05 டிசம்பர் 2021

சம்சுதீன் காசிமி சர்ச்சை


சம்சுதீன் காசிமி பெண்களை தவறாக விளித்து சொர்க்க நரக ஃபத்வா கொடுத்த வீடியோ பரவலாக பரப்பப்பட்டு கொண்டிருக்கிறது, இது ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றாக பகிரப்பட்டது இப்போது சூடுபிடித்து ஓரிரு நாட்களாக மேலதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இவர் சென்னை மவுண்ட் ரோடு மக்கா மஸ்ஜிதில் இமாமாக பணியாற்றியவர், அங்கே இமாமத் செய்தபோது அவருடைய பயான்கள் எல்லாம் இது போலவே தான் இருக்கும்.
இப்போது பேசியதற்கு கொஞ்சமும் குறைவாக இருக்காது அதிலும் கூடுதலாக வஹாபிஸ சிந்தனை மேலோங்கியிருக்கும். வெறி பிடித்தது போல் தான் கத்துவார் அவரை ரசிக்கவும் அவரை உசுப்பேற்றி கத்த விட்டு பார்க்கவும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும் இப்போதும் இருக்கிறது.
தான் ஒரு பழமைவாத சிந்தனையில் மூழ்கியவராக வஹ்ஹாபியிஸ கொள்கையில் இருப்பவராக இருந்தாலும் அப்படி இல்லை என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார் ஆனாலும் தானே ஒரு தனி வஹ்ஹாபியிச கிளை போல ஆரம்பித்திருந்ததால் மற்ற இயக்கங்களையும் கொள்கைகளையும் விமர்சித்து பேசித் தீர்ப்பார். உண்மையில் அவர்களுக்கும் இவருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இருக்காது.
சென்னை மவுண்ரோடு பள்ளியில் இருந்து வெளியே வந்ததும் ஐஏஎஸ்களை உருவாக்குகிறேன் என்று கோச்சிங் சென்டர் ஆரம்பித்தார் சில மாணவர்கள் இவர் நடத்தும் செண்டருக்கு சென்றபோது நானெல்லாம் ஐயோ! இந்த ஆளிடம் செல்லக்கூடியவர்களின் நிலைமையை எண்ணி வருந்தினேன்.
இவர் 90களில் நபிகள் நாயகத்தை பற்றியும் அவர்களுடைய தனித்தன்மைகளை பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய போது அந்த நேரங்களில் "மக்கா மஸ்ஜித் இமாமே மக்காக பேசலாமா" என்ற ஒரு துண்டு பிரசுரத்தை எங்கள் ஊர் வழுத்தூரிலிருந்து தஞ்சை மாவட்டம் முழுதும் வெளியிட்டோம்.
ஒரு சமூக வலைதளத்தில் பேசக்கூடியவர் குறைந்தபட்ச நாகரிகத்தைக் கூட கடை பிடிக்க வில்லை, இவர் ஒருவர் மட்டும் தான் சொர்க்கம் நரகத்திற்கு ஹோல்சேல் ஏஜென்ட் எடுத்து இருப்பது போல எல்லா பயானிலும் பேசுவது போல இப்போதும் பேசியிருக்கிறார்.
இவர் போன்றோரை சமூகத்திலிருந்து ஒதுக்கி புறந்தள்ள வேண்டும் என்பதுதான் என் போன்றவர்களுடைய மனக் கிடக்கை.
இவர் போன்றோருக்கும் நாளுபேர் கொடிபிடிக்கிறார்கள் என்பதே சமூகத்தின் கன்றாவிக் கோலம்.
ஃபத்வா: இஸ்லாமிய தீர்ப்பு
பயான்: இஸ்லாமிய மார்க்க உரை
இமாம்: பள்ளிவாசலில் தலைமையேற்று தொழுகை நடத்துபவர்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா