இது என் ஆருயிர் நன்னியம்மாவின் (தாய்வழி பாட்டியாரின்) உயரிய வாழ்வியல் குறித்த என் பதிவு
பாகம் -6
எதிர்பாராதது
பிறகு வீட்டிற்கு போய் இரவு
கழிந்து காலை புலர்ந்தது (டிசம்பர் 31, சனிக்கிழமை), நான் அப்போது மாமியார் வீட்டில்
இருந்தேன் காலை 10 மணிக்கு புவ்வா போன் செய்தது அம்மா நேற்றிரவு சாமத்தில்
இறங்கும் போது தவறி கட்டிலிலிருந்து விழுந்து விட்டார்களாம் இடுப்பில்
அடிபட்டுவிட்டதாக சொல்கிறார்கள் மிகுந்து வலிக்கிறதாம் நான் உடன் செல்கிறேன் வா..
என்றார் என் புவ்வா. உடன் ஓடிப்போய் பார்த்தால் வலியால் துடித்தார்கள்
அம்மா.. ஏனம்மா இப்படி செய்துவிட்டீகள் இப்ப நீங்க தானே கஷ்டப்படுகிறீகள் என
ஆதங்கப்பட்டார்கள் நம்மவர்கள்.
அன்றே அம்மாவை எழும்பு
டாக்டர்களிடம் காட்ட வேண்டி அழைத்துச்சென்றோம்.. அம்மா உடல்நிலை பாதித்ததிலிருந்து
எப்போதும் வெளியேவோ அல்லது வீட்டிலேயே வேறொரு இடத்திற்கோ அழைத்துச் செல்வதென்றால்
காலித் தான் அம்மாவை இரு கரங்களால் தூக்கி கொண்டு வைப்பது வழக்கம்.. தஞ்சைக்கு
அன்று சென்ற பொழுது அம்மாவை முதன் முதலாக ஒரு குழந்தையை தூக்குவது போல்
தூக்கினேன்.. அம்மாவை நாம் இப்படி தூக்கும் நிலை வந்துவிட்டதே என்று மனம் உள்ளுக்கிள்ளே குமுறாமல் இல்லை! அன்று இரண்டு டாக்டர்களிடமும் சென்ற வகையில் அவர்களின்
அறிவுரையெல்லாம் அறுவைசிகிச்சையையே சொன்னதாலும் இது சற்றே பெரியதுதான் என்றதாலும்
நாங்கள் யோசித்தபடியே மூன்று ஊசிகளை போட்டுக்கொண்டு பின் அவர் எழுதிக்கொடுத்த
மாத்திரைகளை வாங்கிக்கொண்டு இன்ஷா அல்லாஹ் பார்த்துக் கொண்டு அடுத்ததுபற்றி
யோசிக்கலாம் என வந்து விட்டோம்.. இப்பொழுதெல்லாம் அம்மா அதிகமாக உறங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.. சில நேரம் பலகீனமாக உணர்வு மங்க இருக்கிறார்களே மீண்டும் அம்மா ஏன் இது போல் ஆகவேண்டுமென ஜனவரி 07 ஆம் தேதி காலை நான் வீட்டிலிருந்து துபைக்கு பயணம் புறப்பட்ட பிறகு அன்று மாலையும் அம்மாவை டாக்டரிடம் காட்டிவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்…… இதற்கிடையில் அம்மா மீண்டும் பலகீனமாக
மீண்டும் மூன்றாவது முறையாக வாஞ்சலிங்கம் டாக்டரிடம் சென்றதில் அவர் சில இரண்டு
நாட்கள் போலவைத்திருந்து டிரிப் ஏற்றியதில் மீண்டும் அம்மாவின் உணர்வு மீள
வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.. பிறகு குடந்தை டாக்டரிம் எழும்பிற்கான சிகிச்சை வீட்டில் நடந்தது ஆயினும் ஒன்றும் முன்னேற்றம் இல்லை படுக்கையிலேயே இருந்தாலும் அவ்வப்போது அம்மாவை
முதுகு தாங்களாக வைத்துக்கொண்டு சாப்பாடு போன்றவை கொடுப்பார்கள்.
இந்நாட்களில் அம்மா யாராவது
தன் பக்கத்தில் இருந்து கொண்டே இருக்கவேண்டும் என நினைத்தார்கள் ஆதலால் சற்றே
யாரும் அறையை விட்டு சென்றால் உடன் அழைக்க ஆரம்பித்து விடுவார்கள்.. அம்மா உடல்
நலம் பாதித்த நவம்பர் மாதத்திலிருந்து எனது தாயார் பாப்பாந்தெருவில் தான்
பெரும்பாலும் இருந்தார்கள் முக்கியமாக இரவு அம்மாவினுடனேயே கழித்தார்கள்..
அம்மாவிற்கு பணிவிடை செய்வதில் அம்மாஜான், முஜீப் அண்ணன் மனைவி, முர்ஷிதா என
பலரும் உடன்நின்றார்கள் என்றாலும் எனது தாயாரின் இரவுபகல் பாராததும் அயராததுமான
தன் தாயாருக்கான சேவை போற்றுதலுக்கு உரியது. இஸ்மாயில் பாயின் ஒத்துழைப்பும்
உதவியும் மறக்க முடியாது. காலித் ஊரில் இருந்தவரை அவனால் ஆன உதவிகள் செய்தான்.
நான்காவது முறையாக மீண்டும்
மருத்துவமனையில் அனுமதி
ஆனாலும் அம்மாவின் உணர்வற்றநிலை மீண்டும் தொடர்ந்ததால் வீட்டார்கள் திரும்பவும் நான்காவது முறையாக மார்ச் 09 ஆம் நாள் வாஞ்சலிங்கம் டாக்டரிடம் காட்டச்செல்ல உடன் அவர் ‘காய்ச்சல் அடித்துக்கொண்டிக்கிறது சற்றே தாமதமாக வந்திருக்கிறீர்கள்’ என செல்லிவிட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை தொடர்ந்தார்..!
சேர்த்து 2 நாட்கள் டிரிப்
ஏறிக்கொண்டிருந்த வகையில் சற்றே உணர்வாகத்தான் இருந்தார்கள்.. திடீரென
பலகீனப்பட்டதில் ஐ.சி.யூ-க்கு அழைத்துச்சென்றனர்.. மூச்சுவிட கஷ்டப்பட்டடதால் சலியும்
இருக்கிறது என வென்டிலெட்டர் வைத்திருந்தனர்.. வென்டிலேட்டர் வைத்ததிலிருந்து
அவர்கள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டனர்.. காலை மாலையென பல டெஸ்ட்கள்
என்றும்.. அம்மாவிற்க்கு நரம்பு தென்படவில்லை என பலவாறு
சிரமப்படுத்தியதிலிருந்து.. உணவுக்காக மூக்கில் டியூப் போட்டது என
அப்படி..இப்படி..நிறைய கஷ்டங்களை தந்துவிட்டனர் "அதனால் எனக்கு அம்மாவை
பார்க்கக்கூட மனசு வரவில்லை" என என் தாயார் கூறி அழுதார், அம்மாவை ஐ.சி.யூ வில் சேர்த்த நாட்களிலிருந்து என் தாயார் தங்கும் அறையில்லாமல் அங்கே பிளாட்பாரத்திலும், பொதுநடையிலும் தான் இரவுபகலாக கழித்தனர். எந்த ஒன்றையும் சிரமமென பாராதும்.. சிந்திக்காதும் தன் தாயார்
குணமானால் போதுமென ஆஸ்பத்திரியிலேயே இருந்தார் என் தாயார். அந்நாட்களில் பெரும்பாலும்
ரஹ்மான்பி ஹாலாபு உறுதுணையாக பக்கம் இருந்தது. இரண்டு நாட்களுக்கு மேல்
தவ்பீக்கின் தாயார் பரீதா மாமி இருந்தார். இரவில் என் தந்தையார் தங்கிக்கொண்டார்.. ஒரு நாள் முஜீபும் இருந்தது. பகல்
காலங்களில் பெரியபாப்பு, அம்மாஜான், பாவாஜிபாய் என வந்து சென்றனர்.
டாக்டர்கள் நாளை சாதாரண வார்டுக்கு கொண்டு வந்துவிடலாம்.. என நாளை நாளை என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொண்டு இருந்த படியால் இறையருளால் அம்மா நலமடைந்து சாதாரண வார்டுக்கு வந்து விடுவார்கள் எனத்தான் பலமாக நம்பியிருந்தோம் ஆகையால் அன்றுவரை 8 நாட்களுக்கு மேல்
ஆகிவிட்டதென நான் என் தாயாரை வீட்டிற்கு போய் சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு
செல்லுங்கள் என வற்புறுத்தியதன் பிறகு முர்சிதாவும், ஹாலஜானும் அன்று காலை வந்து
சேர்ந்து புவ்வா (என் தாயார்) புறப்பட்டு வீட்டிற்கு வர மதியம் மணி 1 ஆனதாம்.
பிறகு சற்றே அரைநாள் தங்கிவிட்டு பிறகு தஞ்சை நோக்கி அன்று மாலையே சென்றார்
ரஹ்மான்பி ஹாலாபுடன் என் தாயார். இத்தனை நாள் எங்களுடன் தூக்கமில்லாமல் எங்களுடன்
இரவில் தங்குகிறீகள் இன்று இரவு நாங்கள் இருக்கிறோம் நீங்கள் வீட்டில்
தூங்கிவிட்டு நாளை காலை வாருங்கள் என எனது பாப்பை விட்டில் இருக்கும் படி புவ்வா
சொல்லியபடியால் பாப்பும் அன்றிரவு வீட்டில் தங்கியது.
மீளாத்துயர்
அமீரகம் புஜைராவின்
கொர்ஃபகான் ரோட்டில் அமைந்திருக்கும் எனது அடுக்ககத்தின் அறையில் அதிகாலை
தூக்கத்தில் இருந்தேன்... சரியாக காலை மணி 6.19 க்கு போன் அடித்தது … எனது பாப்பு
சொன்ன செய்தி நெஞ்சில் அறைந்தது! "அம்மா இறந்து விட்டார்களென்று..." அழுகைக்குரலில், புவ்வாவிடம் எப்படி பேசுவேன்…?? இருந்தாலும் பேசினேன்! ஆறாத
சோகத்தில் ஆழ்ந்த என் தாய் தன் தாயை பரிகொடுத்ததில் அழுது கரைந்தது.
காலை சரியாக 5.45 மணிக்கு (திங்கள் கிழமை மார்ச் 19,2012 (ரபிய்யுல் ஆஹிர் பிறை 27,1433) ) ஐ.சி.யூ விலிருந்த நர்ஸ்
வந்து "ஆய்ஷா பீவியின் அட்டண்டர் யாருங்க.." என்றதும் என் தாயார் மூச்சிரைக்க மூன்று
மாடிகள் ஏறி முன் சென்றாராம்.. "யாராவது ஆம்பிளங்க இருக்காங்களா அவங்களோட பேசனும்"
என்றவுடன் (அதிர்ச்சி செய்தியை உடன் பெண்களிடம் சொல்ல வேண்டாமென்பதற்காக) என் தாயாருக்கு பதைபதைக்க ஆரம்பித்து பாப்பிற்கு போன் செய்திருக்கிறது பிறகு
விசயம் தெரிய தாயை மீட்டெடுக்க முடியாது போயிற்றேவென சோகத்தில் ஆழ்ந்துவிட்டது.
உடன் பாப்பந்தெரு கார் எடுத்துக்கொண்டு எல்லோரும் சற்று நேரத்திற்கெல்லாம்
சென்றடைந்திருக்கின்றனர். எல்லா பரிவர்த்தனைகளையும் முடித்துவிட்டு அம்மாவின்
பூதவுடல் அவர்கள் மிகப்பிரியம் வைத்த அவர்களின் கீழ்த்தெரு வீட்டிற்கே வந்தது.
அம்மாவை கடைசி வரை நன்றாக
இருக்கிறார்கள் என காசுபறித்த டாக்டர்கள் அன்றிரவாவது எங்களிடம் சொல்லியிருந்தால்
அவர்களின் வீட்டில்… பிள்ளைகளின் அரவணைப்பில்… தன் இறுதி மூச்சை
விட்டிருப்பார்களே! அங்கே ஐ.சி.யூ வில் என்ன நடந்தததோ.. எப்போது நிகழ்ந்ததோ.. அம்மாவின்
அந்த நேர நிகழ்வுகள் என்னவாயிருந்ததோ.. தேவையில்லாது என் குலத்தாயை இறுதி நேரம்
வரை மிக கஷ்டப்படுத்திவிட்டார்களே மருத்துவ பணப்பேய்கள், அந்த நர்ஸ்களுக்கு என்ன ஆயிரத்தில் இதுவும் ஒரு
கேஸ் பத்தோடு பதினொன்று ஆனால் எங்களுக்கு
அம்மா மரகதமாயிற்றே.. மணி வைரமாயிற்றே.. பாவிகளே எனத் தான் எங்கள்
ஆதங்கங்களெல்லாம்.... தொடர்ந்து கொண்டே செல்கிறது. ஆனாலும் சிறிய தந்தையார் பசீர் பாப்பு கூறியப்பிரகாரம் 'அல்லாஹ் அந்த புனிதஜீவனுக்கு இங்கே சில உடல்ரீதியான சிரமங்களை தந்தான் இதனால் என் நன்னியம்மா அவர்களின் ஆன்மா மேலும் தூய்மையெய்தி விட்டது அதனால் அவனளவில் அவர்களின் ஆன்மாவிற்கு எல்லா அந்தஸ்துக்களையும், உயரிய பேரின்பங்களையும் அவனின் லிகாவிலேயுமாக வைத்திருப்பதற்காக தயார்படுத்திக்கொண்டான்!' ஆமீன்.
எனக்கு காலையிலிருந்தே போன்
ஓயவில்லை மனதின் ஆழத்திலிருந்து எங்கள் தேடக்கிடைக்காத அந்த திரவியத்தாயின்
நினைவுகள் எல்லாம் அழுத்த கனத்த மனதோடு மனம் சிதைந்து அலுவலகம் சென்று இருக்கையில்
அமர்ந்தேன். பலருக்கு தெரிந்து போன் செய்கிறார்கள் ஆனாலும் எல்லோருக்கும் நாம்
சொல்ல முடியாது ஆனாலும் தெரிவிக்க வேண்டுமேவென பேஸ்புக்கிலும், ஜீ மெயிலிலும்
இவ்வாறு எழுதினேன்….
இறைவ! இன்று அதிகாலை
உன்னளவில் மீண்ட எங்கள் அந்த நல்ல ஆன்மாவை பொருந்தி அருள்வாயாக!
நினது பேரன்பர் படைப்பினங்களில் மேலான
ரஹ்மத்துலில் ஆலமீனாம் எங்கள் பெருமானார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்
அவர்களின் மூலம் எல்லா கிருபையையும் அவர்களுக்கு அருள்புரி!
எனது அன்பு பாட்டியார் (நன்னி அம்மா) ஹாஜியா.ஆய்ஷா
பீவி அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை இறை புறம் மீண்டார்கள்.
நித்திய ஜீவானே.. ஹய்யுல் கய்யூமே.. நீயே அமைதி
சூழ உன் அருளிளேயே ஆக்கியருள்!
எங்கள் ஊரில், உறவில்
என எல்லோர் நெஞ்சிலும் மலர்ந்திருந்த செழுமலர் வாழ்வின் பயணம் முடித்தது..!!!!
எங்களனைவரின் நற்பேறுகளுக்காக வாழ்த்திக்கொண்டே
இருந்த ஓர் நல்மனம் விடை பெற்று சென்றது..!!!
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்பர்களே எங்கள் பாட்டியாரின் மஃபிரத்திற்காக
தங்களின் வேண்டுதலை வேண்டுகிறேன். அல்லாஹ் எல்லோருக்கும் அருள்வானாக! ஆமீன்.
(எனது பாட்டியார் அருங்குணங்கள் ஒருங்கே அமைய பெற்றவர்..
நற்பண்புகளின் சிகரமாய் தான் எங்களின் முன்னே வாழ்ந்த அதிசயம்.. பசித்து வரும்
மனிதரை கண்டால் பரிந்து உபசரித்து அவர் குடல் நிறைக்கும் குணாதிசயம் கொண்டவர்....
சற்று நேர மின் தடை யானாலும் தெருவில் போகும் யாரும் வழியில் திண்டாடக்கூடாதேவென
அடுத்த வினாடியே திண்ணையில் அயராது விளக்கொளி ஏற்றிவைக்கும் பெருங்குணம் கொண்டவர் மறைந்த உயர்ந்த ஜீவன் எங்கள் பாட்டி அம்மா! )
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்..ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹிவசல்லம்..ஸல்லல்லாஹு அலா முஹம்மத் யாரப்பி ஸல்லி அலைகிவஸல்லம்
என்னை வளர்த்தெடுத்த அம்மையே.. தாயே.. இனி உன்னை நான் நினைவுகளில் தான் தரிசிக்க
வேண்டும். நீ மிக நேசம் பூண்ட உன் அண்ணன்மார்களுடன் அவர்களின் அடக்கத்தலம் அருகேயே
நீடுதுயில் கொள்ள இடத்தையும் பெற்றுக்கொண்டாயாம். அம்மா நீ ஞான ஒளியுள்ள ஆன்மா..
அண்ணலார் நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹிவசல்லம் அவர்களின் மீதும் அவர்தம்
திருக்குடும்பத்தவர் மீது பெரும் பாசம் கொண்டவர் நீ நித்திய ஜீவனோடும் சத்தியப்
பொருளோடும் சேர்ந்துவிட்டாய்! உன்னத சுவனபதியில் நீங்கா அமைதியில்.. ஹவ்லுல்
கவ்தரின் குளிச்சியில்.. அர்சின் நிழலில் ஆனந்தமாய் இருக்கிறாய்! இனி உனக்கு ஏதும்
சிரமமோ.. கவலையோ இல்லை தாயே இனி எல்லாம் அந்த பேரருளாளனின் பேரானாந்தம் தான்!
|
நன்னியம்மாவின் அடக்கத்தளம், முஹையத்தீன் ஆணடவர்கள் பெரிய பள்ளிவாசல், வழுத்தூர். |
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
குறிப்பு ;
(இத்தனை எழுதியபின்னும் என் ஆருயிர் நன்னியம்மாவைப் பற்றி எல்லாம் எழுதிவிட்டதாக தோன்றவில்லை எனக்கு தெரிந்த வகையில் ஒரு அற்புதமான தங்கநிகர் தாயின் வாழ்வியலை சற்றே பதிய எடுத்த முயற்சியே அன்றி இது வேறில்லை)