20 அக்டோபர் 2016

லிகோ லாண்ட் Legoland திட்டப்பணி

துபாயில் திறக்க ஆயத்தமாகிவிட்ட Logoland Park விரைவில் துபாய் மன்னர் வந்து திறந்து வைக்கப் பட இருக்கிறது. இது எனது தொழில்முறை பயணத்தில் மிக வித்தியாசமான ஒன்று, இம்மாதிரியான பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் மிக மகிழ்வளிக்கும் பார்க் ப்ராஜெக்ட் செய்தது சிறப்பான அனுபவம். இதில் நான் கடந்த இரண்டு வருடமாக ரசித்து உழைத்த அனுபவம் புதுமை. இந்த திட்டப்பணி குறித்து நிறைய எழுதலாம் அத்தனை அனுபவம் கொடுத்திருக்கிறது. இதில் கண்சல்டண்ட் முதன்மை மெக்கானிகல் இஞ்சினியராக முழு சுதந்திரத்துடன் செயல்பட்டு முடிவுகள் எடுத்து இன்று பெரும்பான்மை பணிகள் முடிந்து முழுமையாக காணும் போது ஏற்படும் ஆனந்தம் மிக அலாதினாது. இத்தருணத்தில் என்னோடு பயணித்த எல்லா துறை சார்ந்த நண்பர்களையும் நன்றியோடும், மகிழ்வோடும் நினைத்துப்பார்க்கிறேன்.
இத்தோடு இணைந்து லப்பித்தா ஹோட்டல், அவுட்லெட் மால், வாட்டர் பார்க், ராஜ்மகால் பாலிவுட் தியேட்டர் என நிறைய ப்ராஜெட்டுகளால் இந்த ஏரியாவே அமர்க்களம். இதில் ராஜ்மஹால் பாலியுட் தியேட்டரும் நாங்கள் செய்தது தான்; ஆனால் வேறு டீம். அதுவும் இப்போது திறக்க ஆயத்தமாகி நடன ஒத்திகைகள் நடந்து கொண்டிருக்கிறது. பாலிவுட் பட்டாளமே சாருக், சல்மான், ஐஸ்வரியா என நிறைபேர் வர இருக்கிறார்கள்.
முகநூலில் நான் அதிகம் தொழில் சார்ந்து பகிர்ந்ததில்லை, ஆனால் இந்த பகிர்வு நிறைவின், மகிழ்வின் வெளிப்பாடு. இந்த நிறைவான தருணத்தை மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன், எனக்கு இந்த திட்டப்பணி குறிப்பிடத்தக்க மயில்கல்.
மகிழ்ச்சி!.



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

25 செப்டம்பர் 2016

வெறியும் பரிவும்



நீங்கள் குரூர வெறியோடு வருகிறீர்கள்;
நான் நலினமாய் அன்பின் புன்னகை தந்து கடக்க முயல்கிறேன்

நீங்கள் ஓணாயின் இரவுநேர திகிலூலையாய் கத்துகிறீர்கள்;
நான் சோலைமரப் பூங்குயிலாய் ராகம் இசைக்கிறேன்

நீங்கள் பசித்த புலியின் நகங்களால் உடல்கீறி மகிழ்கிறீர்கள்;
நான் மயில்பீலிகளால் மருந்து நனைத்து வருடுகிறேன்

நீங்கள் அக்கினி குண்டமாய் துவேசம் வளர்த்து எரிகிறீர்கள்;
நான் ஆனந்தக் குளிர்ச் சுனைநீராய் பொங்குகிறேன்

நீங்கள் என்னை கொல்லாமல் விடமாட்டேன் என்கிறீர்கள்;
நான் கனிவான முகமன் கூறி கட்டி அணைக்கிறேன்

நீங்கள் வாய்க்கு வந்த கடுஞ்சொல்லால் சுடுகிறீர்கள்;
நான் வா என் சோதரா நாம் இந்தியத்தாயின் பிள்ளைகள் தானே என்கிறேன்.

நீங்கள் என்னை வீழ்த்துவதற்கு திட்டம் பல தீட்டுகிறீர்கள்;
நான் தேசத்தின் நல்வாழ்த்தினை கவியா
லாபனை செய்கிறேன்

நீங்கள் என்னை நாட்டுப்பற்றில்லாதவன் என தூசிக்கிறீர்கள்;
நான் புதைக்கப்பட்ட தியாகங்களை கண்கலங்க பாடிகாட்டுகிறேன்.

நீங்கள் என்னை அழிக்கவந்த அசிங்கப்பிறவியே என்றீர்கள்;
நான் அன்பு செய்ய வந்த இந்திய இஸ்லாமியன் தான் என்கிறேன்.

நீங்கள் ஆக்ரோசமாய் “பாரத் மாதாகி ஜே” என்று தாக்க வருகிறீர்கள்;
உடன் என் தேசத்தாயவள் என்னை மகனேயென பாசத்தோடு நெஞ்சில் வாரி அணைத்துக்கொள்கிறாள்.

- ஜா.முஹையத்தீன் பாட்ஷா
24-09-2016; இரவு 11.14



17 செப்டம்பர் 2016

இப்போதும் நேரம் கடக்கவில்லை ஐயா பாலகுமாரன்!

பாலகுமாரன் ஐயா அவர்கள் முதுபெரும் எழுத்தாளர், பலரை தனது எழுத்துக்களால் ஆட்டுவித்தவர், பலர் தனது குரு என்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன். எனக்கும் அவர் மீது விருப்பம் உண்டு. ஆனால் நமது முதிர்வின் விசாலமா அல்லது அவரின் சிந்தனைகளின் போக்கா என்று தெரியவில்லை சமீப காலமாக அவரின் எழுத்துக்கள், சிந்தனைகள் பெரியதோர் மையலை கொடுக்கவில்லை, அவைகள் எல்லைகளுக்குட்பட்டதாகவே தோன்றியது. ஆயினும் சரி பரவாயில்லை, பெரிய எழுத்தாளர், சாதனைகள் பல எழுத்தில் செய்தவர் என்ற அடிப்படையில் எனது மரியாதை தொடர்ந்தது.
ஆனால் பெரியாரின் பிறந்த நாளான இன்று பெரியாரை, பெரியாரியத்தை தனது ஏகபோக எதிரியாய், அழிக்கும் சக்தியாய் எண்ணி அவரது பதிவுகள் சிறுபிள்ளைத்தனமாய் இருந்தது கண்டு அதிர்ந்தேன். எனக்குள் சிரித்தேன். அவர் விளங்கிய பெரியார் அவ்வளவு தான்.
தூரமாய் புத்தகம் மட்டும் எழுதிய போது அவர்களது பலகீனங்கள் தெரிய வாய்ப்பில்லை, இப்போதெல்லாம் முகநூல் நிலைத்தகவல்கள் பலநேரம் அவர்களை அப்பட்டமாக காட்டிவிடுகிறது. இப்போது கூட நேரம் கடக்கவில்லை, உங்கள் மேதைமையை விட்டும் கொஞ்சம் கீழிறங்கி பெரியாரையும் அவர் அந்த காலத்தின் சூழலில் செய்த பெருஞ்சேவையையும் படித்துவிட்டு வாருங்கள் பாலகுமாரன் ஐயா; உங்கள் வெண்தாடி அர்த்தம் பெறும்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

பாலகுமாரன் சார், நீங்கள் எழுதுகிறீர்கள்
ஜாதி, மதம் கடந்து தானே நாங்கள் உங்களை வாசிக்கிறோம், உங்களை நேசிக்கிறோம். அது போல நாங்கள் ஜாதி, மதம் கடந்து தான் பெரியாரையும் நேசிக்கிறோம். ஒரு புறத்தில் அவர் கருத்தை சொல்லிவிட்டுத்தான் போகட்டுமே ஏன் இப்படி அடி வயிறு கலங்குகிறது.
நாத்தீகம் பேசுபவர்கள் மட்டுமல்ல..
இஸ்லாமியர்கள் பெரியாரை கொண்டாடுகிறோம், பெரும்பான்மை இந்துக்கள் பெரியாரை கொண்டாடுகின்றனர், கிருத்துவர்களும் கொண்டாடுகின்றனர். ஆனால் பெரியார் என்று சொன்னாலே சிலருக்கு மட்டும் ஏன் டரியலாகிறது.

இதயவாசல் மூடிக்கொண்டது.

கவிஞர் இக்பால் ராஜா
இன்று காலை எழுந்ததும் அலைபேசியை திறந்தால் இதயவாசல் அண்ணன் இக்பால் ராஜா அவர்களின் மறைவுச் செய்தி கண்ணில் பட்டு, நெஞ்சை உலுக்கியது.  மனது மிகப்பெரும் சஞ்சலத்திற்காளானது.

முஸ்லிம் லீக் இயக்கத்தின் செயல்பாடுகளில் பங்கெடுத்து நாளும் பொழுதும் சமூகத்திற்காக இயக்கம் வளர்த்தவர். சந்தனத்தமிழ் வித்தகர் சிராஜுல் மில்லத் அவர்களின் மீது பெருங்காதல் சொல்லில் முடியாது. கட்சியின் பிரைமரி மற்றும் இளைஞரணியை தஞ்சை பகுதிகளில் பலமாக்க அவர் கொண்ட பெருமுயற்சிகள் காலத்தால் மறக்கமுடியாதவை. கால நேரம், பணங்காசு, வீடுவாசல் என எதையும் பொருட்படுத்தாமல் சமூகம் சிறக்க முஸ்லிம் லீக் வளரவேண்டும் என்று உழைத்தவர். இன்றைய தலைவர் முனீருல் மில்லத் அவர்கள் மீதும் மாறாத பற்றுறுதி கொண்டவர். இவரது இழப்பு என்பது சமூகத்தின் நலன் மீது ஆதீத பற்று கொண்ட உண்மையான சமூகநல ஆர்வலரை நாம் இழந்துவிட்ட பேரிழப்பாகும்.  தியாகதீபமாய் எரிந்த சுடர் அணைந்ததில் முஸ்லிம் லீக்கிற்கும் ஈடுசெய்யமுடியாத இழப்பாகும்.

ஆலிமான் குடும்பத்தில் தகப்பனாரைப் போல கவிஞர் இக்பால் ராஜாவும், ஜியாவுதீன் அண்ணன் அவர்களும் செய்த பொதுநலன் சார்ந்த சேவைகள் என்றும் போற்றத்தக்கவை. மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் அப்துல் சமது ஸாஹிப் சார்ந்த எல்லா பத்திரிக்கை செய்திகளையும், தகவல்களையும் அதிகம் திரட்டி வைத்திருக்கும் சகோதரர்கள் இவர்கள். ஆலிமான் ஜியாவுதீன் அவர்களது அரிய முய்றச்சியில் தான் தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களின் “சிராஜுல் மில்லத் சிந்தனைகள் “ என்ற சீரிய வரலாற்று ஆவண சிந்தனைக் களஞ்சியம் வெளிவந்தது என்பதும் மிகுந்த நன்றியோடு சிந்தித்து பார்க்கும் தருணம் இது.

அதிகம் பிரிண்ட்டிங் பிரஸ் ஏதுமில்லாத காலத்தில்  அண்ணன் இக்பால் ராஜா அவர்களது அய்யம்பேட்டை மகதடிபஜார் பிரிண்டிங் பிரஸ் தான் மிக பிரபல்யம்.  திருமணபத்திரிக்கையிலிருந்து எல்லா சமூக நிகழ்வுகளுக்கும் அவரது பிரஸ் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தது.  உறவினர்கள், நண்பர்கள் திருமணத்திற்கு கவிதையில் வாழ்த்து எழுதி நிக்காஹ் மஜ்லிஸில் பகிரும் பழக்கம் அதிகமிருந்த அந்த காலப்பொழுதில்  எழுதியதை துரிதமாக அச்சடித்துத் தரக்கோரி உடன் அடித்து வந்திருக்கிறோம், சில சமயம் மின்சாரம் தடைபட்டால் அவரும் பணியாளர்களுடன் சேர்ந்து வேலை செய்து பணியை முடித்துக்கொடுப்பார்.  சமூகம் சார்ந்த பொது நிகழ்வுகளுக்கும் நிறைய கவிதைகள், பத்திரிக்கைகள் மிக துரிதகதியில் வேண்டுமென  அவரிடம் வேண்டி நின்று அச்சடித்து வாங்கிச்சென்ற நிகழ்வுகளும் உண்டு. 

அந்த காலங்களில் தான் தனது தீராத பத்திரிக்கை கனவால் “இதயவாசல்” என்ற சமூகம் சார்ந்த மாத இதழைத் தொடங்கி நடத்தி வந்தார்.  நமது சமூக மக்களின் படிக்கும் ஆர்வம் தான் எல்லோருக்கும் தெரிந்த விசயம், அவ்வளவு படிப்பார்வம் மிகுந்தவர்கள், எழுத்தாளர்களை ஊக்குவிப்பவர்கள்!!!??? அதனால் பத்திரிக்கையை நடத்த அவர் பட்ட கஷ்ட நஷ்டங்கள் சொல்லி மாளாதவை.  சமூக கருத்துக்களை சுமந்த நிறைய கவிதைகளை எழுதிய கவிஞர் இக்பால் ராஜா, ஜனரஞ்சக கவிதைகள், காதல் கவிதைகள் என எல்லாதரப்பு கவிதைகளையும் எழுதுவதில் வல்லவராக இருந்தார். கவிதை மட்டும் அல்ல அவரது இதயவாசல் மாத இதழில் “விதவை மனமே கதவைத் திற” , “கண்மணி வஹிதா கவலை வேண்டாம்” போன்ற இன்னும் நிறைய இஸ்லாமிய சமூக மேம்மாட்டு களங்களை உள்ளடக்கிய கதைகள், நாவல்களை எழுதி குவித்த சமூக எழுத்தாளர். 

காலப்போக்கில் நிறைய பிரிண்டிங் பிரஸ் வந்துவிட்டதாலும், பத்திரிக்கையை தொடர்ந்து நடத்த முடியாததாலும் மிகுந்த சிரமப்பட்டார். அவ்வேலையில் அவரது “கண்மணி வஹிதா கவலை வேண்டாம்” நாவலை தற்போதைய தஞ்சை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் வழுத்தூர் லயன் பஷீர் அஹமது அவர்கள் வெளியிட்டு ஆதரவு நல்கினார் என்ற நிகழ்வு என் நினைவுக்கு வருகிறது.

அது போலவே எனது சிறிய தந்தை வழுத்தூர் வெள்ளம்ஜி. பஷீர் அஹமது அவர்களும் மறைந்த கவிஞர் இக்பால் ராஜா அவர்களும் நல்ல நட்புணர்வு கொண்வர்கள்.  ஊர் வந்தால் தேடி வந்து சந்திப்பார்.  சமீபத்தில் சில நேரம் முடியாமல் இருந்த போது கூட சந்திக்க வேண்டி ஆவலாய் இருப்பதாக சொல்லி சவுதியிலிருந்து ஊர் வந்த வெள்ளம்ஜி பஷீர் அவர்களை அழைத்து சந்தித்தார்.  எனக்குத் தெரிந்து அவ்வாரான சந்திப்புக்களில் சமூக சிந்தனையிலேயே வாழ்வை அற்பணித்த அந்த நல்ல உள்ளத்திற்கு தன்னாலான ஆதரவை வெள்ளம்ஜி பஷீர் அவர்கள் வழங்க தவறவில்லை.  இது போல ஒரு சிலர் அரவணைத்தாலும் அந்த பொதுநல உழைப்பாளிக்கு நம் சமூக மக்கள் போதிய ஆதரவினை வழங்கவில்லையோ என்ற அங்கலாய்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.

மறைந்தது மேலான ஆன்மா, அல்லாஹ் ரசூலை மிக உவந்த ஆன்மா, சமூகத்திற்காக இரவும் பகலும் சிந்தித்த ஆன்மா. அது என்றும் இறையருள் சூழ சாந்தியோடு தான் இருக்கும். அன்னாருக்கு எல்லா மேன்மைகளையும் இறைவன் அருளி என்றும் அவரது புகழ் நிலவி இருக்க அருள் செய்வனாக. அவரை இழந்த குடுமபத்தினருக்கும், பிள்ளைகளுக்கும் சப்ரன் ஜமீலா என்ற மேலான பொறுமையை இறைவன் வழங்கி, நிறைவாழ்வு அளிப்பானாக. ஆமீன்.

துஆவுடன்,
வழுத்தூர் . ஜா.முஹையத்தீன் பாட்ஷா
17-09-2016
5.52pm

11 செப்டம்பர் 2016

வெள்ளம்ஜி GRAND VILLA விற்கு வாழ்த்து

வெள்ளம்ஜி. முஹம்மது இக்பால்.

பழகுவதற்கு மிக எளிமையான மனிதர், என்றும் எதார்த்தம் உணர்ந்து செயல்படக்கூடியவர். இனிமை இவரது இயல்பு, இரக்கம் இவரது குணம். தேவையில்லாத படோடோபம் இவரிடம் இருக்காது. முழுக்க முழுக்க சாத்வீகமான மனிதர், அன்பை எங்கும் விதைக்க தன்னாலான செயல்பாடுகளை என்றென்றும் செய்துவருபவர். மதம் கடந்த மனிதநேயம் இவரது இயற்கைச் சுபாவம், எங்கு திறமைகள் இருந்தாலும் கைகொடுக்க காத்திருப்பார். இவருக்கு ஆயுதங்கள் வேறேதும் வேண்டாம்… முகம் முழுக்க மலர்ச்சியாய் முழுவதுமாய் அகமலர்ந்து பார்ப்பவர்களிடம் ஓர் மந்திர சிரிப்பைத் தருவார், அது ஒன்றே போதும் எல்லோரையும் வசியப்படுத்திவிடும். மேற்சொன்னவைகள் அனைத்தும் மேலதிகம் இல்லை, இவரிடம் பழகியவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

துபாயில் மீலாது நிகழ்வை தோழமைகளோடு உலக அறிஞர்களை அழைத்து பிரமாண்டமாக 2002, 2003, 2004ஆம் ஆண்டுகளில் நடத்திக் காட்டியவர். ரபிய்யுல் அவ்வல் மாதம் முழுவதும் நபிகளாரின் பெருமையை பல இடங்கள் தேடி சென்று பேசுவார், சிறு அறையில் அன்பர்கள் நடத்தும் மவ்லிது மஜ்லிசுகள், பயான் நிகழ்வுகள், பத்ரு சஹாபாக்கள் நிகழ்வுகள், புர்தா சரீப் மற்றும் திக்ரு நிகழ்வுகள் என எல்லாவற்றிலும் கலந்து கொண்டு எண்ண ஒன்றிப்புடன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் மகத்துவத்தை எடுத்துரைப்பார். கர்பலா தியாக வரலாற்றை தொடர்ந்து இரண்டு மணிநேரத்திற்கு மேல் தண்ணீர் கூட குடிக்காமல் பல ஆண்டுகள் பேசியவர் என்பது நான் வியந்த ஒன்று. எல்லோரும் உடல் சிலிர்த்து, உள்ளம் உருகி அமர்ந்திருப்பர்.

தினத்தந்தி ஞாயிறு மலரில் கிட்டத்தட 70க்கும் மேற்பட்ட வாரங்கள் “அறிவியல் அதிசயம்” தொடர் எழுதியவர் அது புத்தகமாகவும் வெளி வந்திருக்கிறது. அமீரக “கல்ஃப் டுடே” நாளிதழில் நோன்பு காலத்தில் முப்பது நாட்கள் மற்றும் பெருநாள் விடுமுறை வரை என முப்பத்து மூன்று தினங்கள் தொடர்ந்து ஐந்தாறு வருடங்கள் 2006 வரை இஸ்லாமிய ஆங்கில கட்டூரைகளை நம் பாரம்பரிய விசயங்களை உள்ளடக்கி எழுதி உலகுக்கு சொன்னவர். துறை சார்ந்த இதழியலில் அது சார்ந்தும் கட்டூரைகள் அவ்வப்போது எழுதுவபர், இவைகளில் இவரது செவ்வியும் அவ்வப்போது வெளிவரும்.

துபாயில் இயங்கிவரும் தோஷிபா எலெவேட்டர் நிறுவனத்தின் நிர்வாக மேலாளராகவும் அதன் மத்திய கிழக்கு நாடுகளின் பொறுப்புதாரியாகவும் இருந்து செம்மையாக நிர்வாகம் செய்து வருகிறார் முஹம்மது இக்பால். அவரின் தொடக்க காலத்திலிருந்தே வேலை தேடிவரும் தமிழ் பிள்ளைகளுக்கு உதவ ஆரம்பித்தவர் இன்று பலநூறு தமிழ் பிள்ளைகளுக்கு வேலை கொடுத்து பலரது வீட்டின் பொருளாதாரத்திற்கு மூலாதாரமாக இருக்கிறார். லிஃப்ட் அமைத்து கொடுப்பது இவரது நிறுவனம் சார்ந்த தொழில் என்றால் பலரது வாழ்வின் முன்னேற்றத்திற்கு லிஃப்ட் கொடுப்பது இவரது இயல்பு என்று தான் சொல்ல வேண்டும். இதெல்லாம் அவரின் குறிப்பிடத்தக்க சிறப்பியல்புகள்.

முஹம்மது இக்பால், ஆன்மீகம் வளர்த்த தஞ்சை மாவட்டம் வழுத்தூர் மண்ணில் உருவானவர், இம்மண்ணின் ஆன்மீக நாதர்களின் ஈர்ப்பும், தத்துவங்களும் அவருக்குள் தேடலை, வேட்கையை தீயாய் வளர்த்தெடுக்க அவ்வுணர்வுக்கு பதிலாயும், வருடலாயும் அந்த மேன்மக்களே தெய்வீககரங்கள் நீட்டி வாழ்வின் ஆனந்தங்களை அறிவுக்குள் அணிவித்தனர். அவர்களுள் இவர்தம் தந்தையார் மர்ஹூம் சூஃபி. வெள்ளம்ஜி. ஜமால் முஹம்மது அவர்கள் கைபிடித்து ஒப்புவித்த மறைந்த ஞானமேதை மேன்மைமிகு. செய்யது அலவி ஹஜ்ரத் அவர்கள் மிகக்குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் போன்றோரிடமிருந்து வாழ்வு எவ்வளவு அழகான ஒன்று என்பதை, வாழ்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதனை அதன் நுணுக்கங்களை காவிரிக்கரைத்திகழ் ஊரின் ஞானமணம் கமழ பெற்றுக்கொண்டவர் அதன் தனிச்சிறப்பை என்றும் பறைசாற்ற மறந்ததில்லை. 

தனது சொந்த மண்ணின் பெருமையை உலகுக்கு பறைசாற்றி நீண்டு செழித்து வளர்ந்து கிளைபரப்பி நிழல் கொடுக்கும் மகா மரமாகத்தான் முஹம்மது இக்பால் திகழ்கிறார். அம்மரத்தில் நிழலில் ஒதுங்குவோர், அதன் கனிகளை சுவைப்போர் அல்லது அதன் உயரத்தை தூர நின்று சிலாகித்து பேசுவோர் என எல்லோருக்கும் தன் வேர்கள் இறுகப்பற்றி இருக்கும் ஊரின் பெருமையையும் சேர்த்தே பேச வைத்திருப்பது இவரின் சிறப்பு.
முஹம்மது இக்பால் அவர்கள், தமக்கான இல்லத்தை பிற பகுதிகளில் ஏற்கனவே அமைத்திருந்தாலும், தனது சொந்த ஊரான வழுத்தூரில் அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு. இதற்கு மிக தூண்டு கோளாக இருந்த மேன்மைமிகு. சையத் அலவி ஹஜ்ரத் அவர்களை என்றென்றும் நினைவு கூறுவார். அவர்கள் தான் மிக வலியுறுத்திச் சொல்லி ஆரம்பிக்க வைத்தார்கள் என்பார்.
அவ்வினிய இல்லம் இன்று பால் காய்ச்சி நாளை புதுமனை புக இருக்கிறார்கள். அல்லாஹ்வும், நம் ஆருயிர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களும் மற்றும் அஹ்லுல் பைத்துக்களும் கனிந்து அருளட்டும். எங்கள் நெஞ்சில் நிறைந்து வாழும் சூஃபிகள் மென்மையான அஜ்ஜி அத்தா ஜமால் முஹம்மது, மிகக்கனவு கண்ட பெருமாட்டி தாவூத்தம்மா மாமி, எல்லாவேளை தொழுகையிலும் வாழ்வின் மேன்மைக்காக துஆ செய்த என் நன்னியம்மா ஆய்ஷாபீவியம்மா, பேரண்மையாளர் அப்துல் கரீம் அத்தா, நன்முறைப் பேணும் அப்துல் மஜீது சேட் அத்தா, மற்றும் அமைதியின் உருவாய் இருந்த முஹம்மது இக்பால் அவர்களின் நன்னியம்மா இன்னும் நம் நினைவை ஆளும் அத்தனை ஆன்மாக்களும் பூரித்து மனமகிழ்ந்து வாழ்த்துவார்கள்.

புதிய இல்லத்தில் குதூகலம் பூத்து குலுங்கட்டும்.ஆனந்தம் விளையாடட்டும். அதில் அவர்தம் அழகிய குடும்பம் சிறந்து வாழட்டும். அவரது துணைநலம் ஓங்கி சிறந்து இருக்கட்டும். பிள்ளைகள் மாஹிர், சாயிரா, ஜாஹிர் சாதித்து வாழ்வாங்கு வாழட்டும். அவர்களின் இனிய சந்ததியினர் இவரின் பெயர் மணக்க புகழாட்சி நடத்தட்டும். இவர்களால் வழுத்தூரின் புகழ் என்றும் ஓங்கட்டும்.
புதுப் பொழிவுடன் மலரும் புதிய வெள்ளம்ஜி இல்லத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
11-9-2016 8.34 pm

வீட்டின் புகைப்படங்களை அன்போடு அனுப்பித் தந்தவர் தம்பி மாஹிர். அவருக்கு என் இதய நன்றிகள்.


07 செப்டம்பர் 2016

எந்தச் சணத்திலாவது..!



திடீரென எந்தச் சணத்திலாவது
எதிர்பாராத ஒன்று நடந்துவிடுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
கொடுங்கேள்விகள் அழுத்துகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
குலுங்கிக் கதறி அழத்தோன்றுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
உன் நாளை எதுவாகுமென வினாதொடுக்கிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
ஏதும் இதுகாறும் செய்திட்டாயாவென்கிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
துணைமனம் தேடி நெஞ்சம் விம்முகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
பெரும் காரிருள் சூழ்ந்து போகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
மனம்பதைக்க பயமுறுத்திச் செல்கிறது
திடீரென எந்தச் சசணத்திலாவது
அதிர்ச்சிப் பேய் அறைந்துவிடுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
மரணத்தை கண்முன்னே காட்டிச்செல்கிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
சலனமற்று இருத்தி வைக்கப்படுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
மனம் மிகஒன்றி இதைமட்டும் தாவென வேண்டுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
இவையெல்லாம் மறந்து மனமாற்றம் பிறக்கிறது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

02 செப்டம்பர் 2016

வாழ ஆசைப்படும் மனிதர்கள்

அவன் "சுப்ஹானல்லாஹ்" சொன்னான்
எதிர்பாரா உதவி என்மூலம் கிடைத்ததும்,
நானும் கண்டேன் அவன் முகத்தில்!
(சுப்ஹானல்லாஹ் - இறைவன் மிகத்தூய்மையானவன், நமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு.)

***
தனிமைகூட துயரமல்ல
தனிமைப்படுத்தப்படுவதல்லாமல்!


***

எல்லோரும் அதிகம் வாழ
ஆசைப்படுகிறார்கள்

துயரமெல்லாம்
இதுவரை வாழ்ந்த வாழ்வில்
அவர்கள் என்றுமே வாழாதது தான்.

மேலும் அவர்கள்
மிகுந்த சிரமப்பட்டு
யோசிப்பதெல்லாமும் கூட
வாழ்க்கையில் வாழ்வதற்கு தான்.

ஆனாலும், வாழ்தல் என்பது தான்
பெரும்பாலும் நிகழ்வதில்லை.

***

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

தனிமை கொண்டாட்டத்தின் உட்சம்!

என் நண்பனான நானும்
என் எதிரியான நானும்
நானான நானும்
எப்போதும் இணைந்திருக்கையில்
நீங்களெல்லாம் நினைப்பது போல
எனக்கேது தனிமை..!

*

என் மிக நீண்ட உலகத்தை
என்னையன்றி யாரறிவார்.
எனக்கு நானே.. நான் மட்டுமே
நெருக்கமும்.. தொலைவும்,
எனக்கு நானே.. நான் மட்டுமே
விடியலும்.. இரவும்,
எனக்கு நானே.. நான் மட்டுமே
உறவும்.. பகையும்.


*
என் சந்தோச சாம்ராஜ்யத்தின்
வித வித பூக்களின் புன்னகையும்
பசுங்கிள்ளைகள் மற்றும் சிட்டுக்களின் கீச்சுக்களும்
பூபாள இசைகளும் ஓடைகளின் சலசலப்பும்
நீங்கள் அறிய வாய்ப்பில்லை தானே!


*
என் சூரிய சந்திரர்களை
நீங்கள் சந்தித்ததில்லை தானே
என் இல்லத்து விண்மீண்கள்
உங்கள் கண்களுக்கு
அகப்பட்டவை இல்லை தானே
பின் நீங்கள் எப்படி அறிவீர்கள்
நானே நிரம்பிய என் பரப்பில்
என்மையின் கூட்டம் மிக நிரம்பிக்கிடக்கிறது


*
இது வருத்தத்தின் பட்சமல்ல,
எனக்கு நானே முழுமையாக
கிடைத்திருக்கும் திருவிழா
என் தனிமை என்பது
கொண்டாட்டத்தின் உட்சம்!


*


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

மென்கண்ணமும் என் விரல்களும்


தொழுது கொண்டிருந்த
பாக்கிஸ்தானிய அப்பனின் பக்கத்தில்
அவன் விழுது ஒன்று அமர்ந்திருந்தது.
பசுமிளங்குருத்து
பள்ளிவாசலில் இருந்த போதும்
ஏதோ ஓர் உலகின் புள்ளியில்
மகிழ்ச்சியை அள்ளி.. அள்ளி
அவன் வாசலில் இட்டுத்
துள்ளிக்கொண்டிருந்தது.
மெய்மறந்து கண்டிருந்தச் சனத்தில்
என் இந்திய விரல்கள் தொட்டு
அப்பிக்கொண்டேன்
அவன் அழகிய கண்ணங்களின்
மென்மையை!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

01 செப்டம்பர் 2016

முளைத்த வெங்காயம்

J Mohaideen Batcha
1 September 2014 ·

பிறகென்ன!
*****************
நினைக்கலாம் நாம் எதையும்!
நடக்கட்டும் இங்கு எதுவும்!!
அனைத்துமே அதன் அசைவே!!!
*****
J Mohaideen Batcha
30 August 2013 · Dubai
முட்கள் நிறைந்த பாதைகளில்
பயணிக்கிறோம் என்று தெரிந்தே
நாம் பயணம் தொடர்கிறோம்.
சிக்கல் நிறைந்த பொழுதுகள் என அறிந்தும்
நாம் விடியல்கள் தேடி விரைகிறோம்

வாழ்க்கை என்பதை வாழத்தான்
பறவைகளுக்காய் காத்திருக்கும் வேடந்தாங்களாய்
வேட்கை அடங்காமல் காத்திருக்கிறோம்.

J Mohaideen Batcha
30 August 2013 · Dubai ·

உற்சாகம் எப்போதும் உள்ளத்தின் உணவானால்
உற்சவம் நிகழுத்தும் வெற்றிகள் அணிவகுத்து.

J Mohaideen Batcha
30 August 2014 ·

வலிய போய்
வழிய... வழிய...
செய்யப்படும் அன்புகள்
பெரும்பாலும்
வாசல்கதவுகள் அடைப்பட்டிருப்பதால்
வந்தவழியே திரும்புகின்றன!
கையிலிருக்கும் ரோஜா
இதழ்கள் உதிர்ந்து வாடுகிறது.

J Mohaideen Batcha
28 August at 22:09 ·

மலிவு விலையில் கிடைக்கிறதே என்று
மிடில்கிளாஸ் மாதவன்கள்
வாங்கி சேமிக்கும்வெங்காயம் கூட
சமைக்கமுடியாமல் முளைத்துவிடுகிறது!

J Mohaideen Batcha
28 August 2013 ·

காலம் எப்படி அழகானதோ..அரிதானதோ.. அது போலவே
காலம் கடியதும் கொடியதும் கூட.. !
அது தன்மீது தொடுக்கப்பட்ட
எந்த கேள்விகனையையும் மறந்தும் விட்டது இல்லை,
தருணம் பார்த்து பதில் தந்தே தீரும்.

J Mohaideen Batcha
23 August 2013 · Dubai ·

அடுத்த வினாடியின்
விடை தெரியாமல் தான் துடிக்கிறது
நம் நாடி!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

23 ஆகஸ்ட் 2016

பள்ளி ஊர்தி ஓட்டுனர்கள்!

பள்ளிக்கூட ஊர்தி என்பது மிகவும் பொறுமையும், நிதானமும் கொண்டு கையாளப்படவேண்டிய ஒன்று, ஊர்தி ஓட்டுனர்களை நம்பியே தங்களின் எதிர்காலமாகவும், கனவாகவும், நம்பிக்கையாகவும் இருக்கும் பிரிய பிள்ளைச்செல்வங்களை பெற்றவர்கள் ஒப்படைக்கின்றனர். சிறுபிள்ளைகள் உலகம் தெரியாதவர்கள், பலகீனமானவர்கள்.. அவர்களை பரிவோடு கையாள்வது மிக முக்கியம்.
ஓட்டுனர் நண்பர்களே..வெளிநாடுகளில் இருப்பது போன்று மிகக்கடுமையான சட்டதிட்டங்கள், உயர் வசதி கொண்ட கண்காணிப்பு கருவிகள் எதுவும் நமது இந்தியாவில் இல்லை மாறாக உங்களை நம்பியே பிள்ளைகளை ஒப்படைக்கின்றனர். நீங்கள் மிகப்பொறுப்புணர்வோடு செயல்படுவது மிக அவசியம்.
இதெல்லாம் குறித்து எல்லா பள்ளி நிர்வாகமும் மிக கவனமுடன் செயல்பட வேண்டும், தகுதியான ஓட்டுனரை பணியில் அமர்த்தி அவரையும் கண்காணிக்க வேண்டும். ஊர்தியையும் சோதனை செய்து பழுதி நீக்கி பிள்ளைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற பாதுகாப்பு இல்லாமல் நம் நாட்டில் எத்தனையோ துயர நிகழ்வுகள் நடந்திருக்கிறது. அவை இனி நடக்கக்கூடாது அதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகளை எடுத்து எந்த துயரமும் நடக்காமல் சிறப்பாக செயல்படுத்தி நன்மதிப்பை பெறுவது எல்லா பள்ளிகளின் மேலாண்மையாளர்களின் கடமையாகும்.
ஊர்திகளில் செல்லும் பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல, தெருவில் செல்லும் பிள்ளைகள், பெண்கள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் என யாருக்கும் பாதிப்பு வராத அளவுக்கு ஊர்தி ஓட்டுனர்கள் பொறுமையுடனும் கடமை உணர்வுடனும் செயல்பட வேண்டும், இன்று எங்கள் வழுத்தூரில் மாலை நடந்த நிகழ்வில் LKG படிக்கும் ஒரு மழலைக்குழந்தை கடையில் மிட்டாய் வாங்கிவிட்டு தெருவில் செல்லும் வேளை ஏதிர்பாராது வந்த பள்ளி ஊர்தி முனையில் திருப்பும் போது சற்றே கவனம் தவற பரிதாபமாக அந்தப்பிள்ளை அதே இடத்தில் பலியாகி இருப்பது நெஞ்சை கனக்க வைக்கிறது. அந்த பிள்ளையின் தாயார் பிள்ளை இறந்திருப்பது அறியாது தஞ்சையில் மருத்துவரிடம் சென்று காப்பாற்றும்படி கதறி அழுதாராம், கேவையில் இருக்கும் தகப்பனுக்கு இடிபோன்ற இந்த செய்தி சொல்லப்பட உலகமே இருண்டு ஓடி வருகிறாராம். இனி ஒரு நிகழ்வு இது போல யாருக்கும் வேண்டாம் நண்பர்களே.. பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுங்கள். பிள்ளைகள் பாவம் அவர்கள் மிக பிஞ்சு போன்றவர்கள். அவர்களது உயிரோடு யாரும் விளையாட வேண்டாம்.
பள்ளி நடத்துவர்கள், பொறுப்புதாரிகள், ஊர்தி ஓட்டுனர்கள் என எல்லோரும் பொறுப்புடன் செயல்படுங்கள். பெற்றோர்களே நீங்களும் ஊர்தியை, ஓட்டுனரை கவனியுங்கள் ஏதேனும் ஐயம் இருந்தால் உடனே புகார் செய்யுங்கள். நம் பிள்ளைகள் நமக்கு முக்கியம். அவர்களுக்காகத்தான் நாம், அவர்கள் தான் நம் கனவும் நினைவும். அவர்கள் பாதுகாப்பு என்றும் உறுதி செய்யப்பட வேண்டும். இந்தியா போன்ற நமது தேசத்தில் பள்ளி போக்கு வரத்து குறித்து நம் எல்லோருக்கும் விழிப்புணர்வு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆகையால் நாம் அனைவரும் அவரவர் பொறுப்புணர்ந்து விழிப்போடு இருப்போம். பிள்ளைச் செல்வங்களைக் காப்போம்.
-ஜா.முஹையத்தீன் பாட்ஷா
22-8-2016 - 10.15pm


22 ஆகஸ்ட் 2016

முகம் சொல்லும்



20 ஆகஸ்ட் 2016

ராஜிவ் பிறந்தநாள் பதிவு - 20-8-2016

ராஜிவ், அவர் புன்னகை ஒன்றே போதும் எல்லோரும் மயங்கிட, ராஜிவ்-ன் புன்னகைக்கு அப்படி ஓர் கிறக்கம் எப்போதும் இருக்கும். என்பதுகளில் அவர் புகழ் உச்சியில் இருந்தது, அவர் இந்தியாவின் இளைய நம்பிக்கையாக துளிர்த்திருந்தார். அவரது ஆங்கிலம் மிகச் சிலாகிக்கபட்ட ஒன்று, ஆங்கிலம் கற்கவும், அவரது பாணியை உள்வாங்கிக்கொள்ளவும் என் வீட்டில் கூட இரவு நேரங்களில் அந்தக் காலத்தின் பானாசோனிக் டேப் ரிகார்டர் கேசட்டை எண்ணிறந்த முறைகள் சுழற்றி, சுழற்றி என் உறவுமுறை மாமா ஒருவருகாக ஒலிக்கவிட்டிருக்கிறது. அப்போது தான் எனக்கும் அவரது ஆங்கிலப்பேச்சு அறிமுகம். மிக இளைய பிரதமராக ராஜிவ் அரசாட்சி செய்த காலங்களில் இந்தியாவின் முன்னேற்றத்தின் பல கதவுகள் திறந்துவைக்கப்பட்டது, கோட் சூட் போட்டுக்கொண்டு ஐரோப்பியர்களோடு கைகுலுக்கும் ராஜுவை தேசமே மனம் நெகிழ்ந்து வாழ்த்தி ரசிக்கும், அவர் ஐரோப்பியர்கள் மத்தியில் அவர்களுள் ஒருவராகவே தெரிவார் அதனாலேயே மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுடனான இணக்கம் அவரால் அதிகம் பேணப்பட்டது, இந்திய வெளியுறவு வலுப்பெற்றிருந்தது. இன்றைய இந்தியாவுக்கான புதிய பொருளாதாரம் குறித்து அவர் கண்ட கனவுகள் நிறைய, அடுத்த தேர்தலில் அவரின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு இருந்த செய்தியறிந்து ரிசர்வ் பேங்கிலிருந்த மன்மோகன் சிங்கைக் கூட நிதிமந்திரியாக ஆக்கி அதை மெய்பிக்க திட்டமிட்டிருந்தார், ஆனால் அவரை அதற்குள் தீவிரவாதம் பலி தீர்த்துக்கொண்டது. இன்றைய இந்தியா கண்டிருக்கும் நவீன தொலை தொடர்புத்துறையின் அதீத வளர்ச்சிக்கும் ராஜிவ் இட்ட திட்டங்கள் தான் முலாதாரப்புள்ளிகள் என்றால் மிகையில்லை. இவர் கொல்லப்பட்ட போது 'பால் வடியும் பவளத்திரள் ராஜிவே.." என்று பதிமூன்று வயது சிறுவன் நான் கவிதை எழுதி அழுதேன். அப்படி சிறியவர் பெரியவர் என்றில்லாது எல்லோரிடத்திலும் அவர் ஆழமாக ஊடுருவி இருந்தார். ராஜிவ் மகத்தான தலைவன். செயலாற்றல் மிகுந்த பிரதமர். இதிலிருந்து இன்றைய பிரதமர் குறித்து ஏதும் சொல்லத்தேவையில்லை என்பதும் இவர் எப்படி இருக்கிறார் என்பதும் வெள்ளிடைமலை.பவர் ஸ்டாரின் பில்டப்புக்கள் வெற்று வேட்டு என்பதை தமிழுலகம் அறிந்தது போல இந்தியாவும் வெகுவிரைவில் கண்டு கொள்ளும்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

18 ஆகஸ்ட் 2016

எங்கள் நாய்

(பிஸ்கட்) ரொட்டி போடப் போட 
தொடர்ந்து வாலாட்டிக்கொண்டே
திண்று தாள் பணியும்
காலைச்சுற்றி இன்பம் கூட்டும்
முகர்ந்து முக்கி முணங்கும்
பின் பாசத்தோடு நக்கும்
வேற்று நாய் எட்டிப்பார்த்தால் கூட
ஓடிப்போய் குரைத்துவிட்டு பின்
மீண்டும் கால்சுற்றி
முக்கி முணங்கி நக்கும்
நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டே
சலாமெல்லாம் கூட வைக்கும்.
ஆனாலும் கூட,
மரபைப் புதைக்கும்
அதிகாரத் திமிர் ஜெயாவின்
பதவி ரொட்டிக்காய்...
தன்னிலை மறந்து
குறுகிச்சூன்யக்கேடாய்
வீற்று பிணவீச்சமெடுக்கும்
உலகம் காணா உதவாக்கரை
இப்போதைய சப்பைநாயகன் போல
மானெங்கெட்டெல்லாம்
பிழைப்பு நடத்தியதில்லை.
எங்கள் நாய்.
-ஜா.முஹையத்தீன் பாட்ஷா

16 ஆகஸ்ட் 2016

சங்கைநபி இசைக்கோர்வைக்கு எழுத்தாளர் அபூஹாசிமா வாழ்த்து

மனசெல்லாம் நபிக்காதல் கொண்டவரும், ஓப்பற்ற கவிஞரும் சிறந்த எழுத்தாளரும், நமது முற்றம் மாத இதழ் ஆசிரியரும்,சமூக செயற்பாட்டாளருமான அருமை அண்ணன் Abu Haashimaஅவர்கள் எனது ஆக்கத்தில், பாடகர் அபுல்பரக்காத்தின் குரலில் தயாரான "சங்கை நபி" இசைக்கொர்வை குறித்து எழுதி மனம் நெகிழச்செய்திருக்கிறார்கள். அன்னாருக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள் உரித்தாகுக!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
********

அன்புத் தம்பி முகைதீன் பாட்சா...
தமிழ் ஆர்வலர்.
ஆன்மீக நேயர்.
ஞானத்தின் காதலர்.
அவர் ...
சில அற்புதமான இஸ்லாமிய பாடல்களை இயற்றி
பாடகர் அபுல்பரக்காத்தின் இனிய குரலில்
இசை வடிவாக கொண்டு வந்திருக்கிறார்.
பாடல்களில்
ஞானமும்
முஹம்மது நபிகளார் மீதான
காதலும் கசிந்து உருகி
கேட்கும் நம் நெஞ்சை நிறைக்கின்றன.
மொத்தம் ஆறு பாடல்கள்.
ஆறையும் கேட்டு விட்டேன்.
ஆற அமரத்தான் கேட்கவில்லை.
கொஞ்சம் ஓய்வில்லாத சூழ்நிலை.
தம்பியின் கருத்தாழமிக்க வரிகளை
கொஞ்சம் கவனமாக கேட்டு ரசித்து உள் வாங்க வேண்டும்.
பாடல்கள் இனிமையாக இருக்கின்றன.
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன.
இன்ஷா அல்லாஹ்
மீண்டும் ஓரிரு முறை கேட்டு மகிழ்ந்து
தம்பி முகைதீன் பாஷாவின் ஞான வரிகளின்
ஆளுமை குறித்து ...
இன்னும் சொல்வேன்.
வாழ்த்துக்கள்
பாஷா பாய்.


22 ஜூலை 2016

அன்பின் வள்ளல் வழுத்தூர் லப்பாத்த. ராஜ்முஹம்மது மறைந்தார்

காலம் பூராவும் மலேசியாவில் இருந்து பிறகு இப்போது ஏழெட்டு ஆண்டாக ஊரில் தங்கியும் சும்மா இருக்கக்கூடாதென பள்ளிக்கூடத்திற்கு எதிரில் பிள்ளைகளுக்கான சிறிய மிட்டாய்கடை நடத்தி இன்றுவரை உழைத்த உழைப்பாளி, மிகத்துடிப்பான முஸ்லிம் லீக்காரர், எப்போதும் இன்முகத்தோடு மிக வயதில் இளையவராக யார் இருந்தாலும் மரியாதையும் கண்ணியமும் கொடுத்து பேசும் அழகர், இறைத்தூதர் நாயகம் ஸல்லால்லாஹு அலைஹிவசல்லம், இறைநேசர்கள் என்றால் அவ்வளவு நேசம், திக்ரு மஜ்லிஸ், பயான் மஜ்லிஸ் என எல்லாவற்றிற்கும் முந்தியடித்து முதலில் ஆஜராகும் ஆன்மீகவாதி, எங்கள் ஊருக்கு பரக்கத்தாக எப்போதும் இறையருளை எல்லோருக்கும் யாசிப்பவராக நடமாடிக்கொண்டிருந்த மதிப்புமிகு லப்பாத்த. ராஜ்முஹம்மது மாமு அவர்கள் இன்று மறைந்த செய்தி வந்தது, உள்ளபடியே மனம் வாடிப்போனேன்.
வழுத்தூரில் முன்பு இருந்த பெரியவர்களில் எல்லோரும் பெரும்பாலும் முஸ்லிம் லீகர்களே.. அதில் துடிப்புமிக்கவர் மறைந்த ராஜ்முஹம்மது மாமு, எங்கு முஸ்லிம் லீக் மாநாடு, கூட்டம் என்றாலும் அலாதி பிரியத்துடன் முன்பே வாகனம் முதற்கொண்டு முன்பதிவு செய்துகொள்வார். தன்னுடைய இறப்புக்கு கூட நெருங்கிய நண்பர்களிடம் நான் இறந்தால் என் உடம்பில் முஸ்லிம் லீக்கின் பிறைகொடியை போர்த்துங்கள் என்று சொல்லி இருக்கிறாராம்.
அவரோடு பழகிய நாட்கள், பேசிய நேரஙக்ள் என எல்லாம் மனதில் விரிந்தன. அத்தனை அன்பை கொட்டிப்பேசுவார், என் மீது அத்தனை அன்பு அவருக்கு, ஊர் வரும்போதெல்லாம் இனிக்கப்பேசுவார். நலம் விசாரித்து மகிழ்வார், நமது பாரம்பரிய விழுமியங்களை பாதுகாப்பது குறித்து அத்தனை ஆதங்கமும், அவாவும் இருக்கும், அது பாழ்படும் நிலைகளை குறித்து வருத்தத்துடன் பகிர்ந்துகொள்வார். தினமும் எங்கள் வீட்டிற்கு அருகில் ஓடும் வாய்க்காலுக்கு குளிக்க வரும் அவரை பார்க்கலாம், பழங்கால கதைகள் பேசி அனுபவங்கள் பலவற்றை பேசிக்குளிப்போம். இன்று அவர் மறைந்துவிட்டார், இனி ஊர்போனால் அவரின் நடமாட்டத்தை பார்க்கமுடியாது. மிகச்சிறப்பான மனிதரை இழந்துவிட்டோம்.
ராஜ்முஹம்மது மாமு அவர்களின் இழப்பு வழுத்தூரின் மீதமிருந்த முத்துக்களில் ஒரு முத்தை இழந்தது போலத்தான். அவர் மிக நேசித்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம், ஆஹ்லுல் பைத்துக்கள், இறை நேசப்பெருந்தகைகள் ஆசிகள் சூழ இறைவன் அவரது தூய ஆன்மாவை என்றும் நித்திய சாந்தியில் நிலைக்கச்செய்வானாக, ஆமீன்.
இந்த புகைப்படம் பெரியப்பள்ளிவாசலில் ரபிய்யுல் அவ்வல் ஹந்தூரி நடைபெற்ற காலைப்பொழுதில் 2014-ல் எடுத்தது.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

17 ஜூலை 2016

முகநூல் பதிவுகள் -ஜூலை 17

மனதிற்கு உகந்தவர்கள் என்றும் நலமோடிருக்க நாம் நம்மை அறியாமலேயே பிரார்தித்துக் கொண்டிருக்கிறோம். அது தான் அன்பின் ஆளுமை!

***
எல்லாம் மனநிலையை சார்ந்ததாக இருந்தாலும் மனநிலையை நாம் பெரும்பாலும் நல்லதாய் மட்டும் சொல்லி.. சொல்லி.. கட்டுக்குள் வைக்க தவறிவிடுவது தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது

***

திருமண தினங்கள் வந்து செல்கிறது
திருமணமான மனங்கள் தான் ஒன்று சேர வழியில்லை
வெளிநாட்டு பிளைப்பு.. !
வெளிநாட்டுக்கு போனிங்கள ஒங்களுக்கு வெணும்.. அப்படீன்னு அங்கெருந்து நெனக்காதீங்க... பஜ்ஜி சொல்லிடும்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

ஈகைத்திருநாள் - 2015 ( பதிவுக்காய்)

இனிதாய் கடந்தது ஈத்!
இன்றைய ஈத் அமீரகம் அஜ்மானில் குடும்பத்தோடு மிகச்சிறப்பாக சென்றது, வழக்கம் போல் நேற்றைய இரவிலிருந்தே ஏற்பாடுகள் செய்து உறங்கச்செல்லும் போது மணி இரண்டரையை தொட்டிருந்தது
பிறகு மனைவி எழுப்புகையில் முடியாமல் எழுந்தது நாலே முக்கால். குழந்தைகளும் மிகத்தாமதமாக தூங்கியதால் அந்த நாலே முக்காலுக்கு எழ மறுக்க கொஞ்சம் அதிரடியாய் தூக்கிச்சென்று ஷவரில் கொண்டு நிறுத்த களம் களைகட்டியது. பிறகு எப்போதும் போல ஊரில் இளமையில் என் தாய் தந்தையர்புத்தாடை அணியத்தந்து வாழ்த்திடும் நிகழ்வுகள் மனதில் நிழலாட புத்தாடை அணிந்து நபிகள் நாயகத்தின் வழிமுறைப்படி எல்லோரும் ஒற்றைப்படையில் பேரித்தப்பழங்கள் சாப்பிட்டு அந்த ஐந்தரைக்கு அஜ்மானின் ஷேக் ஜைத் பள்ளிக்கு சென்றடைந்தாலும் அதற்குள் பள்ளி நிறைந்திருந்தது. உள்பள்ளி, மேல்தளம் என எங்கும் செல்ல முடியாததாகி வெளியில் நீண்டு விரித்திருந்த கம்ளங்களில் அமர்ந்தோம். (ஊராக இருந்தால் பெருநாள் தொழுகை காலை 9மணி பத்து மணி என்றிருக்கும்)
இந்த ஈத் பெருநாளின் காலை சென்ற ஆண்டு ஈத் பெருநாட்களைப்போல வெம்மையாக இல்லாமல், வியர்த்துக்கொட்டாமல் கடுங்கோடையாக இருந்த போதிலும் அதிகாலையில் எங்களை இரம்மியமான அருங்காற்றே வருடி இன்னும் இன்பத்தை கொட்டிச்சென்றது.
பிறகு தொழுகை முடித்து வாழ்த்துக்கள் பறிமாறி வீட்டிட்ற்கு வந்து காலை உணவை மகிழ்வோடு உண்டு மீண்டும் பிரியாணி தயாரிப்புக்களத்தில் குதித்தோம்.. உறவினர், நண்பர்கள் வாழ்த்து என உற்ச்சாகமாய் கொண்டாட்டம் தந்தது இன்றைய ஈத்.
ஊரில்பெருநாளை நாளை கொண்டாட இருக்கும் அனைத்து அன்பர்களுக்கும் எனது உளங்கனிந்த ஈத் முபாரக். நமது மகிழ்வும் உற்ச்சாகமும் இன்னும் இரட்டிப்பாகட்டும்.. நமது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் இன்னும் பண்மடங்காகட்டும்.
நாட்டில் எல்லா சமூகமும் இணக்கத்தோடு இணைந்து சிறப்பான பெருவாழ்வை நன்றே வாழ இப்பெருநாள் எல்லோருக்கும் புரிந்துணர்வை நல்கட்டும். மீண்டும் என் வாழ்த்துக்கள்.
வஸ்ஸலாம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

16 ஜூலை 2016

திருமணநாள் நினைவு - ஜூலை 16



ஜூலை மாதம் வந்தாலே ஜோடி சேர்ந்த நினைவு தான்... அப்படியே ரொமேன்டிக்கில் மூழ்கிவிடுவேன், பழைய நினைவுகளை நினைத்தாவது தேற்றிக்கொள்வோமென்று தான். அவற்றை நினைத்தாலே அப்படி ஒரு சுகம்.
என் அழகிய ராட்சசி இருக்கிறாளே அவள் எனக்கு கிடைத்த வரம். நேற்று பார்த்த சுல்தான் திரைப்படத்தில் ஒரு காட்சியில் சல்மான்கான் சொல்லுவார்.. "மனைவிகளெல்லாம் பிறவி சண்டைக்காரிகள்" என்று ஆனால் அந்த சண்டைக்காரிகள் இல்லாத அல்லது சண்டைகள் இல்லாத வாழ்வு சுவாரஸ்யமாய் இருக்காது, அது தான் ரசம் கூட்டுகிறது, அது தான் திடீரென தூரமாக்கி.. பின் இடைவெளியே இல்லாமலும் ஆக்கி சுவர்க்க சுகம் கொண்டுவரும். அதே படத்தில் இன்னொரு அழகான வசனம் கூட சொல்வார் கணவன் மனைவியின் அன்பென்பது "எக்ஸ்பெயரி டேட் இல்லாத லவ் அதாவது முடிவுறாத அன்பு" என்று அந்த அன்பில் தான் பிணைக்கப்பட்டு உனக்கு நான்.. எனக்கு நீ.. மொத்தத்தில் "நமக்கு நாமே" என்று நீள்கிறது எங்கள் வாழ்க்கைப்பயணம். மேலும் எங்களின் பெற்றோர், குடும்பத்து பெரியவர்கள் மற்றும் நல்ல ஆன்மாக்களின் தூய வாழ்த்துக்கள் மற்றும் துஆக்கள் இவற்றோடு வளங்கள் சேர, பலங்கள் சேர செவ்வனே நல்லற வாகனம் பயணம் தொடர்கிறது. பயணத்துணைக்காய் வலது இடதென நளீர் மற்றும் ஜைனப் என்ற இருமலர்களை இறைவன் தனது அன்பின் கரங்களால் அவனே அளித்து இன்னும் இன்பம் கூட்டியிருக்கிறான்.

காலம் தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது, ஏதோ நேற்று நடந்தது போல் இருக்கிறது அந்த இன்ப நிகழ்வு, அதற்குள் ஒன்பது ஆண்டு நிறைவுற்று பத்தாவது ஆண்டில் எங்கள் இல்லறம். இன்று எங்கள் திருமணநாள்.
எல்லோரும் சிறந்து வாழ்வோம்.

(இத்தனை வருடங்களில் இது தான் நான் இடும் முதல்
திருமண நாள் பதிவு)

ஜா.முஹையத்தீன் பாட்ஷா

மனிதகுல விரோதிகள்

Abu Haashima அண்ணனின் ஸ்டேடஸ்-ம், நான் இட்ட பின்னூட்டமும்
முஹம்மது என்று பெயருள்ள ஒருவன் ப்ரான்சில் தாக்குதல் நடத்தி பத்து குழந்தைகள் உட்பட ஏராளமானவர்களை கொன்றிருக்கிறான்.
இன்றைய பத்திரிகைகளில் " ஐஎஸ் தீவிரவாதி முஹம்மது என்பவன் ...."என்று செய்தி பிரசுரித்திருப்பதை படிக்கும்போதுஉண்மையிலேயே உண்மையிலேயே மனம் கொந்தளித்து கொந்தளித்து
வேதனித்துக் கொண்டிருக்கிறது.
முஹம்மது என்ற பெயர் வைத்துள்ள ஒரு உண்மை முஸ்லிம் இதுபோன்ற நீசத்தனமான காரியத்தை செய்திருக்க மாட்டான். அப்படிச் செய்தால் அவன் முஸ்லிமாகவே இருக்க மாட்டான். அவன் யாரென்பது நமக்குத் தெரியாது. அவன் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.
அல்லாஹ் அவனை ...
அவனைச் சார்ந்தவர்களை மண்ணோடு மண்ணாக
நாசமடையச் செய்வானாக.
முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் காலத்திலும்
பல போர்கள் நடந்தன.
போருக்கு முன்னர் நபிகளார் விதித்த நிபந்தனைகள் ....
* போரில் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள்
கொல்லப்படக்கூடாது.
* பெண்களுக்கு எந்த இழிவும் ஏற்படக்கூடாது.
* விளை நிலங்களை அழிக்கக் கூடாது.
* கால்நடைகளை கொல்லக் கூடாது.
இப்படித்தான் அவர்கள் காலத்திலும்
அவர்களின் வபாத்துக்குப் பிறகு நடந்த போர்களிலும் போரின் விதிகள் கடைபிடிக்கப்பட்டன.
ஆனால் ...முஹம்மது என்ற பெயரை வைத்துக் கொண்டு
முஹம்மது நபி ( ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைக்கு மாற்றமாக அப்பாவிகளை படுகொலை செய்பவன் எப்படி முஸ்லிமாக இருப்பான் ?
நிச்சயம் அவன் முஸ்லிமில்லை.மனிதனும் இல்லை.
இப்படிப்பட்ட சண்டாளர்கள் மனித குலத்தின் விரோதிகள்.இவர்களை அடையாளம் இல்லாமல் அழிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் !
குறிப்பாக ...
புனிதமிக்க நபிகளாரின் பெயரை வைத்துக்கொண்டு
பாவச் செயல் புரியும் இவனைப் போன்றவர்களை மன்னிக்கவே கூடாது.
************
ஆமாம் நான் வழிமொழிகிறேன், இப்போது ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான இஸ்லாமியர்கள்
முன்பும் குடியுறிமை பெற்றிருக்கிறார்கள், இப்போதும் குடியேறிக்கொண்டிருக்கிறார்கள். இங்கு நான் அறிந்த வகையில் 15 ஆண்டுகளின் அனுபவத்தில் எத்தனையோ பேர் ஜெர்மனில் நாட்டில் எனது குடியுரிமை, கனடாவில் எனது குடியுரிமை, பிரிட்டனில் எனது குடியுரிமை என இருக்கிறார்கள். எல்லாம் பலஸ்தீன், ஈராக், சிரியா மற்றும் அரபிய, ஆப்பிரிக்க நாட்டினர். இது போன்ற ஈனச்செயல்கள் அந்த நாட்டினரை இஸ்லாமியர்கள் குறித்த வேறு பார்வைக்கு கொண்டு சென்றுவிடும். ஏர்கனவே ட்ரம்ப் போன்றவர்கள் குதித்துக்கொண்டிருக்கிறார்கள், சென்றமுறை பிரான்ஸில் ஏற்பட்ட ஒரு குண்டுவெடிப்பில் ப்ரான்ஸே ஸ்தம்பித்தது, இஸ்லாமியர்களுக்கு கெடுபிடி அதிகமானது, இனி அகதிகள் வேண்டாம் என எல்லோரும் போராட்டம் நடத்தினர்..இதற்கிடையில் இப்படி நட்டந்தால் ஒன்றும் சொல்வதற்கில்லை.
இந்த ஐஸ் காரனை பற்றிய மர்மங்கள் விலகவே மாட்டீங்குது... ரெண்டு நாட்டையே அழிக்கிறான், கொடூரமா எல்லா எழவையும் செய்றான், கேட்டா இஸ்லாமிய கலிபா ஆட்சியை உருவாக்க போறானாம், இதில் எள்ளவும் உண்மையில்லை, எல்லா புனிதர்களின் அடக்கத்தலங்களை இடித்து, பெண்களை கற்பழித்து சிறுபான்மை எஜீதிகளை கூறு கூறாக வெட்டி, சந்தையில் வைத்து விற்று மலை முகட்டில் ஓட்டிச்சென்று லட்சக்கணக்கான எஜீதி இன மக்களை (அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை, தென் இந்திய பாரம்பரிய ஹிந்துக்கள் போன்றவர்கள், இவர்கள் முருகனை வணங்குவது போல அவர்கள் மயிலை வணங்குபவர்கள்) ஓட்டிச்சென்று வெயிலில் பட்டினி போட்டு சாகடித்து, பெரிய மார்பகம் இருக்கும் இளம்பெண்களை ஆசை தீர கற்பழித்து பின்பு அறுத்து குழந்தைகளை கணக்கின்றி கொன்று, சிரியாவில் இதுவரை 7லட்சம் பேரை இப்படி கொலை செய்து,
ஈராக்கில் கணக்கின்றி கொன்று........
இதெல்லாம் என்ன வென்றே சொல்ல முடியல.. யாரால் நடக்கிறது....???????????????
இவர்கள் முஸ்லிமாக இருந்தாலும்... யாராக இருந்தாலும்,
அல்லது வேறு யாரோவின் சூழ்ச்சியாக இருந்தாலும்
மனித குல விரோதிகள்..
மனித குல விரோதிகள்..
மனித குல விரோதிகள்.. அவ்வளவு தான்.

-ஜா.முஹையத்தீன் பாட்ஷா

14 ஜூலை 2016

முலைப்பால் கவிதையும், அலுவலக நினைவும்..



கவிஞர் ஈரோடு கதிர் அவர்கள் இந்த கவிதையை பகிர்ந்திருந்தார், அதை படித்ததும் எனக்கு என் அலுவலகத்தில் நடந்தது நினைவுக்கு வந்தது...
நான் பணிபுரியும் பணிமனை பல பன்னாட்டு கம்பெணிகள் ஒருங்கே இருக்கும் ஒரிடம், இங்கே ஆடுத்த ஹாலில் எனது நிறுவனம் அல்லாத வேரொன்றில் வேலை செய்யும் ஃபிலிப்பினோ பெண் சென்ற மாதம் குழந்தை பெற்றுக்கொண்டார் அதனால் நமக்கொன்றும் பிரச்சனை இல்லை நன்றாக இருக்கட்டும் மப்ரூக் சொல்வோம், பிறகு 3வது நாளே வேலைக்கு வந்துவிட்டார். அவர் மூன்று நாள் கழித்து வந்ததையே மிக ஆச்சர்யமாக மூன்று நாள் தானே ஆகிறது எப்படி அதற்குள் ஆபிஸ் வேலைக்கு வந்துவிட்டாய் என்றோம் பிள்ளையை பேபி கேரில் விட்டுவிட்டேன் என்றாள் அதுவே கோபமாக இருந்தது. பிறகு வந்தது முதல் இரண்டு மணிக்கொரு முறை வாஸ்ரூமிற்கு பையில் ஒரு சிறு பம்ப் மிசின் போல ஒன்றை எடுத்துச்சென்று.. சென்று.. வந்துகொண்டிருந்தார், என்னவென்று கேட்க பால் சுரந்து முலைக்கட்டிவிடுமல்லவா அதை தவிர்க்க அடிக்கடி இந்த பால் கரக்கும் மிசின் மூலம் எடுத்து வெளியே ஊற்றிவிட்டு வருகிறேன் என்றாள். மிக உறைந்து போனேன்.. உள்ளம் உடைந்து போனேன்.. ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்த பரிதாபம் தான் இன்றைக்கு பிறக்கும் பல்லாயிரக்கணக்கான புதிய பிள்ளைகளின் நிலைமை.
தாயின் அரவணைப்பு இன்றி பிறந்த உடனேயே இப்படி பேபிகேரில் சித்ரவதைக்கு ஆளாகும் பிள்ளைகளை நினைத்தால் வார்த்தைகள் வற்றிவிடுகிறது, இந்த நூற்றாண்டில் இது பொன்ற பொற்றோருக்கு பிள்ளைகளாய் பிறந்ததற்காய் பாவம் அந்த பிள்ளைகளை துர்ரதிஷ்டசாலிகள் என்று தான் சொல்லவேண்டும்.
கொடும் கார்பரேட் உலகம் இன்றைய மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றி இயற்கைக்கு முரணாக ஆக்கி அடிமைபடுத்தி வைத்திருப்பதற்கு இதைவிட ஒரு சான்று பிரிதில்லை. இது ஏதோ அந்த பிலிப்பினோ போன்ற வெளிநாட்டவர் மட்டும் செய்வதாய் எண்ண வேண்டாம் நிறைய நம்மவர்களும் அந்த நடைமுறைக்கு மாறிவிட்டனர் என்பதே நிஜம்.
- முஹையத்தீன் பாட்ஷா

12 ஜூலை 2016

யானை கொலை


எங்கே தான் போவோம்..
எங்களுக்கான இடங்களை
நீங்கள் திண்று செரித்த பின்...
எப்படி பசி போக்குவோம்
எங்கு போனால் எங்கள் தாகம் தீரும்
அட்டகாசம் செய்கிறோமாம்
பயிரை அழிக்கிறோமாம்
நாங்களோ சுயம் இழந்து
வாழ்வாதாரம் தேடுகிறோம்,
நீங்களோ துப்பாக்கி ஏந்தி
கொல்ல வருகிறீர்!
ஊரே திரண்டு
தம்பட்டமடித்து துரத்துகிறீர்
தீ எறிந்து சுடுகிறீர்
ஓடினால்....
நாங்கள் அறிந்திராத
சாலைகள் குறுக்கிடுகிறது
வாகனங்கள் மோதி
அழிக்க எத்தனிக்கிறது!
முன்பிருந்த நீர்நிலைகளை
தும்பிக்கை கொண்டு தேடுகிறோம்
நாங்கள் அமைத்திருந்த
வழிப்பாதைகளை தேடுகிறோம்
அதில் எங்கள் முந்தைய கால் தடம் தேடுகிறோம்
நீங்களோ எங்களை கொல்ல தேடிவருகிறீர்
நேற்று கூட உங்கள் எமக்கூட்டம் வந்தது,
எங்கள் செல்ல மகராஜாவை
பிடித்து சித்ரவதை செய்தது,
துப்பாக்கி கொண்டு
மருந்ததனை விசமாய் ஏற்றியது,
அவனை அநியாயமாய் கொன்றது!
வேறொரு சினேகிதனும்
அவன் தொழுது வேண்டினான்
காடு சேரவேண்டி,
ஓடி ஓடி ஓய்ந்தான்
வழிதான் தெரியவில்லை
ஏதோ ஒன்று நெருங்கிவந்தது,
ரயிலாம்..
அது அத்தனை விசையுடன்
சீறி சிதைத்தது
சாகடித்து வீசிச்சென்றது!
என்ன செய்ய முடியும்
களிறுகள் நாங்கள் பிளிறுவதை தவிர!
உங்கள் ராஜாங்கம்
இன்னும் எவ்வளவு காலம்???
நாங்கள் இல்லாமல் நீங்களா.....
காடுகள் இல்லாமல்
நீங்கள் எழுதும் விதி
என்ன கதியாகும்?
குமாரசாமி கணக்கு போடுகிறாய் மானிடா!
- ஜா.முஹையத்தீன் பாட்ஷா

08 ஜூலை 2016

ரமலானா.. ரம்ஜானா..? இந்து நண்பரின் சந்தேகம்

நோன்புப்பெருநாள் முடிந்துவிட்டது, இருந்தாலும் ஒரு இந்து நண்பர் வாட்சப்பில் வந்து கேட்டார்...
"ஒரு சந்தேசம் சார்"
"என்ன சொல்லுங்க"
"இந்த பெருநாள ஒருத்தர் ரம்ஜானுங்கிறார், இன்னொருத்தர் ரமலானுங்கிறார்.. இது ரம்ஜானா.. இல்ல ரமலானா? சொன்னா தேவலை"
"ஓ... அதுவா.. ரெண்டுமே ஒன்னு தான் பின்ன ஏன் இப்படி சொல்றாங்கன்னா... ரமலான் அப்டீங்கற்து தான் சரியான அரபி உச்சரிப்பு இந்த மாதத்தோட அரபிப்பெயர். (பொருள் கரித்தல், அதாவது பாபங்களை கரிக்கும் மாதம் நன்மை மட்டும் செய்யும் மாதம்) ஆனா உருது பேசுறவவங்க ரம்ஜான்.. ரம்ஜான்ன்னு சொல்லி அதை பலரும் ரம்ஜான்னும் சொல்றாங்க, அவங்க ஏன் அப்படி சொல்றாங்கன்னா.. அரபி எழுத்தை உச்சரிக்கும் போதுஉருது பாணியில சில எழுத்துக்களை உச்சரிச்சு அவங்களுக்கு பழக்கமாயிடுச்சு, குறிப்பா அரபி எழுத்தான.. "ல்லாது" என்ற எழுத்த "ஜ்ஜாது" என்பார்கள், அல்ஹம்து சூரா எனும் அத்தியாயத்தின் இறுதி "ல்லாலீம்" என்று முடியும் ஆனால் உருது பெருமக்கள் "ஜ்ஜால்லீம்" என்று தான் உச்சரிப்பார்கள். அதுபோலத்தான் ரம"லா"ன் என்பது ரம்"ஜா"ன் ஆனது. இந்த உச்சரிப்பு மாற்றம் அரபிமொழி பல தேசங்களுக்கு போகும் போது அடுத்த நாட்டினரால் பல நேரங்களில் அதன் எதார்த்த உச்சரிப்பை வழங்கமுடியவில்லை, காரணம் அவர்கள் பழக்கப்பட்ட நாவசைப்பிற்கு முற்றும் வித்தியாசமான மொழியின் உச்சரிப்பை சில நேரங்களில் அவர்களால் உச்சரிக்க முடியாமல் முயற்சி செய்யும் போது அவர்கள் படித்த மொழியில், பேசும் பொழியில் அந்த உச்சரிப்பு இல்லாத நிலையில் அரபின் சில எழுத்துக்கள் வேறு உச்சரிப்பு வடிவம் பெற்றிருக்கிறது. அது இங்கே உருது மக்கள் பேசும் போது மட்டும் இல்லை, எகிப்தியர்கள், ஈரானியர்கள், ரஷ்ய, ஆப்கானிகள் என பலர் பேசும் பேசும் அரபியிலும் அதுபோல பல மாறுமாடு காணமுடியும், ஆக உருது மக்கள் ரமலானை ரம்ஜான்ன்னு பிரபலப்படுத்தீட்டாங்க அவ்வளவு தான், புரிஞ்சதா"
"நல்லா இருக்கீங்கீங்களான்னு கேட்பதை.. ஏம்பா கீறயான்னு மெட் ராஸ் தமிழ்ல கேப்டது மாதிரீன்னு சொல்லுங்க"
"கிட்டத்தட்ட அப்படித்தான்னு வச்சுக்கோயே"
-ஜா. முஹையத்தீன் பாட்ஷா

முகநூல் பதிவை பார்வையிட

06 ஜூலை 2016

ஈகைத்திருநாள் -2016

எல்லா பெருநாளைய இரவு போல நேற்றிரவும் தூங்கவில்லை, அதிகாலை முன்றரைக்கு படுத்து ஒரு குட்டித்தூக்கம், பிறகு நாலரைக்கு அலாரம் அடிக்கும் முன்னேயே எழுப்பிவிடப்பட்டேன் பார்த்தால் அலாரம் 4.20 தான், சரியென கண்கசக்கி குளித்து அதிகாலை பஜ்ர் தொழுகைக்கு தயாரானேன். கோடைக்கால அதிகாலை கூட இப்பொழுதுகளில் வெம்மை சூழ்ந்தே இருக்கும் ஆனால் அப்படி ஒரு வெம்மையில்லை.. பள்ளிக்கு நடந்து செல்கையில் அருகிலுள்ள அரபியர்களின் வீடுகளில் சேவல் கூவும் ஓசை மனதை என் பாலிய காலத்தில் என் பாட்டி வீட்டின் வாசல் திறந்த கூடத்தில் படுத்துறங்கி எழும் இதே பெருநாளைய அதிகாலையில் மூனரை நாலுக்கெல்லாம் துவங்கிடும் அந்த சேவலின் கூவலுக்கு இட்டுச்சென்றது, அக்கூவல் காதில் ஒலித்து மனதில் பதிந்த ஒன்று கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு பின் அதிகாலை சேவல் கூவல் மனதிற்கு குதூகலம் தந்தது. நினைவுகளை புதுப்பித்தது. அந்த அரபி வீட்டு சேவலுக்கு நன்றி.

பிறகு அதிகாலை தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீட்டிற்கு வந்து சிறுபிள்ளை காலங்களிலிருந்து என் தாய் தந்தையர் கைகளால் வாழ்த்தி புத்தாடை கொடுக்கும் நினைவுகளோடு மனமெல்லாம் நல்மார்க்கம் ஈந்த நபிகளாரை மனதினில் இருத்தி புத்தாடைகள் அணிந்தேன். பிறகு கண்களுக்கு சுர்மா இட்டு, மணம் பூசி நபிகளாரின் வழியில் மூன்று பேரிச்சங்கனிகள் சுவைத்து அஜ்மானின் ஷேக் ஜாயித் பெரிய பள்ளிக்கு புறப்பட்டோம் அப்போது மணி காலை 5.15. வாகனத்தில் தக்பீர் என்னும் இறைத்துதி ரேடியோவில் ஒலிப்பதில் லயித்து பள்ளி ஏகினோம்.
அந்த ஐந்து முப்பதுக்கெல்லாம் பள்ளியின் பிருமாண்ட பார்க்கிங் நிறைந்திட பல சுற்று சுற்றி ஒரு வழியாய் ப்ளாட்பாரத்தின் மேலே ஏற்றி வண்டியை இருத்தினேன் சென்ற வருடம் போல. உள்பள்ளி நிறைந்திட மிக அதிக மக்கட்திரள், எங்கு பார்த்தாலும் பள்ளியைச்சுற்றி ராணுவ உடைகள், கருப்பு உடைகள், போலிஸ் உடைகள் என பல வண்ணத்தில் ரோந்து அதிகாரிகள், சிப்பாய்கள், காவலர்கள் அவர்கள் கைகளில் விதவிதமான துப்பாக்கிகள் என பாதுகாப்பு அரண்கள் சூழ்ந்திருந்தது மனதின் ஓரத்தில் பயத்தை உண்டாக்காமல் இல்லை, சென்ற வருடங்களில் இப்படி இந்த அளவுகு பாதுகாப்பு இல்லை ஒருவேளை சமீபத்திய சவுதி நிகழ்வுகளினால் இப்போது கூடுதலாக இருக்கலாம். அவர்களை கடந்து வெளிப்பள்ளியின் முன்னே உள்ள இடங்களில் அமர இடம் தேடிய போது ஒரு வெள்ளையான சூடானி கனிவுடன் அவர்தம் முசல்லாவெனும் தொழுகை இருக்கையை எமக்காக விரித்து இன்முகத்தோடு அமரப்பணித்தார். பரஸ்பரம் முகம் மலர்ந்து அமர என் இருமருங்கிலும் நல்ல பணக்கார அரபிகள் உட்கார்தார்கள் அவர்களும் நானும் சிரித்துக்கொண்டோம். ஆயினும் வாகன நிறுத்தம் மிகப்பக்கத்தில் இருப்பதால் கொஞ்சம் பயமாகவே இருந்தது, சூழ்நிலை அப்படி என்ன செய்ய அமைதி மார்க்கத்தை குழைத்து உலகையே இம்சை செய்யும் அரக்கர்களின் குறுமதியையும், புரிந்துணர்வின் பழுதையும், உலக அரசியலையும் நினைத்து மனதால் வருந்தினேன்.

ஒரு வழியாக இமாம் பன்னிரெண்டு தக்பீருடன் பெருநாள் தொழுகையை முடித்தார். பிறகு குத்பா எனும் பிரசங்கம் தொடங்கி நிறைவடைய அறிந்தவர் அறியாதவர் என எல்லோரும் சலாம் உரைத்து நெஞ்சொடு நெஞ்சாக நீ என் சகோதரனடா.. என்று அணைத்துக்கொண்டார்கள் நானும் அந்த சூடானி, அரபிகளை இறுக பற்றிப் பிரிந்தேன். அக்கம் பக்கம் பார்த்தால் டெக்னாலஜியின் விளைவால் ஒருவரோடு ஒருவர் ஆரத்தழுவுவதில் இல்லாத ஆர்வத்தை ஆண்ராய்டு போனில் செல்பி எடுப்பதிலேயே காட்டிக்கொண்டிருந்தனர். குடும்பத்தோடு வந்தவரக்ள் பிள்ளைகளோடு குதூகலித்தனர், என் குடும்பத்தோடு இந்த பள்ளிக்கு தான் அஜ்மான் வந்ததிலிருந்து வந்த நினைவுகள் சூழ்ந்திருந்த்து, தற்போது அவர்கள் ஊரில்.

பிறகு நாங்களும் சில நிழற்படம் நினைவுக்காய் எடுத்து பள்ளிவிட்டகன்றோம்.
பிறகு காலைப் பசியாறி, மதியத்திற்கான பிரியாணி தயாராகிக் கொண்டிருக்கிறது. பிரியாணி செய்வதில் என் தம்பி காலித் வல்லவர்.

நாளை ஊரில் பெருநாள் என்பதால் அது தான் கொண்டாட்டம், குதூகலம். அது பற்றி நாளை பேசுவோம்.

என் அன்பின் சொந்தங்கள் அனைவருக்கும் என் ஆலிங்கனமும் அகமலர்ந்த ஈகைப் பெருநாள் வாழ்த்துக்களும்.

அன்போடு,
ஜா.முஹையத்தீன் பாட்ஷா.