04 அக்டோபர் 2015

சிராஜுல் மில்லத் 90வது பிறந்த நாள்

தலைவர் சிராஜுல் மில்லத் அப்துல் சமது சாஹிப் அவர்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முன்னால் தலைவர் சந்தனத்தமிழ் வித்தகர், சிந்தனைசெம்மல், சிராஜூல் மில்லத் என்றும் நம் நினைவில் வாழும் A.K.A.அப்துல் சமத் சாஹிப் அவர்களின் 90 வது பிறந்த நாள் இன்று (04-10-2015).
மறைந்த தலைவர் அவர்கள் இரண்டு முறை பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினராகவும், மேல் அவையில் ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவ்வாறே தமிழ்நாடு சட்டபையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கள் மக்கள் பணியை சிறப்புற ஆற்றி இருக்கிறார்கள். தமது அரசியல் வாழ்வில் சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்திற்கு மட்டுமல்லாது எல்லா தரப்பு மக்களுக்காகவும் குரல் கொடுத்து இந்திய இறையான்மையை, சகோதரத்துவத்தை மற்றும் சமயசார்பின்மையை காக்க அயராது போராடிய பெருந்தகை என்றால் மிகையில்லை.
இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி போன்றவர்களிடம் இவர் கொண்டிருந்த நெருக்கம் சமுதாயத்திற்கு பல பலன்களை பெற்றுத்தந்தது. தமிழக அரசியலிலும் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றா எல்லா ஆளுமைகளோடும் அரசியல் நடத்தியவர்.
இவரது சொற்திறம் எல்லா தரப்பினராலும் சிலாகித்து பேசப்படும் உயரிய ஈர்ப்பிற்கு சொந்தமானது. இவரது அரசியல் நாகரீகம் அன்பும் தோழமையும், கண்ணியமும் நிறைந்தது.
திருக்குரானின் தமிழாக்கத்தை தங்கள் தந்தையார் மொழி பெயர்த்துச் சொல்லச் சொல்ல அதை தமது சிறுவயதிலேயே தமது பிஞ்சுக் கரங்களால் எழுதியவர் என்ற சிறப்பையும், அரேபிய அரசாங்க சிறப்பு விருந்தினராய் சென்று புனித காஃபாவெனும் எனும் இறையாலயத்தை தங்கள் கரங்களால் கழுவியவர் என்ற சிறப்பிற்கும் சொந்தக்காரர்.
மேலும் பலவித அறிவு ஞானத்திற்கு சொந்தக்காரர். அத்தகைய மாமேதையின் ஆன்மா எல்லா சிறப்பும் பெற இந்நன்னாளில் போற்றி துஆ செய்வோமாக.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா