08 மே 2019

ஆனந்த தேன்மாரி

ஆத்மாவில் சுரக்கிறது
ஆனந்த தேன்மாரி

எல்லை யில்லா மகிழ்ச்சியின்
மரகதப் பெருவெளி
சொல்லிக்கொள்ளாது திறக்க,
நிறத்தோடு மாயும் நீராய்
திளைத்து லயிக்கிறது
பெற்றோர்தம் மனது.

வெய்யிலில் சோர்ந்திடும்
வரண்ட நிலச்செடி போல்
பொய்யில்லா பசி தாகத்தால்
நாள் முழுக்க வாடி வதங்கியும்...

பிள்ளைகள்,
துள்ளிக்கொண்டு
ஆசை பாஷைகள்
ஆயிரம் பேசி
அருளான காட்சிகளால்
நம்மை நனைக்கிறார்கள்

நிறைவு செய்த
முதல் நோன்பிற்கு பிறகும்,
மீண்டும் தொடர்
நோன்பு வைக்க.

இறைவா
நிறைவாய் நீ
அவர்களுக்கருள்!

செய்தி: மகனும், மகளும் இவ்வாண்டின் முதல் நோன்பை இறையருளால் நிறைவு செய்தனர். அத்தனை மகிழ்ச்சி அவர்களுக்கு. எங்களுக்கும் தான்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
07-05-2019