23 ஆகஸ்ட் 2016

பள்ளி ஊர்தி ஓட்டுனர்கள்!

பள்ளிக்கூட ஊர்தி என்பது மிகவும் பொறுமையும், நிதானமும் கொண்டு கையாளப்படவேண்டிய ஒன்று, ஊர்தி ஓட்டுனர்களை நம்பியே தங்களின் எதிர்காலமாகவும், கனவாகவும், நம்பிக்கையாகவும் இருக்கும் பிரிய பிள்ளைச்செல்வங்களை பெற்றவர்கள் ஒப்படைக்கின்றனர். சிறுபிள்ளைகள் உலகம் தெரியாதவர்கள், பலகீனமானவர்கள்.. அவர்களை பரிவோடு கையாள்வது மிக முக்கியம்.
ஓட்டுனர் நண்பர்களே..வெளிநாடுகளில் இருப்பது போன்று மிகக்கடுமையான சட்டதிட்டங்கள், உயர் வசதி கொண்ட கண்காணிப்பு கருவிகள் எதுவும் நமது இந்தியாவில் இல்லை மாறாக உங்களை நம்பியே பிள்ளைகளை ஒப்படைக்கின்றனர். நீங்கள் மிகப்பொறுப்புணர்வோடு செயல்படுவது மிக அவசியம்.
இதெல்லாம் குறித்து எல்லா பள்ளி நிர்வாகமும் மிக கவனமுடன் செயல்பட வேண்டும், தகுதியான ஓட்டுனரை பணியில் அமர்த்தி அவரையும் கண்காணிக்க வேண்டும். ஊர்தியையும் சோதனை செய்து பழுதி நீக்கி பிள்ளைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற பாதுகாப்பு இல்லாமல் நம் நாட்டில் எத்தனையோ துயர நிகழ்வுகள் நடந்திருக்கிறது. அவை இனி நடக்கக்கூடாது அதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகளை எடுத்து எந்த துயரமும் நடக்காமல் சிறப்பாக செயல்படுத்தி நன்மதிப்பை பெறுவது எல்லா பள்ளிகளின் மேலாண்மையாளர்களின் கடமையாகும்.
ஊர்திகளில் செல்லும் பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல, தெருவில் செல்லும் பிள்ளைகள், பெண்கள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் என யாருக்கும் பாதிப்பு வராத அளவுக்கு ஊர்தி ஓட்டுனர்கள் பொறுமையுடனும் கடமை உணர்வுடனும் செயல்பட வேண்டும், இன்று எங்கள் வழுத்தூரில் மாலை நடந்த நிகழ்வில் LKG படிக்கும் ஒரு மழலைக்குழந்தை கடையில் மிட்டாய் வாங்கிவிட்டு தெருவில் செல்லும் வேளை ஏதிர்பாராது வந்த பள்ளி ஊர்தி முனையில் திருப்பும் போது சற்றே கவனம் தவற பரிதாபமாக அந்தப்பிள்ளை அதே இடத்தில் பலியாகி இருப்பது நெஞ்சை கனக்க வைக்கிறது. அந்த பிள்ளையின் தாயார் பிள்ளை இறந்திருப்பது அறியாது தஞ்சையில் மருத்துவரிடம் சென்று காப்பாற்றும்படி கதறி அழுதாராம், கேவையில் இருக்கும் தகப்பனுக்கு இடிபோன்ற இந்த செய்தி சொல்லப்பட உலகமே இருண்டு ஓடி வருகிறாராம். இனி ஒரு நிகழ்வு இது போல யாருக்கும் வேண்டாம் நண்பர்களே.. பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுங்கள். பிள்ளைகள் பாவம் அவர்கள் மிக பிஞ்சு போன்றவர்கள். அவர்களது உயிரோடு யாரும் விளையாட வேண்டாம்.
பள்ளி நடத்துவர்கள், பொறுப்புதாரிகள், ஊர்தி ஓட்டுனர்கள் என எல்லோரும் பொறுப்புடன் செயல்படுங்கள். பெற்றோர்களே நீங்களும் ஊர்தியை, ஓட்டுனரை கவனியுங்கள் ஏதேனும் ஐயம் இருந்தால் உடனே புகார் செய்யுங்கள். நம் பிள்ளைகள் நமக்கு முக்கியம். அவர்களுக்காகத்தான் நாம், அவர்கள் தான் நம் கனவும் நினைவும். அவர்கள் பாதுகாப்பு என்றும் உறுதி செய்யப்பட வேண்டும். இந்தியா போன்ற நமது தேசத்தில் பள்ளி போக்கு வரத்து குறித்து நம் எல்லோருக்கும் விழிப்புணர்வு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆகையால் நாம் அனைவரும் அவரவர் பொறுப்புணர்ந்து விழிப்போடு இருப்போம். பிள்ளைச் செல்வங்களைக் காப்போம்.
-ஜா.முஹையத்தீன் பாட்ஷா
22-8-2016 - 10.15pm


22 ஆகஸ்ட் 2016

முகம் சொல்லும்



20 ஆகஸ்ட் 2016

ராஜிவ் பிறந்தநாள் பதிவு - 20-8-2016

ராஜிவ், அவர் புன்னகை ஒன்றே போதும் எல்லோரும் மயங்கிட, ராஜிவ்-ன் புன்னகைக்கு அப்படி ஓர் கிறக்கம் எப்போதும் இருக்கும். என்பதுகளில் அவர் புகழ் உச்சியில் இருந்தது, அவர் இந்தியாவின் இளைய நம்பிக்கையாக துளிர்த்திருந்தார். அவரது ஆங்கிலம் மிகச் சிலாகிக்கபட்ட ஒன்று, ஆங்கிலம் கற்கவும், அவரது பாணியை உள்வாங்கிக்கொள்ளவும் என் வீட்டில் கூட இரவு நேரங்களில் அந்தக் காலத்தின் பானாசோனிக் டேப் ரிகார்டர் கேசட்டை எண்ணிறந்த முறைகள் சுழற்றி, சுழற்றி என் உறவுமுறை மாமா ஒருவருகாக ஒலிக்கவிட்டிருக்கிறது. அப்போது தான் எனக்கும் அவரது ஆங்கிலப்பேச்சு அறிமுகம். மிக இளைய பிரதமராக ராஜிவ் அரசாட்சி செய்த காலங்களில் இந்தியாவின் முன்னேற்றத்தின் பல கதவுகள் திறந்துவைக்கப்பட்டது, கோட் சூட் போட்டுக்கொண்டு ஐரோப்பியர்களோடு கைகுலுக்கும் ராஜுவை தேசமே மனம் நெகிழ்ந்து வாழ்த்தி ரசிக்கும், அவர் ஐரோப்பியர்கள் மத்தியில் அவர்களுள் ஒருவராகவே தெரிவார் அதனாலேயே மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுடனான இணக்கம் அவரால் அதிகம் பேணப்பட்டது, இந்திய வெளியுறவு வலுப்பெற்றிருந்தது. இன்றைய இந்தியாவுக்கான புதிய பொருளாதாரம் குறித்து அவர் கண்ட கனவுகள் நிறைய, அடுத்த தேர்தலில் அவரின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு இருந்த செய்தியறிந்து ரிசர்வ் பேங்கிலிருந்த மன்மோகன் சிங்கைக் கூட நிதிமந்திரியாக ஆக்கி அதை மெய்பிக்க திட்டமிட்டிருந்தார், ஆனால் அவரை அதற்குள் தீவிரவாதம் பலி தீர்த்துக்கொண்டது. இன்றைய இந்தியா கண்டிருக்கும் நவீன தொலை தொடர்புத்துறையின் அதீத வளர்ச்சிக்கும் ராஜிவ் இட்ட திட்டங்கள் தான் முலாதாரப்புள்ளிகள் என்றால் மிகையில்லை. இவர் கொல்லப்பட்ட போது 'பால் வடியும் பவளத்திரள் ராஜிவே.." என்று பதிமூன்று வயது சிறுவன் நான் கவிதை எழுதி அழுதேன். அப்படி சிறியவர் பெரியவர் என்றில்லாது எல்லோரிடத்திலும் அவர் ஆழமாக ஊடுருவி இருந்தார். ராஜிவ் மகத்தான தலைவன். செயலாற்றல் மிகுந்த பிரதமர். இதிலிருந்து இன்றைய பிரதமர் குறித்து ஏதும் சொல்லத்தேவையில்லை என்பதும் இவர் எப்படி இருக்கிறார் என்பதும் வெள்ளிடைமலை.பவர் ஸ்டாரின் பில்டப்புக்கள் வெற்று வேட்டு என்பதை தமிழுலகம் அறிந்தது போல இந்தியாவும் வெகுவிரைவில் கண்டு கொள்ளும்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

18 ஆகஸ்ட் 2016

எங்கள் நாய்

(பிஸ்கட்) ரொட்டி போடப் போட 
தொடர்ந்து வாலாட்டிக்கொண்டே
திண்று தாள் பணியும்
காலைச்சுற்றி இன்பம் கூட்டும்
முகர்ந்து முக்கி முணங்கும்
பின் பாசத்தோடு நக்கும்
வேற்று நாய் எட்டிப்பார்த்தால் கூட
ஓடிப்போய் குரைத்துவிட்டு பின்
மீண்டும் கால்சுற்றி
முக்கி முணங்கி நக்கும்
நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டே
சலாமெல்லாம் கூட வைக்கும்.
ஆனாலும் கூட,
மரபைப் புதைக்கும்
அதிகாரத் திமிர் ஜெயாவின்
பதவி ரொட்டிக்காய்...
தன்னிலை மறந்து
குறுகிச்சூன்யக்கேடாய்
வீற்று பிணவீச்சமெடுக்கும்
உலகம் காணா உதவாக்கரை
இப்போதைய சப்பைநாயகன் போல
மானெங்கெட்டெல்லாம்
பிழைப்பு நடத்தியதில்லை.
எங்கள் நாய்.
-ஜா.முஹையத்தீன் பாட்ஷா

16 ஆகஸ்ட் 2016

சங்கைநபி இசைக்கோர்வைக்கு எழுத்தாளர் அபூஹாசிமா வாழ்த்து

மனசெல்லாம் நபிக்காதல் கொண்டவரும், ஓப்பற்ற கவிஞரும் சிறந்த எழுத்தாளரும், நமது முற்றம் மாத இதழ் ஆசிரியரும்,சமூக செயற்பாட்டாளருமான அருமை அண்ணன் Abu Haashimaஅவர்கள் எனது ஆக்கத்தில், பாடகர் அபுல்பரக்காத்தின் குரலில் தயாரான "சங்கை நபி" இசைக்கொர்வை குறித்து எழுதி மனம் நெகிழச்செய்திருக்கிறார்கள். அன்னாருக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள் உரித்தாகுக!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
********

அன்புத் தம்பி முகைதீன் பாட்சா...
தமிழ் ஆர்வலர்.
ஆன்மீக நேயர்.
ஞானத்தின் காதலர்.
அவர் ...
சில அற்புதமான இஸ்லாமிய பாடல்களை இயற்றி
பாடகர் அபுல்பரக்காத்தின் இனிய குரலில்
இசை வடிவாக கொண்டு வந்திருக்கிறார்.
பாடல்களில்
ஞானமும்
முஹம்மது நபிகளார் மீதான
காதலும் கசிந்து உருகி
கேட்கும் நம் நெஞ்சை நிறைக்கின்றன.
மொத்தம் ஆறு பாடல்கள்.
ஆறையும் கேட்டு விட்டேன்.
ஆற அமரத்தான் கேட்கவில்லை.
கொஞ்சம் ஓய்வில்லாத சூழ்நிலை.
தம்பியின் கருத்தாழமிக்க வரிகளை
கொஞ்சம் கவனமாக கேட்டு ரசித்து உள் வாங்க வேண்டும்.
பாடல்கள் இனிமையாக இருக்கின்றன.
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன.
இன்ஷா அல்லாஹ்
மீண்டும் ஓரிரு முறை கேட்டு மகிழ்ந்து
தம்பி முகைதீன் பாஷாவின் ஞான வரிகளின்
ஆளுமை குறித்து ...
இன்னும் சொல்வேன்.
வாழ்த்துக்கள்
பாஷா பாய்.