14 ஜூலை 2020

நல்ல நல்ல தலைவர்களை




*தொகைரா:*

சாரேஜஹான்ஸே அச்சான்னு
நம்ம அல்லாமா இக்பால் பாடினாரு
பாரே புகழ்ந்த திருநாட்ட
யாரு காப்பாத்த வருவாரு..

*பல்லவி:*

நல்ல நல்ல தலைவர்களை பார்த்திருந்த தேசம்
சொல்லிக்கொள்ள ஒண்ணுமில்லே இப்ப எல்லாம் வேசம்

*அனுபல்லவி:*

காந்தி ஆசாத் நேருவெல்லாம் தந்து சென்ற தேசம்
சாந்தியின்றி தவிக்குதடா நடப்பதோ துவேசம்

*சரணம் 1:*

அப்துல் கலாம் -நம்ம
அப்துல் கலாம் -அவர்
கண்ட கனா
இப்ப பெரிய வினா
நாட்டின் நிலை நம்ம
நாட்டின் நிலை - எந்தன்
பாட்டில் சொல்ல
ஒரு  மண்ணும் இல்லை
நல்ல பட்ஜெட் போட்டு பப்ளிக்கோட நிலை உயர்த்தாம
தினம் பெட்ரோல் ரேட்ட உயர்த்தி வெல வாசிஏத்துறாங்க..

*சரணம் 2:*

பட்டேல் சிலை -வல்லபாய்
பட்டேல் சிலை - முரட்டு
முவாயிரம் கோடி தின்ன சிலை
பட்டினிநிலை - மக்களின்
பட்டினிநிலை
மாற்றும்படி உருப்படி
திட்டம் இல்லை
பள்ளிவாசல இடிச்சு மக்கள ஏச்சு ஆட்சிக்கு வந்தவங்க
பெரும் நடிப்பு நடிச்சு சட்டத்த வளைச்சு ஆட்டம் ஆடுறாங்க

*சரணம் 3:*
சங்கம் வச்சான் -பரிவார்
சங்கம் வச்சான் - அதனால்
பங்கம் செஞ்சான் நாட்டுக்கே
பங்கம் செஞ்சான்
மாமன் மச்சான் - நாம
மாமன் மச்சான்
போல வாழ்ந்து வந்த உறவுக்கு
வேட்டு வச்சான்
நம்ம இந்துமுஸுலீம் கிருஸ்தவரெல்லாம் ஒருதாய்மக்கள்
இந்த உண்மை உணர்ந்து அன்பாயிருந்து (இந்திய) நாட்ட காப்போங்க


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
11-07-2020

பழம்பெரும் பாடகர் அபுல் பரக்காத்திற்காக எம்.எஸ்.வி இசையமைத்த "பட்டணத்து மாப்பிள்ளைக்கு பெங்களூரு பொண்ணு" என்ற பாடலின்   மெட்டிற்கு  எழுதியது.

தலைப்பிள்ளை!


எட்டி நிற்கும்
ஆனால்
விட்டுவிடாமல்
சுடரும் ஒரு தாரகை!

பள்ளிப்பருவத்தில்
எனை அள்ளிக்கொண்டு
தினம் சொல்லிச்சொல்லி
மகிழும் மனவழகர்!

நூல் கேட்டால்
நொடியில் தேடி
முடியில் சுமந்து
என் மடியில் வைக்கும்
படிப்பு குணம்!

ஆசான் வாழ்வில்
ஆயிரம் பூக்கள்-இது
வாசம் குறையாத
வாஞ்சைப்பூ!

எழுதிமாளாத
இளங்கவி!
சிறிதும் புழுதி ஏறாத
ஏடுகளில்
இவர் எழுத்து!

கலைப்பிள்ளை
கருத்தான
பெற்றோர்க்கு
கரும்புப்பிள்ளை
எனக்கும் இவர்
தலைப்பிள்ளை!
🌙

பிறந்தநாள்
வாழ்த்துகள்
தம்பி முகைதீன்
பாட்சா!

அழகு பிறைகள்
ஆயிரம்  காண்க!

-அன்பு ஆசான் அரசு ஐயாவின் வாழ்த்து.

சலாம் சூழட்டும்


இறைவனின் பெருங்கிருபை கொண்டு
நிம்மதி அடைந்தேன்.

சுவாசம் இலகுவாகி விட்டது.

நாடிநரம்புகளின் இறுக்கம் களைந்து
தளர்வாகி சீரானது.

குறுகுறுவென இருந்தநிலை விடுத்து
வழக்கம் போல ஆகினேன்.

அவன் என் சுமைகளை
என்னிலிருந்து இறக்கிவிட்டான்.

அமைதியானேன்.
அமைதியான கணங்கள்
அற்புதம் மிக்கவை
அதன் மதிப்பை
அமைதி இழந்த கணங்கள் தான் உணர்த்துகின்றன.

ஆதலால் எதார்த்தமாகவே
நம்மோடு இருக்கும்அமைதியை
ஒரு தேன்சொட்டு
நாவில் படும் சனம்
மனம் இழப்பதைப்போல;
சுவையான தேனீரில்
கணம் நம்மை மறப்பது போல;
அலாதி பிரியமானவளோடு
 கலவி களிக்கும்நேரம்
விழிதிறந்தும் நிலைமறப்பதைப்போல;
உணர்ந்து மகிழ்ந்து லயிப்போம்.

சலனமற்ற நீரோடை
மனதில் சலசலக்கும்
அமைதி கிடைக்கப்பெறுவது ஓர் பேறு
அது இறைவனின் பெரும் வரம்

நமக்குள் எப்போதும்
அமைதி எனும் சலாம் சூழட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
என்பது அது தான்.

எனக்கு மட்டுமல்ல
உன்னிலும் அமைதி நிலவட்டும்
என்பதே பரோபகார பதில் மொழி
வ அலைக்கும் சலாம்.

அதை எதிர்படும்
யாரைப்பார்த்தும்
எத்தருணத்திலும்
சொல்லவைத்த
வள்ளல் நபிக்கும்
இந்நேரத்தில் எந்தன்
பணிவின் சலாம்.

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு
அலைக்க யா ஸய்யிதி யா ரசூலல்லாஹ்.
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
23-06-2020 10:27pm


ஆன்ராய்டு அளவு

உதடு குவித்து- மோக
உணர்வு குவித்து பேரழுத்தமாய் ஓர் முத்தம் புதைக்க விரைகிறாய் முட்டி உடைகிறது நம் காமம் செல்போனின் சின்னத் திரையில். அடி போடி நமக்கு 'வாய்'த்தது ஆன்ராய்டு அளவு தான்.
'தா'மதமாய் பதியப்பட்ட "முத்த'மத" 💋 கவிதை.(ஜுலை6 உலக முத்தநாளாம்)

ஜா.மு. 09-01-2019

நான் ராஜா

எவன் புறக்கணித்தால்
எவன் அரவணைத்தால் எவன் முகம் சுழித்தால் எவன் கை கொடுத்தால் எவன் கழுத்தறுத்தால் என்ன ஆகிவிடப்போகிறது? நான் இளவம்பஞ்சு பறந்துகொண்டே இருப்பேன் நான் கடற்கரை காற்று வீசிக் கொண்டே இருப்பேன் நான் மேற்குத்தொடர்ச்சி மலை ஆற்றெழுந்து பொங்குவேன் நான் தொடமுடியாத சூரியன் தகித்து நிதமும் ஒளியுமிழ்வேன். என் ராஜாங்கத்தில் நான் ராஜா.

ஜா.மு. 19-11-18

FB link