநாளாம்)

ஜா.மு. 09-01-2019

நான் ராஜா

எவன் புறக்கணித்தால்
எவன் அரவணைத்தால் எவன் முகம் சுழித்தால் எவன் கை கொடுத்தால் எவன் கழுத்தறுத்தால் என்ன ஆகிவிடப்போகிறது? நான் இளவம்பஞ்சு பறந்துகொண்டே இருப்பேன் நான் கடற்கரை காற்று வீசிக் கொண்டே இருப்பேன் நான் மேற்குத்தொடர்ச்சி மலை ஆற்றெழுந்து பொங்குவேன் நான் தொடமுடியாத சூரியன் தகித்து நிதமும் ஒளியுமிழ்வேன். என் ராஜாங்கத்தில் நான் ராஜா.

ஜா.மு. 19-11-18

FB link

25 ஜூன் 2020

உன்னையே நுழைத்துவிடு.


அழகிய பள்ளத்தாக்கு
பசுமையே பார்வை வெளி!
ஒருபுறம் கரை
இருபுறம் மலை
கிறங்கி.. கிறங்கி..

குளித்து களித்து
குடித்து தீர்க்கிறேன்!

என்னால் கண்ணால்
முடிந்தவரை பசி தீர்க்கிறேன்!

அத்தனையும் இயற்கை பேருணவு.

அரிய படங்கள்
ஆச்சர்ய இடங்கள்
பார்வைக்கு படும்போது
கண்ணால் பார்க்காதே
உன்னையே நுழைத்துவிடு.
- ஜா.மு.
11-12-2018.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

தந்தையாரால் ஏற்பட்ட பந்தம்

பள்ளிக்கூடம் சேரும் முன்னே பால்முகம் மாறும் முன்னே மாலை மயங்கும் பொழுதுகளில் மைதான விளையாட்டுகளில் தந்தையார் அழைத்துச்செல்ல இந்த விந்தையாருடன் ஏற்பட்டதிந்த பந்தம்.
அடிக்கும் பந்துகள் கட்டம் தாண்டிச்சென்றால் பிடித்து எடுத்து தருவேன்; அப்போதே வட்டம் தாண்டி வாஞ்சை முகம் காட்டி நெஞ்சைத் திருடிவிட்டார்.
பின்னர், மேல்நிலைப் பள்ளியில் ஞாயிறு கூட்டங்களில் எதிர்பார்க்கும் ஞாயிறாகவே ஆகிப்போனார் நீதிபோதனை வகுப்பெடுக்க ஏழாம் வகுப்பில் வாரம் ஒருமுறை வரம் தர வருவார் - அதில் பாதிபோதனையே பாடத்திற்கு அப்பால் தான்; அந்த போதனையே சிந்தைக்கு விருந்தாய் எங்கள் அறிவுக்கண்ணை அகல விரித்தது.
அதுவே பின்னாளில் நீதிபோதகரையே எங்களோடு வரித்தது. பதினோராம் வகுப்பில் ஆறுமாதம் தான் வகுப்பெடுத்தார் ஆயுளெல்லாம் மாணவனாகிப்போனேன். வேறு நாட்டிற்கு சென்றாலும் நூறுமுறை நிதமும் நினைத்திருப்பேன்; வேரூன்றி நெஞ்சத்தில் அன்பு விருட்சகமாய் வளர்ந்துவிட்டார்.
ஆசிரியப் பணியை காசுக்காக பார்த்தவரில்லை மாசு மறுவற்று ஆத்மார்த்தமாய் நேசத்துடன் பார்த்தார்.
மாணவர்களை கல்வியில் மட்டுமல்ல உயர்ந்தோர் உயர் நெறியில் உயர்ந்ததோர் தமிழ் வழியில் உணர்வோடு கரை சேர்த்தார் "திருநாவுக்கரசு" அவர் பெயர் திருவாளர் நாவுக்கு மட்டும் அரசல்ல! விரிந்த பார்வைக்கும் திறந்த சிந்தனைக்கும் பரந்த அன்பிற்கும் அரசானார்.
அதனால் தான் நாங்களெல்லாம் அவரின் அரசமுற்றத்தில் ஐக்கியமாகிப்போனோம்.
ஐயா! இன்றுங்கள் பிறந்தநாள். இனிவரும் நாட்களும் நலமே நிறைந்து உளமெலாம் குளிர்ந்து எல்லா ஆண்டும் நல்லாண்டாய் பல்லாண்டு.. பல்லாண்டு.. ஐயா வாழ்க..! அரசே வாழ்க..! பரிசாய் வாழ்க..! முரசாய் வாழ்க..!
அன்பிற்கினிய.. ஜா.முஹையத்தீன் பாட்ஷா.
#ThiruArasu #HBD #jmbatcha

செட்டியார் தாஜுத்தீன் மாமு

பொதுவாழ்வில் தன்னை எப்போதும் முன்னிறுத்திக்கொண்டு சமூகப்பணி ஆற்றியவர் செட்டியார் தாஜுத்தீன் மாமு. திமுகவில் தீவிரமாக இருந்து பிறகு தாய்ச்சபை முஸ்லிம் லீக்-கில் இணைந்து தஞ்சை மாவட்டம் வழுத்தூர் பிரைமரிக்கு பக்க பலமாய் இருந்தவர், தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் போன்ற பதவியிலும் இருந்திருக்கிறார். தான் இறந்தால் உடலில் பிறைக்கொடி போர்த்த வேண்டும் என்ற அளவிற்கு அர்பணிப்போடு இருந்து தாய்ச்சபைக்கு தொண்டூழியம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும்,வழுத்தூர் முஹையத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலின் முத்தவல்லியாய் பணி செய்தவர், வஹ்ஹாபியத்திற்கு எதிரான சுன்னத் வல் ஜமாத் கொள்கைகாக உணர்வோடு உழைத்தவர். அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். பள்ளிவாசலில் நடக்கும் ஊர் கூட்டங்களில் ஏதேனும் சலசலப்பென்றால் இவரின் ஒரே கத்தல் போதும் சபை அமைதி பெறும். நிறைய வாழ்வின் அனுபவங்களை சுமந்திருந்தவர். அவரது மறைவு பெரும் வருத்தமளிக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக; அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. --வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

இப்புகைப்படம் நாலு கொடி கந்தூரிக்கு தயாராகும் நாளில் 2014 ஜனவரியில் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் எடுக்கப்பட்டது .

11 ஜூன் 2020

பெற்றவள் பெறப்போவது எந்நாள்?

மகனை மீட்டிட 
யுகமாய் தொய்வில்லா போராட்டம்!

நடந்து தேய்ந்தது அவர்
கால்கள் மட்டுமல்ல..
வாழ்க்கையும்
நம்பிக்கையும் தான்.

தாய்மையின் எல்லையில்லா 
போராட்டத்தின் நீட்சி வடிவம்
அற்புதம்மாள்

என்றாயினும்  சூதெலாம்
வென்று வருவான் மகனென்றே 
பொழுதுகள் தோறும்
அழுத கண்களோடு..
சிறைக்கொட்டடியில் இட்ட
"சட்டத்தின் மீதே" நம்பிக்கை வைத்து
அரைநூற்றாண்டாய்  வழக்காடி
தளராது தளர்ந்த தாய்!

எதார்த்தத்தில்
சாமானியர்களை 
சட்டம் சட்டை செய்வதில்லை
அவர்களுக்கு வெட்டும்
பலியாடுகள் என்றுமே தேவை!

ஒன்றியத்தின் எந்த 
மன்றங்களிலும்
உணர்வுகளின் வலியோ
உண்மையின் ஒளியோ
எத்தி எதிரொலிக்க 
வாய்ப்பே இல்லாமல் போனது;
வடக்கின் இடக்கை அரசியலுக்கு
வாகாய் இரை சிக்கியது!

பொறுப்பில் இருப்போர்
அரசியல் மட்டும் நடத்துகின்றார்;
கவனமாய் அவரவர் 
பிழைப்பை மட்டும் பார்க்கின்றார்;
அதனால் அவர்கள்
வயிறு நிறைகிறது
வாழ்வு ஓடுகிறது
அது போதாதாதா?!

இவர் நெஞ்சம் 
நிறைக்கத்தான் ஆளுமில்லை!
இவர் துன்பம் 
இறைக்கத்தான் காலமில்லை!!

பேரறிவாளனை 
பெற்றவள்
பெறப்போவது எந்நாள்???

#11thJune
முகநூல் பதிவு

ஜா.முஹையத்தீன் பாட்ஷா


08 ஜூன் 2020

ஒளிமிகுந்த கிழமைகள்

எங்களின் இருபத்தேழாம் கிழமைகள் எல்லாம் ஒளிமிகுந்தவை,
ஏற்றிய மெழுகுவர்த்திகளின் தீபத் திருசுடர்கள் இன்னும் பிரகாசமாகத்தான் எரிகிறது, மனதின் திண்ணை முற்றத்திலெங்கெனும்.
நண்பர்கள் வந்து வந்து மகிழ்ந்து மயங்கி ஒளியழகு பருகுவார்கள்.
புன்னகையுடன் ஒளியேற்றிக்கொண்டு ஒளிமிகுந்து வழியெல்லாம் மகிழ்ச்சியின் கிரணங்களை பரப்பியவாறே குதூகளத்தை கொடுத்துச் செல்வார்கள் அந்தக்கால நாங்கள் மகிழ்ச்சியின் பெருஞ்செல்வர்கள்.
எங்களின் அந்த கால இருபத்தேழாம் கிழமைகள் எல்லாம் அந்தகாரமாக இருந்ததில்லை அவைகள் ஒளிமிகுந்தவை. கத்ருடைய இரவுகள் கதிர் இரவுகளாகத் தான்இருந்தன. அதன் ஞானப்பேரொளித் திரிகள் என்றும் அணையாதவை.
நாங்கள் அதன் வெளிச்சத்தின் வட்டத்தில் இன்றும் கதகதப்பாக ஒளிர்கிறோம், ஒளியோடும் அழகோடும்.
ஜா.மு. 20-05-20 9:18pm
ரமலான் 27ஆம் நாள் இரவு குறித்த கவிதை. இதை "லைலத்துல் கத்ர்" என்று அழைப்பர். கத்ர் என்றால் கண்ணியம் மிகுந்த அல்லது சிறப்பு மிகுந்தது என பொருள் படும். இப்பெரும் இரவில் இஸ்லாமிய பெருமாட்டி ஒருவர் தன் கைகளால் நெய்து அன்பளிப்பாக அளித்த ஆடை என்பதனால் நாம் உடுத்தும் கதர் ஆடைக்கு அண்ணல் காந்தி அடிகள் அப்பெயர் இட்டதும் வரலாறு.

முகநூல் இணைப்பு

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

பேரன்பின் விடைமொழி

 "காயிதே மில்லத்"
என்பது தனியொருவரின்
அடையாளச்சொல் அல்ல;
அது சமூகத்தின் ஒட்டுமொத்த
தேசியக் குறியீடு.


"காயிதே மில்லத்" என
காகிதத்தில் எழுதினாலும்
கண்ணியம் கமழும்!

இனி யார்?
கண்ணியத்திற்குறிய எனும்
அடைமொழிக்கு;
மனிதநேய பேரன்பின்
விடைமொழிக்கு!

முகநூல் இணைப்பு

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

தெய்வீக ஒளி

பொதுவாகத்தான் நிகழ்கிறது முழுநிலா தரிசனம்; யாரோ சிலர் தான் தன்னை இழக்கிறார்கள் தெய்வீக ஒளியில். ஜா.மு.
06-06-20
12-10 am

FB Link

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


Shared with Public

27 மே 2020

குமரிமுனையிலிருந்து வாழ்த்து

முகநூல் இணைப்பு பார்வையிட..
சங்கை நபி ﷺ இசைக்கோர்வை 2017ல் வெளியிடப்பட்டது, ஒன்பது பாடல்களை நான் எழுத அருளிசை அரசு அபுல் பரக்காத் பாடி வெளியானதை அனேகம் பேர் அறிந்திருப்பீர்கள். (வெளியீடு குறித்தும் அதில் எனது தமிழாசான் திருநாவுக்கரசு ஐயா Thiru Arasu அவர்களின் உரை குறித்தும் அதை Basheer Ahamed Rabbani அவர்கள் அலீப் பள்ளி வளாகத்தில் வெளியிட்டது குறித்தும் தனியே எழுத வேண்டும்) அந்நேரத்தில் Abu Haashima அண்ணன், அன்பு சகோதரர் Amz Harun, தம்பி அன்னை தாசன் என்று நிறைய அன்பர்கள் அது குறித்து மகிழ்ந்து எழுதி இருந்தார்கள். அன்பு Jamal Mohamed Mohamed Iqbal பெருமகிழ்ச்சி அடைந்து ஒவ்வொரு பாடல் குறித்தும் சிலாகித்து வாழ்த்தினார், Lks Meeran Mohideen பேரன்போடு அது குறித்து அவ்வளவு நேரம் என்னிடம் பேசி இருக்கிறார்கள், திருநெல்வேலி வானொலி நிலையத்திற்கும் அனுப்பி வைத்தார்கள்.
இப்போது .. சங்கை நபி ﷺ இசைக்கோர்வையை சமீபத்தில் கேட்டு அதைக்குறித்து அன்பு அண்ணன் Mitheen எழுதி இருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. Mitheen அண்ணன் அவர்கள் இலக்கிய நேசர், வாசித்தவுடன் படைப்பு குறித்து அழகிய விமர்சனம் கொடுப்பார், சிறந்த கதைச்சொல்லி, நூலாசிரியர், திரைப்பட நடிகர். அன்பு அண்ணனின் எனது இசைக்கோர்வை குறித்த கருத்துரையை பெரும் மகிழ்வோடு ஏந்திக்கொள்கிறேன். அவை பின்வருமாறு. இசை ஆன்மீகத்தின் உணவாக இருக்கிறது. இன்றும் நாகூர் அனிபாவினுடைய இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் பொதுவெளியில் அவ்வளவு நெருக்கம். கப்பலுக்கு போன மச்சான் என்கிற ஷேக்முகம்மதுவின் பாடலும் ஓரளவுக்கு நிலைத்து நின்ற பாடல்கள்தான். அபுல்பரக்கத், எம்.எ உஸ்மான், இறையன்பன் குத்தூஸ்,என நிறைய வரிசைகள் இருக்கிறது. என்.எஸ்.தீனின் தக்கலை நகர் வாழும் அற்புத வலியுல்லாஹ் பாடல் மனதில் உட்கார்ந்து கொள்ளும். சீனி நைனாமுகம்மதுவின் யாரடா சொன்னது எங்களை அந்நியர் என்று ...இப்பாடல் வேகமாக பலரிடமும் போய் சேர்ந்தது.ஆனாலும் தமிழில் இஸ்லாமிய பாடல் என்பது அது இறையை,நபியை,இறைநேசர்களை, புகழ்பாடும் பாடலாகவே நின்றிருந்த நிலையில் கவிஞர் தக்கலை ஹலிமா அதன் தொடர்ச்சியில் மற்றும் ஒரு பரிமாணமாக வாழ்வியல் பாடலாக அவ்வல் என்கிற ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டார். அவரே பின்னர் சூஃபி ஞானி பீர்முகம்மதப்பா, குணங்குடி மஸ்தான் சாகிபு முதலானோர்களின் மெய்ஞானப்பாடல்களை குமரி அபூபக்கரோடு இணைந்து தன்னைப் பிழிந்த தவம் என்ற பாடல் தொகுப்பையும் வெளியிட்டார்.அங்கொன்றும் இங்கொன்றுமாக மேலும் சில பாடல்கள் இருக்கலாம். காலத்தேவைக்கு ஏற்ப இஸ்லாமிய இசைப்பாடல்கள் தொடர்ந்து வளரவில்லை என்பது உண்மை. ஏன் அது மலையாளப் இஸ்லாமிய பாடல்கள் போல பலவடிவங்களில் வளரவில்லை என்பதெல்லாம் பண்பாட்டுக் கூறுகளோடு ஆய்வு செய்ய வேண்டியதாகும். இப்போது யூடிப்பில் நாகூர் அனிபாவின் சில பழய பாடல்களை புதுவடிவங்களில் சிலர் பாடுகின்றனர்.குறிப்பாக பெண்கள் பாடுகின்றனர்.சூப்பர் சிங்கர் ஃபரிதாவின் சிலபல பாடல்கள் கேட்கின்றன.யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு பாடல் இப்போது பரவலாக கேட்கப்படுகிறது. ஆனாலும் இந்த நீண்ட நெடிய இஸ்லாமியர்கள் வாழ்வின் மகிழ்வு,வலி,துன்பம்,துயரம், இன்பமென பல்உணர்ச்சிகள் சார்ந்த பாடல்கள் இல்லையென்பதை எவ்வாறு நோக்குவது என்பதும் கேள்விகள்தான். நண்பர் @J Mohaideen Batcha எழுதிய பாடல்களை பாடகர் அபுல்பரக்காத் பாடியிருக்கும் ஒரு பாடல் தொகுப்பை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.மெல்லிய வார்த்தைகளால் ஆன அவரின் பாடல் வசீகரமானதாகவே இருக்கிறது. எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. நமமைச் சுற்றிலும் பரவியிருக்கும் இந்த இசைக் கலைஞர்களின் உலகை நாம் எதன் பொருட்டு இல்லாமல் செய்கிறோம் என்கிற செய்தியை நான் முன்வைக்கிறேன். அவரின் இனிமையான பாடல்களை கேட்டதின் வாயிலாகவே இதனை எழுதுகிறேன். நண்பர் முஹைதீன் பாட்சா அவர் பாடலின் இணைப்பை பின்னூட்டத்தில் பதிவார் என நம்புகிறேன். பிற நண்பர்கள் உங்களைக் கவர்ந்த இஸ்லாமிய பாடல் ஒன்றின் இணைப்பை பின்னூட்டத்தில் வழங்குமாறு வேண்டுகிறேன். தக்கலை ஹலீமா அவ்வலின் இணைப்பிருந்தால் அதனையும் தர வேண்டும்.இசைக் கலைஞர்களுக்கு அன்பும் வாழ்த்தும்.