05 செப்டம்பர் 2023

சனாதனம் - உதயநிதி ஸ்டாலின் - சர்ச்சை



சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சில் தவறில்லை தான் நாம் அவரோடு முழுக்கவே உடன்பட்டு நிற்கிறோம்,  அமைச்சர் உதயநிதி கூறிய கருத்துக்களை பிஜேபி வடநாடு முழுக்க தீயாய் ஊதிப் பெருக்கி எங்கும் எரியவிட்டு நாட்டில் இது ஒன்று தான் பிரச்சனை என பரப்பி வருகிறது. இங்கு உதயநிதி பேசி சூடு ஆறுவதற்குள் பார்த்தீர்களா  இந்துக்களை அழிக்க வேண்டுமாம் என்று அமீத்ஷாவும், நட்டாவும் வடக்கில் அவதூறு பரப்ப ஆரம்பித்துவிட்டனர், உண்மையைச் சொல்லப்போனால் இந்தியா முழுக்க அறியப்பட்ட தமிழ்நாட்டுத் தலைவராக உதயநிதியை ஆக்கிவிட்டார்கள் என்பதும் மகிழ்ச்சியான செய்தி தான்.

ஆனாலும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு  பெருவிருந்தைப் போல இதை அவர்களின் வடநாட்டு சங்கி ஊடகங்களை வைத்து மிகப்பெரிய பேசுபொருளாக மாற்றியதோடு மட்டுமல்லாமல் இதை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு எதிராக பரப்பி வருகின்றனர் என்பதும் கவனிக்கத்தகுந்தது. காங்கிரஸ் இது போன்ற இந்துக்களுக்கு எதிரானவர்களோடு தான் கூட்டணி வைத்திருக்கிறது, இது தான் இவர்கள் லட்சணம் இவர்களை ஜெயிக்கவிடலாமா? என்று களேபரமே நடத்திவருகிறார்கள்.

பிஜேபி எப்படி 2ஜி விசயத்தை பரப்பி அறுவடை செய்ததோ அதே போல இப்போது சி.ஐ.ஜி அறிக்கை வந்து அவர்களின் ஊழல் அம்பலப்பட்டு போக இருந்த நிலையில் இந்தியா கூட்டணி இதை பட்டி தொட்டி எங்கும் பரப்பி இவர்களின் உண்மை முகத்தை காட்டப்போகும் சூழலில் கிடைத்தது தான் சனாதன விவகாரம். மக்களுக்கு தங்கள் ஊழல் செய்தி நிர்வாக குறைபாடு எல்லாம் சென்று சேராமால் திசைத் திருப்ப இந்த வலுவான மதவாத காரணம் கிடைத்திருக்கிறது.

இருக்கவே இருக்கு வடக்கே சாமியார்களின் பலமும் ஒத்து ஊதும் ஊடகங்களின் பலமும் உண்டு கூடவே வளர்த்து வைத்திருக்கின்ற மூடர் கூட்டங்களும் உண்டு  எனவே இதை விட மாட்டார்கள் பிஜேபி தங்களுக்கு வந்தால் ரத்தம் எதிர்கட்சிக்கு வந்தால் தக்காளி சட்னி ரேஞ்சில் தான் இதை மடைமாற்றம் செய்துவிட்டது, இது அவர்களின் வாடிக்கை. ஏனெனில் இது போன்று மதவாதமாய் மடைமாற்றி மக்களை ஒன்று திரட்டி ஓட்டாக மாற்றுவதில் வெற்றிகண்டவர்கள் இதையா விடுவார்கள்.

ஆகவே நாம் மிகுந்து நிதானமாக அடியெடுத்து வைக்க வேண்டும், மிக முக்கியமாக தமிழ்நாட்டு சிந்தனைக்கும் வடநாட்டு சிந்தனைக்கும் நினைத்துப் பார்க்க முடியாத தூரம் வேறுபாடு உண்டு, அவர்களின் சிந்தனையை தூண்ட, உறக்கத்தைக் களைக்க இங்கு இருந்த தமிழ்ச்சான்றோர்கள் போல, திருவள்ளுவர் போல,  பெரியார் அண்ணா கலைஞர் போல தலைவர்கள் இல்லை. இவ்வளவு ஏன் வடநாட்டிற்கு நாம் போக வேண்டாம் பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலுங்கானா கூட நமக்கு முன்னால் நிற்கமுடியாதவர்கள். அவர்களும் சித்தாந்த சிறையில் தான் அடைபட்டு உள்ளனர். அண்டை மாநில மக்களோடு பழகும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் அவர்களின் சிந்தனை ஓட்டம் நமக்கு எவ்வளவு வேறுபாடு மிக்கதாய் உள்ளது என ஆராய முடிகிறது.

இதில் கூட பாருங்கள் வடநாட்டு காங்கிரஸ்காரர்களே பலர் எதிர்க்கிறார்கள், ராகுல் இதுவரை கருத்துக்கூறாமல் தவிர்க்கிறார். மம்தா இதை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளாமல் யாரையும் வெறுக்கக்கூடாது நாங்கள் கூட பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வரை கொடுக்கிறோம் என்கிறார். சிவசேனா இதில் இதில் ஆதரிக்க முடியாது ஏனெனில் இந்துக்களுக்கு மட்டுமான கட்சியாக ஒரு காலத்தில் இருந்த் அந்த கட்சியை அதற்கு எதிரான கட்சி என பரப்பி  ஏற்கனவே அவர்கள் படு டேமேஜ் ஆகி கிடக்கின்றனர். ஆக இது இந்தியா கூட்டணியில் இது ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது என ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். எனவே பல கட்சியினருக்கு தமிழ்நாட்டு சிந்தனை புரியாது, எவ்வளவு விளக்கினாலும் அவர்களின் மண், சிந்தனை, வளர்ப்பு வேறு நமது மண் நமது சிந்தனை நமது வளர்ப்பு வேறு தான்.

எனவே சூழ்ச்சிக்கார அசுரனான பிஜேபியை தேர்தல் நேரத்தில் எதிர்க்க வியூகம் அமைத்து செயல்படுவது மிக முக்கியம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று அதிபராட்சியை நோக்கி நாட்டை நகத்திர்க்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்று சொல்லும் இந்த நேரத்தில் இவர்களுக்கு இந்த செய்தி இன்னும் வெற்று வாய்க்கு கிடைத்த அவல் போல தீனியாய் கிடைத்துவிட்டது.

ஆகவே இந்த விசயத்தை தேர்தல் நேரமாக இருப்பதால் இப்போது கொஞ்சம் பேசாமல்  ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் உண்டு மேலும் வேண்டிய விளக்கத்தை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கவும் வேண்டும். கூட்டணி ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும். எல்லோரும் ஒரே அலைவரிசையில் என்பதை உறுதி செய்ய வேண்டும். இப்போதைய தேவையெல்லாம் பிஜேபி கூட்டணியை வியூகம் அமைத்து எப்படி வெல்லலாம் என்பது மட்டுமே. அதில் மட்டுமே இனி அல்லும் பகலும் இந்தியா கூட்டணி கவனம் செலுத்த வேண்டும்.

 

வாழ்க இந்தியா.

 

- ஜா.மு