27 அக்டோபர் 2018

மகன் நளீர் குறித்து எழுதிய 4 கவிதைகள்

பேரன் நளீரை கொஞ்சிடும் என் தந்தை


சீர்மிகு சிரிப்பினில் பூக்களும் தோற்றிடும் - உன்
சில்லெனும் பார்வையில் பாலையும் பூத்திடும்
சிங்கார பார்வையில் பலஞாயிறு உதித்திடும் - உன்
சின்னக்குறும்புகளால் உலகங்கள் உயிர்பெறும்

நாட்டியம் தோற்றிட நடந்திடுவாய்
வாத்தியம் தோற்றிட பேசிடுவாய்
ஆஹா! உன் அற்புத மழலையால்
ஆயிரம் தேனின்பம் எங்கள் காதினில் குடிபுகும்.

ஆஹா! நீ ஆடிப் பாடி விளையாடுகையில்
ஆனந்தமாய் சிரித்தாடுகையில் வீடெல்லாம் ஒளிமிகும்.

உன் வாயினில் வழிந்தொடும் எச்சில்களில்
தேனினும் விஞ்சிய தித்திப்பு தேங்கிக் கிடக்குதடா

என்ன மொழி பேசுகிறாய் என் மகனே
எண்ணத்தை அள்ளுகிறாய் சொல் மகனே
எங்களுக்கெல்லாம் தெரியாத இன்ப மொழி
இறைவனே கற்பித்தானோ என் கண்மணியே

கவிதைகள் பல எழுதி நான் போற்றுவேன்
காலமெல்லாம் உன்னை நான் வாழ்த்துவேன்
நல்லவனே நளீரே வாழ்க! வாழ்கவே!!

புண்ணியம் செய்தோமடா கண்ணே
உன்னைப் போல் புதல்வனைப் பெற்றிடவே
கண்ணியம் பலப்பலப் நீ பெற்று
விண்ணையும் விஞ்சும் புகழ்பெறுவாய்
என்னையும் உன் தாய் மற்றும் உற்றாரையும்
மகிழ்வில் ஆழ்த்தி சிறப்புறுவாய்

000

புத்தம் புதிதாய் எங்கள் குலத்தில்
பூத்த மரிக்கொழுந்து - நீ
சித்தம் யாவிலும் சிறப்பாய் நிற்கும்
சிரிக்கும் தவக்கொழுந்து


சரித்திரம் ஒன்றை சிறப்பாய் படைக்க
வந்த திருக் கொழுந்து-பல
சாகசம் யாவையும் நிகழ்த்த விருக்கும்
இறையின் அருட் கொழுந்து

அரபு நாட்டில் விளைந்த தங்கமே
அப்துல் கலாமின் கனவே
என்னவள் மணிவயிற்றின் முத்தே
தந்தாய் தந்தை என்றொரு பாக்கியம்

 000

நெஞ்சம் மகிழ்ந்து போனேனடா - நான்
நெக்குறுகி நின்றேனடா

 எத்தனை முறை முத்தம் கொடுத்தாலும்
முற்றுப்பெறவில்லை மோகம்
எத்தனை எத்தனையோ பூக்கள் பார்த்திருக்கிறேன்
எந்த பூவும் ஆகுமோ உன் சிரிப்பூ
எதை எதையோ பார்த்திருக்கிறேன்
அவைகளெல்லாம் தர்வில்லை அழுகை
எத்தனை எத்தனையோ நினைவுகள்
தரவில்லை உன் போல் பூரிப்பு
எத்தனை எத்தனையோ நிலைமைகளை கடந்திருக்கிறேன்
எதுவும் தரவில்லை உன் போல் தவிப்பு
எத்தனை எத்தனையோ மேதைகளை அறிந்திருக்கிறேன்
அவர் தரவில்லை உன் போல் சிலிர்ப்பு
எத்தனை எத்த்னையோ அனுபவங்கள் தினம் தினம்
எவையும் தரவில்லை உன்போல் படிப்பு
எத்தனை எத்தனை பட்டங்களும் தராதடா நீ தந்த மதிப்பு

 000

இந்த வினாடியின் நிகழ்வு குறித்து
அடுத்த வினாடி நினைப்பதில்லை
அடித்தலையும் கண்டித்தலையும்
உண்மையாக வே மறந்து விடுகின்றான்
அவன் இருப்பை மறந்தவன்
அகந்தை இல்லாதவன்
அடுத்த கனம் குறித்த கவலை இல்லாதவன்
இந்த நொடி பூரணமாய் வாழ்பவன்
எப்போதும் கற்றுக்கொண்டே இருப்பவன்
மிகப்பெரிய பேராசானாய் திகழ்பவன்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

மகன் சிறு வயதாய் இருந்த போது எழுதியது

அருமை தம்பி காலித்திற்கு எழுதிய கடிதம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

பரிசுத்த ஹக்கின் திருவருள் கொண்டு...

நம் உயிரினும் மேலான கருணையும், அருளும் மிகுந்த நபிகள் நாயகம் (ஸல்..) அவர்களையும் அவர்கள் தம் திருக்குடும்பத்தினரையும் போற்றி..

நம் அன்பு புவ்வா, பாப்பினை மனக்கண்ணில் இருத்தி..

அன்பிற்கினிய தம்பிக்கு ராஜா முஹம்மத் எழுதுகிறேன்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

இறையருளால் எல்லாம் இங்கு நிறை நலம், எப்படி இருக்கிறாய்.. விரைவில் பயணம் புறப்பட வேண்டியிருக்கும் இன்ஷா அல்லாஹ். ஆதலால் சில கருத்துக்களை உன்னோடு பகிர நினைக்கிறேன். இது அறிவுரையல்ல எனக்குமான விசயமும் கூட,

தம்பி! சந்தோசமாக மிகத்தைரியமாக தயாராகி விடு. எல்லாவற்றிற்கும் தைரியமே முதல் மூலதனம். அது இருந்தால் எதையும் சாதிக்கலாம். இளம் கன்று பயம் அறியக்கூடாது. அது தேவையே இல்லாத ஒன்று. எது இருக்கிறதோ இல்லையோ தைரியம் இருந்தால் போதும் எல்லாவற்றையும் சாதித்து விடலாம். அடுத்தது கூச்சமும், தயக்கமும் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. நேர்மறை சிந்தனை (positive thoughts) எப்போதும் மிக அவசியம். நம்மைப்பற்றிய உயர்வான மதிப்பீடு எப்போதும் நம்மிடம் இருந்து கொண்டே இருத்தல் அவசியம். ஒருபோதும் நம்மை குறைவாக மதிப்பிடுதலோ, நம்மை பற்றிய எதிர்மறை சிந்தனையோ (negative thoughts) எப்போதும் இருக்கவே கூடாது. நான் நல்ல திறமைசாலி என்று எப்போது உறுதியாக நினை, மேலும் துணிவுடன் எதை எப்போது யாரால் செய்விக்க முடியும் எனத் திட்டமிட்டு அதை அப்போதே தகுந்த சூழ்நிலை அறிந்து தகுந்தவர்களை அணுகி முடித்திட வேண்டும். அல்லாமல் கூச்சம் கொண்டும் இவரிடம் செல்வதா அவ்வாறு அவரிடம் சென்றால் நம்மை அவர் இப்படித்தான் என முடிவுக்கு வந்துவிடுவாரோ என்றெல்லாம் நினைத்தோ அல்லது அவர் உயர் பதவியில் இருப்பவராயிற்றே, அவரோடு நம்மை ஒப்பிடுகையில் நாம் பெரிய ஆள் இல்லையே என்றெல்லாம் நாமக்கு நாமே கண்க்கிட்டு குழப்பி கடைசியில் வாய்ப்பைப் பயன்படுத்தாமல் போய்விடக்கூடாது.

தம்பி! நீ இப்போது தான் வெளியே வரப்போகிறாய், நாம் நினைப்பது போல் அல்ல இவ்வுலகம். இது நாம் எதிர்பார்ப்பதை விட முற்றிலும் வேறுபட்டது, மோசமானதும் கூட, பலதரப்பட்ட நம்பவே முடியாத மனிதர்களையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கும். அவற்றை எதிர்கொள்வதற்கும், சாதுர்யமாக கையால்வதற்கும்.  நம்மை நாம் தயார் படுத்திக்கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் நீ இப்போது தான் பல விசயங்களை கற்கப்போகிறாய், எனக்கு

இந்த சூழல்கள் கற்றுக்கொடுத்தப் பாடங்கள் மிக.. மிக... அதிகம். வைரமுத்துக்கூட தன் மகனுக்கு சொல்வதாக ஒரு விடயம் சொன்னார்.. மகனே உன்னை பள்ளி அனுப்ப யோசிக்கிறேன், எனெனில் வாழ்க்கையில் படிக்க நீ தெருவுக்குத்தானே வர வேண்டும்”...என்று. ஆக நாம் கற்க வேண்டியது ஏராளம் உண்டு. அவைகளை நாம் மிக திறந்த மனதுடன் கற்க முன்வர வேண்டும் மேலும் எந்த சூழ்நிலையிலும் நான் வெல்வேன்.. நான் வெல்லப் பிறந்தவன்,.. வாழப்பிறந்தவன்.. ஆளப்பிறந்தவன்... எனக்கு இயற்கையின் பேருதவி என்றும் உண்டு, நான் இயற்கையின் பேரம்சம் எதையும் வெல்ல அவ்வியற்கை என்றும் என்னோடு துணை நிற்கும், எனக்கு என்றும் நபிகள் நாயகம் (ஸல்..) மற்றும் அவர்களின் திருக்குடுப்பத்தார்கள், என்றன் அன்னை, தந்தையர், பெரியவர்கள், என் முன்னோர்கள் என எல்லோருடைய ஆசியும் துஆவும் உண்டு அவ்வாறிருக்க எனக்கு என்றும் சிறப்பும் மேன்மையுமே, என்றும் வெற்றியே என்ற  மன உறுதியுடன் எதிர்காலத்தை சவாலுடன் எதிர்கொள்ளும் சக்தியை நாம் நம்மிடம் அணுகனமும் வளர்த்து மனதால் மிக உத்வேகத்துடன் புத்துணர்ச்சிப் பூண்டிருத்தல் மிக முக்கியம்.

தம்பி! திட்டமிடும் செயலை மிகவும் அதி சீக்கிரமே ஒத்திப்போடாமல் செய்ய பழகவேண்டும். அது மிக முக்கியம். இயற்கை நம் மூலமாக ஓர் சிறப்பான செயலை நடத்த நாடி சில நேரம் அதிஷ்டவசமாக சில வாய்ப்புகளைத்தரும், அவ்வேளைகளில் சில காரணங்களை நமக்கு நாமே சொல்லி அதை தள்ளிப்போடும் போது இயற்கை அதையே மற்றவர்களின் மனதில் உதிக்கச் செய்து மற்றவர்களை வைத்து நடத்திவிடும், இது எண்ண அலைகளின் மூலம் நடப்பது, ஆகவே நமக்கு வரும் வாய்ப்புகளில் நாம் மிகக்கவனமாக இருத்தல் மிக அவசியம். எடுத்துக்காட்டாக சில நேரங்களில் சிலர் சொல்லுதல் உண்டு..  அவர்கள் ஆரபித்த அந்தத்தொழிலைத்தான் மிகக்காலமாக நாங்கள் ஆரம்பிக்கலாம் என எண்ணியிருந்தோம்.. ஆனால் அவர்கள் தொடங்கிவிட்டார்கள், இப்போது நல்ல இலாபமாம் ச்சே.. மிஸ்பண்ணியாச்சுப்பா...  
என்று.  ஒன்று நன்றெனக்கண்டால் அதை இன்றே செய்வேனெனும் மனப்பாங்கிற்கு நாம் வரப் பழகுதல் நலம்.

தம்பி! சம்பாதிப்பது மிக எளிது, அசாத்திய தைரியம் மட்டுமிருந்தால் எதையும் சாதிக்கலாம். ஒவ்வொருவரைப் பார்க்கும் போதும் அவரிடம் உள்ள சிறந்த குணத்தை அல்லது நல்லதை பார்த்து பெற்றுக்கொள்ள பழக வேண்டும், அவரை நாம் எப்படி பயன் படுத்திக்கொள்ள முடியுமோ அவ்வாறு பயன்படுத்தி முன்னேற்றப்பாதையில் உயரேப் போய்கொண்டிருக்கவேண்டும். ஒவ்வொன்றை செய்வதற்கு முன்னும் அதை எப்படி அணுகுவது என்ற உக்தி முக்கியம். எல்லாவற்றிலும் மேலான ஓர் செய்தி என்னவென்றால் என்னேரத்திலும் மனச்சோர்வென்பது கூடவே கூடாது. மனம் மிக உற்சாகமாக மகிழ்வாக இருக்க வேண்டும். நம்மால் எதுவும் முடியும் என்ற வைராக்கியம் எப்போதும் பலமாக இருக்க

வேண்டும். அ.ப.ஜே.அப்துல் கலாமின் அக்னிச் சிறகுகள்கண்ண்டிப்பாகப் படி இன்னும் எத்தனையோ சரித்திர புருடர்களை பார்க்க..பார்க்க.. நம் வாழ்வு மிக எளிதாக நமக்குத் தோன்றும். சாதிக்க வேண்டும் என்ற உறுதி பீரிடும். (புத்தகம் படி..நல்ல விடயங்கள் எங்கிருந்தாலும் தேடிப் பிடி.) எல்லாவற்றுக்கும் மிக..மிக.. மேலான முன்னுதாரணம் நம் ஈருலக வேந்தர் நபிகள் நாயகம் (ஸல்) வாழ்வு மிக சிந்த்திக்க தக்கது.

தம்பி! பொதுவாக நாம் நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப்பார்த்தே பழகிவிட்டோம், ஒப்பீடு நம் முன்னேற்றத்தையும், நம் தனித்தன்மையையும் குறைத்து விடும். பொதுவாக பரிட்சைக்கு படிக்க காலையில் எழவேண்டும் என இருக்கும் போது கூட ஆஹா.. மற்றவர்களெல்லாம் அழகாக அனுபவித்து தூங்கும் போது நாம் எழவேண்டுமா.. கொஞ்சம் தூங்கலாமே என்று சொல்லும் மனம், அதற்கு நாமும் இசைந்து கொடுத்து அதன் வழியில் பல நேரங்களில் விழுந்து விடுவோம், அவன் அதைச் செய்ய வில்லையே நாம் ஏன் அதை செய்ய வேண்டும், எல்லாரும் இப்படித்தானே இருக்கிறார்கள் நாம் இதைச்செய்யத் தான் வேண்டுமா? என்றெல்லாம் நம் மனம் நம்மிடம் விவாதிக்க அதற்கு நாம் அடிமையாகவே ஆகிவிடுவது உண்டு, அவர்கள் வீட்டில் இதைத்தானே செய்தார்கள், அவன் இவ்வளவு தானே சம்பளம் வாங்குகிறான் என்றெல்லாம் பிறரை வைத்து நம்மை ஓப்பீடு செய்து நம்மை அவர்களை பின்பற்றி அவர்களோடு இணைத்துக்கொள்வதோ அல்லது பிறரோடு நம்மை ஒப்பிட்டு நமக்கு நாமே பதில் கூறி அடுத்தக்கட்டங்களுக்கு செல்லாமல் நமக்கு நாமே எல்லை வகுத்துக்கொள்வதோ மிக மோசமான ஓர் நோய்.. இது நம்மிடம் இருக்கவே கூடாத தூர துரத்தப்படவேண்டிய எதிரி.. முக்கியமாக நாம் நம்மை செம்மையாக நிர்வகித்து திட்டமிட்டு அதன் வழியில் நாம் செல்லும் போது நம்மை பிறர் பின்பற்ற நேரும். அதுவே சிறந்தது. நாம் மற்றவர்களைப்போல் இருக்க வேண்டும் என்ற மனநிலையை விட நம்மைப் பிறர் பின்பற்றும் படி நாம் வாழ்வோம் என்று நம் வாழ்வை எடுத்துக்காட்டாக வாழ முற்பட வேண்டும். இது தான் மிக உயரிய நிலை. இந்த மனநிலையில் இருந்து வாழ்வில் சிறந்தவர்களைத்தான் உலகம் பின்பற்றி செல்கிறது காண்க. அதே போல் பிறரைச்சார்ந்து இருப்பதை தவிர்த்து நாமாக முடிவெடுத்து வாழப் பழகி தனித்தன்மையை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் மனம் தனித்து செயல் படத் துணியாது.

 தம்பி! நம்மை நாம் நிர்வகித்தலில் தான் வெற்றியின் சூட்சுமம் உள்ளது. எப்படி நம்மை முறைபடுத்தி அதன்படி செலுத்துகிறோமோ அதில் தான் அனைத்தும் உள்ளது. நிர்வகித்தல் என்பதில் நம் பலம், பலகீனம், நம்மிடம் இருக்கும் நல்லவை, கெட்டவை, நம் செயல்வேகம், நம் சிந்தனை, நம் எதிர்கால லட்சியம், நம் நோக்கம், அதனை அடைய நாம் எடுத்துக்கொள்ளவுள்ள கால அளவு, அதற்கான அணுகுமுறை எல்லாம் அடக்கம். இதை நமக்கு நாமே கணக்கிடுதல் மிக அவசியம். பேப்பரும் பேனாவும் எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக வரிசை படுத்தி எழுதி மதிப்பிடு செய்தல் மிக முக்கியம் பிறகு அவற்றை செயல்படுத்த நாம் செய்யும் திட்டம், திட்டமிட்டதை செயல்படுத்துவது அதில்  நாம் செலுத்தும் முனைபுடனான முழுமன ஈடுபாடு அதாவது உழைப்பு, தவிர எறும்பைப்போல சுறுசுறுப்பு இவையெல்லாம் தான் நாம் வெற்றியை அடைய முக்கிய காரணிகள்.

தம்பி! கால சூழலை பார்த்துக்கொண்டு முன்னேறி போய்கொண்டே இருக்க வேண்டும்.  எப்போதும் இருக்கும் சூழலில் முடங்கிப் போகக்கூடாது. நமக்குத் தெரியாத உலகம் வெளியில் பிரமாண்டமாக உள்ளது. அதை நோக்கி நம் பயணம் தொடர வேண்டும். புதியதை அவ்வப்போது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். மனிதனின் முயற்சி மலையின் வீழ்ச்சிஎன்று ஓர் அரபிப்பழமொழி உண்டென நம் ஊரில் பெரியவர் ஒருவர் அடிக்கடி கூறுவார்கள். விடாமுயற்சி எதற்கும் விடை தரும்.

தம்பி! தொழில்(Business) சிந்தனையை வளர்த்துக்கொள், அதற்காக இப்போதிலிருந்தே சிறு சிறு சேமிப்பாய் சேமிக்க துவங்கிவிடு, இவைகளை நான் இதுவரை செய்யவில்லை என்று ஆதங்கப்படுவாதால் உன்னை இப்போதிலிருந்தே செய்யத் தூண்டுகிறேன். இது எதிர்காலத்திற்கு மிக முக்கியம்.

தம்பி! அருளும் வேண்டும், பொருளும் வேண்டும் அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை. ஆக இரண்டையும் பெற முயலுதல் வேண்டும். பரந்த மனப்பான்மையும், சமூக சிந்தனையும் மிக முக்கியம். நாம் நமக்கும், நம்மை சார்ந்த குடும்பத்தினருக்கும், நம் சொந்த பந்தத்திற்கும், நாம் சார்ந்த சமூகத்திற்கும் நம்மால் இயன்ற ஏதாவது நல்ல சேவைகளை, காரியங்களை ஆற்றுதல் மிக இன்றிமையாத ஒன்று. எல்லாவற்றையும் சந்தோசமாக எதிர்கொள். பயம் அறவே வேண்டாம். கண்மனி! நல்ல சிந்தனைகளே நன்மை பயக்கும். இளமையில் மனக்கட்டுப்பாடு அவசியம், கெட்ட சிந்தனைகளிலிருந்து மனதை திருப்பி நல்லனவற்றில் பயிற்றுவித்தல் சிறப்பு.
  
தம்பி! எண்ணங்கள் விதைகள், செயல்கள் எண்ணங்களின் கனிகள். உயர்வான எண்ணங்களை உள்ளே விடுங்கள், முடியும் என்ற எண்ணங்களை திரும்பத் திரும்ப எண்ணுவதன் மூலம் மனதில் நம்பிக்கை பிறக்கிறது. நமது நம்பிக்கையை திரும்பத் திரும்ப சிந்திக்கும் போது அது செயலாக பரிணமிக்கிறது. திரும்பத் திரும்ப செய்யும் செயல் பழக்கமாகிறது. பல பழக்கங்களே ஒரு மனிதனின் குண நலன்களாகிறது. என்ற அற்புதமான பெரியவர் ஒருவரின் கருத்துக்கள் சிந்திக்க நமக்கு நலன் மிகும்.

தம்பி! தற்போது உள்ள உலகச்சூழலில் யாருமே மன அமைதி பெற்றவர்களாக இல்லை, ஆனாலும் அமைதி வேண்டி அறிந்தும், அறியாமலும் தவிக்கிறார்கள் ஆனால் அவர்கள் ஒரு போதும் மன அமைதிக்குறிய வழி பற்றி யோசிப்பபதே இல்லை. அது ஆன்மீக பக்குவத்தில் தான் இருக்கிறது, பெரும்பாலும் நம்மவர்களில் ஆன்மீக பக்குவம் குறித்து ஒரு போதும் சிந்திப்பவர்களாக இல்லை. ஏனெனில் அவர்களுக்கு அது அத்தனை பெரிய விசயமாக தெரியவில்லை என்பது தான். உண்மையில்  அதில் தான் அனைத்தின் நிம்மதியும் அடங்கியுள்ளது. ஏனெனில் ஒருவனுக்கு இறைத்தத்துவம் விளங்கி விட்டால் இறை எது? நபி என்றால் என்ன ? நாம் யார் என விளங்கிவிட்டால் அவன் மிக தெளிந்த சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட மன அமைதி பெற்றவனாகி எப்போதும் சந்தோசமாக எதையும் எளிதாக கையாண்டு வெற்றியாளனாய் திகழ்வான். அவனுடைய சிந்தைக்கும் மற்றவர்களுடைய சிந்தைக்கும் மலையளவு வித்தியாசம் உணரலாம். முக்கியமாக மார்க்கத்தை உணர்ந்து இறையிலே லயிக்க ஏதுவாக இருக்கும். அவன் சிந்தையும் வாழ்வும் தெளிந்த நீரோடைப்போல் சலனமோ எதைப்பற்றிய பயமோ இன்றி அழகாய் திகழும். ஆனாலும் அதை அடையவது அத்தனை மிகச்சிரமமான ஒன்றல்ல ஆயினும் மிக எளிதானதும் இல்லை தெரிய முற்பட்டால் தேனாய் தித்தித்திடும். முக்கியமாக வேட்கை பிறந்தால் தான் தாகம் தீரும். இன்ஷா அல்லாஹ் அவ்வுயர் கல்வி என்றும் சித்திக்க அல்லாஹ் என்றும் உனக்கு நலம் நாடட்டும்.

தம்பி! அறிவாளிகள் எப்போதும் எல்லாவற்றையும் கிரகித்து (உள்வாங்கி) கொண்டிருப்பார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது அவர்களிடம் இருக்காது. மார்க்க விசயங்களில் கூட எல்லா இளைஞர்களின் நிலையும் இது தான். குறை குடமாய் கூத்தாடுவது! ஏனெனில் எந்த விதமான ஆராய்ச்சி அறிவோ, சரித்திர அறிவோ, அடிப்படை அறிவோ, அறவே இல்லாமல் எல்லாம் தெரிந்தது போல மிக உயரிய மார்க்கத்தை விமர்சித்து

 விடுதல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இஸ்லாம், அது இதுவரை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அறிவுச்சிற்பிகளை கண்டிருக்கிறது. அதனுள் மூழ்கி முத்தெடுத்த நிகர்காட்ட முடியாத ஞான மா மேதைகளை சற்றும் சரித்திர வாடையே அறியாத அற்பர்கள் எப்படி உணர முடியும். ஆகையால் தான் உன்னை சரித்திரம் படிக்கச்சொல்கிறேன். அப்போது தான் நாம் சார்ந்திருக்கும் மார்க்கத்தின் மதிப்பு, அதற்காக உழைத்த தியாகிகளின் தியாகம், அறிவாளிகளின் சிந்தனை ஆழம், நாம் செய்யும் புராதன செயல்பாடுகளின் சிறப்புகள்.. என  இன்னும் எவ்வளவோ அறிய இயலும்.

தம்பி!  நம்மவர்களுக்கு பல விசயங்களை நாம் தெளிவாக்க வேண்டிய சமுதாயக்கடமை நம்மிடம் இருக்கிறது. முதலில் நாம் விளங்கி தெளிவுற்ற பின் தான் மற்றவர்களுக்கு இதை அழகிய வகையில் பகர்ந்திட இயலும்.மேலும் நம்முடைய புராதன செயல்பாடுகளின் மதிப்பு மிக அதிகம், அதை நாம் என்றும் அற்பமாக எடைப்போட்டு விடக்கூடாது. நமது முன்னோர்கள் செய்த எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு வகையில் வெளிரங்க அர்த்தமோ, உள்ரங்க அர்த்தமோ நிச்சயம் இருக்கும். அவைகளால் எத்தனையோ பாதுகாப்பும் நமக்கு உண்டு, அவைகள் எல்லாம் காலங்காலமாக இன்று வரை நம்மிடம் ஒப்படைக்க பட்ட நிகரில்லா சொத்துக்கள், அமானிதங்கள். ஒரு சமூகத்திற்கு அதன் புராதனங்களால் மட்டுமே மதிப்பும் மரியாதையும், புராதன பூர்வீகம் இல்லாத சமூகத்திற்கு  மதிப்பு என்றும் இருக்காது. இன்று நம் சமூகத்தவர்களின் மதிப்பிழந்த நிலைக்கு காரணம்  நமது புராதனத்தின் மீதே நம்மவர்கள் கொண்ட காழ்ப்புணர்வே.

தம்பி! தினமும் குர்ஆன் ஓதுதல் மிக முக்கியம், குர்ஆன் கருணையும், அருளும் மிகுந்த நபிகள் நாயகம் (ஸல்..) அவர்களால் நமக்கு கிடைத்த அற்புத வேதம், அதற்கு ஈடு இணை ஏதும் இல்லை, நாயகம் (ஸல்..) தன்னை ஏகமாக அதாவது அனைத்தின் நிலையாக தன் சுயத்தை உணந்தபோது இயற்கையில் இயற்கையாய் அவர்களிலிருந்து பரிபூரண ஏகம் (அல்லாஹ்) வெளியாக்கியது. இது மிக பாரதூரமான விசயம். கொஞ்சம் கொஞ்சமாக விளங்கிக்கொள்ளலாம். (இன்ஷா அல்லாஹ்) ஆனால் நாம் ஒவ்வொரு முறையும் குர்ஆனை ஓதும் போதும் நாம் பிரபஞ்சத்தோடு தொடர்புகொள்கிறோம். இயற்கையோடு உறவாடுகிறோம். அந்தத் தொடர்பு எப்போதும் நமக்கு இருக்கவேண்டும் என்றே திருக்குர்ஆனை தினம் ஓதச் சொல்கிறோம். அதனால் பல நன்மைகள் நமக்கு உண்டு. அதுவும் நபிகள் நாயகம் தங்களின் உயர்வான திருவாயால்

 உச்சரித்த அதே வார்த்தைகளை நாம் உச்சரிக்கிறோம் என்பதையும் நினைவில் நிறுத்துக. அதோ போல தொழுகை மிக முக்கியம். அதன் அம்சங்களில் பல உன்னதங்கள் பொதிந்துள்ளது. அதிலும் பஜ்ர் எழுந்து அந்நாளை தொடங்குவதில் உள்ள பரக்கத் அலாதியானது. தொழுகையை பற்றி விரித்துக்கூற நான் புகுந்தால் ஈங்கு பல பக்கங்கள் ஆகிவிடும் ஆதலினால் உடலுக்கும், மனதிற்கும் சாந்தி நல்கும் அவ்வுயர் தொழுகையினை சந்தோசமாக, நிதானமாக அனுபவித்து தொழ கற்க வேண்டும். தொழுகை நமக்காக கொடுக்கப் பட்ட மனதிற்கும் உடலுக்குமான சிறப்பான  மருந்து. இன்னும் எத்தனையோ சொல்லத் தோன்றினாலும் அதற்கு இப்போது இடமில்லை எனவே பின்பு பார்க்கலாம்.

தம்பி! தாய் தந்தையருக்கு கட்டுப்படுதலை விட ஓர் உயர்வான வணக்கம் ஏதும் இல்லை. ஆதலாலே தான் நபிகள் நாயகம் (ஸல்..) அவர்கள் உலகில் அல்லாவிற்கும், ரசூலுக்கும் அடுத்த படியாக மதிக்க வேண்டியவர் யார் எனக்கேட்டதற்கு உம்மிக்க..உம்மிக்க.. உம்மிக்க.. (உன் தாய்..தாய்..தாய்..) என்றும் பிறகு வஅபீக்க.. (உன் தந்தை) என்றும் கூறி இருக்கிறார்கள். ஆக நாம் நம் புவ்வா, பாப்பின் மனம் குளிர செய்து அவர்களின் வாழ்த்தைப் பெருவதும், அவர்களின் மகிழ்வின் நிழலில் பயணம் தொடர்வதும், என்றும் பேணிப்போடு அவர்களை வைத்துக்கொள்வதும் மிக முக்கியம். நம்முடைய பாப்பு, புவ்வாவின் அருமைகளை சொல்லவெல்லாம் வார்த்தைகளே இல்லை, அவர்கள் நம்மையெல்லாம் ராஜா வீட்டு பிள்ளைகளாக இது வரை எந்தக்குறையும் இன்றி  எந்த ஒரு கஷ்டமும், கவலையும் தெரியாமல் எல்லாவற்றையும் அவர்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டு நம்மை மிக மேலாக வளர்த்தது இருக்கிறார்கள்.. உண்மையில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான்.  அவர்கள் என்றும் எந்தக்குறையும் இல்லாமல் நிறைநலத்தோடு வாழ்வாங்கு வழ வேண்டும். அதற்கு ஹக்கு எப்போதும் அருள் புரிய அனுதினம் இறைஞ்சிகொண்டே இருக்க வேண்டும். நம் குடும்ப பெரியவர்கள், உடன்பிறந்தவர்கள், குடல்வால் சொந்தங்கள் என அவர்களின் மனமகிழ்வே நம்மை உயரத்திற்கு எடுத்துச்செல்லும் என்பதை மறக்காதே! எனக்கு இப்போது நீ பிறந்த நேரமும், அத்தா வீட்டில் உன் குழந்தை பருவ நாட்களும் என் நினைவில் வருகிறது. இன்ஷா அல்லாஹ் எல்லாம் சிறப்பாகும்.

தம்பி! மேற்சொன்னவைகள் எல்லாம் ஒரு குறிப்பிற்காகவே தானேயன்றி மற்றவை எதும் இல்லை, அவைகள் எல்லாம் உனக்கு மட்டுமல்ல எனக்கும் சேர்த்துத்தான். அறிவுரைகள் சொல்லுமளவிற்கெல்லாம் நான் இல்லை என்பது நான் அறிந்ததே, ஆகையால் இவைகளெலாம் உனக்கு செய்தியெனச் சொல்லுதல் நலமெனப் பட்டதால் விளைந்தவையே எனப் புரிய வேண்டுகிறேன்.

தம்பி! உண்மையில் உன்னை நினைக்கும் போதெல்லாம் பெருமிதப்படுவேன். ஆம், மிக அமைதியாக என் திருமண நேரங்களில் நீ மிகப் பாசத்தோடு செய்த எல்லா செயல்பாடுகளும் என்னை நெகிழ வைத்தன. உன் சகத்தோழர்களோடு ஓடி ஆடி செய்த ஈடுபாடுடன் கூடிய உன் வேலைத்திறன், நம் பாப்பிற்கு பக்க துணையாக இருந்து செயல்பட்டது மட்டுமில்லாமல் சாதாரணமாக நான் ஊரில் இருக்கும் தருணங்களில் உன் ஒத்துழைப்புகள் எல்லாவற்றிலும் உன்னைக் கண்டு இதயத்தால் நான் மிக சந்தோசப்பட்டுபோனேன். என்னை அறியாமல் எப்போதும் உனக்காய் துஆ செய்து ஆனந்தப்படுவேன். நீ வாழ்வில் மிக உயரத்தில் சந்தோசமாக இருப்பாய். ஹக்கு உன்னை சிறப்பாக ஆக்கியருளும்.

வாழ்க வளமுடன்..!                                                               

வாழ்க பொழிவுடன்..!

வாழ்க உன் அறிவும், திறமும்..!

வாழ்க நம் தாய், தந்தை..மற்றும் நம்மவர்கள்..!

என்றும் அன்புடன்,


ராஜா முஹம்மத்.                                                                                                       


ஹு - அவன்


அதுவாக எதுவும்
எதுவும் இல்லை அதுவாக
எதுவும் அது தான்
இது தான் அதுவென கூறிடலியலா
அது இல்லையெனில்
எதுவும் இல்லை

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

25 அக்டோபர் 2018

மாறி.. மாறி..

இனிமையாய் மட்டுமே
இருந்துவிடுமா வாழ்வு
கசப்பும் வந்து வந்து தானே போகும்
அது வாழவும் தேவை வாழ்க்கைக்கும் தேவை
வாழ்வுக்கும் தேவை

உணவில் கூட
கசப்பு இல்லாத இனிமையை
மனம் என்றும் நாடலாம்
கசப்பு தேடாத நாவுக்கு
பின்னாளில் பிணி மூலம்
குப்பிகளில் அடைத்து அதற்கு
கொஞ்சம் இனிமையூட்டி
குடித்தே ஆக வேண்டுமென்று
மருத்துவரின் பரிந்துரை நிர்பந்திக்கலாம்

வசந்தகாலங்களால் மட்டுமே
அலங்கரிக்கப்படாது வாழ்வு
சில நேரங்களில் மகிழ்ச்சி மேட்டில்
துள்ளல்புரிகையில் கூட
முகட்டிலிருந்து உருள நேரலாம்

நீர்வீழ்ச்சியில் தலை நனைத்திருக்கும் நம்மை
திடீரென கொதிநீர் கொப்புலங்கள் கூட அனுகலாம்
மிக மென்மையாய் இருக்கும்
வெல்வெட் கேக்கில் கூட
கற்கள் இருந்து நம் பற்கள் உடைபடலாம்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
மே -08, 2007

கனத்தில் உடல் சாரும்!

அளவுக்கும் மீறிய துன்பத்திலோ..
அலகுகள் இல்லா இன்பத்திலோ

மனம் தோய்ந்தால்...
வார்த்தைகளுக்கே மொழி மறந்துவிடும்!

மெளன பாஷையில் தவிர
மொத்த பாஷையிலும் சித்தம் சிதறும்.

கண்களும்.. உதடுகளும் தான்
உள்ளூர உள்ளதை பிரதிபளிக்கும்!

மனத்தின் கணமோ இதமோ

கனத்தில் உடல் சாரும்!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
 [25.03.17 19:47]

பாதி தூக்கத்தில்


பாதி தூக்கத்தில் 
தூங்கியும் தூங்காமலும்
இப்போது இங்கே
உட்கார்ந்திருக்கிறேன்

மனதில் ஒன்றும் தோன்றவில்லை
இதை எழுதுவதைத் தவிர

ஒன்றுமற்ற வெள்ளைத்திரை
அடர் கருப்ப்பாக  இருக்கிறது
ஒரு சிந்தனையும் இல்லாத
இப்போதைய எந்தன் மனது

சற்று நேரத்திற்கு பிறகான
சாயந்திரம் நான் எப்படி இருப்பேன்
எதை எதை எழுதுவேன்
என்றெல்லாம் இப்போதே சொல்லிவிட முடியாது

இப்போது என் மனம் வெற்றுத்திரை
பின்னால் என்ன திரையில் ஓடும்
வெள்ளைத்திரை வெள்ளித்திரையாகுமா 

அப்போதைய சனம் முடிவு செய்யட்டும் தானே.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
9/8/18 4.15

குரல்வளை ஏன் அறுத்தாள்

வார்த்தைகளால் வருணிக்க முடியாத
வர்ணங்களின் இன்பக்களஞ்சியம் நீ!
*
அவள் குழளை  ஏன் அவிழ்த்தாள்
என் குரல்வளை ஏன் அறுத்தாள்
*
சேலையோ ஆளக்கொல்லும்
அத நீ உடுத்தி வந்தா
சொல்லவா வேணும்
கொல்லாதே போ!
*
கொல்லாம விடமாட்டா 
அவ்வளவு விசமத்தனமான அழகு
*


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

2016 கிளிங்கில் எழுதியது

பேச்சும் மூச்சும் தமிழ்

பேச்சானாய் மூச்சானாய் தாயே தமிழே
பேச்சும் மூச்சும் அற்றுப்போகும் நீ  நீங்கினால்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
2016 கலையன்பன் அரங்கில் 

நான் நினைதது

நான் நினைத்தேன் நீ விரும்புவாயென..
நான் நினைத்தேன் நீ ரசிப்பாய் என
நான் நினைத்தேன் குறை எங்கேயென தேடாதிருப்பாய் என
நான் நினைத்தேன் அன்புமிகுந்திருக்குமென
நான் நினைத்தேன் ஆவலோடு பார்ப்பாயென
நான் நினைத்தேன் கர்பனைகள் விரியுமென
நான் நினைத்தேன் பழைய நினைவுகள் மீட்டப்படும் என
நான் நினைத்தேன் பார்த்து அதனோடு பேசிக்கொள்வாயென
நான் நினைத்தேன் நீ என் தவப்பயனென மார்போடு அழுத்திக்கொள்வாயென
நான் நினைக்கவில்லை இத்தனையும் நடக்காதென
எதார்த்தம் ஏற்றுக்கொள்ள சிரமயாய் தான் இருக்கும்
பரவாயில்லை அவ்வப்போது எடுக்கும் என் புகைப்படத்தை
இனிமேல்  புலனத்தில் உனக்கு அனுப்பமாட்டேன்.



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

07-10-2018

20 அக்டோபர் 2018

பெருந்தகை முஹம்மது இக்பால் குறிப்புகள்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


திருச்சி தப்லே ஆலம் பாதுஷா


பல்லவி:
திருச்சிராப்பள்ளி திகழ்கின்ற பேரொளியே

அனுபல்லவி:
தப்லே ஆலம் பாதுஷா தீனொளியே
முதஹ்ஹருத்தீன் நத்தர்ஷா நூரொளியே


காவிரி கரைமேவிடும் நகரிலே -ஞான
தீனொளிச் சுடர் பொழிந்திடும் நத்ஹராம்
உத்தமர் மகிமைதனை கேளுங்கள் கேட்டு..
உள்ளத்தில் ஈமான் வலு கூட்டுங்கள்.

சரணம்:

சிரியாவை ஆண்ட மன்னர் அஹமத் கபீர் மறையவே
சிரியவராய் இருந்தநமது முதொஹ்ஹருத்தீன் மகுடம் சூடினார்
ஏழாம் வயதில் இருந்தே அரசாள தொடங்கினார்
இருபத்து ஓராம் வயதில் மனம் இறைஞானம் நாடவே
அரசோச்சும் முடியைத்துறந்து ஆண்டவனை தேடினார்
அன்னையிடம் ஆசிகள்பெற்று அமரகுருக்காய் ஏங்கினார்
அற்புதர் ஷைகு அலியின் கரம்பற்றி ஓங்கினார்

நெறியோடு வாழ்ந்த எம்மான் அணையாத ஆவலால்
பெருமானார் உறையும் மதினா பெரும்பதிக்கு சென்றனர்
ஓராண்டு காலம் தங்கி  இஷ்காலே கரைந்தனர்
இனிய நெறி இஸ்லாமதை இந்தியாவிலே பரப்பிட
பெருமானார் பேரர்தமை பெரன்பில் பணித்தனர்
தொல்லாயிரம் சீடர்களோடு அல்லாவின் நாம்ம் சொல்ல
எல்லையை அடைந்தனர் தென்னகம் சேர்ந்தனர்

அல்லாவின் நேசர் வந்து எல்லோர்க்கும் நன்மைசெய்தும்
பிள்ளைவரம் இல்லாது அரசகுடும்பம் தவித்தது
சோழனின் குடும்பத்தினிலே சோபிதமே இல்லையே
அரசாண்ட சுந்தரச் சோழன் மனம்வெதும்பி வாடினான்
வாரிசு அருள்கவென்றே பாதுஷாவை வேண்டினான்
அவன்நேசர் வாய்திறக்க ஆண்டவனும் இசைந்தனன் - ஆதித்ய
கரிகாலன் குந்தவையுடன் ராஜராஜனும் தோன்றினர்

தென்னகத்தின் மன்னரெல்லாம் தினம்தொழுத மெய்ஞ்ஞானி
காற்றெல்லாம் கிர்த்திசொல்லும் கலந்தரிவர் புகழ்தனை
ஹிந்துஸ்தானம் வந்த முதல் வலியுல்லாஹ் நத்ஹராம்
ஆயிரத்தை தாண்டி ஆண்டில் அரசாளும் நேசராம்
பாயிரத்தை பாடினாலும் நாதர்மகிமை தீருமோ
தாயைத்தேடி அண்டும் செய்போல் தயைகேட்கும் நேசரின்
மனக்குறை அகற்றுகின்ற மன்னாதி மன்னராம்

-ஜா.முஹையத்தீன் பாட்ஷா 4-6-17