30 டிசம்பர் 2013

திருச்சி இளம் பிறை மாநாடும், ஊடக இருட்டடிப்புகளும்


திக்கெட்டும் தக்பீர் முழக்கம்.. திசையெங்கும் பச்சிளம் பிறைக்கொடிகள்.. கண்ணுக்கு எட்டிய தொட்டும் பேரணிகள், தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து சந்தோசப் பெருக்குடன் விரைந்து வந்து கலந்து கொண்ட இளைஞர் பட்டளங்கள், இளஞ்சிறார்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் எனக் கூடி நேற்று திருச்சியே திகைக்க வெற்றியாய் நிகழ்ந்து முடிந்திருக்கிறது தாய்ச்சபை முஸ்லிம் லீக் நடத்திய இளம்பிறை பேரணி மற்றும் மஹல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு மாநாடு.

இளம்பிறை மாநாடு சமுதாய கண்ணியத்தை சத்தம் போட்டு உரைத்திருக்கிறது. முஸ்லிம் லீக் எத்தகையது என்பதையும், ஏகத்திற்கும் வரலாறோ.. அன்றாட நிகழ்வோ கூட தெரியாமல் பத்தோடு பதினொன்றாக முஸ்லிம் லீக் என்ன செய்தது என்றும் அது தமிழகத்தில் இருக்கிறதா என்றும் கிண்டலடித்து பேசியவர்களுக்கெல்லாம் வாய்ப்போட்டு போட்டுள்ளது. முஸ்லிம் லீக்கின் புத்துணர்ச்சியை.. முஸ்லிம் லீக்கிற்கு ஆதரவாக ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தினர் ஒன்று கூடிய நிகழ்வை பார்த்த புதிய இயக்கங்கள் எல்லாம் உண்மையில் கலங்கிப் போய்தான் இருக்கிறது. அடுத்து என்ன செய்யலாம்.. எப்படி மக்களை திசை திருப்பலாம் என்று தான் முயற்சி மேற்கொண்டு உள்ளது. ஆயினும் அதுவெல்லாம் இனி நடக்காது. இந்த இயக்கத்தின் பின் சமூகம் அணி திரளவேண்டும் எனபதில் சமூக மக்கள் தெளிவாக இருக்கின்றனர் என்பதை நேற்றைய நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டியுள்ளது.

முஸ்லிம் லீக்கின் மாபெரும் புத்துணர்வு பரிணாமத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இம்மாபெரும் மாநாட்டில் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான இ.அஹமது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் லீக்கின் தேசிய செயலாளரும், தமிழக தலைவருமான பேராசிரியர் பெருந்தகை காதர் முகைதீன், கேரள நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், கர்நாடக, ஆந்திர, மகாராஷ்டிர, டெல்லி முஸ்லிம் லீக் முக்கிய பொறுப்பாளர்கள், தமிழ்நாட்டு தாய்ச்சபை நிர்வாகிகள், தாய்ச்சபையின் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான், மற்றும் தாய்ச்சபை உறுப்பினர்கள் என அனைவரும் மேடையில் வீற்றிருந்து அனைவரையும் உற்சாகப்படுத்தி சிறப்பித்த நிகழ்வு தாய்ச்சபை வரலாற்றில் புதிய அத்தியாத்திற்கான தொடக்கப்புள்ளி என்றால் அது மிகையாகாது.

முஸ்லிம் லீக்கை பொருத்தவரை அதன் கொள்கைகள், சாத்வீகம், இந்திய இறையாண்மையை மதிக்கும் பண்புகள், இளைஞர்களை வெறியேற்றாத தன்மை, இதன் தலைவர்களின் முதிர்வு இவையெல்லாம் மிக முக்கிய அம்சங்கள். இதையெல்லாம் நிகழ்வில் பேசிய தெசிய தலைவர் அமைச்சர் இ.அஹமாது, மாநில தாய்ச்சபை தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், கேரள எம்.பிஇ.டி.முஹம்மது பசீர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட மற்ற எல்லா தலைவர்களின் உரையும் சான்று பகர்பவையாக இருந்தது என்பது குறிப்பிட தக்க அம்சம் என்று பலராலும் பாராட்டப்பட்டிருக்கிறது. இதில் முத்தாய்ப்பாக வாசிக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் அற்புதமானவை என்றும் அரசியல் நோக்கர்கள், விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர் என்பதும் கவனிக்கதக்கதும், மனமகிழ்ச்சி கொடுப்பதும் ஆகும்.

இக்காலத்து புதிய ஜமாத்துகளின் அல்லது புதிய இஸ்லாமிய கட்சிகளின் கூட்டத்தில் காணக்கிடைக்காத ஒரு பெருங்காட்சி அது கலந்து கொண்ட அனைவரும் சமூக கண்ணியத்தோடு தொப்பிகள் அணிந்து கலந்த கொண்ட காட்சி உயரத்தில் இருந்து போர்க்கும் போது கண்ணுக்கு எட்டிய தூரம் மல்லிகை கம்பளம் பரப்பியது போல் எழிலோடு இருந்தது.

யாரும் எண்ணிப்பார்த்திருக்க முடியாத மக்கள் திரள், திருச்சியெங்கும் தீன் நெறியாளர்களின் வெள்ளம், காசுக்கு ஆள்பிடிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சில ஆயிரம் பேர் வந்தாலே பல இலட்சங்கள் என போலி விளம்பரம் செய்யும் ஜமாஅத் இயக்கங்களுக்கும் மத்தியியில் சமூக உயர்வை பறைசாற்றும் உணர்வு பூண்டு புறப்பட்ட அன்பர்கள் கூட்டம் அலைகடலென இலட்சக்கணக்கில் ஒன்று கூடி ஆர்பரித்தது.

இளம்பிறை மாநாட்டின் வெற்றி சமூகத்தினை கூறுபோட்டு கல்லாகட்டிக்கொண்டு இருக்கும் இயக்கங்களின் வயிற்றில் புளியை கறைத்திருக்கிறது என்பது கண்கூடு. எந்த ஒரு மற்ற அரசியல் தலைவர்கள் வராத பட்சத்தில் முஸ்லிம் லீக் தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டு நடத்தப்பட்ட நிகழ்வில் தமிழக இஸ்லாமியர்கள் அனைவரும் பழைய எழுச்சியோடு கலந்துகொண்டு வெற்றியாக்கி தந்தது தாய்ச்சபைக்கு கிடைத்த இன்றைய அங்கீகாரம் என்றும் சொல்லலாம்.

இளைஞர்களின் இளம்பிறை பேரணி நிகழ்வில் முக்கிய இடத்தை பிடித்தது, அதிலும் குறிப்பாக மிகச்சிறும் பிஞ்சுகள் இரண்டின் சாகசங்கள் எல்லோரையும் கவர்ந்தது. தஞ்சை மாவட்டம் வழுத்தூரிலிருந்து 86 கி.மி. தொடரோட்டம் ஓடி விழா மேடையை வந்தடைந்து பச்சிளம் பிறைக்கொடியை இளைஞர்கள் தேசியத்தலைவர் அஹமது மற்றும் பொதுச்செயலாளர் பேராசிரியர் இவர்களின் கையில் கொடுத்தது விழாவில் அனைவரையும் ஈர்த்த விடயம்,

இவ்வளவு  நடந்திருக்கிறது ஆனால் நாலுபேர் கொடியை பிடித்து கோசம் போட்டு நடந்தாலே மிகப்பெரும் நிகழ்வாக போட்டுக்காட்டும் தமிழ்நாட்டு ஊடகங்கள் மிகப்பெரும் இஸ்லாமியக் கடல் சங்கமத்தை ஒரு சிறு அளவிலாவது காட்டாமல் போனது ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் மிக ஆற்றமுடியா வருத்தத்தை உண்டாக்கிவிட்டது.

நேற்றைய முன் தினம் காலையில் எனது அலுவலகத்திற்கு சென்றவுடன் வந்த அலைபேசியில் அழைத்த ஓர் இளைஞர் அவர் முஸ்லிம் லீக்காரர் என்பதெல்லாம் இல்லாமல் இருந்தும் ஒரு பொது மனிதராக இவ்வளவு பெரிய நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது ஆனால் இந்த தமிழ்நாட்டு ஊடகங்கள் எவ்வளவு பெரிய இருட்டடிப்பு செய்கிறது பாருங்கள் குறைந்த பட்சம் கூட்டணியில் உள்ள கலைஞர் செய்தி டிவி கூட இதை காட்டவில்லை என்று எண்ணும் போது மிகவும் கோபம் வருகிறது என்றார். மாலை எனது தந்தையார் கூட இதே கருத்தை தான் என்னிடம் பகிர்ந்து கொண்டார், இன்று மாலை பேசிய எம்.ஜே ரவூப் அண்ணனுக்கும் இதே ஆதங்கம் எனில் பொதுச்சமூகம் முழுவதும் இந்த ஊடக இருட்டடிப்பை கண்காணித்துக் கொண்டிருக்கிரார்கள் மற்றும் கனத்த மனதுடன் கண்டித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

சன்டிவியில் நேற்று ஏங்கோ கொங்கு வேளாளர் முன்னணி என்ற அமைப்பு நடத்திய மாநாட்டை அது ஆரம்பித்திருக்கிறது என்றும், இவ்வாறெல்லாம் நடக்கிறது என்றும், தீர்மானங்கள் இவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்றும் தேவைக்கு அதிகமாக காட்டிக்கொண்டே இருந்தார்கள் என்றால் முஸ்லிம்களை மட்டும் முஸ்லிம் லீக் மாநாட்டை மட்டும் ஏன் காட்டவில்லை என்பதை சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை.

மோடி வந்தபோது நேரலையாக காட்டாத குறை தான் ஆனால் இன்றோ செய்தியோடு செய்தியாக கூட சொல்ல ஊடகங்கள் முன்வரவில்லை என்றால் இஸ்லாமியர்களை வேறுபடுத்தி பார்க்கும் பார்வை என்பது சொல்லாமலே புரியும். இதற்கெல்லாம் நமது கையில் ஊடகம் இல்லை என்பதும் நாம் ஊடகங்களில் இல்லை என்பதும் தான் காரணம். இந்த ஆற்றாமை நம்மை ஊடகத்தை நோக்கி உந்தித்தள்ள வேண்டும். குறைந்த காலங்களில் நமக்கு ஊடகம் வசப்பட்டக வேண்டும். அதுவே இதற்கெல்லாம் தீர்வாக இருக்க முடியும். இத்தகைய எல்லா இலக்கையும் அடைய நடந்த இளம்பிறை மாநாட்டு 
வெற்றி ஓர் ஆரம்பப்புள்ளி இட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு சமுதாய நலன்களையும் வென்றெடுக்க நாம் தயாராக வேண்டியுள்ளது, அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை.

- வழுத்தூர் . ஜாமுஹையத்தீன் பாட்ஷா.
                                                                                  





கருத்துகள் இல்லை: