08 அக்டோபர் 2014

மின்வெட்டுக்கு நன்றி!


எழிலாய் எழுந்தருளிய
பவுர்ணமியின் பேரழகை
அலாதியாய் அள்ளித்தந்திருக்கிறது
என்றும் கிடைக்காத  மின்வெட்டு!

செயற்கை மின் விளக்கின்
சதியில் மயங்கி
இயற்கையின் இரவு விளக்கை
இரசிக்காது உலவும்
மானிடர்களை
கட்டாயத்தின் பிடியிலாவது
ரசிக்க வைக்கும் ஏற்பாடே இந்த மின்வெட்டு!

மெர்குரி..............
நைட்ரஜன்.. ஹலோஜன்..
விளக்குகள் வெளிச்சத்தையே
பார்த்த கண்கள்..
தொலைக்காட்சித் திரை
கணினித்திரை இவைகளின்
ஒளி உமிழ்ச்சியில் புதைந்த கண்கள்..
மெழுகின் அழகில் கொஞ்சம் ஆழட்டும்!
அந்த தேனழகு கொஞ்சம் ஆளட்டும்!
தீங்கில்லாத பார்வையால்
சனமேனும் கண்கள்
மோட்சமெய்தட்டும்.
உன்னாலே மின்வெட்டு!

பேரிறைச்சலின் எதிரொலியே
வாழ்க்கை எங்குமெனவாகிட
வெற்றொலியின் இதயவாசலை
இயற்க்கையின் பேராழத்தை
பிரபஞ்சத்தின் பேரமைதியை
இப்போதாவது உணர்
இதுவே ஓர் வாய்ப்பென்றது
நிகழ்திருந்த மின்வெட்டு!

என் கருநிழல் கண்டு நாளாவதை
நானே அறியாதிருந்தேன்,
இன்று இயற்றிய மெழுகுவர்த்தி
என் பழைய நினைவுகளை
மீட்டுத்தந்தது.
நன்றி மின்வெட்டு!


இன்று அமீரக அஜ்மானில் எதிர்பாரத விதமாக பவர்கட், எப்போதாவது இப்படி நிகழும், துபையில் இவ்வாறு நிகழாது. கடந்த 12 வருடஙக்ளில் ஒருமுறையோ இருமுறையோ சில நிமிடங்கள் சென்றிருக்கிறது. அதற்கே மூன்று மாதத்திற்கு முன்பிலிருந்தே பத்திரிக்கை.. வானொலி என பல முறை முன்னறிவிப்பு செய்வார்கள். சார்ஜாவின் தொழிற்பேட்டை, அஜ்மான் போன்ற இடங்களில் சில மாதங்களுக்கு ஒரு முறை இப்படி பவர்கட் (மின் தடை) நிகழ்வது இயல்பு. அது இன்று நிகழ்ந்து ஒரு 20 நிமிடம் நிம்மதி கொடுத்தது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

சில கவிதைகள் - முகநூல் செப்- அக்-2014



சில கவிதைகள்
உடனே அரங்கேறிவிடுகின்றன..
சில கவிதைகள்
கிடத்தி வைக்கப்படுகிறது
கோர்க்கப்படாத மணிகளை போல!
மக்களின் மனநிலையை
குப்புற கிடத்தியது சட்டம்!
***
சட்டத்திற்கெதிரான
ஆர்ப்பாட்டங்கள்
அடைந்ததுவே நட்டம்!
***
அதிகார அத்துமீறலுக்கு
சட்டம் சிறை என்றது,
பிணையில் வரலாம் என்ற
முயற்சியையும் கூட
அது முறித்துப்போட்டது!
***
சட்டத்திற்கு அப்பாற்பட்ட
அரசியல் அபிமானங்கள்
நீதிமன்ற வாசலுக்கு
வெளியேயே கதறலாய்.. கூக்குரலாய்..!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விவாதங்கள் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்!! .. 
அது மோனநிலைக்கு எதிரான 
இடையூறாக நின்று நிசப்தம் கொல்கிறது. 
sep'28 - 2014

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


ஓ.. ஞானப்பித்தா..!
தமிழ் மண்ணின் புத்தா..!

வேங்கையின் வெறி கொண்டு
வேள்விகளின் வெந்தழலினில் 
ஒன்றுமற்று கரைந்தவனே!

பாரதி!

இன்று உனக்கு
நினைவு நாளாம்!

ஆம் - நீ
என்று மறைந்தாய்?!!!!


12 SEPTEMBER 
20:40

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
10 SEPTEMBER 
22:51

அழகின் வர்ணணைகள் 
வார்த்தைகளாக மட்டுமே உலவுகின்றது

அழகின் தோற்றங்களெல்லாம் 
எண்ணப்பிழையாய் உதிர்கின்றது

அழகின் மாயங்களெல்லாம் 
அறிவைத்திரையிடும் அழிவுச்சுழியாகிப்போனது

அழகென்பதெல்லாம் அழகன்று,
அழகென்பது தவறாய்... பிழையாய்...
பேசப்படுகிறது.. பார்க்கப்படுகிறது..
எண்ணப்படுகிறது... எழுதப்படுகிறது..
அறியப்படுகிறது.. புரியப்படுகிறது...,

சத்தியமாய்
அறுதியிட்டுச் சொல்வேன் அவைகளெல்லாம்
அழகில்லை..
சத்தியத்தை தவிர!

அழகோ..
அணுவுக்கணுவிலும்
மெய்மையால் சிரிக்கிறது.

சிரிக்கும் அவ்வளகு
நித்தியமானது
நித்தியத்திற்கு அழிவில்லை
அவ்வழகு அவ்வளவு நிரந்தமானது!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


தூர இருக்கும் போது ஏக்கமும்
அடைந்துவிட்ட போது ஏற்படும் சலிப்பும்
வாழ்வின் எதார்த்தங்கள்! 

05 SEPTEMBER 18:32
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பிறகென்ன!
*****************
நினைக்கலாம் நாம் எதையும்!
நடக்கட்டும் இங்கு எதுவும்!!
அனைத்துமே அதன் அசைவே!!!

1 SEPTEMBER  22:28

இயற்கை மனிதா... விலகிப்போனதேன் வெகு தூரம்!
மீள்வாயா...? மீட்டிடத்தான் முடியுமோ இனி உன்னை ! ?
1 SEPTEMBER

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

03 அக்டோபர் 2014

"டீ" இலக்கணம்



பாக்கிஸ்தானிய நண்பர் ஒருத்தர் சாய்ங்காலம் எனக்கு டீ கொண்டுவந்து கொடுத்தார்.. பெரிய கப்பில் வழிய.. வழிய "ஐயோ இவ்ளோ டீ யார் குடிப்பா.. ரொம்ப ஜாஸ்தீண்ணு சொன்னேன்".
'லப் ரேஸ்
லப் சோஸ்
லப் தோஸ்'
அப்படின்னார்..

புரியல.. வடிவேலு பானியில நல்லாத்தானே போயிகிட்டு இருந்துச்சு ஏ..ஏ.. இப்புடி.. ...ன்னு மனசுல நெனச்சுக்குட்டு இருந்தப்ப அவரே அதுக்கு வெளக்கம் சொன்னார்..

அதாவது டீ.. எப்போதும் கப்போட உதடு வழிய இருக்கனுமாம்.. படு சூடாவும் இருக்கனுமாம்.. குடிச்ச பிறகும் அதோட டேஸ்ட் நாக்குல ஒட்டிக்கிடக்கனுமாம்.. இது அவர் தாத்தா சொன்ன ஃபார்ஸி வழக்கு மொழியாம்.

நாள் 10 July 2011  மாலை நேரம் 

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

01 அக்டோபர் 2014

எம்.ஜே.பி- பழகும் முகில் !

எம்.ஜே. பசீர் அஹமது அவர்களோடு பெயரர் நதீம் 
இந்த காலத்திலும் இப்படி சாத்தியமா
என்பது போல உலகம் தெரியாதவர்!

வெள்ளந்தியான மனிதர்!
வெள்ளை மனதுக்காரர்!

உறவுகளில் உள்ளம் இழந்து
உயிரின் அடிநாதத்தில் நேசிப்பார்!

குடும்பம்.. பண்பாடு..மரபு இவற்றின் 
வேர் 
என்றும் உயிர்த்திருக்க பேராசைப்படுவார்!

அமைதியை ஆராதிக்கும் அழகர்!
அன்புக்கென்று உருகும் திலகர்!

சமூகநலனுக்காய் எப்போதும் சிந்திப்பவர்!
சமூகம் சிறக்கவே இப்போதும் சம்பாதிப்பவர்!

பெரியவர்களை.. அறிஞர்களை சிறப்பிப்பதில் முதல்வர்!
இலக்கியத்தை.. கவிதைகளை ரசிக்கும் தமிழ் புதல்வர்!

கவிதைகளை ரசிக்கும் கவிதையிவர்!
கவிஞர்களை உவக்கும் கவிஞரிவர்!

சொந்த கிராமத்தின் புகழ் கூவும் குயில்!
பந்தபாசத்தோடு எல்லோரிடத்திலும் பழகும் முகில்!

முகநூலில் கூட பிறந்த நாள் குறிப்பில்லை
முகம்தெரிந்த நண்பர்கள் சொல்லித்தான் நானே அறிந்தேன்.

சிறிய தந்தையாரே,
குடும்பம் குலம் சிறக்கப்பெற்று
வானளவு நிறைநலம் பெற்று
வாழ்க நீங்கள் பல்லாண்டு!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

ஜெயலலிதா கைதும்.. அதிமுகவும்!

(இந்த எழுத்துக்கள் ஒரு சாதாரணின் உணர்வுகள்.. அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. . இப்படித்தான் என்போன்ற எத்தனையோ பேரின் எண்ணங்களும் ஆகும் என்பதை எழுத்துக்களில் என் எண்ணங்களில் புகும் முன்னே அறிக!)



அரசியல் கட்சிகளின்.. சினிமா நடிகர்களின் தனிநபர் ஆராதனை என்பது இந்தியாவிலேயே நம் செந்தமிழ் நாட்டை அடித்துக்கொள்ள எந்த மாநிலமும் இல்லை, அந்த வகையில் நமது முன்னாள் முதல்வரை அவரது அபிமானிகள் இதயதெய்வமாக வைத்துக்கொள்ளட்டும்  இதயத்தில் கோயில் கட்டி பூஜிக்கட்டும்.. ஆனால் அவர் சட்டத்தின் முன் குற்றம் சாட்டப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டவர். அதனால் தான் சட்டத்தின் தீர்ப்பின் பிரகாரம் சிறையில் இருக்கிறார். இது போன்ற நிகழ்வு இவருக்கு மட்டும் முதன்முதலாக நிகழவில்லை.

ஆட்சி அதிகாரத்தில் இருந்த லாலு பிரசாத் இவ்வாறே வழக்கை சந்தித்திருக்கிறார். மூன்று மாதத்திற்கு பிறகு தான் பிணையில் வெளியே வந்தார்.. ஆட்சி அதிகாரத்தில் திமுக இருக்கும் போது தான் "குற்றம் சாட்டப்பட்டு" கனிமொழி சிறை சென்றார் அவரும் சிலமாதங்கள் கழித்துத்தான் வெளியே வந்தார், மத்திய அமைச்சர் இராசாவுக்கும் இந்நிலை தான் அவரும் பொறுமையாக சட்டப்படி வழக்கை சந்தித்து ஆறு மாதம் வரை சிறைவாசம் அனுபவித்து பிறது வெளியே பிணை பெற்று வந்தார்.



அப்போதெல்லாம் யாரும் நீதிபதியை திட்டவில்லை.. நீதிபதியின் மாநிலத்தை வைத்து மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடவில்லை.. நீதியை விமர்சிக்கவில்லை அவரது கட்சிக்காரர்களும் அமைதி காத்தார்கள் அநாவசிய கலவரங்களை உண்டுபண்ணவில்லை.. தெய்வத்திற்கு மனிதன் தண்டனை தர முடியுமா..????? என்றெல்லாம் பைத்தியக்காரத்தனமாக அலப்பறை செய்யவில்லை.. மாநில மொழியை வைத்து.. இரு மாநிலங்களுக்குள்ளான வாய்க்கால் தகராறை காரணம் காட்டி ஆ...ஊ... என பிதற்றவில்லை.. டிவியில் அங்கே ஆர்ப்பாட்டம்.. இங்கே போர்பாட்டம்.. இங்கே ஆராதணை.. இங்கே பிரார்த்தனை.. அங்கே மண்ணில் உருண்டார்கள்.. இங்கே அழுதார்கள்.. கடலுக்குள் விழுந்தார்கள்.. தீக்குளித்தார்கள்.. பிஸ்கட் சாப்பிட்டார்கள் என்றெல்லாம் வித.. வித வினோதங்களை நிகழ்த்தவில்லை.


இத்தனை நாளாய் எத்தனை எத்தனை பேர் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.. இது போன்ற விடயங்களின் தொடர்  மக்களிடம் இருந்த மனக்கசிவை.. இரக்கத்தை..எதிர்மறையாக வெறுப்பை விதைக்கும் விதமாக மாற காரணமாகி இருக்கிறது. இதை ஏனோ அவர்கள் உணர்ந்து கொள்ள மறுக்கிறார்கள். சட்டத்தை எதிர்த்தும்.. சபித்தும் நீதியை.. நீதிபதியை குறைத்தும் பேசுவது  சட்டத்தை வைத்து மக்களை ஆட்சி செய்யும் ஆளும் கட்சியினருக்கு அழகல்ல.


வழக்கை பதினெட்டு ஆண்டு இழுத்தடித்தது நீங்கள், வழக்கில் தீர்ப்பு வந்து குற்றவாளி என ஆனதும் இச்சனமே வெளியே வரவேண்டும் என்று அப்போது காட்டத்தவறிய வேகத்தை வெளியில் வரமட்டும் காட்டுவது எப்படி சரியாகும். உங்கள் உணர்வில் எப்படியாவது வெளியே கொண்டுவர முயற்சிக்கின்றீர்.. நல்லது ஆனாலும் நீங்கள் நிதானத்தை கடைபிடித்தால் அழகாக காரியம் சித்தியாகி முன்னால் முதல்வர் நீங்கள் சொல்லும் இந்நாள் மக்களின் முதல்வர் வெளியே வர முடியும். ஏன் பதறி துடித்து நீங்களே அவருக்கு இன்னும் இம்சை கொடுக்கின்றீர்.

சட்டத்தை மதித்து கொஞ்சம் கட்சிக்காரர்களை அடக்கி வைத்து தேவையில்லாமல் வெளியாகியிருக்கும் பூதங்களை மீண்டும் பெட்டிக்குள் அடைத்து முறையாக நடந்து உங்கள் மதிப்பினை மாண்பினை மீட்டுக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் உணர்ச்சிக்கு மட்டும் ஆட்பட்டவரக்ள் அல்ல சில தருணங்களில் சட்டென அவர்களின் ஞானோதயம் உங்களை இன்னும் சங்கடத்தில் ஆழ்த்திவிடலாம். எதற்கும் முன் ஜாக்கிரதையாக இருத்தல் நலம் பயக்கும்.

பகவான் சேமம் தரட்டும்!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா