17 ஏப்ரல் 2012

அந்த நாள் மான்குட்டி



இந்த கவிதை தோழர் . எச்.தவ்ஃபீக் கஸ்ஸாலி  அமீரகத்திலிருந்து கடிதம் மூலம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அன்றைய தினத்தில் அவருக்கு எழுதி அனுப்பினேன். படித்துவிட்டு ஊரை பிரிந்து அமீரகம் சென்ற புதிதான அந்த நேரத்தில் இருந்த உணர்வுகளால் சூழப்பட்டு எனக்கு அதே அதிர்வுடன் பதில்மொழி கடிதம் பகர்ந்தார்.. வெகுவாக சிலாகித்தார். எழுதியது பிப்ரவரி மாதம் 1996 ஆண்டு அதாவது நான் வெளிநாடு செல்வதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்.

அந்த நாள் மான்குட்டி நான்
இந்த நாள் தேள் கொட்டியதோ..!

காலையும் முறித்துவிட்டு
கலசமாட சொல்கிறார்கள்
எப்படி ஆடுவேன் அய்யா..!

என் உயிரெல்லாம் ஊரில் உள்ளதே
என் ஒவ்வொரு இரத்த அணுவும்
ஏனடா இந்த சோதனை - இதற்கு
மேலடா நரக வேதனை
என்கிறதே அய்யா!

என் அன்புத்தாயே
ஆருயிர் தந்தையே - என்
மேலுயிர் வைத்த அம்மையே
எப்போது ஆசை மொழி பேசி
ஒத்தாசை சில செய்து
பாசத்தில் உறைவேனோ!

அன்புக்கடன் பட்டுள்ள - என்
உடன் பிறப்பிடம்
கனிமொழி பேச
மனமொழி கூறுதே
கனியுமா..?

உறவே...
உன் அருமை அறியாமல்
உண்மை புரியாமல்
தண்ணீர் பொல் வாழ்ந்தேனே
கண்ணீர் தான் இனி என் காணிக்கை!

மலருக்கு வாசம்
மனிதனுக்கு பாசம்
பிரிவென்பது மிக மோசம்
அன்பிலே தான் சந்தனம் வீசும்
இதையெல்லம் இன்றென் கண்ணீர் பேசும்!

உடல் இங்கே
உயிர் அங்கே
இதயம் இங்கே
துடிப்பு அங்கே
ஒரு நிமிடம்
நூறு வருடம்

ரத்தமென்ற பசையால்
வித்தகமாக அன்பொட்டிய
சுத்தமான உணர்ச்சியெல்லாம்
சத்தமாக மனதுக்குள் அழுது
மொத்தமாக வேகுதய்யா மனசு.. - ஒரு
முத்தம் கூட கிடைக்கலையே பொழுது.

கடனுக்கு கண்ணீர் தாரீகளா..!
உடனோடு இல்லை - இதில்
உப்பும் இருக்காது - அது
ஊரின் உறவில் படிந்துவிட்டது.

எங்கள் சமுதாயம் இப்படியா அழவேண்டும்
இதென்ன இறையே விளையாட்டு
இது தான் விதியா - அல்ல
வாழ்க்கையின் வீதியா..?

பணம் என்ற மாயைக்காக
குணம் கொண்ட இவர்களை - ஒரு
கணம் கூட மறக்க இயலாதே!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

vellamji சொன்னது…

இந்த கவிதை நான் துபாய் வந்த சமயம் எனக்கு எழுதிய கவிதை இன்றும் என் பாதுகாப்பில் உள்ளது, ராஜா வின் கவித்துவம் என்னை மிகவும் கவர்தது
gazzali