21 செப்டம்பர் 2017

ஹிஜ்ரி 1439


பிறந்த மண்ணையே துறந்து சென்ற துயர போராட்டத்தின் வெற்றி விளைவு ஹிஜ்ரி!
கொள்கையில் ஒன்றுபட்டால் கோமான் நபிக்கு அற்பணமானால் தேடி வரும் வெற்றி என்று ஓர்ந்து தெரிவிப்பதும் ஹிஜ்ரி!
அதன் முதல்பிறை முஹரம் பிறந்தால்...
கொடிய கர்பலாவின் கோர நிகழ்வுகளையும்
ஆட்சிக்காய் அரசுக்காய் அற்பச்சுக போகத்திற்காய்
ஈடில்லாத இறைத்தூதரின் இதயமெல்லாம் நிறைந்த கோது குறைகளற்ற இனிய குலத்தோரையெலாம்
மனிதாபிமானம் கூட மனதினில் கொஞ்சமும் இன்றி துவம்சம் செய்தோரின் துர்குணத்ததையும்
தர்மம் தழைக்க போர்களத்தில் எங்கள் இமாம் ஹுஸைன் தலை கொடுத்ததையும்
கொடூரமாய் கொல்லப்பட்ட குழந்தை செல்வங்கள் அலி அஸ்கர் அலி அக்பர் அவ்ன் மற்றும் முஹம்மத்
தாகத்தால் உயிர் துறந்த அருமை சிறுமி சகினா
தியாக மேரு அப்பாஸ்
மற்றும்
அந்த துரோகக்களத்தில் உயிர் நீர்த்த தூய ஆத்மாக்கள் மனித குல சீலர்கள் சிந்திய செங்குருதியையும்
விழிநீர் சொறிய நினைவுபடுத்தி ஈமானை புனிதப்படுத்துவதும் பிறந்திருக்கும் இவ்வுயர் ஹிஜ்ரியே.
ஜா.முஹையத்தீன் பாட்ஷா

20 செப்டம்பர் 2017

நாட்டில் நீதி

கேட்டு எழுதப்படும் தீர்ப்புகளும்
நோட்டுக்காக எழுதப்படும் தீர்ப்புகளும் தானே
நாட்டின் நடப்பாய் இப்போதெல்லாம்
வாட்டி வதம் செய்து துவைக்கிறது
ஓட்டு போட்ட மக்கள் நமக்கோ
வேட்டு வைத்து நீதிதேவதையின் கணகள் கட்டப்பட,
நீட்டப்படுகிறது அநீதியின் கரங்கள்.
கூட்டு சதி இதுபோல நடக்கும்
நாட்டில் குமாரசாமி முகங்களுக்கிடையே
காட்டப்படும் அவ்வப்போதைய குன்ஹாகளின் முகங்களால்
ஈட்டப்படலாம் இன்னும் இங்கே நீதி என்றே
வாட்டத்துடன் பிரஜைகள் நாம் நம்பிக்கை
கூட்டி பேந்த..பேந்த காத்து நிற்கிறோம், தேசத்தில்
ஏடிஎம் வரிசையில் நின்றதைப் போல.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

16 செப்டம்பர் 2017

சிறு வெற்றி பெரிய மகிழ்ச்சி


சாரணர் இயக்க தேர்தல் ஒரு சிறு தேர்தல் தான் என்றாலும் அதில் எச்(..).ராஜாவின் தோல்வியை நரகாசுரனை வீழ்த்திய பெருமித களிப்போடு பெரும்பான்மையாக மக்கள் கொண்டாடுகிறார்கள், ஏனென்றால் அத்தனை மனக்காயம் பெரியாரை செறுப்பால் அடிப்பேன் என்று சொன்னது முதல் எல்லோரையும் ஆண்டி இன்டியண் என்று அடிக்கடி சொல்லுவது வரை அவரால் இந்த தமிழ் சமுதாயம் அடைந்திருக்கிறது.
ஆனால் தான் இச்சிறு தேர்தலில் ராஜா வீழ்த்தப்பட்டிருந்தாலும் எல்லோரும் அத்தனை பெரும் உற்சாக பெருவெள்ளத்தில் மிதக்கின்றனர் ஆனால் நச்சுப்பாம்பு போன்ற அவர்களது மூக்கு உடைபட்டிருக்கிறதே தவிர இதில் அவர்களின் விசப்பல் முறிக்கப்படவில்லை, இதில் அவரின் தலை தான் மொட்டை அடிக்கப்பட்டிருக்கிறதே தவிர மொத்தமாக அவரது சப்த நாடிகள் அடக்கப்படவில்லை ஆகையால் இனிமேல் தான் தமிழ்ச்சமூகம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியம்.
மேலும் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட அந்த இடத்தில் மூதாட்டிகள் சிலர், பெரியவர்கள் சிலர் என அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி அவரோடு இணங்கி குலாவுகிறார்கள் என்பதிலிருந்து அந்த 286-ல் 52 என்ற எண்ணிக்கையில் கருப்பாடுகள் காவியாடுகள் உள்ளே கூடாரமிட்டுள்ளதையும், செல்லறித்துக்கொண்டிருப்பதையும் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது இவை எல்லாவற்றையும் விட சம்பந்தமே இல்லாத இந்த ராஜாவை சாராணர் தேர்தல் வரை உள்ளே புகுத்தும் அடிமை அரசாங்கத்தின் சூழ்ச்சியும், கால்நக்கித்தனமும் அருவெறுப்பான ஒன்று.
எனவே இதே போல தமிழர்கள் விழித்தால் எந்தப்பரிவாரங்களையும் வீழ்த்தலாம். 2019-ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவிலும் இதே மாற்றத்தை தமிழர்கள் நாம் கொண்டுவந்து சாதிக்கலாம்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

13 செப்டம்பர் 2017

அவன் கொடுப்பான்!

பரமனிடம் பாமரன் நமக்கோ
தேவையானதைக் கேட்கக்கூட
தெரியாதென்பது தான்
தெரியாத பேருண்மை.
எதைக் கேட்டாலும்
எப்படிக் கேட்டாலும்
மலை போல தங்கத்தையோ
மகுடம் தரித்த பேரரசையோ
தாவெனக் கோரினாலும்
பெருமாண்ட பேரிறையோன்
அருளாகவே இருப்பவனவன்
அண்ட சராசரமாகி நிற்பவன்
அவனுக்கது அற்பமே..
ஆகையால்....
நம் பிக்கை வைத்து
நம் கைகளை உயர்த்தினால்
வாட்டத்துடன் கேட்டதை
தேட்டத்துடன் மகிழ்ந்து
அருளாமலா போய்விடுவான்
பெரிதென நாம் நினைப்பவை யாவும்
பெரிதல்லவே, அற்பமன்றோ அவனுக்கு
நிரப்பமாக தருவதினால்
நிரம்பியதிலேதும் குறையாத வனவன்
குறைவாக கொடுப்பதை
குறையாக நினைப்ப வனவன்
உன்னை யன்றி
கேட்பதற்கும் யாருளர்?
தருவதற்கும் யாருளர்?
தா என் தாயே..
தா என் தயையே..
தா என் இறையே..
ஜா. முஹையத்தீன் பாட்ஷா
13-09-2017, அஜ்மான். அமீரகம்.