20 ஜூலை 2015

படத்திற்கான துளிப்பா




"பல்லில்லா நமக்கு அரிசி கூழாகும் கல் செரிக்காதுல்ல.. பாத்து பொறுக்குய்யா!"

மனைவியின் கூவலோடு சேவலும் சேர்ந்து கொண்டது,

கெக்! கெக்..கெக்கோ...!!!





-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

19 ஜூலை 2015

எங்கே..? மாண்பாய் இருந்த நோன்பு


(நோன்பு வைத்ததும்.. துறந்ததும்...
   ********************************************
இரண்டு மூன்று மணிநேரமே உறங்கினாலும்
அலாரம் அடிக்கும் முன்னே
எழுந்திருத்த சஹர் நேரம் எங்கே..?
பிரம்மமுகூர்த்தத்தின்
சுத்தமான ஓசோன் வாடையை
மொத்தமாக சூவிகரிக்கச்செய்த
முழுமாத தவம் எங்கே..?
அதிகாலை இரம்மியத்தை
துதிபாடி பருகச்செய்த
தூயப்பொழுதுகள் எங்கே..?
குறைவாக உறங்கி எழுந்தாலும்
புத்துணர்வு பூரித்திருந்த
இரவுச்சமயலின் இதம் எங்கே
அது தந்த அலாதி ரிதம் எங்கே
கடைசியாய் குடிக்கும் நீர்துளி எங்கே
நிய்யத் தென்னும் நோன்பின் எண்ணம்
கொடுக்கும் நிரந்தர இன்பம் எங்கே..?
இப்தாரின் உதடுகள்
இறைவனைப்புகழ்ந்து
முதலில் தேடும்
முதிர்ந்த பேரித்தங்கனிகள் எங்கே..?
இழந்த பலத்தை இலகுவாக மீட்டுத்தந்த
இனித்த பழங்கள் எங்கே..?
தாகித்த குடல் தணித்த
குளிர் பானங்கள் எங்கே..?
நெஞ்சம் குளிர நாக்கில் பட்ட
நோன்புக்கஞ்சி சுவைச் எங்கே..?
வயிறுக்குகந்த கடல்பாசி எங்கே..?
வாசமான சமூசா பஜ்ஜிகள் எங்கே..?
வறுக்கும் மணம் மயக்கும் மனம்
முந்திரி திராட்சை மிதந்த வர்மிசல்லி எங்கே..?
விரும்பி உண்ட அரீஸ் வகைறாக்கள்
அரேபிய உணவுகள் திரும்பிய திசைதான் எங்கே..?
இத்தனையும் கிடைத்தாலும்
எல்லாவற்றிலும் இன்பம் நல்கும்
அந்த கடைசி நேர காத்திருப்பின்
இஃப்தார் ஆவல் எங்கே..?
பதிநைந்து மணிநேர நோன்பிற்க்கு
பாசத்தின் தாய்கரமாய் ஊட்டவரும்
பாங்கோசை தரும் பரவசம் எங்கே..?
இவையெல்லாம் பெற இன்னும் ஓராண்டு காத்திருப்போம்
இறையருள் நம்மை மீண்டும்.. மீண்டும் மீட்டுத்தரட்டும்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

ஈகைத்திருநாள் கவிதைகள்




தூக்கத்தை உடைத்து
தூய்மையை பலப்படுத்தி இருந்தோம்
இரெவெல்லாம் பகலாய் இருந்தது
உழைப்பும் களைப்பும் பகலாய் இருந்தது
கட்டுப்பாடுகள் நம்மை அறியாமலேயே
நம் கட்டுக்கோப்புகளாயிருந்தது
வேதரீங்காரமும், அருளுரைகளுமே
அன்றாட வாழ்வாய் ஆகியிருந்து
பார்வைகளில் அருளும் குளிரும்
பரிவும் பணிவும் பரந்துகிடந்தது
செவியும் உணர்வும் புவியில் சிறந்ததில்
குவியும் சிந்தனையோடு நிலைத்திருந்தது
கரங்களில் இரக்கச் சுரங்கங்கள் சுரம்பாடி
ஏழைகளை அணைத்துக்கொண்டிருந்தது
பிறருக்காகவும், பிசகருக்கவும்
எட்டுக்கள் வைத்து எட்டியமட்டும் நடந்தது கால்கள்
நகர்ந்துவிட்ட நாழிகைகளும்
தேய்ந்துவிட்ட ரமலான் பிறையும்
பெருநாள் கொண்டாட்டங்கள்
புத்தாடைகளோடு
பிரிய உணவுகளையும்
பிரியாணியையும் தந்துவிட்டு
ஏனோ துடைத்து எடுத்துச்சென்றது
அத்தனை அருமைகளையும்!

*****
ஏதோ சூழ்ந்திருந்த தெய்வீகம் ஒன்று...
நம்மோடிருந்த விண்வளையம் ஒன்று... 
இலயித்திருந்த அருள்சூழல் ஒன்று...
நீங்கி விலகிவிட்டதாக இப்போதைய உணர்வு
ரமலான் சென்றுவிட்டதோ!

*****

பகலெல்லாம் நோன்பிருந்தோம்
பசியே ருசியாய் இருந்தது
நீ சென்றபின் மீண்டும் பழைகுருடி கதவைத் திறந்தாள்
சாப்பாட்டு மூட்டையை சுமந்து திரிகிறோம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

08 ஜூலை 2015



இளங்காலை பனிப்பொழிவில்
குளித்துவிட்டு தலையை
துவட்டியும்... துவட்டாமலும்
சிரித்து நிற்கும் புதுமலர்களை
வழியில் பயணிக்கும் மூர்கனொருவன்
வெறிகொண்டு சிதைக்கிறான்
சிரித்தவண்ணமே சிதையில் வீழ்க்கிறது
புதுமலர்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா