27 ஜூன் 2022

இரு கரை நீ!

வறண்ட பெருநிலம் யான்
உன்னால் சமவெளியாகினேன்
பூக்காடு கண்டேன்.
*
வெளிச்சம் மிகைத்தது
நீ வர
இருண்ட கோளத்தில்.
*
புல்வெளி பனித்துளி என்னை
ஒளி பாய்ச்சி மின்னிடச்செய்தாய்
சூரிய கிரணங்களைப் போல.
*
குயில்களற்ற
மரமாய் நின்றிருப்பேன்
நான் மட்டுமாய் இருந்திருந்தால்
பூத்துக் கனிகள்
சுமந்த கிளைகளில்
கிளிகளும் குயில்களும்
மகிழ்ந்தாடும்
இசைக்கு பஞ்சமில்லாத
சரணாலம் தந்தது
உன் சங்கமம்.
*
ஒடும் ஆறாய் நானிருக்க
பேறாய் வந்து
இரு கரைகளானாய்
தேடும் நேரத்திலெல்லாம்
என்னோடு கலந்திடும்
தீர்த்தக் கடலானாய்.
*
புலர்ந்த பொழுதில்
இரை தேடும் பறவையாய்
உன் உலகத்தில்
பிரவேசித்த போழ்திலெல்லாம்
நீயே வள்ளலாகி நின்றாய்.
*
-ஜா.மு.
2017
 
 


25 ஜூன் 2022

நாலுபேர் தான்

எப்படித்தான் 
எக்காலத்திலும்
பெரும்பாலான மக்கள்

மடையர்களையும்
பொய்யர்களையும்
தேடித் தேடி பின்பற்றுகிறார்கள்
என்பது இப்போது வரை பெரும் புதிர்!

அறியாமை என்பது விதியல்லவே
அறிவுடைமை யாருக்கும் விதிவிலக்கல்லவே
அறியாமையைக்கூட அறிவுடைமை 
என வாழ்ந்து சாவது எப்பேர்பட்ட துயரம்.


ஒலி வாங்கிக்கு முன்னால்
வழிய வந்து பேசுவோன் எல்லாம்
உண்மையைத் தான் பேசுவானென
உளமாற நம்பிக்கை வைக்கின்றனர்.

சத்தியம் பேசுவோன் 
ஒரு கட்டத்தில்
சக்தி இழந்து 
சோர்வாகிப் போகிறான்

சாகும் வரை 
நாலுபேர் தான், அவனுக்கு.

- ஜா.மு
25-06-22 12:40

20 ஜூன் 2022

மை வண்ணன் - இராம காவியம் - காப்பியக்கோ ஜின்னா சரிபுத்தீன்

துபாயில் நேற்றைக்கு முந்தியநாள் (18-06-2022) முப்பெரும் விழா அமீரக எழுத்தாளர்கள் & வாசகர்கள் குழுமம் கானல் / Kaanal அமைப்பின் சார்பாக சிறப்பாக நடந்தேறியது.
நிகழ்வு 1: அன்புச் சகோதரர் பாலாஜி பாஸ்கரன் Balaji Baskaran அவர்கள் Galaxy Book sellers & Publishers https://galaxybs.com/ என்ற புதிய நூல் பதிப்பகம் மற்றும் விற்பனை நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். அறிவும் சிந்தனையும் உங்கள் வாசல் தேடி என்ற முகவுரையோடு தொடங்கப்பட்டிருக்கும் அவரின் இப்புதிய நிறுவனம் சிறந்து தொழில் ரீதியாகவும் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள் .
நிகழ்வு 2: Galaxy Books நிறுவனம் தொடங்கி அதன் முதல் நூலாக இன்றைய சூழலில் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் காப்பியக்கோ ஜின்னா சரிபுத்தீன் Ahamed Jinnahsherifudeen அவர்கள் எழுதிய "மை வண்ணன்" இராமகாவியம் என்ற காவிய நூலை வெளியிட்டு பெருமை சேர்த்துக்கொண்டது.
நிகழ்வு 3: கடந்த 2019ம் ஆண்டு ஷார்ஜா புத்தக கண்காட்சியில் வெளியாகிய Jazeela Banu எழுதிய வேற்று திசை நூல் விமர்சனக்கூட்டமும் சிறப்புடன் நிகழ்தேறியது.
Galaxy Books புதிய நிறுவனத்தை தொடங்கி வைக்க Ahamed Jinnahsherifudeen Siddiq Syed Meeran A Md Mohideen அபுதாபி Ramesh Ramakrishnan Hameed Yasin உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
மைவண்ணன் இராம காவியம் நூலை வெளியிட்ட நிகழ்வில் எங்கள் அண்ணாச்சி Asif Meeran நூலில் சில பகுதிகளை வாசித்து நூல் நயம் வியந்தார், Suresh Babu Bilal Aliyar மற்றும் பலரும் வாழ்த்துரையில் இணைந்தனர்.
நிகழ்வை அறிந்த, காப்பியக்கோவின் முந்தைய காவியமான "அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும்" நூல் புரவலர் பெருந்தகை வெள்ளம்ஜி Jamal Mohamed Mohamed Iqbal அவர்களின் ஆவல் மிகுந்த எதிர்பாராத வருகை அனைவருக்கும் மகிழ்வளித்தது. காப்பியக்கோவும் புரவலரை அன்போடு வரவேற்று பெருமிதம் செய்து மகிழ்ந்தார்.
புத்தக விமர்சனக்கூட்டத்தில் போதுவாக புத்தகம் எழுதியவரை ஏற்றி போற்றிப் பார்த்திருப்பீர்கள், ஆனால் வேரெந்த இலக்கிய அமைப்பிலும் நடக்காத தயவு தாட்சண்யமில்லாத கிடா வெட்டு எங்கள் குழுமத்தில் நடப்பது இயல்பு. அதில் கொஞ்சமும் ஈவிரக்கம் கழிவிரக்கம் என ஏதுமிருக்காது, இனி புத்தகம் எழுதுவியா ரேஞ்சுக்கு அறுத்து தொங்கவிடுவது இங்கே அன்றாடம் நடக்கும் நிகழ்வு.
அதை விருந்தினர்களாக வருவோர் கண்டு அரண்டு விடுவதும் உண்டு வியப்பதும் உண்டு. அது தான் நேற்றைய வேற்றுதிசை நூல் விமர்சத்திலும் நடந்தது.
விமர்சனக்கூட்டத்தில் பலர் எப்போதும் போல குறைகளாய் நினைப்பதை கழுவி ஊற்றி எதிர்கட்சி அரசியல் மேடை ரேஞ்சுக்கு பேசித்தீர்த்தாலும் அந்த தோழமை எள்ளல்களை ஏற்ற நூலாசிரியர் Jazeela Banu வின் ஏற்புரை பாராட்டுக்குரிய விதத்தில் சிறப்பாய் அமைந்தது.
சிரித்து மனதை இலேசாக்கிக்கொள்ள பல ஊர்களில் ஹியூமர் கிளப் என்று தனி அமைப்பை நிறுவி, தங்கள் நிகழ்வுகளில் பெரிய பணமுடிப்பைக் கொடுத்து பிரபல நகைச்சுவைப் பேச்சாளர்களை அழைப்பது நிகழ்கிறது ஆனால் அது இங்கே எங்களாலேயே நிகழ்வது தான் குறிப்பிடத்தக்கது அந்த வகையில் நேற்றைய நிகழ்விலும் பேசிய அனைவரின் பேச்சிலும் நகைச்சுவைக்கும் அதனால் தங்களை மறந்த கூட்டத்தின் சிரிப்பலைக்கும் குறைவே இல்லை.
நிகழ்வை Nive Anandhan தொகுத்து சிறப்பான சம்பவமாக்கினார். ஆவணமாக்கிய அண்ணன் Subhan Peer Mohamed மற்றும் பின்புலத்தில் உழைத்த எல்லா குழும அன்பு நெஞ்சங்களுக்கும் பேரன்பு வாழ்த்துகள்.
மகிழ்ச்சி.
ஜா.மு.
20-06-2022





12 ஜூன் 2022

குர்ஆனுக்கு மட்டுமே உள்ள சிறப்பு




நான் பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன், தமிழ்ப்பாடமெடுக்க ஒருநாள் தமிழாசான் வந்தார்.


பாடத்திற்கு இடையே ஏதோ ஒரு விசயத்திற்காக எடுத்துக்காட்டு சொல்லப்போக தமிழாசான்
“இங்குள்ள இஸ்லாமிய மாணவர்கள் நான் சொல்லப்போகும் வார்த்தைக்களுக்காக என்னை மன்னிக்க வேண்டும்” என்றார்.

ஏன் இப்படியெல்லாம் நம் தமிழாசிரியர் பேசுகிறார்?
அப்படி என்ன தான் சொல்லப்போகிறார்?
ஏன் அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்கிறார்? மனதில் பல கேள்விகள்..என்ன தான் சொல்லப்போகிறார் என்று கேட்க ஆவலானோம்.

ஒருவேளை உலகெங்குமுள்ள இஸ்லாமிய புனித நூலான அனைத்து திருக்குரான்களும் ஆங்காங்கே திரட்டப்பட்டு ஒரே நேரத்தில் எரித்து அழித்துவிடுவதான நிகழ்வு நடந்துவிடுவதாக எடுத்துக்கொள்ளுங்கள்.. என்றார் எங்களுக்கு திகீல் என்று இருந்தது.. சொல்வது நம்ம ஆசிரியர் தானா என்று அதிர்ச்சியாக இருந்தது.

பதறாதீர்கள்.. அதற்கு தான் ஆரம்பிக்கும் முன்பே அவ்வாறு கூறி ஆரம்பித்தேன்.. இது ஒரு புரிதலுக்கான எடுத்துக்காட்டு தானே தவிர வேறொன்றுமில்லை.. என்று கூறி மீண்டும் தொடர்ந்தார்.

ஒருவேளை நான் சொன்னது போல உலகெங்குமுள்ள இஸ்லாமிய புனித நூலான அனைத்து திருக்குரான்களும் ஆங்காங்கே திரட்டப்பட்டு ஒரே நேரத்தில் எரித்து அழித்துவிடுவதான நிகழ்வு நடந்துவிடுவதாக எடுத்துக்கொள்ளுங்கள்.. என்ன நடக்கும் என்றார்?

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.. தலைசுற்றி உட்கார்ந்திருந்தோம்.

வகுப்பே வழக்கத்திற்கு மாறான மனநிலையில் இருந்தது. எல்லோர் முகத்திலும் இனம்புரியாத மெளனம் ஏனென்றால் இதுபோல எங்கள் ஆசிரியர் பேசி பார்த்ததில்லை.

பிறகு ஆசிரியரே தொடர்ந்தார்.

அது போல ஒன்று நடந்தால்.. உலகில் வேறொரு திருக்குரான் பிரதியே இல்லை என்ற நிலை வந்தாலும் கூட அடுத்த ஒரு மணி நேரத்தில் உலகெங்கும் அதே திருக்குரானின் அச்சரப்பிசகு இல்லாத பிரதிகள் உடனே தயாராகும். இந்த அதியசம் வேரெந்த சமூகத்திலும் வேரெந்த மதத்தைப் பின்பற்றுவோரிடமும் பார்க்க முடியாது.

ஏனென்றால் எந்த மதத்திலும் அவர்களின் வேதநூல் வெறும் அச்சில் தான் இருக்கிறது ஆனால் இஸ்லாமிய சமூகத்திடம் மட்டுமே திருக்குரான் உலகெங்கும் மாணவப்பருவத்திலேயே மனதால் மனப்பாடம் இடப்பட்டு அது உலெகெங்கும் வாழும் “ஹாபிழ்” என்று அழைக்கப்படும் திருக்குரானை மனனம் செய்தவர்களால் நிரம்பி இருக்கிறது. இந்த சிறப்பு உலகில் இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு என்றார். வகுப்பில் எல்லோரும் இந்த அரிய தகவலை அறிந்து வியந்தோம்.

இப்படி இஸ்லாமிய செய்திகள் மட்டுமல்ல மதங்கடந்து எதில் நல்ல விசயங்கள் இருந்தாலும் படிப்பினைகள் இருந்தாலும் அதையெல்லாம் பரிமாறி பகிர்ந்து அதிலுள்ளா உண்மையை எடுத்துக்கூறி மாணவ சமூகத்திற்கு கொண்டு சேர்த்து ஒரு எடுத்துக்காட்டு ஆசிரியராக திகழ்ந்த பெருமை எங்கள் தமிழாசிரியர் ஐயா திருநாவுக்கரசு அவர்களைச் சாரும்.

ஐயா அவர்கள் வழுத்தூர் பாலிய முஸ்லிம் சங்கத்தின் மேனிலைப் பள்ளியில் பணியாற்றிய போதும் சரி, சிங்கப்பூர் நன்யாங் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணியாற்றிய போதும் சரி மாணவர்கள் மத்தியில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து இன்றுவரை படித்த மாணவர்கள்கள், படிக்க ஆசைப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் எல்லாச்சமூக சான்றோர்கள் அனைவராலும் நேசிக்கப்படும் அன்பு திருநாவுக்கரசு Thiru Arasu ஐயா அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.

ஐயா குறித்து எழுத பேச ஆயிரம் உண்டு. தனிப்பட்ட முறையில் என்னை நேசித்து அன்பு செய்யும் நறுமணமிக்க நெஞ்சம் அவர்களுடையது.

ஐயா நீங்கள் சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு பல்லாண்டென நீடூழி நோய் நொடியின்றி குடும்பம் செழிக்க வாழ வேண்டும் என மனமார்ந்து வேண்டுகிறேன்.

பேரன்புடன்
ஜா.மு.
12-06-2022

நிழற்படத்தில் ஐயா தங்கள் அன்பு பெயர்த்தியுடன்.

10 ஜூன் 2022

மென் ஸ்பரிசம்




வசந்த காலங்களில்
வாழக் கொடுத்து வைக்காத கலியுகத்துக் குயில்கள்
வெயில் காலங்களைச் சிலாகித்து
வெண்பா படிக்கிறது.
***
வெல்வெட்டுத் தோற்கும்
அன்றலர்ந்த கோழிக்குஞ்சுகளின்
மென் ஸ்பரிசம் உணராத
கல்வெட்டுச் சிலைகள்
வல்லூறுகளின் நகக்கூர்மையின்
நாசூக்கு பிராண்டல்கள் பற்றி
வள்ளுவம் சொல்லி வகுப்பெடுக்கிறது.
***
ரசகுல்லாக்களென பரிமாறப்பட்ட
விசவுணவுப்பண்டங்களைச் சுவைத்து
திகட்டாத இந்த தீஞ்சுவை
தெய்வீக திவ்யப்பிரசாதம்
திசைதோறும் தேடினாலும்
அதிஷ்டம் உள்ளவர்கன்றி
ஆண்டவன் அருளான் என்று
நண்பன் வீட்டுக்கு வந்த
விருந்தாளிகள் பேசிச் செல்கின்றனர்.
***
தொண்ணூறு வயது முதியவர் மடியில்
முன்னூறு நிமிடத்திற்கு முன்
பிறந்த குழந்தை ஒன்று
சிரித்துப் பார்த்து சிறுநீர் கழிக்கிறது
முதுமை அதையும் பேறாய் மகிழ்ந்து
மெச்சிப் பேசி உச்சி முகர்ந்து
இறையை நிறைய துதிக்கிறது.
***
ஜா.மு.
1:07am

விக்ரம் வசனம்




ஒரு தீவிரவாத கும்பலின் ரகசிய பாடல் ஒரு காலத்தில் நாட்டின் தேசிய கீதமாகக்கூட வரலாம்.. அவரவர்கள் கோணத்தில் அவரவர்களின் நியாயம் என்று ஒரு வசனம் பேசுகிறார் விக்ரம் படத்தில் கமல். ( மறைமுகமாக RSSஐ சொல்லி இருக்கலாம்)
இது போன்ற தீப்பொறி வசனங்கள் வைப்பதில் கமல் வல்லவர்.
முன்பு நம்மவர் படத்தில் ஆசிரியராக பாடம் எடுக்கும் முதல் காட்சியில்..
"வியாபாரத்திற்காக வந்தவர்கள் நாட்டை பிடித்து அடிமையாக்கி இதன் வளங்களையெல்லாம் சுரண்டி அவரது நாட்டிற்கு சதா கொண்டு சென்றவர்களை |||ஆங்கிலேயர் வருகை||| என்றும், நாட்டை வென்று ஆட்சியை பெற்று இங்கேயே இருந்து இங்கேயே ஆண்டு இந்த நாட்டையே வளப்படுத்தி இங்கேயே வாழையடி வாழையாக பிறந்து இருந்து இறந்தவர்களை |||மொகலாயர்கள் படையெடுப்பு|||" என்றும் வரலாறு இப்படித்தான் பாரபட்சமாக பதிந்து வைத்திருக்கிறது என்று வசனம் வைத்திருந்தேன் அதை சென்ஸாரில் அனுமதிக்க மறுத்து நீக்கிவிட்டார்கள் என்று 2010ல் ஒரு பேட்டியில் கமல் சொல்லியிருந்தார்.
- ஜா.மு

விக்ரம் 🔫🕺:

• கமலுக்கும் உதயநிதிக்கும் பெரிய லாபநிதி தரும் வெற்றிப்படமாகிவிட்டது. ஷார்ஜா ஒயாஸிஸ் மாலில் கூட (அவ்வளவாய் பொது போக்குவரத்து மூலம் மக்கள் எளிதில் வர இயலாத கார் மூலமே வர இயலுமான மால்) 2nd show 11:30 காட்சியில் கூட அரங்கம் நிறைந்திருந்தது. எனக்கு இந்த அரங்கம் தான் ஃபேவரெட்.

 • பொதுவான எல்லா கமல் படம் போல அவரே ஆக்கிரமிக்கும் படமல்ல.. பகத், விசே என எல்லோருக்கும் முக்கியத்துவம் அளித்து பகிர்ந்திருக்கும் முதல் படம். எல்லோருக்குமான அறிமுகம் அருமை, நம் சூர்யா கூட கடைசி இரண்டு நிமிடத்தில் அசத்துகிறார். 

• படத்தில் மலையாளிகள் பட்டாளம் நிறைய நடித்துள்ளது. • படத்தின் கருவான போதை மருந்து உலகம் மற்றும் வன்முறை கும்பல் முக்கியமாக பகத் பாசில் பாத்திரம் Saravanan Chandran எழுதிய அஜ்வா நாவலின் வாசத்தை நினைவு படுத்தியது. 

 • இது போன்ற கும்பலின் உலகமே தனி, அவர்களின் தொழில் எப்போதும் தடையற அரசாங்கத்தின் மற்றும் அதிகாரிகளின் துணையோடு மாநிலம், நாடு, உலகம் என எல்லா தளங்களிலும் இயங்கிக்கொண்டிருப்பதும் அவர்கள் எல்லா மட்டத்திலும் நினைத்ததை சாதிப்பதும் கண்கூடு. தமிழ்நாட்டின் போதை உலகமும் கற்பனைக்கு எட்டாதது. இப்போது கூட அதன் பரவல் குறித்தும் அதனால் அதிகரிக்கும் குற்றச்செயல்கள் குறித்தும் அதிகப் பேச்சு அடிப்படுகிறது, முந்தைய எடப்பாடி ஆட்சியிலும் பரவியிருந்ததை தடுக்க இயலாததை இந்நாள் முதல்வரே அப்போது அடிக்கடி பேசியிருக்கிறார். 

 • படத்தில் இயக்குநர் மற்றும் எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் மிகக்கடின உழைப்பைத் தந்திருக்கிறார்கள். படம் முழுக்க விறுவிறுப்பு.. சின்ன இடங்களில் கொஞ்சம் தொய்வு ஆனாலும் எதிர்பாரா திருப்பங்களால் நம்மை ஈர்க்கிறது. 

 •கமலுக்கு ஏற்ற கதாபாத்திரம், 80களில் எடுக்க வைத்திருந்த அவரின் பட்டியலில் இருந்த இக்கதைக்கு இப்போதைக்கு தகுந்தாற்போல உயிரூட்டியுள்ளனர். •விஸ்வரூபம் -2 என்ற குப்பைக்கு பிறகு நல்ல படம்.

•சினிமா ரசிகர்களுக்கும், ஆண்டவர் வெறியர்களுக்கும் இது சிறப்பான ட்ரீட்.

•தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படவரிசையில் விக்ரம் '22. 

 -ஜா.மு. 

 0o0 

பி.கு: பொதுவாக எல்லா நல்ல படங்களையும் அரங்கில் சென்று பார்த்தாலும் அதுகுறித்து எழுத சூழல் காரணமாக பெரும்பாலும் முடிவதில்லை, இப்போது கமல் எழுத வைத்துவிட்டார். 

 0o0