31 அக்டோபர் 2013

இந்தியாவை பெருமிதப்படுத்திய இதயம்!

" இந்தியாவிலிருந்து ஏகத்துவத்தின் ஞானத்தென்றல் வீசுவதை உணர்கிறேன்"

தன் மேலங்கியை சற்று ஆசுவாசப்படுத்தும் விதமாக தளர்த்தி "அறிவின் தாயகம்"  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) மேற்கண்ட வாசகங்களை சொன்னார்கள்.

திருமூலரும், அகத்தியரும், திருவள்ளுவரும் விதைத்த ஏகத்துவ ஆன்மீகக் கருத்து ஆன்மீக பேரொளியாய் திகழ்ந்த நபிகள் நாயகத்திற்கு தெரிந்ததனால் தான் இக்கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இத்தத்துவம் அன்றிலிருந்தே அறியப்பட்டதனால் தான் இந்திய பூமி இஸ்லாத்தை விருப்பமுடன் உள்வாங்கிக் கொண்டது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

சிக்காத சிறு புள்ளி!

மிகப்பெரிய சண்டையின் அந்தியில், 
ஆதிப்புள்ளியாய்  மீந்திருக்கும் 
கண்ணுக்கே சிக்காத சிறு புள்ளி!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

30 அக்டோபர் 2013

கனவு மொழிகள்!

எனக்கு உருது, அரபி மொழிகளில் எழுத படிக்கவும், நம் அணடை மாநில மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்றறைவ்களையும் ஓரளவாவதும் கற்க வேண்டும் என்பது மன வேட்கை!

ஆனாலும் எத்தனையோ மலையாளிகளிடம் இதுகாரும் பழகி என்ன பயன் அவர்களது அட்சரத்தில் அ, ஆ கூட கற்கவில்லை. 

பெங்களூருவில் உருது முஸ்லீம்களிடத்திலும், துபாயில் ரூம் மேட் பாக்கிஸ்தானியுடனும் பழகியும் என்ன அதுவும் பாழ்! ஒரு அலிப், பே கூட பே! 

கன்னடத்தில் மாத்தாட மனதெல்லாம் ஆசை ஆனாலும் அவ்வப்போது அந்நாளில்  இரவு நேர கன்னட செய்தி கூட‌ தூர் தர்சனில் கேட்போன் அத்தோடு முடிந்தது. அதுவும் சுத்தப்பட்டு வரவில்லை! 

டீ பாயிலிருந்து அலுவலக நண்பர்கள் வரை தெலுங்கர்கள் இருந்தென்ன ஒழுங்காக ஒரு எழுத்துக்கு வழியில்லை!

அரபு நாட்டில் இருந்தும் சின்னஞ்சிறு வயதில் மதரஸாவில் ஓதியதன் பொருட்டு படிக்க முடிந்திருக்கும் அரபி எழுத்துக்களோடு சரி, சரள அரபியும் மாஃபி! 

தொழில் ரீதியாக வந்த நிர்பந்தத்தின் காரணமாக ஏதோ ஆங்கிலம் தெரிந்து தப்பிக்கிறோம். 

தாய்மொழி அவசியம் மூச்சை போன்றது. அத்தோடு பிறமொழி அறிவென்பது கூடுதல் கண்களும், காதுகளும் பெற்றது  போன்றது.

நேற்று எனது நண்பர் மலையாள புத்தகத்தை மொழி பெயர்க்கிறேன் என்றவுடன் நான் நம்பவில்லை அவரை படிச்சச்சொல்லி அதை பரிசோதித்தபின்பே நம்பினேன். அது தொடர்பாக எழுந்த சிந்தனையில் மேற்பட்டவை எனக்குள் குடைந்தெடுத்தது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

26 அக்டோபர் 2013

பிலாலியா ஆலிம்களுக்கு வாழ்த்து

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

பிலாலியா ஆலிம்கள் வெகுஜன நாளேடான தினத்தந்தியில் கட்டூரைகள் எழுதத் தொடங்கியுள்ள செய்தி அறிந்து மிக்க மகிழ்வும், பெருமிதமும் அடைந்தேன். இது போன்ற தேர்ந்த அறிஞர்கள் எல்லாம் ஊடக‌த்தை    இஸ்லாத்தை சிறப்பாக சொல்ல பயன்படுத்தவில்லையே என்ற குறை எனக்கு இருந்தது ஆதலால் இந்த செய்தி என்னை மிகவும் சந்தோசப்பட வைத்ததெனலாம். வாழ்த்துக்கள். வல்ல அல்லாஹ்வும் அவனது தூதர் நபிகள் நாயகம் ஸல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களும் அருள்வார்களாக!


மேலும் நான் எப்போதும் அன்பர் முதுவை ஹிதாயத் அவர்கள் மூலம் அமீகரத்தில் நடக்கும் வெள்ளிக்கிழமை குத்பாவின் தமிழாக்கத்தை வாராவாரம் பெற்று வருகிறேன். அதை விருப்பமுடன் படித்தும், பல விசயங்களை அறிந்தும் வருகிறேன். இம்மாதிரியான அறப்பணிகளை செய்யும் தங்களுக்கும் அதை அனுப்பித்தரும் அன்பர் ஹிதாயத் அவர்களுக்கும் எனது இதயப் பூர்வமான நன்றிகள்.

குறிப்பு: தந்தியில் எழுதிய கட்டுரையில் நபிகள் நாயகம் ஸல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை குறிப்பிட நபி(ஸல்) என்றே குறிப்பிட்டிருந்தீர்கள், ஆகவே வெறுமனே நபி (ஸல்) என எழுதாமல் சிறப்பாக தமிழகத்து சகோதர சமூக‌ / மத- த்தவர்களும் "நபிகள் நாயகம் (ஸல்..) " என்றே அழைக்கும் பாங்கு இருப்பதால் அவ்விதமே "நபிகள் நாயகம் (ஸல்..) " என எழுதினால் நலமாக இருக்கும்.

அன்புடன்,

வழுத்தூர் . ஜா.முஹையத்தீன் பாட்ஷா

18 அக்டோபர் 2013

நல்ல விசயங்கள்



கீழ்காணும் நல்ல விசயங்கள் நான் எழுதியதல்ல.. ஆனால் நான் மொழியாக்கம் செய்தது. 

எனக்கு வந்த மெயிலின் ஆங்கில வாசகங்களை மொழிபெயர்த்தால் நண்பர்களுக்கும் நலம் பயக்கும் என்பதால் மொழியாக்கம் செய்து இங்கே பகிர்கிறேன்.


நாளும் 10 முதல் 30 நிமிடம் வரை நடைபயிற்சி முக்கியம், அதிலும் புன்னகைத்தவாறே நடப்பது மிக நலம், இது நிகரற்ற மன அழுத்தப்போக்கியாகும்.

• ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 நிமிடமாவது மெளனமாக அமர்ந்து தியானம் செய்க! அறையை தாழிட்டாலும் நலமே.

• கண்டிப்பாக காலந் தவறாமல் தொழுகை செய்க, உடற்பயிற்சியும் வேண்டும்.

• 6 வயதிற்கு குறைந்தவர்களுடனும், 70 வயதினை தாண்டியவர்களுடனும் கலந்து அதிக நேரம் செலவிடுதல் இது மிக முக்கியம்.

• மரத்திலிருந்தும், செடிகொடிகளிலிருந்தும் வரும் உணவை அதிகமாக உண்ணுங்கள், அதிலிருந்து தயாரிக்கப் பட்டதை (சமைக்கப்பட்டதை) குறையுங்கள்.

• பச்சைத் தேனீரும், தண்ணீரும் அதிகம் குடியுங்கள், பாதாம், வால்நட், ப்ரூகூலி அதிகம் சாப்பிடலாம்.

• நளுக்கு குறைந்த பட்சம் 3 பேரையாவது மென்சிரிப்பு செய்திட முயலவும்.

• வீடு, கார், மேஜை இவைகளை குப்பை மேடுகளாய் ஆக்காமல், பூந்தோட்டமாய் அழகாக்கினால் வாழ்வில் புத்துணர்வை கொண்டுவரும்.

• உங்கள் அற்புத ஆற்றலை வீணான அரட்டை, பழங்கதை பேசுதல் அல்லது கழித்து பாழாக்காமல், நேர்மறையாய் சிந்தித்து செயலாற்றுதலில் முதலீடு செய்வோம்.

• அரசனைப் போலே காலை உணவும், குடிமகன் போலே பகல் உணவும், இல்லாத ஏழைப்போல் இரவு உணவும் இருக்க வேண்டும்.

• வாழ்க்கை நமக்கு முழுக்க சாதகமாகவே இல்லாவிட்டாலும், நல்லதாக இருக்கிறது, அதை நம்புங்கள்.

• வாழும் வாழ்க்கையே குறைவான வாழ்நாட்கள் தான் அதை மற்றவர்களை வெறுப்பதில் வீணடித்திட வேண்டாம்.

• வாழ்வில் எதற்கும் நம்மை விட்டால் வேறு ஆள் இல்லை என நீங்களே உங்களை வருத்திக்கொள்ள வேண்டாம், எதையும் யாரும் செய்வார்கள்.

• ஒவ்வொரு வாதத்திலும் நீங்களே வெற்றி பெற எண்ண வேண்டாம், தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள்.

• கடந்த காலம் குறித்து திருப்தி அடையுங்கள், அது உங்கள் நிகழ்காலத்தை மேன்மையாக்கும்.

• எப்போதும் மற்றவர்களோடு உங்களை ஒப்பிட வேண்டாம், ஏனெனில் அவர்களின் வாழ்க்கைப் பயணம் எதை நோக்கி என்பது உங்களுக்கு தெரியாது.

• உங்கள் வாழ்க்கையில் மகிழ்வை உங்களைத் தவிர யாரும் உண்டாக்க முடியாது.

• வாழ்வின் எந்த சோகத்தையும் குறித்து வைத்து கொள்ளுங்கள், அவைகள் 5 வருடங்கள் கழித்துப்பார்த்தால் இருக்குமா?

• எல்லோரையும் மன்னியுங்கள் அவர்கள் எதை செய்த போதிலும்.

• உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன சிந்திப்பார்கள் என எண்ணுவது உங்கள் வேலை அல்ல.

• காலம் அனைத்தையும் சிறப்பாக்கும்.

• நல்லதோ, கெட்டதோ அனைத்து சூழ்நிலைகளும் மாறும்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

13 அக்டோபர் 2013

வரும்... ஆனா வராது!

துபாய் குளிர்ந்துவிட்டது
***********************************
வாட்டி வதம் செய்த கோடையின் கொடூரம்! அது செப்டம்பர் முப்பதிலிருந்தே தணிய‌ இவ்வருட வெம்மையிலிருந்து துபாய் விடுதலையானது. அக்டோபரின் முதல் இரண்டு நாட்களின் காலை நேரங்கள் பனிமிகும் நாட்களை நினைவு படுத்தி புகைமூட்டம் போலே  இருக்கத்தொடங்கிய போதும் கூட பின் நாட்களின்  பகல் பொழுதுகளில் பகலவன் கொஞ்சம் படுத்தி எடுக்கத்தான் செய்தது. இருந்தாலும் இரவு குளிர் இதமளிக்க தவறுவதில்லை ஆதலால் அமீரகம் அலுவல் முடித்து குடும்பம் சகிதமாக வெளியே வரும் எல்லோருக்கும் ஏசியாகத்தான் இருக்கிறது.



திடீர்!
*******
நல்ல மனநிலையிலிருந்த வானத்திற்கு என்ன ஆனதோ தெளிவாக இருந்த அது திடீரென இன்று மாலை ஐந்து மணிவாகிலெல்லாம் மயங்கி சரிந்தது, இருட்டிற்கும் வெளிச்சத்திற்கும் மத்திய நிலை... மெல்லிய பொடி மண் காற்று வான்நிலையில் அப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருந்தது. வெப்பநிலை தப்பு சொல்லமுடியாதவாறு குளிராக இருந்தாலும் அலுவலகம் முடித்து மகிழ்வுந்தை செலுத்த சற்று சிரமமாகவே இருந்தது. இருந்தாலும் செலுத்தியே ஆகவேண்டும். அப்படியே நான் இருக்கும் அரேபியன் ரேஞ்சசிலேயே இருந்துவிட முடியாதே!



புறப்பாடு
***************
மகிழ்வுந்தின் திறவியை திருக.. செலுத்த தயாரானது.  நினைத்ததை விட சற்றே வெளிப்புறத்தில் பார்வை பதிக்கமுடியாததாகிப் போனது, இருந்தாலும் இதுதான் இன்றைய நிலை என எண்ணி மகிழ்வுந்து விரைந்தது. சன்னலை திறந்து ஓட்டிச் செல்கையில் மண் பொடியால் எழுந்த சிறு அரிப்பு கண்ணாடியை மூட வைத்தது.



வானத்தில் போகுதோ
******************************
சீதோதசநிலை சிலிர்ப்பை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது என்பதில் மனம் மகிழ்வடைந்திருந்தது. மகிழ்வுந்து துபாய் பைப்பாஸ் சாலையின் ஆறு வழிச்சாலையின் இரண்டாவது வழித்தடத்தில் விரைந்திருக்க.. அடைமழை ச்சோ...ஓ..ஒ... வென பெய்திருந்து அந்த மழையினூடே மகிழ்வுந்து சென்றிருந்தால் எப்படி இருக்குமோ அவ்வாறான சூழல் ஆனால் மழை மட்டும் தான் இல்லை.. மகிழ்வுந்து ஏதோ மிதப்பது போல் ஒரு உணர்வு.. எனது மகிழ்வுந்திற்கு முன்னும். இடதும், வலதும் செல்கிற வாகனங்களெல்லாம் ஏதோ எதிரே குறிப்பிட்ட அளவு தெரிகிற பாதைக்குமேல் உள்ள புகையில் சென்று  வானில் புகுந்து கொண்டே இருப்பது போல் தான் இருந்தது. அதில் எனது வாகனமும் விதிவிலக்கல்ல..! புகையினூடே புகுந்து வானில் மிதந்தது...  மிதந்து... கொண்டே வடிவேலு காமெடியான "வரும் ஆனா வராது" என்பது போலவே மகிழ்வுந்தை செலுத்தி..ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்தேன்.


தேங்க் காட்! வித் குட் மூட்.

(இது போல் எத்தனையோ பதிக்கப்பட வேண்டிய அனுபவங்கள் அனுதினம் நடந்தாலும் இதை பதிக்க நாடியது மனம்)


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

04 அக்டோபர் 2013

தலைவர் சிராஜுல் மில்லத்-ன் 88ஆம் ஆண்டு பிறந்த நாள்

அறிஞர் அண்ணா மற்றும் கலைஞருடன் தலைவர் சிராஜுல் மில்லத் அ.கா.அ. அப்துல் ஸமது அவர்கள் 


சந்தனத் தமிழ் வித்தகர், மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று "நல்லப்பேச்சுக்கு அழகு நாற்பது நிமிடங்கள்" என்று அலுத்துப் போகாத மேடைப் பேச்சுக்கு இலக்கணம் வகுத்த மேடைப்பேச்சு சிற்பி, எவ்வளவு பெரிய எதிர்ப்புக் கணைகளையும் கூட தனது சாந்தக் குரலால் எதிர் தரப்பு தன் குற்றம் உணருமாறு உரைத்திடும் வல்லமை பெற்றவர். கேட்டுக்கொண்டே இருக்கலாம் இவரது பொது மேடைப்பேச்சுக்களை ஆனால் அவர் இன்று இல்லை. ஆம் மேற்கண்ட வாசனை வாசக‌ங்கள் சுட்டிடுவதெல்லாம் மறைந்த மாமேதை முன்னால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் ஒப்பற்ற தலைவர் "சிராஜுல் மில்லத்" அல்ஹாஜ் அ.கா.அ. அப்துல் சமது அவர்களைத்தான்.  அம்மாமேதையின்  88 வது பிறந்த நாள் இன்று.

தலைவர் பெருந்தகை அவர்கள் பேச்சில் மட்டுமல்ல..  அவரது தலைமைத்துவ பண்பு,  சிறுபான்மையினர் நலனை பேணுவதிலும் அவர்களது உரிமைகளை மீட்டெடுப்பதில் அவர் கையாண்ட மென்மை மற்றும் ஆரசியல் சாதுர்யம், சமூக நல்லிணக்கத்தை பேணுவது, இந்திய அரசியல் அமைப்பிற்கும்,  அதன் ஒருமைப்பாட்டிற்கும் ஊறு நேராத வகையில் அதன் மாண்பை போற்றும் வகையில் இந்திய இஸ்லாமிய மக்களை வழி நடத்தியது இவைகளெல்லாம் இவரின் சிறப்பம்சங்கள்.

இவர் அன்றைய தேசிய தலைவர்களான இந்திரா அம்மையார், ராஜிவ் உட்பட எல்லா தலைவர்களுடனான  இவரின் தோழமை இந்திய இஸ்லாமிய மக்களுக்கு பல சாதனைகளை செய்ய ஏதுவாக அமைந்தது. இஸ்லாமியர்களுக்கும் பொது சிவில் சட்டம் தான் பின்பற்றப்பட வேண்டும் என்ற வாதங்களெல்லாம் வைக்கப்பட்ட அந்நாளில் தலைவர் அவர்கள் அன்றைய பிரதமர் ராஜிவ் காந்திக்கு இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களுக்கு சரிஆத் சட்டத்தின் முக்கியத்துவத்தையும் சன்மார்க்க அறிஞர்களான உலமாக்கள் மூலம் விளக்கி ஷரிஆத் சட்டத்திற்கு பாதுகாப்பு வாங்கி தந்தது முதல்  இவரின் வாழ்வியல் வென்றெடுத்த பல சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக இவர் செய்த பணிகள் பாராட்டிற்குரியவை. தமிழ்க தலைவர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களோடும் அவர்களே தவிர்க்க இயலாத தோழமையாக இருந்து சமூகத்திற்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்தார். அப்பேற்பட்ட ஆளுமைகள் நிறைந்த தலைசிறந்த தலைவரின் பிறந்த நாளில் அவரது மிதவாதத்தை, சமய நல்லிணக்கத்தை, அடக்கத்தை, அறிவின் நுணுக்கத்தை நாமும் பின் பற்றி சமூக மேம்பாட்டிற்காக உழைப்போம் என உறுதி மேற்கொள்வோம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா