27 செப்டம்பர் 2010

வாலிபத்தை உறிஞ்சி..





எத்தனைப் பேர் இந்த

அரபு நாட்டு அழகியை

கைப்பிடிக்கக் கனவு காண்கிறார்கள்.


யார் கேட்கிறார்கள்..?

இவள் மூர்க்கத்தனமானவள்

அடைய ஆசைப்படாதீர்கள்,

உங்களுக்கு முன்னே

உறவு கொண்டவன்

நான் என்றால்…

யார் கேட்கிறார்கள்..?


அவளின்…

ஒய்யாரத்திலும்..,

அலங்காரத்திலும்..,

எல்லொரும் எச்சில் வடிய

பிச்சைக் கேட்டு பின் செல்கிறார்கள்!


ஆ..மீசை மிக்க ஆண்களே..!

ஆசையை அடக்கிக் கொள்ளுங்கள்,

ஓசையின்றி வேறு திசை ஓடிவிடுங்கள்,

மாசில்லா உள்ளூர் அழகியோடு

வாழ்க்கை தொடங்குங்கள்,

இல்லையெனில்…

பாஷை தெரியாமல்

விழிக்க வேண்டிவரும் இவளோடு, – பின்

கொஞ்சி..கொஞ்சி.. குலாவலாமென

நினைத்த நீங்கள்,

கெஞ்சி..கெஞ்சி..கேட்டாலும் தரமாட்டாள்,

விவாகரத்து..!


உங்கள் வாலிபத்தை உறிஞ்சி..

தோல் சுருங்கும் வரை அனுபவித்து..

மேல் ஏதும் ஆகாதெனத் தெரிந்தால்

கால் கொண்டு உதைத்தெறிவாள்!


புரிந்து கொள்ளுங்கள்

அனுபவம் சொன்னேன்..

அமுதம் விட்டு

விசம் வேண்டி வரவேண்டாம்.


நீ…

பருவம் அடைந்தது

தெரிந்து விட்டால்..

பாதம் கழுவவாவது அவளைப்

பற்றிக்கொள் பாக்கியமடா அது,

என்கிறார்கள் பெற்றோர்கள்.


நீ...வேண்டுமானால்

அவளின் வாடகை கணவன் என்று

பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!

ஊரில் உனக்காக..

காதல் கண்ணிகைகள் காத்திருக்க,

பெண்ணியம் போல் காட்டிக்கொள்ளும்

பேய் இவளையா ஆசைப்படுகிறாய்..?


கேள்! – இவள்

உன் அத்தனைத் திறமைகளையும்

திருடிக்கொள்வாள், - நீ

கடைசிவரை முயன்றாலும்

திருப்திப் படுத்தமுடியாது இவளை!


ஆனாலும்..

நீ போனால்,

ஆயிரம் பேர் இவளுக்கு!


2008 ஆம் ஆண்டு அறை நண்பர்களின் வெளிநாடு பற்றிய விவாதம் சில என்னை இப்படி எழுத வைத்தது. ஜே.எம்.பாட்ஷா

22 செப்டம்பர் 2010

நெடுநாளைய கனவு..


அழகிய இல்லம்...

நெடுநாளைய கனவு..

விளைச்சல் நிலத்தில்!



18 செப்டம்பர் 2010

உள்ளம் சுருட்டிவிட்டாள்..


ஒரே சொல்லில் உள்ளம் சுருட்டிவிட்டாள்..

அள்ளிக் கொடுத்துவிட்டேன் என்னை,

அந்த அழகிய மழலைக்கு..!

17 செப்டம்பர் 2010

குயிலின் மொழி..






குயில்களின் கூவுதல்கள் எல்லாம்

குதூகலத்துடன் கூடியது தானென

நாமாக முடிவெடுத்தால்

அதெப்படி உண்மை..?

கூவுதல் மட்டுமே நாம் அறிவது – அதில்

கூறிடும் கூறுகள் குறித்து அறிந்தது யார்..?


நமக்கு வேண்டுமானால்

அதன் இதய ஓலம் கூட

இனிய இசையாக இருக்கலாம்!

அதற்கு மட்டுமே வெளிச்சம்

அதன் சந்தோசமும் சோகமும்!

சில தருணங்களில் நம்முடைய நிலையும் இது தான், யார் அறிவார் நம் இதய வாசலை, நம்மைத் தவிர -ஜே.எம் பாட்ஷா

08 செப்டம்பர் 2010

பிரிந்தால் சரியாச்சொல்..?


எத்தனை எத்தனை மாண்புதனை

நித்தமும் நிதமும் சுமந்துவந்தாய்

பக்தனை பக்குவப் படுத்திடவே

பாரினில் நீதான் பிறந்துவந்தாய்


சாந்தியும் தூய்மையும் நீயேஏந்தி வந்தாய்

சரித்திர பத்ரையும் நீயேபெற்றுக் கொண்டாய்

ஆண்டுகள் யாவும்நீயே ஆகியிருக்கக் கூடாதோ

அகிலத்தை அருளில்நீயே அமிழ்த்திநிற்கக் கூடாதோ


இறையவன் நினைவினில் இகத்தவர் ஆழ்கிறாய்

இராப்பகல் எங்கிலும் இபாதத்து செய்கிறார்

பெரியவன் தூதராம் பெருமான் நபிகளை

நிறைம னமாகவே நேரமும் புகழ்கின்றார்


பள்ளிகள்யாவும் நிறைந்திருக்கும் காட்சிகள் தருவாய்

நல்லஉள்ளத் தோடேதர்மமீயும் மாட்சிகள் சொறிவாய்

மீட்சிப்பெறவே தெளபாவேற்று மலர்ச்சி அருள்வாய்

மகிழ்ச்சிசூழ் சொர்க்கப்பூங்கா வாங்கியுந் தருவாய்


விலங்குதனை சைத்தானுக்கு உன்னில் இட்டாய்

விலங்குகுணம் மனிதனிலே அகற்றி விட்டாய்

அமரகுணம் மனிதன் தன்னில் மிளிரவைத்தாய்

அமரத்துவம் எய்திடவே அழைத்தும் நின்றாய்


வானினில் வதிந்திடும் பிறையிற் கெல்லாம்

உன்னைப் போல்மவுசுக் கிடைத்தது மில்லை

வாழ்வினில் வந்திடும் மாதங்க ளெல்லாம்

உன்னைப் போல்மகத்துவம் தந்தது மில்லை


நேற்றுவந்து நேசம்கொண்டு இன்று பிரிந்தால் சரியாச்சொல்..?

நேயன்மனதை நெகிழச்செய்து விலகிப் போவதும் முறையாச்சொல்..?

மீண்டும்மீண்டும் வாழ்வினிலே வந்தே பூத்திடு ரமலானே..!

வேண்டும்நலன் கள்யாவையுமே நீதான் சேர்த்திடு ரமலானே..!


ஒவ்வொரு வருடமும் ரமலான் பிரிகையில் மனது மிகவும் கவலையில் ஆழ்ந்து வருந்துவது எல்லோருக்கும் இருக்கக்கூடியது தான் ஏனெனில் அதை சுவைத்தவர்கள் அதை அவ்வளவாக பிரிய தயாராவதில்லை - ஜே.எம்.பாட்ஷா

04 செப்டம்பர் 2010

ரமலான்



பலவகைப்பழங்களும் கடற்பாசியும்..

சமோசாபஜ்ஜியுடன் சுடச்சுடக்கஞ்சி..

இன்னும் இருபது நிமிடம் நோன்புதிறக்க.,