22 டிசம்பர் 2019

வள்ளுவர் முகம்.



குறள் தான்
வள்ளுவர் முகம்.
அது யார்
கொடுக்கும் உருவங்களையும்
அடிக்கும் வர்ணங்களையும் 
மனம்போன போக்கில் தரும் 
விளக்க அறியாமைகளையும்
உள்வாங்கிக்கொண்டு
வெண்மை ஒளிரும்
வள்ளுவ தீபத்தை மட்டுமே 
உயர்த்திக் காட்டும்.
ஈராயிரம் ஆண்டுகளாய்
இப்படியான இழிநாட்களை
பார்த்திருக்க வில்லையென
உள்ளுக்குள் வள்ளுவர்
ஏளனமாய் நகைப்பதாகவும்
ஏகத்திற்கும் மனச்சோர்வாயுமென
ஓர் இரகசியத் தகவல்.
ஆனாலும் அவர்
நெஞ்சிலும் கொஞ்சம் சமாதானமாம் 
தூயவள்ளுவம் சொல்லும் 
சிலரது வாய்மைக்காய்.
நாம் வள்ளவ நெஞ்சின் சமாதானம்.
- ஜா.மு.
6-11-2019, 11.27pm

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

தீர்ந்து விட்டதோ நீதி?

தேடித்தேடி
பார்க்கிறேன்
நீதிபதிகளின் தீர்ப்பில்,
தீர்ந்து விட்டதோ
நீதி?
நீதிமன்றங்கள்
மனுநீதி மன்றங்களான பின்
உச்சத்தின் மீதே
மிச்சமீதி நம்பிக்கையும்
அற்றுவிட்டது!
சட்டத்தின் முன் நாங்கள்
சமமானவர்கள் என்றே
நினைத்திருந்தோம்,
தீர்ப்பாகவே சொல்லிவிட்டார்கள்
"ஒதுக்கியிருக்கும்
அந்த இடத்தில்
ஒதுங்கி நில்"!
வரலாற்றுக்கும்
புனைவிற்கும்
நடந்த வழக்கில்
உண்மைக்கும்
நம்பிக்கைக்கும்
நடந்த வாதத்தில்
புனைவும்
நம்பிக்கையும்
வரலாற்று உண்மையின்
கழுத்தை அறுத்துவிட்டது.
தேசமெங்கும்
சிந்திக்கிடக்கிறது
சத்தியத்தின் இரத்தம்
ஒரே நேரத்தில்
ஓராயிரம் துரோகத்தின்
ஈட்டிகள்
எவ்வளவு தான் தாங்கும்
எங்கள் இதயம்.
- ஜா.மு



முழுநிலாக்களின் வாடிக்கை



நம்மை முழுவதுமாக
தின்று விடுவது தான்
இந்த முழுநிலாக்களின்
வாடிக்கை.
இம்முறை நிலா
என்னை தின்னும் போது
வைத்த கண் வாங்காமல்
பார்த்துக் கொண்டே
ரசித்து.. ரசித்துத் தின்றது!

12Nov'19

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

மழை நாளில்,,,

பெய்யும் மழை
பெய்தே இருக்கவில்லை,
அறையின் கதவை
திறக்கும் வரை.
திறந்தது தான் தாமதம்
"மண்ணில் விழும்
ஒவ்வொரு துளியாயும்
உயிர்த்து பிறப்பது நானா?"
என்றாகிப் போனேன்
***
மழை நாளில்
கொத்திச் சென்றது
கடற்காகம்.
எனைக் கவ்வியிருக்கிறது
அலகில்.
***

மழைக்கென்ன
வானமிருட்ட
இடி மின்னலோடு
அமர்க்களமாய் பெய்துவிட்டு சென்றுவிடுகிறது.
தெருக்கள் பல துரத்த வந்து
அசுத்தத்தோடு தேங்கிய நீரை
போர்க்கால அடிப்படையில்
வெளியேற்றிட
முனிசிபாலிட்டியில் பணி செய்யும்
நம் சோதரர்கள் இரவென்றும் பாராது 
படும் பாடே பெரும் பாடாகிறது!

20thNov'19

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

பூச்செடி



பிறர் கண்குளிர..
காணுமட்டும் மனங்குளிர..
கள்ளமிலாது மயக்கும்
மாய கள் சுமந்து
நேற்றுவரை காற்றோடு
சிரித்தாடி நின்ற
சாலையோரப் பூக்கள்
சகதி மண் அப்பி
தரை நோக்கிக்
கவிழ்ந்து கிடக்கிறது.

கனம் மிகுந்து போனது
முகமிழந்து போனது
பலாத்காரமாய் நீர்ச் சொறிந்து
சென்றுவிட்ட மழையால்!

அழகு போனபின்
ஆவதொன்றுமில்லை யென
ஆணை வந்ததையடுத்து
வேரடி மண்ணோடு
பிடுங்கி எறிந்து
குப்பை லாரியில் ஏற்றுகிறான்
மாநகராட்சி பணியாளன்,
சிரித்திருந்த பூச்செடியை.
நடத் தயாராக இருக்கிறது
வேறொரு சிரிக்கும் பூச்செடி .
ஜா.மு.