கவிதை - பலஸ்தீனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை - பலஸ்தீனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 அக்டோபர் 2023

ஏது பதில்?.

போரில் பரிதாபமாக
உயிர் துறப்பவர்களின் துன்பம்
ஒரு விதத்தில் அத்தோடு
விடை பெற்று விடக்கூடும்.
ஆனால்,
போர்ச் சூழலின்
பேரபாயகரத்தில் சிக்கி
வாதைக்குள்ளாகி
வகையறியாது நிற்போரின்
மனப்பிறழ்வு மனநிலை
அநாதியான வெறுமை
பசிப்பிணி
உறக்கமற்ற
உறங்கவும் இடமற்ற
ஈவிரக்கமற்ற பொழுதுகளின்
சாகவும் முடியாத
வாழவும் முடியாத
மிக வறண்ட கணங்களுக்கு
ஆதரவு தந்து அணைப்பது யார்?
செத்த உடலத்தின்
நிலை குத்திய கண் போல இருக்கும்
அவர்களின் இருண்ட வாழ்விற்கு
ஏது பதில்?.
- ஜா.மு

விடை காணாத கதறல்கள்
வாழ்வா சாவா போராட்டம்
ஒவ்வொரு வினாடியும் திகில்
வரலாற்றின் இரத்தம் சொட்டும்
பக்களை எழுதிக்கொண்டிருக்கிறது
விடியலை எதிர் நோக்கும்
வலி மிகுந்த பொழுதுகள்.

- ஜா.மு
09-10-2023

பாவப்பட்ட உண்மை


ஆயிரம் நர்த்தனம் ஆடி
அவரவருக்கு வேண்டியதை
ஆதலால் இதுவே உண்மையென
ஓயாது நிலை நாட்டிடும்
போட்டிகள் எங்கும் அரங்கேற
கேட்டு சோர்ந்தன ஒலி வாங்கிகள்.
அயராத பேச்சின் கம்பளம்
விரிந்து கொண்டே செல்கிறது
மனிதத்தை மாண்பை
பேரன்பை புன்னகையை
மறைத்து மூடிச் செல்கிறது.
தனக்கு நேர்ந்த சேதாரத்தை
காததூரம் தள்ளி நின்று
வேடிக்கைப் பார்த்து ரசிக்கிறது
பாவப்பட்ட உண்மை.
-ஜா.மு.

காஸாவின் பூனை

கருணை உடையோர்க்கு
காஸாவின் பூனையும்
கதறும் மழலையும் ஒன்று தான்.
உள்ளம் இல்லாதவர்கள் தான்
சிசுக்களின் ரத்தம் குடிக்கிறார்கள்.

- ஜா.மு
19-10-2023

சிட்டுக்குருவியை உயிர் பிழைக்கச் செய்துவிடுங்கள்!

இந்தக் குருவியை
பார்த்ததும் சிறுமி ஹனா
மனது வலியால் துடிதுடித்தது
ஹனாவின் வாழ்வே
வலி மிகுந்திருந்தும்
வலிக்கும் இழப்பிற்கும்
தன்னைப் பழக்கிய வாழ்வு
அவளுக்கு விதிக்கப்பட்டது.
ஆனால் பெரும் இரைச்சலுடன்
பூமியை அதிர வைத்து
வந்துவிழும் ராக்கெட் குண்டுகள்
ஒன்றும் அறியாத
காஸாவின் சிட்டுக்களை
நிலைகுலையச் செய்து
பாதித்ததில் வலித்து வலித்து
சோர்வுற்றாள் ஹனா.
பறக்க முடியாதிருந்த சிட்டைத்
தன் சிறிய கையில் ஏந்தி
பக்கத்திலிருந்த மருத்துவமனை
டாக்டரிடம் சொன்னாள்..
"எப்படியாவது
இந்த சிட்டுக்குருவியை
பறக்க வைத்து
உயிர் பிழைக்கச் செய்துவிடுங்கள்".

- ஜா.மு

09 ஆகஸ்ட் 2014

குழந்தைகள் மீது அன்பு காட்டுங்கள்

காஸா-வின் சிறுவர்கள்


குழந்தைகள் அழகு ஒப்பில்லாதவை
குழந்தைகள் உலகம் தப்பில்லாதவை

குழந்தைகள் சிரித்தாலும் அழகு
குழந்தைகள் அழுகையிலும் அழகு

குழந்தைகள்
கவலைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் – தூய்மையில்
அவ்விளந்தைகள்
பனித்திவளைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள்

குழந்தைகளுக்கு…

வன்மம் வெறி பழிவாங்கள்
என்பவையெல்லம் தெரியாது
துன்பம் நேர்ந்தால் கூட துளியளவும்
பகைசெய்யும் வகை அறியாது

சூது வாது காமம் குரோதம்
இவைகளுக்கெல்லாம் இவர்கள் விரோதம்
தீது செய்யும் என்று தெரியாமலே
தீயைக்கூட தொடும் இவர்கள் வினோதம்

தனக்கு சந்தோசமேற்பட்டால்
சங்கீதம் தோற்கச் சிரிக்கும்
தனக்கு துக்கமென்றால்
பரிவு வேண்டி அழுகையில் தரிக்கும்

மாறாத அன்போடு பேசும்
மறைவில்லாத நேசம் வீசும்
காசான உலகம் பற்றி கடுகளவும் அறியாது
தூசான குணங்களேதும் துளிகூட இராது

நம்முகம் கண்டாலே மலர்ந்து முகப்பூ விரிக்கும்
அம்மழலை முகம் நாம்காண
மனதில் இருக்கும் இறுக்கம் உடைந்து தெரிக்கும்..
மனசிலெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி ஒளி நிறைக்கும்.

அவர்கள் மென்மையானவர்கள்…
உடலில் மட்டுமல்ல உள்ளத்தாலும் தான்,
உள்ளொன்று வைத்தெல்லாம்
புறமொன்று பேசாத பதுமைகள் குழந்தைகள் தான்.

நம்மின் முரட்டுத்தனங்களை அவர்கள் தாங்கமாட்டார்கள்
நமது வன்மங்களை அவர்களால் ஏற்க முடியாது
நமது அவசரங்களை அவர்களால் சகிக்க முடியாது

அவர்கள் அன்பிற்கு மட்டும் சொந்தம் பாராட்டவந்தவர்கள்
அடிதடி கொண்டு யாரும் வதைத்திட வேண்டாம்!

நம்மை முழுமையாக நம்பும் - இவர்கள் தான்
நமது காப்பாளர்கள் என்று!
யாரேனும் அச்சம் ஏற்பட செய்தால் கூட
தப்பித்து நம்மிடம் அபயம்புகும் காப்பார்கள் என்று!

பிஞ்சுக்கால்களில் முள் குத்தினாலும்
பீறிட்டு அழுது நம்மிடம் வரும்
பஞ்சு போன்ற படைப்பினத்தை
பிஞ்சிச் சிதற அழித்திட வேண்டாம்!

குஞ்சுகள் உலகம் உங்கள் சூதறியாது
குண்டுகளால் அவைகளை ஏன் சிதைக்கிறீர்
மனிதப்பிறவிகளின் கொடூரங்கள் அறியா
மாகத்தான பிறப்புக்கள் குழந்தைகள்
அவைகளை மண்ணில் புதைத்து
உங்கள் கொடுமைகளுக்கு உரமாக்காதீர்!

நீவீர் மிகபாதகமாக தாக்கினாலும்
உங்களின் கோரத்தையெல்லாம்
குழந்தைகளின் அன்பு உள்ளத்தால் சிந்திக்ககூட தெரியாது!

குழந்தைகள் இயற்கையை
இயற்கையாய் பிரதிபலிக்கும் கண்ணாடிகள்
உங்களின் செயற்கை கோள்களால்
குறிவைத்து நொறுக்காதீர்கள்!

குழந்தைகள் சாகும்போது…..
குழந்தைகளோடு சாவது
உங்களின் அன்பு.. பரிவு..இரக்கம்
இவைகளெல்லாம் தான்!

மற்றொரு குழந்தையை கொன்றுவிட்டு
உன் குழந்தையை மட்டும் நீ
குற்ற உண்ர்ச்சியே இல்லாமல்
கொஞ்சவா முடியும் ????

குழந்தைத் தனங்களை
கொண்டாடக் கூடவேண்டாம்
குறைந்த பட்சம்
கொன்று ரசிக்காதீர்கள்.
ஆயுதம் ஏந்தி நிற்கும்
மனிதர்களெனப்படும்
மதவாதிகளே.. அதிகார வெறியர்களே..
ஆயுத வியாபாரிகளே..

குழந்தைகளின் மீது
குறைந்த பட்ச அன்பையாவது காட்டுங்கள்!


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா



(காஸாவில் கொத்துக்கொத்தாக குழந்தைகளை கொன்று குவித்த போது எனது மனம் இப்படி அழுதது)

10 ஜூலை 2014

பாழ்பட்டிருக்கும் பலஸ்தீனமே!







நோன்பு திறக்கும் நேரம் கூட 
தேம்பித் தேம்பி அழுதது மனது!

தொழப்போனேன் பள்ளிக்கு
தொய்வின்றி வியாபித்திருந்தது
அந்த அழிச்சாட்டியக்கொடூரங்களின் மீதான 
கேள்விக் கொக்கிகள் என்னில் எங்கும்!

சிந்தனை எல்லாம் இன்று இதுதான்
சிந்திய இரத்தம் போதாதா இப்போதும் ஏன் என்று?

நாமெல்லாம் இரமலானை
புனிதமென்றும் அருள் தேடிடும் மாதமென்றும்
பக்தியில் மூழ்கிடும் போதினில்
அங்கே அதே இறைவனை நோக்கி
பல அபலைகளின் குரல்....
"இறைவா... நாங்கள் மட்டும் என்னபிழை செய்தோம்
இப்படி எங்களை சோதிக்கிறாயே" என்று...
மாற்றைப்பற்றி சிந்திக்கவே இயலாததாய்
தேம்பலும்... கூப்பாடும்..அழுகுரலும்
அவர்களின் இபாதத்தாய் ஆனதே!

வலிமையான அரசமைப்பும்
இராணுவ பலமும் அவர்களிடம்
குன்றினை கூட வசப்படுத்தமுடியாத
குன்றிப்போன அரசென்பதாய் ஒன்று மட்டும் இவர்களிடம்!

மிகப்பெரிய டேங்கிகள் அவர்களிடம்,
ஒரு ஓட்டை துப்பாக்கிக்கூட இல்லை
இந்த இளைஞர்களிடம்,

ராக்கெட் லாஞ்சரெல்லாம் அவர்களிடம்
பொறுக்கி எடுத்த கட்டிட இடிபாடுகளின்
கற்கள் மட்டுமே இவர்களிடம்!

இதையெல்லாம் வைத்து என்னதான்
செய்வதாம் இவர்கள்???
பக்கத்து வசிப்பிடம்
படுகொடூர சப்தத்தோடு
குண்டிற்கிறையான ஓலம் பார்த்து
இரண்டரை வயதேயான
தன் தம்பி திடுக்கிடுகிறானே என
தமையனவன் சற்றே அணைத்துக்கொண்டிருந்தான்,
செத்துக்கிடந்தனர் அவர்களிருவரும்
அதே கிடப்பிலே அணைத்தவாரே அடுத்தச்சனம்.
நேற்று முன் தின இஸ்ரேலிய தாக்குதலில்!

வழக்கமான நாள் பொழுதில்
அழிக்கவந்த குண்டுகள் மீதி இருந்த
குடும்பங்களின் எதிர்காலங்களை
கேள்விக்குறியாக்கிவிட்டு போக!!
சிக்குறக்கூடாதே என வீட்டிலிருந்து
வீதியிலே அலறலோடு பீதியிலே
வாலிபர்கள் நிறைந்த ஆண்கள் கூட்டம்
என் புள்ளகுட்டிங்கள்ளாம் போச்சே
என்றெ அழுதோடும் பெண்கள் கூட்டம்
பறிதவித்தோடிட..மீண்டும்.. மீண்டும்..
துறத்திக்கொண்டு வருகிறதே
விழும் குண்டுகளின் பிரமாண்ட சப்தமும்
உயிரை குதறும் அதிர்வும்..
சாவை போர்த்தும் இருளும்...!!!!!!!!!!!!!!!!

என்று தான் விடியுமோ அவர்களுக்கு
இறைவா!!!!??????

பாழ்பட்டிருக்கும் பலஸ்தீனமே
உன் இரணங்களுக்கு
மருந்து கிடைக்குமா????

நீ சுகமாவாயா?????


வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா