08 அக்டோபர் 2014

மின்வெட்டுக்கு நன்றி!


எழிலாய் எழுந்தருளிய
பவுர்ணமியின் பேரழகை
அலாதியாய் அள்ளித்தந்திருக்கிறது
என்றும் கிடைக்காத  மின்வெட்டு!

செயற்கை மின் விளக்கின்
சதியில் மயங்கி
இயற்கையின் இரவு விளக்கை
இரசிக்காது உலவும்
மானிடர்களை
கட்டாயத்தின் பிடியிலாவது
ரசிக்க வைக்கும் ஏற்பாடே இந்த மின்வெட்டு!

மெர்குரி..............
நைட்ரஜன்.. ஹலோஜன்..
விளக்குகள் வெளிச்சத்தையே
பார்த்த கண்கள்..
தொலைக்காட்சித் திரை
கணினித்திரை இவைகளின்
ஒளி உமிழ்ச்சியில் புதைந்த கண்கள்..
மெழுகின் அழகில் கொஞ்சம் ஆழட்டும்!
அந்த தேனழகு கொஞ்சம் ஆளட்டும்!
தீங்கில்லாத பார்வையால்
சனமேனும் கண்கள்
மோட்சமெய்தட்டும்.
உன்னாலே மின்வெட்டு!

பேரிறைச்சலின் எதிரொலியே
வாழ்க்கை எங்குமெனவாகிட
வெற்றொலியின் இதயவாசலை
இயற்க்கையின் பேராழத்தை
பிரபஞ்சத்தின் பேரமைதியை
இப்போதாவது உணர்
இதுவே ஓர் வாய்ப்பென்றது
நிகழ்திருந்த மின்வெட்டு!

என் கருநிழல் கண்டு நாளாவதை
நானே அறியாதிருந்தேன்,
இன்று இயற்றிய மெழுகுவர்த்தி
என் பழைய நினைவுகளை
மீட்டுத்தந்தது.
நன்றி மின்வெட்டு!


இன்று அமீரக அஜ்மானில் எதிர்பாரத விதமாக பவர்கட், எப்போதாவது இப்படி நிகழும், துபையில் இவ்வாறு நிகழாது. கடந்த 12 வருடஙக்ளில் ஒருமுறையோ இருமுறையோ சில நிமிடங்கள் சென்றிருக்கிறது. அதற்கே மூன்று மாதத்திற்கு முன்பிலிருந்தே பத்திரிக்கை.. வானொலி என பல முறை முன்னறிவிப்பு செய்வார்கள். சார்ஜாவின் தொழிற்பேட்டை, அஜ்மான் போன்ற இடங்களில் சில மாதங்களுக்கு ஒரு முறை இப்படி பவர்கட் (மின் தடை) நிகழ்வது இயல்பு. அது இன்று நிகழ்ந்து ஒரு 20 நிமிடம் நிம்மதி கொடுத்தது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: