03 ஏப்ரல் 2012

நனியுயர் நன்னியம்மா..! - (பாகம் -3)

இது என் ஆருயிர் நன்னியம்மாவின் (தாய்வழி பாட்டியாரின்) உயரிய வாழ்வியல் குறித்த என் பதிவு




பாகம் -3




சகோதரம்
அண்ணன் தங்கை உறவின் பாசப்பிணைப்புகளை திரைப்படத்தில் நிறைய பார்த்திருக்கலாம் ஆனால் நாங்கள் நேரில் பார்த்தோம்.. ஆமாம்.. என் நன்னியம்மாவின் தாயார் இவர்களின் சிறுவயதில் மவுத்தாகிவிட தந்தையாரும் உடனே வேறொரு மணம்புரிந்திட சகோதர பாசம் தான் இவர்களுக்கு அத்ம ஆதரவாய் இருந்தது தம் மூன்று அண்ணன்கள் மீது இவர் கொண்ட அன்பிற்கு ஏது விளக்கம்… எங்கும் பார்க்கத்தான் முடியுமா அண்ணன்மார்கள் இவர் மீது பொழிந்த பாசத்தையும் அதற்கு மேலாகவே அல்லும் பகலும் அண்ணன்களை போற்றி புகழ்ந்தே வாழ்ந்த அற்புத தங்கையையும்..!


அம்மாவின் பெரியண்னன் ஜனாப்.அப்துல் கரீம் அத்தா அவர்கள் மாடு கண்ணு போட்டுவிட்டால் சீம்பாலுடன் தானே பிரியமாக கொண்டுவந்து "அய்சம்மா மாடு கண்ணு போட்டுச்சா அதான் சீம்பால் கொண்டுவந்தேன்" என கனிவோடு கொண்டுவருவார்.. இப்படி எல்லா வகையிலும் தங்கையின் மீது சிறப்பான பாசம் கொண்டவரவர். அந்த பெரியண்னன் இறந்த போது எந்த தங்கையும் ஒரு அண்ணனுக்காக இப்படி இராப்பகலாக அழுததை நான் கேள்விப்பட்டதும் கூட இல்லை அந்த அளவுக்கு ஆ..று மாதங்களுக்கு மேல் ஏதோ இன்று இழந்ததை போலேயே சோகத்தோடு அழுதார்கள் 'அண்ணே.. அண்ணே.. நாங்க எங்க போவோம்.. போய்யிட்டியே.. லேசான அண்ணணா.. எங்க அண்ணன் எங்க புவ்வா இறந்து போனப்ப மலேசியாலேந்து லட்டர் எழுதினாரு… அதுல என் தாயை பிரிந்து நாங்கள் அனலில் இட்ட மெளுகு போ……ல உருகுகிறோம்-ன்னு.. எழுதினாரு அத படிச்சுட்டு நாங்கல்லாம் அப்படி அழுதோம், எங்க அண்ணன் மாதிரி அண்ணன் கிடைக்குமா..' என்றெல்லாம் புலம்பியபடியே இருப்பார்கள் எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்

இப்படியே தான் தனது தனிப்பிரியத்திற்குரிய அஜ்ஜி அண்ணனான ஜனாப்.ஜமால் முஹம்மது அத்தா இறந்த போதும் அண்ணனை நினைத்தே பழய நினைவுகளை எல்லாம் சொல்லிச் சொல்லியே அழுதழுதே உருகுவார்கள். அஜ்ஜி அத்தாவும் ஆய்சம்மா.. ஆய்சம்மா… தெருவாலும்.. சாலையாலும் தங்கச்சியை கணநெரமாவது பார்த்து பேசவேண்டும் என ஆவலோடு வந்து அந்த வயதிலும் வந்துவிடுவார்கள் என் அம்மா என்னை 'அத்தாவை கையை பிடித்து வீடுவரை கொண்டு விட்டுவிட்டு வா..' என சொல்லி அனுப்பிய என் பிள்ளை கால நினைவுகள் ரீங்காரமிடுகிறது.

சேட்டு அண்ணன் (எ) ஜனாப்.அப்துல் மஜீது அத்தாவும் பாசமாக காலை மாலையென இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது வந்து விடுவார்.. குடும்ப விசயங்களெல்லாம் பிரியமாய் பேசிடுவார் அவரின் பிரிவின் போதும் அம்மா மிகவும் பிரிவுத்துயரால் மிகவும் வாடினார்கள்.. அதாவது உடன்பிறந்தவர்களில் இத்தனை தூரம் ஒருவருக்கொருவர் பாசம் பாராட்டுவது அன்பில் மிகைத்திருப்பது உயிரில் கலந்து உறவாடுவது என்ற என் அம்மாவின் ஆச்சர்யத்தக்க குணாதிசயங்களால் நாங்கள் பிரமித்து போன காலங்களில் எங்களுக்குள் 'இப்படி இருக்காங்களே.. அண்ணே.. அண்ணே' என இவர்கள் உயிரை விடுகிறார்களே என பேசிகொள்வது கூட உண்டு.

அண்ணன்மார்களின் மனைவியரிடத்தில் இவர்கள் காட்டிய பரிவும், ஒப்புறவுமெல்லாம் சொல்லில் அடங்காதவை. 'பாச்சம்மா.. பாச்சம்மா' என்றே தான் ஒரு தாயின் பாசத்தை பொழிந்தார்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ளாமல் இருக்கமாட்டார்கள், தன் தங்கைக்கும் மற்ற தங்கைகளான ரஹ்மான் பீவி, சிராஜ் ஹாலாபுகளையும் அவர்களின் பாசப்போர்வையால் போர்த்தி நேர்த்தி குறையாத அன்பால் தான் என்றும் அவர்களையும் அணுகுவார்கள்.


ஞானமும் தோழிமார்களும்
வீட்டிற்கு பிரத்யோகமாக தஙக்ளின் நெருக்கமானவர்களான ம.ரா. சல்மா புவ்வா, புண்ணாக்கி ஆமினா புவ்வா, நெருக்கமான தோழி ஹலிமா புவ்வா என இவர்களை வரவழைத்து பேச‌ ஆன்மீக விளக்கங்கள் ஆறாக ஓடும். தங்களின் பழங்கால ஞான வழிகாட்டிகளான மிகச்சிறந்த ஞானியாக திகழ்ந்த ஓசாடி புவ்வா, சஹர்வான் புவ்வா, தங்களின் நன்னியம்மா மற்றும் பசூர் பாவா என்ற நல்லவர்களின்.. அறிவு ஜீவிகளின்.. விளக்கங்களை சொல்லிக்கொண்டு இதற்கு அவர்கள் இங்ங்கனம் விளக்கம் கொடுப்பார்கள்.. இதன் விளக்கம் இதுவாம்.. என மெய்மறந்து மெய்நிலை பற்றி பேசிக்கொண்டிருப்பர். வாப்பா நாயகத்தின் வருகையால் அவர்களின் ஞான விளக்கத்திலும் வழிகாட்டுதலிலும் மிகுந்த ஈடுபாட்டிற்கு உட்பட்டு பேணுதலாய் நடந்தும் மறை ஞானப்பேழை ஒவ்வொரு இதழையும் ஆர்வமுடன் படித்து முடிப்பவராயும் இருந்தார்கள். நான் ஞானவழியில் மிகத்தீவிரமாய் ஈடுபட்ட நேரங்களில் எனது அம்மா அவர்கள் ‘தம்பி, ஹலிமாபி… ஓண்ட்ட மஃரிஃபா விளக்கம் கேட்கனுமா’ என மிக இக்லாஸோடு சொல்லி வர 'ஏங்க.. அப்படில்லா ஒன்னு பெரிசா தெரியாது'ண்ணோ அல்லது எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்லியோ சென்ற காலங்கள் கூட உண்டு அதை எல்லாம் நான் இந்நாள் நினைத்துப் பார்க்கிறேன்.


                                                             - மேலும் பாகம் -4-ல் 






-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: