30 டிசம்பர் 2013

திருச்சி இளம் பிறை மாநாடும், ஊடக இருட்டடிப்புகளும்


திக்கெட்டும் தக்பீர் முழக்கம்.. திசையெங்கும் பச்சிளம் பிறைக்கொடிகள்.. கண்ணுக்கு எட்டிய தொட்டும் பேரணிகள், தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து சந்தோசப் பெருக்குடன் விரைந்து வந்து கலந்து கொண்ட இளைஞர் பட்டளங்கள், இளஞ்சிறார்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் எனக் கூடி நேற்று திருச்சியே திகைக்க வெற்றியாய் நிகழ்ந்து முடிந்திருக்கிறது தாய்ச்சபை முஸ்லிம் லீக் நடத்திய இளம்பிறை பேரணி மற்றும் மஹல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு மாநாடு.

இளம்பிறை மாநாடு சமுதாய கண்ணியத்தை சத்தம் போட்டு உரைத்திருக்கிறது. முஸ்லிம் லீக் எத்தகையது என்பதையும், ஏகத்திற்கும் வரலாறோ.. அன்றாட நிகழ்வோ கூட தெரியாமல் பத்தோடு பதினொன்றாக முஸ்லிம் லீக் என்ன செய்தது என்றும் அது தமிழகத்தில் இருக்கிறதா என்றும் கிண்டலடித்து பேசியவர்களுக்கெல்லாம் வாய்ப்போட்டு போட்டுள்ளது. முஸ்லிம் லீக்கின் புத்துணர்ச்சியை.. முஸ்லிம் லீக்கிற்கு ஆதரவாக ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தினர் ஒன்று கூடிய நிகழ்வை பார்த்த புதிய இயக்கங்கள் எல்லாம் உண்மையில் கலங்கிப் போய்தான் இருக்கிறது. அடுத்து என்ன செய்யலாம்.. எப்படி மக்களை திசை திருப்பலாம் என்று தான் முயற்சி மேற்கொண்டு உள்ளது. ஆயினும் அதுவெல்லாம் இனி நடக்காது. இந்த இயக்கத்தின் பின் சமூகம் அணி திரளவேண்டும் எனபதில் சமூக மக்கள் தெளிவாக இருக்கின்றனர் என்பதை நேற்றைய நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டியுள்ளது.

முஸ்லிம் லீக்கின் மாபெரும் புத்துணர்வு பரிணாமத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இம்மாபெரும் மாநாட்டில் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான இ.அஹமது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் லீக்கின் தேசிய செயலாளரும், தமிழக தலைவருமான பேராசிரியர் பெருந்தகை காதர் முகைதீன், கேரள நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், கர்நாடக, ஆந்திர, மகாராஷ்டிர, டெல்லி முஸ்லிம் லீக் முக்கிய பொறுப்பாளர்கள், தமிழ்நாட்டு தாய்ச்சபை நிர்வாகிகள், தாய்ச்சபையின் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான், மற்றும் தாய்ச்சபை உறுப்பினர்கள் என அனைவரும் மேடையில் வீற்றிருந்து அனைவரையும் உற்சாகப்படுத்தி சிறப்பித்த நிகழ்வு தாய்ச்சபை வரலாற்றில் புதிய அத்தியாத்திற்கான தொடக்கப்புள்ளி என்றால் அது மிகையாகாது.

முஸ்லிம் லீக்கை பொருத்தவரை அதன் கொள்கைகள், சாத்வீகம், இந்திய இறையாண்மையை மதிக்கும் பண்புகள், இளைஞர்களை வெறியேற்றாத தன்மை, இதன் தலைவர்களின் முதிர்வு இவையெல்லாம் மிக முக்கிய அம்சங்கள். இதையெல்லாம் நிகழ்வில் பேசிய தெசிய தலைவர் அமைச்சர் இ.அஹமாது, மாநில தாய்ச்சபை தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், கேரள எம்.பிஇ.டி.முஹம்மது பசீர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட மற்ற எல்லா தலைவர்களின் உரையும் சான்று பகர்பவையாக இருந்தது என்பது குறிப்பிட தக்க அம்சம் என்று பலராலும் பாராட்டப்பட்டிருக்கிறது. இதில் முத்தாய்ப்பாக வாசிக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் அற்புதமானவை என்றும் அரசியல் நோக்கர்கள், விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர் என்பதும் கவனிக்கதக்கதும், மனமகிழ்ச்சி கொடுப்பதும் ஆகும்.

இக்காலத்து புதிய ஜமாத்துகளின் அல்லது புதிய இஸ்லாமிய கட்சிகளின் கூட்டத்தில் காணக்கிடைக்காத ஒரு பெருங்காட்சி அது கலந்து கொண்ட அனைவரும் சமூக கண்ணியத்தோடு தொப்பிகள் அணிந்து கலந்த கொண்ட காட்சி உயரத்தில் இருந்து போர்க்கும் போது கண்ணுக்கு எட்டிய தூரம் மல்லிகை கம்பளம் பரப்பியது போல் எழிலோடு இருந்தது.

யாரும் எண்ணிப்பார்த்திருக்க முடியாத மக்கள் திரள், திருச்சியெங்கும் தீன் நெறியாளர்களின் வெள்ளம், காசுக்கு ஆள்பிடிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சில ஆயிரம் பேர் வந்தாலே பல இலட்சங்கள் என போலி விளம்பரம் செய்யும் ஜமாஅத் இயக்கங்களுக்கும் மத்தியியில் சமூக உயர்வை பறைசாற்றும் உணர்வு பூண்டு புறப்பட்ட அன்பர்கள் கூட்டம் அலைகடலென இலட்சக்கணக்கில் ஒன்று கூடி ஆர்பரித்தது.

இளம்பிறை மாநாட்டின் வெற்றி சமூகத்தினை கூறுபோட்டு கல்லாகட்டிக்கொண்டு இருக்கும் இயக்கங்களின் வயிற்றில் புளியை கறைத்திருக்கிறது என்பது கண்கூடு. எந்த ஒரு மற்ற அரசியல் தலைவர்கள் வராத பட்சத்தில் முஸ்லிம் லீக் தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டு நடத்தப்பட்ட நிகழ்வில் தமிழக இஸ்லாமியர்கள் அனைவரும் பழைய எழுச்சியோடு கலந்துகொண்டு வெற்றியாக்கி தந்தது தாய்ச்சபைக்கு கிடைத்த இன்றைய அங்கீகாரம் என்றும் சொல்லலாம்.

இளைஞர்களின் இளம்பிறை பேரணி நிகழ்வில் முக்கிய இடத்தை பிடித்தது, அதிலும் குறிப்பாக மிகச்சிறும் பிஞ்சுகள் இரண்டின் சாகசங்கள் எல்லோரையும் கவர்ந்தது. தஞ்சை மாவட்டம் வழுத்தூரிலிருந்து 86 கி.மி. தொடரோட்டம் ஓடி விழா மேடையை வந்தடைந்து பச்சிளம் பிறைக்கொடியை இளைஞர்கள் தேசியத்தலைவர் அஹமது மற்றும் பொதுச்செயலாளர் பேராசிரியர் இவர்களின் கையில் கொடுத்தது விழாவில் அனைவரையும் ஈர்த்த விடயம்,

இவ்வளவு  நடந்திருக்கிறது ஆனால் நாலுபேர் கொடியை பிடித்து கோசம் போட்டு நடந்தாலே மிகப்பெரும் நிகழ்வாக போட்டுக்காட்டும் தமிழ்நாட்டு ஊடகங்கள் மிகப்பெரும் இஸ்லாமியக் கடல் சங்கமத்தை ஒரு சிறு அளவிலாவது காட்டாமல் போனது ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் மிக ஆற்றமுடியா வருத்தத்தை உண்டாக்கிவிட்டது.

நேற்றைய முன் தினம் காலையில் எனது அலுவலகத்திற்கு சென்றவுடன் வந்த அலைபேசியில் அழைத்த ஓர் இளைஞர் அவர் முஸ்லிம் லீக்காரர் என்பதெல்லாம் இல்லாமல் இருந்தும் ஒரு பொது மனிதராக இவ்வளவு பெரிய நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது ஆனால் இந்த தமிழ்நாட்டு ஊடகங்கள் எவ்வளவு பெரிய இருட்டடிப்பு செய்கிறது பாருங்கள் குறைந்த பட்சம் கூட்டணியில் உள்ள கலைஞர் செய்தி டிவி கூட இதை காட்டவில்லை என்று எண்ணும் போது மிகவும் கோபம் வருகிறது என்றார். மாலை எனது தந்தையார் கூட இதே கருத்தை தான் என்னிடம் பகிர்ந்து கொண்டார், இன்று மாலை பேசிய எம்.ஜே ரவூப் அண்ணனுக்கும் இதே ஆதங்கம் எனில் பொதுச்சமூகம் முழுவதும் இந்த ஊடக இருட்டடிப்பை கண்காணித்துக் கொண்டிருக்கிரார்கள் மற்றும் கனத்த மனதுடன் கண்டித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

சன்டிவியில் நேற்று ஏங்கோ கொங்கு வேளாளர் முன்னணி என்ற அமைப்பு நடத்திய மாநாட்டை அது ஆரம்பித்திருக்கிறது என்றும், இவ்வாறெல்லாம் நடக்கிறது என்றும், தீர்மானங்கள் இவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்றும் தேவைக்கு அதிகமாக காட்டிக்கொண்டே இருந்தார்கள் என்றால் முஸ்லிம்களை மட்டும் முஸ்லிம் லீக் மாநாட்டை மட்டும் ஏன் காட்டவில்லை என்பதை சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை.

மோடி வந்தபோது நேரலையாக காட்டாத குறை தான் ஆனால் இன்றோ செய்தியோடு செய்தியாக கூட சொல்ல ஊடகங்கள் முன்வரவில்லை என்றால் இஸ்லாமியர்களை வேறுபடுத்தி பார்க்கும் பார்வை என்பது சொல்லாமலே புரியும். இதற்கெல்லாம் நமது கையில் ஊடகம் இல்லை என்பதும் நாம் ஊடகங்களில் இல்லை என்பதும் தான் காரணம். இந்த ஆற்றாமை நம்மை ஊடகத்தை நோக்கி உந்தித்தள்ள வேண்டும். குறைந்த காலங்களில் நமக்கு ஊடகம் வசப்பட்டக வேண்டும். அதுவே இதற்கெல்லாம் தீர்வாக இருக்க முடியும். இத்தகைய எல்லா இலக்கையும் அடைய நடந்த இளம்பிறை மாநாட்டு 
வெற்றி ஓர் ஆரம்பப்புள்ளி இட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு சமுதாய நலன்களையும் வென்றெடுக்க நாம் தயாராக வேண்டியுள்ளது, அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை.

- வழுத்தூர் . ஜாமுஹையத்தீன் பாட்ஷா.
                                                                                  





இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவு


இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவு என்ற செய்தி நெஞ்சுக்கு மிகவும் வலி கொடுத்திருக்கிறது, அவர் எழுபத்தி ஐந்து அகவை ஆனவர் என்ற போதிலும் இன்னும் நிறைவாக அவர் நம்மோடு இருந்திருக்க கூடாதா என்றே மனம் ஏங்குகிறது.


ஏனெனில் இயற்கையை சுரண்டி காசாக்கும் மனிதர்கள் இன்றைய இயற்கை வளங்களையோ அதன் சுரண்டல் காரணமாக நாளைய சமுதாயம் எதிர்நோக்கும் பயங்கரத்தையோ நினைத்து பார்ப்பதில்லை. அந்த விசயத்தில் ஓய்வில்லாமல் தனது வானகம் எனற அமைப்பின் மூலம் அயறாது போராடி இயற்க்கைக்கு எதிரான செயல்பாடுகளை கண்டித்தவர். அவரது வானகத்தின் மூலம் மீண்டும் ஒரு இயற்க்கை மறுமலர்ச்சிக்கும், இருக்கும் வளத்தையாவது காப்பதற்கும், அழிந்து வரும் விவசாயத்தை வளர்தெடுப்பதற்கும் இவர் மேற்கொண்ட பணி யாராலும் அளவிடமுடியாதது.

செயற்கை உர மருந்து உபயோகம், மண் மலடு, தண்ணீர் வளம், இயற்கை வேளாண்மையின் மகத்துவம், இயற்கை வாழ்வியல் என அவர் செய்த பிரச்சாரத்தின் பலன் ஆயிரக்கணக்கான மனங்களை இயற்கையை நோக்கி திருப்பி இருக்கிறது என்றால் மிகையில்லை. அவ்வாறான சாதனைக்கு சொந்தக்காரர் இன்று இயற்கை எய்திருக்கலாம் ஆனால் அவர் விதைத இயற்கை விதை நமது நெஞ்சில் தூவப்பட்டு இருக்கிறது. ஆழமாக சிந்தித்து அதை ஆலமரமாக வளர்ப்போம் வரும் சந்ததிகளை அவர் கண்ட கனவு மெய்ப்பட காப்போம்.

நம்மாழ்வார் நம்மோடு இருப்பார் நாம் அவரின் பணி தொடரும் காலமெல்லாம். வாழ்க நம்மாழ்வார்.. எங்கும் வளர்ந்து மிளிர்க அவரது தொண்டு. அன்னாரின் ஆத்மா சந்தி அடைவதாக.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

26 டிசம்பர் 2013

நாணமும்.. விலகலும்!



மஞ்சம் விரித்து
மல்லிகை பரப்பி
மங்கை வரவை
மன்னவன் யான்
மயக்கத்திலே எதிர்நோக்கி
மாய்ந்திருந்தேன்.

தோழியர் கொடுத்த துணிவோடு
கொஞ்சம் கதவு திறந்து
மஞ்சம் நோக்கி
வெட்க‌ப் பஞ்சமில்லமல்
தரை நோக்கி
தாழ்மையுடன் நின்றவளின்,

தங்க வளையல்
தனை அணிந்த‌
தண்டுக்கை வருடி...
தலைவன் யான் இழுத்தேன்.

தேகம் சூடேற,
வேகமாய் வெட்கம் வர‌
நாண தாகத்துடன்
கை இழுத்துக் கொண்டவளை
அணைத்து நான்
அருகே அமர்த்தியது
என் முதலிரவு.

*

காற்றில் புயலாய்
ஊற்றடெடுத்த காமத்தால்
வீற்றிருந்த எனை அழைத்து
மாற்று மொழி கூறி
ஆடை குறைப்பு கூற்றினை அமுல்படுத்தி
இன்பத்தை ஊற்றிக் கொடுத்தாள் - என்
நாற்றடத்தி மார்பினில் சாய்ந்து
இது நேற்றிரவு.

*

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


எப்போதும் போல் பின் குறிப்பு: 

இந்த கவிதை ஏதோ இன்றோ நேற்றோ எழுதியதல்ல... எல்லா தலைப்புகளிலும் நாம் கவிதை எழுத வேண்டும் என நான் அன்றைய 1997-98 க்களில் எழுதியது. அதாவது எனக்கு திருமணம் ஆவதற்கு சற்றேறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்.
கொஞ்சம் ராவாக இருக்கிறது என்று நினைத்தால் சாரி!




23 டிசம்பர் 2013

இசைக்காக வாழ்வாய்!


இன்றைக்கு வந்த செய்திகள்
நீ அப்பல்லோ ஆஸ்பத்திரியில்
இதயம் சார்ந்து சேர்க்கை என்றது.
ஒன்றும் ஆபத்தில்லை
சிறிய அட்டாக் தான்
"ஆஞ்சியோ" செய்ய ஆயத்தம்
எல்லாம் சரியாகிவிடும் என்றார்கள்.

தமிழ்த் திருநாட்டில் பலருக்கு
இலவசமாய் இசை மருத்துவம்
பார்த்தது நீ!

மயக்கம்,
தலைவலி
மண்டைக்குடைச்சல்
தலைச்சுற்றல்
அதீத டென்சன்
நெஞ்சுவலி
தூக்கமின்மை
மன அமைதியின்மை - ஏன்
பலருக்கு பைத்தியம் என்று கூட
சேர்த்துக் கொள்ளலாம்
இவைகளெல்லாம் அனுகாமல்
இசை மருந்திட்டது நீ!

ராக தேவனே! இசைப் பிறவிகள்...
அதிகம் மெய்மறந்திருப்பார்கள்,
யோகம் கற்காமலே அது அவர்களை ஆக்கிரமிக்கும்,
ஆன்மீகம் இருப்பதால் மனம் அமைதியாகும்.

கவலை விடு,
உன்னால் உலகம் கவலை மறந்தது
உனக்கொன்றும் நேராது.

பல கோடி பேருக்கு
பாட்டால் ஆயுள் நீட்டித்திருக்கிறாய்.
அவ்வளவு எளிதில்
உன்னை இசை விடாது.

இசைக்காக வாழ்வாய்!
பல கோடி மக்களின்
பிரார்த்தனை உன் இதயம் சீராக்கும்.

.-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

20 டிசம்பர் 2013

அஹமது நளீருக்கு ஐந்தாம் பிறந்த நாள்!



எங்கள் செல்லக்குட்டி சுல்தான் அஹமது நளீருக்கு இன்று ஐந்தாம் பிறந்த நாள்!

இதே நாளில் இவன் பிறந்த போது நாஙக்ள் அடைந்த சந்தோசத்திற்கு எல்லை இல்லை. 

திருமணம் முடித்து பெறும் முதல் குழந்தை அந்த தலைக்குழந்தை தரும் மட்டற்ற மகிழ்வை ஒரு தகப்பனாக அந்தஸ்து பெற்று புலங்காகிதம் அடைந்து பெறுவது இறைவன் அருளும் பெரும் பேறுகளில் ஒன்று. அந்த ஆனந்த களிப்பை எனக்கு ஊட்டியன் இவன். 

குழந்தை உண்டானதிலிருந்தே என் தாய் தந்தையர் முதன் முதலாக பெற்ற காலத்தில் என்னென்ன ஆனந்தம், அனுபவம் அடைந்திருப்பார்கள் என என்னை ஒவ்வொரு நிலையிலும் சிந்திக்க வைத்தவன். என் தாய் பெற்ற பாட்டை என் மனைவி மூலம் எனக்கு எடுத்துக்காட்டியவன் இவன்.

கண்ணே உன்னை நினைத்து எழுதப்போனால் எழுதி முடிக்க முடியாதடா.. இறைவனருளால் இரண்டு வயதிலிருந்தே பென்சிலோ.. சிலேட்டு குச்சிகளோ பிடிக்காமல் பேனா பிடித்து அகரம் முதல் அனைத்து எழுத்துக்களும் எழுதிக்கற்றாய். உனக்கு பேனா ஒன்று கொடுத்தால் போதும் இரவும் பகலும் எழுத்திக்கொண்டே இருப்பாய். இது உனக்கு இறைவன் அளித்த அருள்.

கண்ணே! நீ நிறை ஞானம் பெற்று சிறப்பாய் சீரோடு வாழ்க!

மணியே! நீ எல்லா அருட் பேறுகளும் பெற்று புகழ் சூழ வாழ்க!

முத்தே! நீ எங்களை மகிழ்வித்து இறையவனும், இறைத்தூதரும் அவர் தம் திருக்குடும்பத்தினரும் உளம் நிறைந்து மகிழும் வண்ணம் வாழ்க!

மகிழம் பூவே! என்றும் நீ நல்ல பூரண உடல் நலத்தோடு பல்லாண்டு.. பல்லாண்டென.. நீண்ட நிறை வாழ்வை நிலத்தினில் பெற்று எல்லோருக்கும் பயன்தரும் சிறப்புயர் செம்மை பெருவாழ்வை பெற்று வாழ்க.

இறைவா! எங்கள் குழக்கொழுந்தை, அருமை மகவை நீ உன் பேரருள் கொண்டு சிறப்பாய் வாழ வை!

எங்கள் உயிரினும் மேலான கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களது நல்லாசிகள் சூழ வையமதில் ஆள வை! ஆமீன்.

வாழ்க! வாழ்க!! வாழ்க!!!


( எனது இரண்டு பிள்ளைகளும் பிறந்தது டிசம்பரில் தான்.)


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

18 டிசம்பர் 2013

பொருள் உலகு!



யாரும் நேர் திசையிலில்லை
ஊரும் உலகமும் மாறிவிட்டது

நோக்கமெல்லாம் நோக்கிலில்லை
தூக்கத்திலும் விழிப்பிலும் தூய்மையில்லை

வாழ்வுக்காக பொருளென்பதெல்லாம்
பொருளுக்காக வாழ்வென்றாகிவிட்டது.

பிறப்பிலிருந்தே  பிறப்பிக்கபடுகிறான்
பொருள் நோக்கில்!

அருள் நோக்கெல்லாம் மறைந்து
மருள் உலகில் வாழ்ந்து மடிகிறான்!

வாழ்வின் பொருளே தெரியாது,
வாழ்வெல்லாம் தெரிந்தது பொருள் தான்!

பொருளற்ற வாழ்வை பொருளோடு வாழ்ந்து
சுவடுகள் ஏதுமிலா சூன்யமாய் சாகிறான்.

ஆனாலும்,
பேசும் ஆயிரம்  வெற்று பெருமைகள்
நாயினும் கொடிய வெறிகள்
நோவினையாற்றும் செயல்கள்
சிரிப்பையும் சிலிர்ப்பையுமே தருகிறது!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

16 டிசம்பர் 2013

முஸஃப்பர் நகர் தொடரும் அவலம்!




சில நாட்களாக தொடர்ச்சியாக காதுகளில் படும் முசஃப்பர் நகர் மக்களின் சோக செய்தி மிகவும் என்னை வருத்தத்தில் ஆழ்த்திய வண்ணமே இருக்கிறது.

மிகக்குளிர்,   ஒதுக்கப்பட்டுள்ள முகாம்  சீதோச நிலைக்கு தகுந்தவாறு உறுதுணை தருவதாய்  இல்லாத காரணத்தினால் தினம் தினம் கூடாரங்களில் கொத்து கொத்தாக கடுங்குளிரால் தக்குபிடிக்க முடியாத பச்சிளம் பாலகர்கள் செத்து மடிகின்றனர். மனதை இது மிகுந்த ரணமாக்குகிறது. இது குறித்து சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க உத்திரபிரதேச அரசை கேட்டுக் கொண்டும் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.





அடுத்து முகாம்களில் காளிகள் புகுந்து ஒண்ட இடமில்லாமல் கூடாரங்களில் குறுகிப்போய் வறுமையிலும், இனக் கொடூரங்களிலும் வாடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய இளம் பெண்களை குறிப்பார்த்து கொடூரமாய் கற்பை சூரையாடுவதும் தொடர்வதாய் அந்த நிகழ்வுகளும் தொலைக்காட்சி சிலவற்றில் வராமல் இல்லை.

கலவரம் நடந்து சில நாட்களிலேயே கூடாரத்தில் புகுந்து அங்கிருந்த இளைஞரை குறிவைத்து காவியாட்கள் நடத்திய காளியாட்டத்தில் அவர் கொடூரமாக கொல்லப்பட்டதும் அவர்களுக்கும் மூகமில் இருக்கும் இளைஞர்களுக்கும் ஏற்பட்ட மோதல்களும் நினைவிருக்கலாம்.

கலவரத்தால் வாழ்வாதாரம் இழந்த இந்த பராரிகளுக்கு ஒழுங்கான முகாம் கூட அமைத்து தர இந்த அரசிற்கு வக்கில்லை, பல சமூக இயக்கங்கள் முசாபர் நகரை மையப்படுத்தி வசூல் வேட்டை நடத்தினாலும் எந்த அளவிற்கு அவர்களுக்கு ஆருதல் அளிக்கும் வகையில் அது சென்று சேர்கிறது என்பது கேள்விக்குறியே! அங்கனம் அது சென்று சேர்ந்து அவர்களின் துளியளவு இன்னலுக்கு மருந்தானாலும் அது மிக ஆருதலே. அந்த வகையில்  ஒரு ஆருதலான விசயம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் குர்ரம் உமர் அவர்களின் தன்னலம் கருதா சமூக தொண்டு. உமர் அவர்கள் பாதிக்கப்பட்ட அவர்களை பல முறை சென்று தொடர்பு கொண்டு அவ்வப்போது அரசாங்கத்தை அணுகி அவரக்ளுக்கு வேண்டியதை செய்ய சொல்லி குரல் கொடுத்தும், அவரால் இயன்ற பல உதவிகளை செய்தும் வருவது வரவேற்பிற்குறியது, இரண்டு நாட்களுக்கு முன்பு  கூட தங்களால் இயன்ற குளிர் கம்பளங்களை கொண்டு சென்று குளிரால் வாடும் அவர்களுக்கு கொடுத்து வந்தார். அவருக்கு நான் இத்தருணத்தில் நன்றி கூறிக்கொள்வதுடன் துஆவும் செய்கிறேன்.

ஆதரவற்ற என் சமூக மக்களுக்கு விடிவு காலம் எந்நாளோ..? அநீதிகள் மாய்ந்து நீதி அரசாள்வது தான் எந்நாளோ..? புரியவில்லை ஆனால் இதற்கெல்லாம் விடிவென்பது சமூக ஒற்றுமை மூலம் மட்டுமே உண்டாகும். பாசிச சக்திகளில் கைகளில் கொடும் ஆயுதங்கள் நம்மை சாய்ப்பதற்கும், மாய்ப்பதற்கும் இருக்கும் வேலையில் நம் சமூகம் ஓரணியில் ஒன்று சேருமா..?  உணர்ச்சி வசப்படுத்தி மீண்டும் மீண்டும் சமூகத்தை பாதகத்தில் தள்ளும்  இயக்கங்களுடன் சென்று கெடுமா?  அல்லது முஸ்லிம் லீக் போன்ற சாத்வீக அரசியல் அமைப்போடு இச்சமூகம் ஒன்றிணைந்து வெல்ல களம் காணுமா..? என்பதே இன்றைய கேள்வி.


- வழுத்தூர் ஜா. முஹையத்தீன் பாட்ஷா

05 டிசம்பர் 2013

சரித்திரம் இன்னும் இருக்கிறது



ஜனாஸா தொழுகை நடத்தி
புதைக்கப்பட்டது,
பெருமை வாய்ந்த
இந்தியத் திருநாட்டின்
வானளாவிய பெருமைகள்!.

அரசியல் இலாபத்திற்காய்
வாழும் பேரினத்தின்
தொழுகைத் தளம்
இடிக்கப்பட்ட் தருணம்.

****

மெய்ஞ்ஞானம் வளர்த்த
பாரதத் தாயின்
பொன்மேனி சிதைக்கப்பட்டது

பொய்ஞ் ஞானத்தால்
வெறியூட்டப்பட்ட
வேட்டை நாய்கள்
பாய்ந்து குதறியதால்!

*****

"ஈஸ்வர்" என்பதும் "அல்லாஹ்" என்பதும்
இறைவனை குறிக்கும் இருபெயர்கள்
என்று போதிக்கப்ட்ட திருநாட்டில்,
ஈட்டியும், உடைப்பாறையும், செங்கல்லும்
எடுத்துவர பணிக்கப்பட்டனர்
அறிவு மங்கிய மந்தைக் கூட்டத்தினர்!

அண்ணன் தம்பியாய்
வாழ வகையிருந்தும்
அத்துவானிய சூழ்ச்சிகளால்
ஆடும் ஓணானுமாய் ஆகி நின்று
பலர் ஆவி பறித்த சோகம் - இது
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட தேசம்!

****

பல்லாயிரம் பிரிவிருந்தும்
பரிவுகாட்டி பாசம்காட்டி
பகிர்ந்துண்டு பாமரரும் வாழ்ந்த நாடிது.
வேற்று'மை' கொண்டு பிரித்துக் காட்டி
ஓட்டுக்காக ஒழுகிய இரத்தத்தில்
காட்டுக்கு சென்று வனவாசம் பூண்ட தனக்கு
இரத்த அபிசேகம் செய்யச்சொன்னானா இராமன்???


ஆயிரத்திற்கும் மேலான
ஆண்டுகள் அண்ட
சமூகத்தின் சரித்திர புதையல் சிதைக்கப்பட்டது
அறுபது ஆண்டுகால ஆட்சிபீடத்தில்!

ஆயினும் சக்கரம் சுழல்கிறது
சரித்திரம் இன்னும் இருக்கிறது.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா