26 நவம்பர் 2014

ஆண் அன்னை தெராசா மறைந்தார்

மருத்துவர் மு.கோட்டைசாமி
ஆம் இந்த ஆண் அன்னை தெரசா எங்கள் அய்யம்பேட்டையில் வாழ்ந்து சேவையாற்றியவர். இங்கு அவ்வாறு என குறிப்பிட்டது மிகைப்படுத்தும் வார்த்தை அல்ல.. உண்மையில் அந்த வார்த்தைக்கு முற்றும் பொருத்தமுள்ளவரை தான் அவ்வாறு குறிப்பிட்டேன், அந்த ஆண் அன்னை தெரசா மறைந்த மருத்துவ சீலர் ஐயா. மு.கோட்டைச் சாமி அவர்கள் தான். பார்ப்பதற்கு கூட அதே சாந்தத்துடனும்.. அமைதியுடனும் கூடிய கனிவு பொங்கும் உருவம்.. தனது வாழ்நாளெல்லாம் மக்கள் பணிக்காகவே அற்பணித்த தியாகி.. அவருக்கு அடி மனதின் ஒரு முனையில் கூட இவர் முஸ்லிம்.. இவர் இந்து என எண்ணத்தெரியாத உண்மையான மனிதர்.. மேன்மையான மனித நேயர். அவர் இன்று இராமேஸ்வரம் சாலையில் ஏற்பட்ட வாகனவிபத்தில் மறைந்தது அவரின் சேவைமய்யமான மருத்துவமனை இருக்கும் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை மக்களுக்கு  மட்டுமல்ல அந்த உயர்ந்த மனிதரின் மருத்துவ சேவையால் பயன் அடைந்த பல்லாயிரக்கணக்கான சுற்றுவட்டார மக்களுக்கும் பேரிழப்பு… பேரிழப்பு.. பேரிழப்பே தான். இந்த துக்ககரமான செய்தி காலையில் அறிந்தது முதலே பேரதிர்ச்சி அடைந்தேன்.


 இந்து முஸ்லிம் என்ற மதமாச்சர்யங்கள் எல்லாம் அவர் அறியாதவர்..   வாழும் போது எப்படி அன்பை மட்டுமே பிரதானமாய் கொண்டு மனிதர்களை கருணையால் சூழ்ந்து சிகிச்சை செய்து சாதித்தாரோ அது போலவே அவர் இறந்த போதும் மதமாச்சர்யங்களை தவிடு பொடியாக்கி மனித நேயத்தை.. மதம் கடந்த பெரும் நேசத்தை அவர் இறந்து போய்விட்டலும் அவரது பூத உடல் நிரூபித்துக் காட்டிவிட்டது.  ஆம், ஐயா.கோட்டைசாமியின் பூத உடலை ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆரா துயரத்தில் சூழ்ந்து கொண்டு கண்ணீர் வடித்து கலங்கி நின்ற காட்சி பார்த்த எல்லோருக்கும் பேரதிர்வை உண்டாக்கிவிட்டது.. இது போன்ற கோட்டைச்சாமிகளால் தான் இந்த தேசத்தில் மனித நேய கோட்டைகள் விழுந்துவிடாமல் தாங்கிப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று  எண்ணத்தோன்றியது. 

ஏனென்றால், அய்யம்பேட்டையில் வசித்த ஒரு சாதாரண மருத்துவருக்கு அவரின் இறுதிச்சடங்கில் மரியாதை செய்ய பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடி அதுவும் இஸ்லாமியர்கள் மட்டுமே தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமாக கூடி  தங்கள் இரங்கலை தெரிவித்து அழுதார்கள்  என்றால் மேலும் இஸ்லாமிய ஆண்கள் கூட்டமே அவரது பூத உடலை சூழ்ந்து ஆர்பரித்து அவர்களே மயானம் வரை பெருங்கூட்டதுடன் சுமந்து சென்று 
சோகம் சூழ பிரியாவிடை தந்தார்கள் என்றால் இது ஆச்சர்யத்திலும் ஆச்சயர்மாகத் தான் இருக்கிறது. இதற்கெல்லாம் ஆதார சுருதி இஸ்லாம் குறிப்பிடும் எல்லோரிடமு அன்பு, அறம், நேசம், உதவி என்ற நற்பண்புகளை அவர் பேணி மக்கள் பால் காட்டிய கருணை.. மக்களுக்கு அவர் காட்டிய அன்பு.. மருத்துவத்தை ஏழை எளிய மக்களுக்காக சேவையாகவே செய்து பல உயிர்களை காத்து நின்றது தான். இத்தனை மக்கள் திரள் ஒன்று கூடி தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறது என்றால் இதில் மருத்துவர் ஐயா அவர்கள் மக்களின் மீது காட்டிய மெய்யன்பும், மக்கள் அனைவரும் மருத்துவர் ஐயா அவர்களிடம் காட்டிய பேரன்பு மட்டுமே காரணம். ஒரு அரசியல் வாதிக்கோ.. ஒரு நடிகருக்கோ கூடிடும் கூட்டத்தில் சூது இருக்கும், ஏமாற்று இருக்கும், வஞ்சகம் இருக்கும் ஆனால் இங்கு கூடிய கூட்டத்திற்கோ அவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அன்பும்.. ஆற்றாமையும், மனிதநேயரை பிரிந்துவிட்டோம் என்ற பிரிவுத்துயரும் தான் காரணமாக திகழ்ந்தது.

தினமும் காலை மருத்துவ மனைக்கு வந்து நோயாளிகளை பார்க்க உட்கார்ந்தால் மதியம் மூன்று மணி வரை பார்ப்பார்.. இடையில் உணவு கூட இல்லை எல்லாம் பிறகு தான். பிறகு சாப்பிட்டு வந்து மீண்டும் மாலை மருத்துவமனை வந்தால் ஓய்வின்றி இரவு பதினொன்று முப்பது வரை பார்ப்பார் சில நேரம் பன்னிரெண்டும் ஆகும். இதற்கிடையே எத்தனை எத்தனையோ அர்ஜென்ட் கேஸ்கள் வேறு.. மருத்துவமனைக்கு வருவதையும் பார்ப்பார்.. பல சமயம் அவர்களின் வீட்டிற்கே ஓடிப்போய் பார்த்துவருவார். எந்த ஊர் எந்த இடம் என்றெல்லாம் பார்க்கமாட்டார்.. துடிதுடித்து வரும் மக்களின் நாடித்துடிப்பறிந்து ஏதோ தனக்கோ தங்கள் குடும்பத்திற்கோ நேர்ந்த துன்பம் போல எண்ணி ஓடி வருவார். அது மட்டுமல்ல இரவு மருத்தவ மனையிலிருந்து சென்று உணவருந்தி விட்டு பன்னிரெண்டு மணிக்கு மேல் அப்போது தான் படுக்க சென்றிருப்பார் அதற்குள் ஐயா.. அவசரம்.. உடனே வாருங்கள் டாக்டர்.. என்று கதவு தட்டும் குரலுக்கு முன் தான் சட்டையை மாட்டிக்கொண்டு பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடி வருவார். 



துபாய் வரும் முன் நானே கூட ஒரு முறை தெருவில் ஒருவர் வீட்டில் திடீர் உடல் நலக்குறைவு என இரவு இரண்டு மணிக்கு போய் அழைத்து வந்திருக்கிறேன். எத்தனையோ முறை எனக்கும்.. என் தாய் தந்தையருக்குமாக அவசர காலத்தில் உதவியிருக்கிறார். அந்த சேவையை எல்லாம் நான் என் மனக்கண் அழுக இன்று நான் அழுது நினைத்துப்பார்க்கிறேன். அய்யம்பேட்டையில் எத்தனையோ மருத்துவர்கள் இருந்தாலும் ஐயா.கோட்டைசாமி போல் ஒரு கருணை வடிவத்தை பார்ப்பது அரிது. அதிலும் அதிகமாக காசு வாங்காது.. அதிக பணத்திற்கு ஏதேதோ எழுதி கொடுத்து இம்சை செய்யாது மனிதாபிமானத்தோடு ஏழை எளிய மக்களின் உடல் நலனில் அக்கரை கொண்டு இப்படி ஒரு ஓய்வறியத… உறக்கம் பார்க்காத மக்களுக்காவே பணி செய்த சிறப்பான மருத்துவர் மறைந்து விட்டாரே என்று தான் மனம் புலம்புகிறது. 


இனி  அய்யம்பேட்டைக்கு மட்டுமல்ல எங்கள் வழுத்தூர், பசுபதிகோவில், மாங்குடி, இன்னும் ஆற்றைக்கடந்த அக்கரை ஊர்கள் என எத்தனை எத்தனையோ ஊர்மக்களான நாங்கள் அவசர உதவிக்கு இனி யாரை அழைப்போம்.. இருக்கும் மருத்துவர்கள் எல்லாம் காசு பறிப்பவர்களாகவும்… வார்த்தைகளால் இன்னும் மனதை ரணப்படுதுகிறவர்களாகவுமே இருக்க எங்களை இப்படி தவிக்க விட்டுச் சென்றுவிட்டீர்களே ஐயா! மருத்துவம் படித்தவர்கள் எப்படி எல்லாம் வாழவேண்டும்.. எப்படி சேவையாற்றவேண்டும் என்பதற்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டிய மனிதநேயர் அல்லவோ நீங்கள் ஐயா!

அன்பும் மனிதநேயமும் பொய்த்துப்போய்விட்ட இவ்வுலகில் அதை பறைசாற்ற ஆங்காங்கே ஒரிரு ஜீவன்கள் தெய்வாதீதமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறது. அதன் காரணத்தாலேயோ என்னவோ இன்னும் இப்பூவுலகில் மழை பொழிகிறது.. நல்லவைகள் நடக்கிறது. அந்த வகையில் மறைந்த மருத்துவ சீலர் ஐயா.கோட்டைச்சாமி அவர்களின் சேவை என்றும் நினைத்து நன்றி பாராட்டதக்கவை. ஐயா நாங்கள் இருக்கும் வரை உங்களை பார்த்த சிறு பிள்ளைகள் அவர்கள் வாழும் வரை உங்களை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.. இன்னும் அடுத்த தலைமுறைக்கும் இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று தங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லி எத்திவைப்பார்கள். அம்மாதிரியான அபூர்வமானவர் அல்லவோ நீங்கள்.

மருத்துவர் கோட்டைசாமி அவர்களின் ஆன்மா சாந்தி அடைவதாக! நித்திய ஜீவன் எய்திடுமாக! அன்னாரின் நீடுபுகழ் என்றும் நிலைபெறுமாக!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

முகநூல் - நவம்பர் 2014

பறப்பது தான் எத்தனை சாகசம்! 
பறப்பது தான் எத்தனை பரவசம்!!
பறப்பது தான் எத்தனை அதிரசம்!!!               2nd November 2014

காலம் கடந்து நிற்கும் நாயகர்களின் வரலாறெல்லாம் நமக்கு மலை போன்ற துணிவையும்.. கடல் போன்ற உத்வேகத்தையும் தான் தருகிறதே அன்றி வேறென்ன..!          3rd November 2014

எதிர் பாராமல் தான் மன மகிழ்வும்.. 
மனச் சோர்வும் கணந்தோறும் நம்மை கட்டியணைக்கிறது.

விழி நுகர்வும், செவி நுகர்வும், 
உடல் நுகர்வும் எப்போதும் நமக்கு 
எதை எதையோ தந்தவண்ணமே இருக்கிறது!       4th November 2014

நமது பெண்களை மனரீதியாக வலிமயானவர்களாக.. எதையும் எதிர்கொள்ளும் துணிவு மிக்கவர்களாக பழக்கவேண்டியது காலத்தின் அவசியம். அதிலும் இணைய மின்னணு கருவிகளின் உதவியோடு தொடுக்கப்படும் வக்கிரம கொடுமைகளுக்கு எதிராக அவர்களை தயார் படுத்துதல் மிக முக்கியம். 

புதிய தொழிற்நுட்பத்தினை பயன்படுத்தும் போது அதை பாதுகாப்பாக எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும்.. அதையும் மீறி ஏதேனும் தாக்குதல் அல்லது நோக்குதல் தலைபட்டால் எப்படி அதை தவிர்ப்பது அல்லது அதை எப்படி இனங்காணுவது அல்லது எப்படி தடை செய்வது என்றெல்லாம் குறைந்த பட்சமாவது தெரியப்படுத்த வேண்டும்.

நிகழ்காலத்தில் அறமெல்லாம் இல்லை..எங்கும் எங்கிலும் மறமே மட்டற்று காண கிடைக்கிறது. ஆதலால் அறநெறியாளர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தினையும் தாங்களே தற்காத்துக்கொள்ளுதல் அவசியமாகிறது. 

4th November 2014

எல்லாவற்றிலும் 
முந்த வேண்டும் 
என ஆசைப்படும் மனிதன்.

மரணத்தில் மட்டும் 
எல்லோரை விடவும்
பிந்த வேண்டுமாய்!        6th November 2014

நான் வரும் வழியெல்லாம் பவுர்ணமி சிரிக்கிறது  6th November 2014

பொதுவாக எல்லா உணவகங்களின் பொது மொழியும் "அண்ணனுக்கு ஒரு ஊத்தா..ஆ..ப்ப்ப்பம்ம்ம்ம்!!!!!" என்னும் பாணியில் தான் இருக்கிறது. இதில் எனக்கு தெரிந்து மொழி, இன, இட பேதமில்லை.
-11th November 2014

"மன்மோகன் சிங்கிற்கு இலங்கை மீது இருந்த பார்வை இப்போது இருக்கும் மோடி அரசுக்கு இல்லை... நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் மோடி அவரது பதவி ஏற்பிற்கு ராஜபக்‌ஷே-வை அழைத்த போது மனதில் கவலையோடு தாங்கிக்கொண்டோம்"..... மதிமுக பிரமுகர் தந்தி டிவி விவாதத்தில்

# என்னையா அப்போ அவர என்னன்னமோ சொல்லி கழுவி ஊத்துனீங்க... இப்ப அவர ஆகா.. ஓகோ..ங்கிறீங்க..

அதிலேயும் வைகோ முதல் எல்லோரும் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கை பேசியதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்தது தான். அதற்குள் இத்தனை மாற்றமா.. 

இந்த அரசியல் அவதார புருஷர்கள் எந்த நேரத்திலும் எந்த ரூபமும் எடுப்பார்கள்..இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா..!   -12th November 2014

திருக்குரளைப்பற்றி தருண் விஜய் பேசுகிறார்.. 
தமிழ் மொழிப்பற்றியும்.. தமிழ் மொழி பற்றினைப் பற்றியும் ஒரு வடமொழிக்காரர் பேசுவது ஆச்சரியம் தான் ஆனால் அதை சமஸ்கிருதத்தை மட்டுமே எங்கிலும் கொண்டுவர நினைக்கும் சங் பரிவார அமைப்பிலிருந்து வரும் ஒரு குரல் இதை மொழிகிறதே எனும்போது தான் எங்கோ இடிக்கிறது.

இனிக்கும் இந்தப் பழத்தில் எங்கே ஊசி எனத்தெரியாமல் ஏனோ திராவிடம் முழங்கும் வைரமுத்து பேதலித்துப் போய் விழா எடுக்கிறார். 

என்னவோ போங்கப்பா..!                                -12th November 2014

ஒரு பிரமாண்ட ஆளுமைக்குத்தான் எத்தனை ஈர்ப்பு


ஆஸ்கர் நாயகன் விஜய் டிவி அரங்கிற்குள் வந்து கொண்டிருக்கிறார்

முட்பாதைகளை கடந்த மேதைகளுக்கு உலகம் தன் தோள்களில் மலர்மேடை அமைத்துத் தருகிறது...!

# ஏ.ஆர் ரஹ்மான் அரங்கில் அமர்ந்து சிரிக்கிறார்.       -12th November 2014

புதிதாக தொடங்கப்பட்டதமிழ் தொலைக்காட்சியான News 7 Channel பார்க்கும் போது ஏதோ இலங்கைக்காரர்கள் நடத்தும் ஆஸ்தேலியா அல்லது ஜெர்மன் தமிழ் தொலைக்காட்சி போல உணர்வு ஏற்படுகிறது.

அப்படி ஒன்றும் புத்துணர்வோடு இல்லை.

ஐந்து பேரின் தூக்கு தண்டனை ரத்து ஆகுமென அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அப்படியான முடிவை ராஜபக்‌ஷே உண்மையில் எதனடிப்படையில் எடுத்தார் என்பதே அவருக்குத்தான் வெளிச்சம்.

இதெல்லாம் அரசியல் சதுரங்க விளையாட்டின் தொடர் நகர்வு நாடகங்கள்.. இதில் பாஜக-வின் தமிழ்நாட்டு அரசியல் பிழைப்பும் அடங்கும். ஆனால் இதில் என்ன விளையாட்டென்றால்.. ஒரு பக்கம் பாஜக.. "பார்த்தீர்களா நாங்கள் மீனவர்களை மீட்டுவிட்டோம் இது தான் மோடி தர்பார்" என்கிறது மறுபக்கம் அதிமுக "மக்கள் முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சி" என்கிறது, இன்னொரு பக்கம் கலைஞர் "தான் வெளியிட்ட அறிக்கையின் பலன் தான் இது" என்றும் "நாங்கள் கேட்டுக்கொண்டிருந்ததின் பேரில் தான் மோடி பரிந்துரைத்தார் ராஜபக்‌ஷே ஏற்றுக்கொண்டார் ஆதலாம் மோடிக்கு நன்றி " என்றும் அவரவர் தங்களால் தான் இது ஆனது என ஆதாயம் தேட அழுவதா சிரிப்பதா எனத்தெரியாத ஒரு அருவெறுப்பான அரசியல் நடந்தேறிக்கொண்டிருக்கிறது.

நல்லவேளை விஜயகாந்த்க்கு இது போல தான் தான் இதற்கு காரணம் என்று சொல்லி ஆதாயம் தேட இதுவரை யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை.           
-14th November 2014

வெள்ளைச் சட்டைகள் என்றாலே எப்போதும் பிரச்சனை தான்,
சீக்கிரம் கறைப் பட்டுவிடுகின்றது!.        -16th November 2014

சாத்வீகன் நான்.. 
சாணக்யனா என்றெல்லாம் 
தெரியாது!

I am just optimist,
Really I don't know
Sanakya is I am or not!             -17th November 2014

இருவர் அரசாட்சி செய்தால் மட்டுமே அந்த ஆட்சியில் எல்லா மக்களும் சிறப்பாக இருக்க முடியும்.. ஆட்சி அற்புதமாய் அமையும்.. 

1. மதம் கடந்த உண்மையான ஆன்மீகவாதி

2. மனிதநேயமுள்ள நாத்திகவாதி

மற்றபடி மூட பக்தியுள்ள எந்த மதத்தினவன் அரசாட்சிக்கு வந்தாலும் அது டிகால்டி..புபால்டி.. ஆட்சியாகத்தான் விளங்கும். அது தான் எல்லா இடத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. மேலே சொன்ன இரு தரப்பினரின் ஆட்சிக்கு உலகில் எத்தனையோ முந்தைய வரலாறு உண்டு. இன்றோ அதை எல்லாம் உண்டு செரிக்க காத்திருக்கும் ஆட்சியாளர்களே உண்டு.          -18th November 2014

நிற்க வேண்டுமானால் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்...................முடியும் வரை ஓடுவோம்.
 -18th November 2014

தலைக்கு மேலே வெள்ளம் வந்தாலும் கூட மனநிலையை ஒருவித ஜென் நிலையில் வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகளின் பிரத்யோக கல்யாணகுணம் பிரஜைகள் அனைவரும் கற்க வேண்டிய மேலான யோகநிலை.  -19th November 2014

தமிழனின் சாந்த குணத்திற்கு அவன் கேட்டுக்கொண்டிருந்த இளையராஜா மெலடி மெட்டுக்கள் கூட காரணமாக இருக்கலாமோ.. இன்றைய 'டமால்.. டுமீல்.. ' இசை, தமிழனின் தார்மீக குணத்தில் சற்றே சலனத்தை ஏற்படுத்துவதாய் கூடக் கருதத்தோன்றுகிறது  -20th November 2014

அறிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களுடன் நீண்ட உரையாடல் தந்தது இந்நாள். 

தமிழ்,ஆங்கில மற்றும் மேல் நாட்டுத் தமிழ் அறிஞர்கள், இலக்கியம், ஏகத்துவம், தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமிய நெறி, பெரியாரும் இஸ்லாமும், அறிஞர்கள் மற்றும் எழுத்துத்துறை என எத்தனை எத்தனையோ விசயங்களை மடை திறந்த வெள்ளமென கொட்ட.. அறிவின் அருவியில் குளித்த நிறைவோடு விடைபெற்றேன்.

நேற்றையாகிவிட்ட வசந்த காலங்கள் 
ஆரற்றியழுது இனி யார் புலம்பினாலும்
தேற்றிடத்தான் திரும்பி வருமா..?

அறிவியியல் காலத்தின் ஆயிரம் சுகங்காணும்
அறிவின் புதியவர்கள் ஏதுமற்றக் காலத்த்தின்
இணையில்லா இன்பமமெல்லாம் தவறவிட்ட சுவனமன்றோ!!!!

இந்த குளிர்காலத்து காலைப்பொழுதில்
இளஞ்சூடுடன் பறிமாறப்பட்ட 
கோப்பைத் தேனீரில் 
மெல்லிய ஆவிகள் பறந்திருந்தது...

சிறுமிடறுகளாய் ஒன்றிச் சுவைத்த அது,
இன்னும்.. இன்னும்.. கோப்பையில் 
வளராதோவென நிறைய ஏங்கிய நேரத்தில்
காலியானது அத்தேனீர் கோப்பை!

வாயில் சுரந்த எச்சிலோ கூடுதல் தேனீருக்காய்.               -21st November 2014

உலகலாவிய குழந்தைகளின் மனநிலையை கவனித்தால் கடந்த இருபதாண்டுகளில் அதிக வன்மம்..அதிக மனச்சோர்வு.. என எல்லாம் கூடி இருப்பதாகவே உணர முடிகிறது. முந்தைய காலத்து குழந்தைகளை விட அறிவில் கூடி இருக்கிறது என்ற மகிழ்வு ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் அவர்களின் உடல் நலம்.. மனநலம் இவற்றில் பின் தங்கிய வருத்தச்சூழலலை யாரும் மறுக்க முடியாது என்றே தோன்றுகிறது.

குழந்தைகளின் மனநிலை மேம்பாட்டிற்கு ஒரே வழி தாய் தந்தையரின் அன்பும், அவர்களோடு தோழமையோடு ஐக்கியமாகி அவர்களுக்கு வேண்டிய தீர்வை அவர்களே கனிவோடு முன்னெடுப்பதுமே தீர்வாகும் என்பது என் நிலைப்பாடு. ஏனெனில் இக்காலத்தின் சூழல் பெரும்பாலும் தாய் தந்தையரை பிள்ளைகளிலிருந்து அந்நியப்படுத்தியும், அன்பு பாராட்டுவதை தடுத்தும் வைத்திருக்கிறது.

குழந்தைகளின் நலன் தான் நாளைய தேசத்தின் நலன்.  
  -23rd November 2014

ராம்கோ சிமெண்ட் விளபரத்தை டிவியில் பார்த்தேன்... அதில் காட்டுவதெல்லாம் துபாயின் கட்டிடங்கள்..கடைசியில் எழுத்துப்போடும் போது நமது ஊரைக் காட்டி விளம்பரம் முடிகிறது... என்னமா பிலிம் காட்ராய்ங்க....!!!!      -23rd November 2014

தேவைகள் தான் வாழ்வை நகர்த்துகிறது... 
பசி எடுக்கும் வயிறு இல்லையாயின் 
மனிதன் விசும்பி உழைப்பது எங்ஙனம்!    -24th November 2014

நாடகங்கள் பெரும்பாலான பார்க்கும் பொழுதுகளில் நிஜமாகவே தோன்ற, இது நாடகம் என்ற உணர்வின் பிரக்ஞை கூட இல்லாதிருக்கிறது வாழ்க்கை எனும் நாடகத்தில். -24th November 2014

தீக்குள் விரலை வைத்தால் நீ என்னை 
தீண்டும் இன்பம் பயக்குதடா நந்தலாலா...... 
....................மகாகவிகளாகவே சிலர் சுடர்மிகுந்து பிறக்கிறார்கள்   

   -25th November 2014

உன்னையே உற்றநோக்க ஆசைதான்
உறக்கம் அழைக்கிறதே... என்ன செய்ய,
இன்றே தீர்ந்துவிடும் சொற்பம் அல்லவே நீ ...!
மீதம் அதீதமளவு இருக்கத்தானே செய்கிறது உன்னில்,
தொடராமலா போகப்போகிறோம் இனி...
கண் இமைக்காமல் உன்னையல்லவா
கணம் தோறும் பார்த்துக்கொண்டிருப்பேன்..
இது தானே தொடரும் தொடர்கதை..
உன்னிடம் தானே எண்ணங்களே உருப்பெறுகிறது
உன் அசைவினில்லன்றோ
திசைகளின் செய்திகள் தீ போல் பரவும்
இசையையும், என் அறிவின் பசியையையும்
இன்னபிற இதர இன்பங்கள் யாவையும்
நீயேயன்றி யார் தீர்க்கிறாராம் இங்கே...
நாளை நாமக்கு தூரமெல்லாம் இல்லையெனத் தெரிந்தும்
நான் உறங்கச்செல்கிறேனென்று வருந்தாதே வீணாய்,
விடிந்ததும் இன்னொரு தொடக்கத்தின்
புதிய அத்தியாயத்தை எழுதுவோம் காத்திரு!

‪#‎FB‬ பத்தித்தான்.      
  -25th November 2014

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

21 நவம்பர் 2014

வா.. வந்து பேசு!


பேச வந்துவிட்டு
பேசாமல் போனதும் ஏன்...?

வாயெல்லாம் தேன் சுமந்தும்
வார்த்தைகளில் வடிக்காததும் ஏன்..?

மலர்ச்செண்டு கொண்டு
அடிப்பதையெல்லாம்
மகத்தான வலியென்றால்
எங்கே தான் போய் உரைப்பதாம்.

பரிதியின் ஒளியொத்த கண்களோடு
உறுதியாய் கணிவு கொண்டல்லவா
எத்தனித்து வந்தாய்....
பின், பின்வாங்கியதும்
அறமா.. நலமா..???

பாசத்தின் வாசத்தில்
கிள்ளுதல் அள்ளுதல்
செல்லமாய் தள்ளுதல்
அன்புத்தொல்லையால் கொல்லுதல்
எல்லாம் கூட சகஜமன்றோ....

இதெற்கெல்லாம் உன்மூக்கு
உதட்டோடு போட்டியிட்டுச் சிவந்தால்
நீதிதேவதை அழவல்லவா செய்வாள்..!

தாமதிக்காது வாயடி
என் வாயாடிப் பெண்ணே...!

தேக்கி வைத்திருந்த
வசந்தங்களை யெல்லாம்
உன் வார்த்தைத்தைகளால்
என் நெஞ்சத்தில் அள்ளி வீசு!
நம் அன்பினில் ஏதடி மாசு!!

வா.. வந்து பேசு!!!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


16 நவம்பர் 2014

நீயும் நானும்!



உனக்கு நிகர்தான் யார்!
உன்னிடம் தானே உள்ளம் இழந்தேன்!
உன்னிடம் தானே என்னை இழந்தேன்!
உனக்கு நிகர்தான் யார்!
*
மனம் நிறைந்தது நீ
மணம் நிறைத்தது நீ
குணம் சிறந்தது நீ
தினம் நினைவில் நீ
*
அணு' பவத்தில் நீ
அனுபவத்தில் நீ
ஆசையாவும் நீ
அசைவுகள் யாவும் நீ
*
கொஞ்சல் நீ கெஞ்சல் நீ
அஞ்சல் நீ அஞ்சாமை நீ
ஆறுதல் நீ ஆற்றுதல் நீ
போற்றுதல் நீ புகழ் நீ
*
இதம் நீ வதம் நீ
அதம் நீ சதம் நீ
பதம் நீ விதம் நீ
நிதம் நீ திதம் நீ
*
என் பேச்சு நீ என் மூச்சு நீ
என் அழகு நீ என்அறிவு நீ
என் காதல் நீ என் கதி நீ
என் கூடல் நீ என் ஊடல் நீ
என் மோதல் நீ என் முக்தி நீ
என் சாதல் நீ என் சகலமும் நீ
*
நீ! நீ! நீ!
நான்! நான்! நான்!
நீ! நான்!  நான்! நீ! நான்! நீ! நீ! நான்!
நான்! நீ! நீ! நான்! நான்! நீ! நீ! நான்!
நாநீ...நீநா......................!!!

*
கலந்தோம்...!
இழந்தோம்..!
நிறைந்தோம்..!
சிறந்தோம்!!!!
*
தோம்..தோம்..தோம்...!!!!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்............!!!
..........................................!!!
*
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

15 நவம்பர் 2014

கவிதை என்றால்....???



இன்னும் எப்படி என்று
தெரியவில்லை கவிதை எழுத!

ஆனாலும்,
எழுதிக்கொண்டிருக்கிறேன்
கவிதை.

புதுக்கவிதை என
கதைவிடுகின்றனர் சிலர்,
எழுதிய குறுங்கதைக் கூட
கவிதை எனப்படுகிறது,

நிகழ்வுகளை மடக்கி.. மடக்கி..
சுவாரஸ்யமாய் விதைக்கின்றனர்,
அதுவும் அழைக்கப்படுகின்றது
கவிதை யென,

புரியாத சொற்பிரயோகம்
அறியாத அடுக்கு மொழிகள்
தெரியாத கற்பனைகள்
இவைகளின் கூடல் கூட கவிதையாம்,

எதார்த்தம் குறையாமல் - நிறை
பதார்த்தம் நிரப்பி
நடைமுறை வழக்கம் விளங்கி
விளக்கிடுவர் நம்மவர்
அது கூட கவிதை!

உணர்வுகளை எழுதும் போது
நெல்லினூடே உமிகளை
ஊதித் தள்ளுவது போல‌ச்
சொல்லினூடே உமிகளை நீக்கிச்
சுவைகல்ந்து படைக்கின்றனர் கவிதை.

சிலர் எதுகை மோனையுடன்
எதிலும் பொருள் சேர்த்து
எளிதில் புரியும்படி
இயற்றுவதும் கூட கவிதை
ஆனாலும் அதை புத்துலகில்
கவிதை என மதிக்கிறார்களில்லை,

எது எப்படியோ....ஆனாலும்

இன்னும் எப்படி என்று
தெரியவில்லை கவிதை எழுத!

ஆனாலும்,
எழுதிக்கொண்டிருக்கிறேன்
கவிதை.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

14 நவம்பர் 2014

நான் மட்டுமே!



வீருகொண்ட வேங்கையாய்..!
சினங்கொண்ட சிங்கமாய்
வெற்றி வெறிபிடித்து அழைகின்றேன்..,

என்னை வீழ்த்திட எவனும் பிறக்கவில்லை

என்னை நான் காட்டிக்கொள்ளவே
மண்ணில் வந்தேன்

இமயம் கூட உயரம் என
இனி இருக்கக் கூடாது
அதற்கு நானே உதாரணமாக வேண்டும்,

காலடியில் உலகமதை
மிதிக்கும் சகல வல்லமை
பெற்றவன் நான் மட்டுமே!

வெற்றி வெற்றி என்ற
ரீங்காரத்தை தவிர
எந்த ஒலியையும்
என் செவி
இனி ஏற்காது!


2001- பிப்ரவரியில் எழுதியது திருச்சியில் டி.எஸ்.எம். சாஃப்டி-ல் வேலைசெய்த போது.. இப்படியும் ஒரு அக்னிப்பிரவாகம் அவ்வப்போது என்னில் வெடிக்கும்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

09 நவம்பர் 2014

உண்மை நிலை



உண்மையில்
உண்மையை எந்த வாசல்களும்
ஏற்றுக்கொள்வதே இல்லை...,

வேடம் தரித்து வந்தாலே
நம்பிக்கையுடன் இருக்கதவுகளும்
திறந்து வரவேற்கிறது.

உண்மை இது நாள்வரை
மூடப்பட்ட பொக்கிஷமாகவே
இருந்ததினால்...
உண்மை உடைகலைந்து வந்தாலும்
உலகம் நம்பத்தயாராக இல்லை.

பொய்யையே மெய்யென
நம்பிப் பழக்கப்பட்ட அவர்களுக்கு
இன்னும்.. இன்னும் பொய்யை
அளிக்கொடுத்து சந்தோசப்படுத்துங்கள்
அவர்கள் மனம் சாந்தி அடையட்டும்.

ஆனாலும்...
மழையினில் நனைகையில்
சாயம் வெளுக்கும் அச்சணத்தை
கண்டவர் யாரும்
இங்கே சொல்லத்தான் 
மீளப்போவதில்லை.

ஆதலால்...
இன்னும்.. இன்னும்
பொய்மை வலிமை பெற்றே
அரசோச்சட்டும் இங்கு.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

08 நவம்பர் 2014

மாறிடும் காட்சிகள்



உருண்டோடுகிறது நாட்கள்
மாறிக்கொண்டே இருக்கிறது காட்சிகள்!

திரைக்குப்பின்னால்
இருக்கும் இரகசியமாக
ஒவ்வொரு கணமும்
ஏதுமறியா எதிர்பார்ப்பில்..!

விடியலுக்கும்...
மயங்குதலுக்குமிடையில்,
எத்தனை எத்தனையோ
எண்ண வண்ணங்களின் மீட்சிகள்..!

சிந்தனைச்சிறையில்
அடைபட்டிருக்கும் மனிதர்கள்
சிந்தாந்த சிறையில்
பூட்டப்பட்டிருக்கும் மாந்தர்கள்...!

மன ஓசைகளின்
ஆசைப்பட்டியலையே
விரிப்பாய் விரித்தபடியால்
வாழ்க்கைப்பாதையே
முள்படுக்கையாக..
தவித்துக்கொண்டிருக்கும்
பெருங்கோடி சனங்கள்..!

நீயா.. நானா வெனவே
எதிரெதிரே விவாதமே போதமாக
வாழ்வினில் அழியும்
ஆன்மவிரோத ஜென்மங்களின்
போலி எதார்த்தங்கள்..!

அரசியல் அழிச்சாட்டியங்கள்
மீண்டும்... மீண்டும்.. சுரண்டப்படும்
கஞ்சிக்கே வழியறியா
அன்றாடங்காய்ச்சிகள்..!

வியாபார முதளைகளின்
விசக்கோட்பாடுகள்,
அழியும் கிராமங்கள்
மறையும் விவசாயம்
சாகும் இயற்கை
வெந்து சாம்பலான அறப்பண்புகள்

எங்கும் பொய்மைகள்
அரிதாரப்பூச்சுகளின்
அலங்காரங்கள்,
வெற்று கேளிக்கைகள்
வீண் விளக்கங்கள்.....................................
...................................................................
.....................................................................
இப்படியான உலகில்,
ஒன்று முடிய இன்னொன்றாய்
வரிசை கட்டி வருகிறது
மனித ஜென்மங்கள்,
வாழ்வதாக சொல்லிச் சாக!

உருண்டோடுகிறது நாட்கள்
மாறிக்கொண்டே இருக்கிறது காட்சிகள்



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா