25 செப்டம்பர் 2016

வெறியும் பரிவும்



நீங்கள் குரூர வெறியோடு வருகிறீர்கள்;
நான் நலினமாய் அன்பின் புன்னகை தந்து கடக்க முயல்கிறேன்

நீங்கள் ஓணாயின் இரவுநேர திகிலூலையாய் கத்துகிறீர்கள்;
நான் சோலைமரப் பூங்குயிலாய் ராகம் இசைக்கிறேன்

நீங்கள் பசித்த புலியின் நகங்களால் உடல்கீறி மகிழ்கிறீர்கள்;
நான் மயில்பீலிகளால் மருந்து நனைத்து வருடுகிறேன்

நீங்கள் அக்கினி குண்டமாய் துவேசம் வளர்த்து எரிகிறீர்கள்;
நான் ஆனந்தக் குளிர்ச் சுனைநீராய் பொங்குகிறேன்

நீங்கள் என்னை கொல்லாமல் விடமாட்டேன் என்கிறீர்கள்;
நான் கனிவான முகமன் கூறி கட்டி அணைக்கிறேன்

நீங்கள் வாய்க்கு வந்த கடுஞ்சொல்லால் சுடுகிறீர்கள்;
நான் வா என் சோதரா நாம் இந்தியத்தாயின் பிள்ளைகள் தானே என்கிறேன்.

நீங்கள் என்னை வீழ்த்துவதற்கு திட்டம் பல தீட்டுகிறீர்கள்;
நான் தேசத்தின் நல்வாழ்த்தினை கவியா
லாபனை செய்கிறேன்

நீங்கள் என்னை நாட்டுப்பற்றில்லாதவன் என தூசிக்கிறீர்கள்;
நான் புதைக்கப்பட்ட தியாகங்களை கண்கலங்க பாடிகாட்டுகிறேன்.

நீங்கள் என்னை அழிக்கவந்த அசிங்கப்பிறவியே என்றீர்கள்;
நான் அன்பு செய்ய வந்த இந்திய இஸ்லாமியன் தான் என்கிறேன்.

நீங்கள் ஆக்ரோசமாய் “பாரத் மாதாகி ஜே” என்று தாக்க வருகிறீர்கள்;
உடன் என் தேசத்தாயவள் என்னை மகனேயென பாசத்தோடு நெஞ்சில் வாரி அணைத்துக்கொள்கிறாள்.

- ஜா.முஹையத்தீன் பாட்ஷா
24-09-2016; இரவு 11.14



17 செப்டம்பர் 2016

இப்போதும் நேரம் கடக்கவில்லை ஐயா பாலகுமாரன்!

பாலகுமாரன் ஐயா அவர்கள் முதுபெரும் எழுத்தாளர், பலரை தனது எழுத்துக்களால் ஆட்டுவித்தவர், பலர் தனது குரு என்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன். எனக்கும் அவர் மீது விருப்பம் உண்டு. ஆனால் நமது முதிர்வின் விசாலமா அல்லது அவரின் சிந்தனைகளின் போக்கா என்று தெரியவில்லை சமீப காலமாக அவரின் எழுத்துக்கள், சிந்தனைகள் பெரியதோர் மையலை கொடுக்கவில்லை, அவைகள் எல்லைகளுக்குட்பட்டதாகவே தோன்றியது. ஆயினும் சரி பரவாயில்லை, பெரிய எழுத்தாளர், சாதனைகள் பல எழுத்தில் செய்தவர் என்ற அடிப்படையில் எனது மரியாதை தொடர்ந்தது.
ஆனால் பெரியாரின் பிறந்த நாளான இன்று பெரியாரை, பெரியாரியத்தை தனது ஏகபோக எதிரியாய், அழிக்கும் சக்தியாய் எண்ணி அவரது பதிவுகள் சிறுபிள்ளைத்தனமாய் இருந்தது கண்டு அதிர்ந்தேன். எனக்குள் சிரித்தேன். அவர் விளங்கிய பெரியார் அவ்வளவு தான்.
தூரமாய் புத்தகம் மட்டும் எழுதிய போது அவர்களது பலகீனங்கள் தெரிய வாய்ப்பில்லை, இப்போதெல்லாம் முகநூல் நிலைத்தகவல்கள் பலநேரம் அவர்களை அப்பட்டமாக காட்டிவிடுகிறது. இப்போது கூட நேரம் கடக்கவில்லை, உங்கள் மேதைமையை விட்டும் கொஞ்சம் கீழிறங்கி பெரியாரையும் அவர் அந்த காலத்தின் சூழலில் செய்த பெருஞ்சேவையையும் படித்துவிட்டு வாருங்கள் பாலகுமாரன் ஐயா; உங்கள் வெண்தாடி அர்த்தம் பெறும்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

பாலகுமாரன் சார், நீங்கள் எழுதுகிறீர்கள்
ஜாதி, மதம் கடந்து தானே நாங்கள் உங்களை வாசிக்கிறோம், உங்களை நேசிக்கிறோம். அது போல நாங்கள் ஜாதி, மதம் கடந்து தான் பெரியாரையும் நேசிக்கிறோம். ஒரு புறத்தில் அவர் கருத்தை சொல்லிவிட்டுத்தான் போகட்டுமே ஏன் இப்படி அடி வயிறு கலங்குகிறது.
நாத்தீகம் பேசுபவர்கள் மட்டுமல்ல..
இஸ்லாமியர்கள் பெரியாரை கொண்டாடுகிறோம், பெரும்பான்மை இந்துக்கள் பெரியாரை கொண்டாடுகின்றனர், கிருத்துவர்களும் கொண்டாடுகின்றனர். ஆனால் பெரியார் என்று சொன்னாலே சிலருக்கு மட்டும் ஏன் டரியலாகிறது.

இதயவாசல் மூடிக்கொண்டது.

கவிஞர் இக்பால் ராஜா
இன்று காலை எழுந்ததும் அலைபேசியை திறந்தால் இதயவாசல் அண்ணன் இக்பால் ராஜா அவர்களின் மறைவுச் செய்தி கண்ணில் பட்டு, நெஞ்சை உலுக்கியது.  மனது மிகப்பெரும் சஞ்சலத்திற்காளானது.

முஸ்லிம் லீக் இயக்கத்தின் செயல்பாடுகளில் பங்கெடுத்து நாளும் பொழுதும் சமூகத்திற்காக இயக்கம் வளர்த்தவர். சந்தனத்தமிழ் வித்தகர் சிராஜுல் மில்லத் அவர்களின் மீது பெருங்காதல் சொல்லில் முடியாது. கட்சியின் பிரைமரி மற்றும் இளைஞரணியை தஞ்சை பகுதிகளில் பலமாக்க அவர் கொண்ட பெருமுயற்சிகள் காலத்தால் மறக்கமுடியாதவை. கால நேரம், பணங்காசு, வீடுவாசல் என எதையும் பொருட்படுத்தாமல் சமூகம் சிறக்க முஸ்லிம் லீக் வளரவேண்டும் என்று உழைத்தவர். இன்றைய தலைவர் முனீருல் மில்லத் அவர்கள் மீதும் மாறாத பற்றுறுதி கொண்டவர். இவரது இழப்பு என்பது சமூகத்தின் நலன் மீது ஆதீத பற்று கொண்ட உண்மையான சமூகநல ஆர்வலரை நாம் இழந்துவிட்ட பேரிழப்பாகும்.  தியாகதீபமாய் எரிந்த சுடர் அணைந்ததில் முஸ்லிம் லீக்கிற்கும் ஈடுசெய்யமுடியாத இழப்பாகும்.

ஆலிமான் குடும்பத்தில் தகப்பனாரைப் போல கவிஞர் இக்பால் ராஜாவும், ஜியாவுதீன் அண்ணன் அவர்களும் செய்த பொதுநலன் சார்ந்த சேவைகள் என்றும் போற்றத்தக்கவை. மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் அப்துல் சமது ஸாஹிப் சார்ந்த எல்லா பத்திரிக்கை செய்திகளையும், தகவல்களையும் அதிகம் திரட்டி வைத்திருக்கும் சகோதரர்கள் இவர்கள். ஆலிமான் ஜியாவுதீன் அவர்களது அரிய முய்றச்சியில் தான் தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களின் “சிராஜுல் மில்லத் சிந்தனைகள் “ என்ற சீரிய வரலாற்று ஆவண சிந்தனைக் களஞ்சியம் வெளிவந்தது என்பதும் மிகுந்த நன்றியோடு சிந்தித்து பார்க்கும் தருணம் இது.

அதிகம் பிரிண்ட்டிங் பிரஸ் ஏதுமில்லாத காலத்தில்  அண்ணன் இக்பால் ராஜா அவர்களது அய்யம்பேட்டை மகதடிபஜார் பிரிண்டிங் பிரஸ் தான் மிக பிரபல்யம்.  திருமணபத்திரிக்கையிலிருந்து எல்லா சமூக நிகழ்வுகளுக்கும் அவரது பிரஸ் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தது.  உறவினர்கள், நண்பர்கள் திருமணத்திற்கு கவிதையில் வாழ்த்து எழுதி நிக்காஹ் மஜ்லிஸில் பகிரும் பழக்கம் அதிகமிருந்த அந்த காலப்பொழுதில்  எழுதியதை துரிதமாக அச்சடித்துத் தரக்கோரி உடன் அடித்து வந்திருக்கிறோம், சில சமயம் மின்சாரம் தடைபட்டால் அவரும் பணியாளர்களுடன் சேர்ந்து வேலை செய்து பணியை முடித்துக்கொடுப்பார்.  சமூகம் சார்ந்த பொது நிகழ்வுகளுக்கும் நிறைய கவிதைகள், பத்திரிக்கைகள் மிக துரிதகதியில் வேண்டுமென  அவரிடம் வேண்டி நின்று அச்சடித்து வாங்கிச்சென்ற நிகழ்வுகளும் உண்டு. 

அந்த காலங்களில் தான் தனது தீராத பத்திரிக்கை கனவால் “இதயவாசல்” என்ற சமூகம் சார்ந்த மாத இதழைத் தொடங்கி நடத்தி வந்தார்.  நமது சமூக மக்களின் படிக்கும் ஆர்வம் தான் எல்லோருக்கும் தெரிந்த விசயம், அவ்வளவு படிப்பார்வம் மிகுந்தவர்கள், எழுத்தாளர்களை ஊக்குவிப்பவர்கள்!!!??? அதனால் பத்திரிக்கையை நடத்த அவர் பட்ட கஷ்ட நஷ்டங்கள் சொல்லி மாளாதவை.  சமூக கருத்துக்களை சுமந்த நிறைய கவிதைகளை எழுதிய கவிஞர் இக்பால் ராஜா, ஜனரஞ்சக கவிதைகள், காதல் கவிதைகள் என எல்லாதரப்பு கவிதைகளையும் எழுதுவதில் வல்லவராக இருந்தார். கவிதை மட்டும் அல்ல அவரது இதயவாசல் மாத இதழில் “விதவை மனமே கதவைத் திற” , “கண்மணி வஹிதா கவலை வேண்டாம்” போன்ற இன்னும் நிறைய இஸ்லாமிய சமூக மேம்மாட்டு களங்களை உள்ளடக்கிய கதைகள், நாவல்களை எழுதி குவித்த சமூக எழுத்தாளர். 

காலப்போக்கில் நிறைய பிரிண்டிங் பிரஸ் வந்துவிட்டதாலும், பத்திரிக்கையை தொடர்ந்து நடத்த முடியாததாலும் மிகுந்த சிரமப்பட்டார். அவ்வேலையில் அவரது “கண்மணி வஹிதா கவலை வேண்டாம்” நாவலை தற்போதைய தஞ்சை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் வழுத்தூர் லயன் பஷீர் அஹமது அவர்கள் வெளியிட்டு ஆதரவு நல்கினார் என்ற நிகழ்வு என் நினைவுக்கு வருகிறது.

அது போலவே எனது சிறிய தந்தை வழுத்தூர் வெள்ளம்ஜி. பஷீர் அஹமது அவர்களும் மறைந்த கவிஞர் இக்பால் ராஜா அவர்களும் நல்ல நட்புணர்வு கொண்வர்கள்.  ஊர் வந்தால் தேடி வந்து சந்திப்பார்.  சமீபத்தில் சில நேரம் முடியாமல் இருந்த போது கூட சந்திக்க வேண்டி ஆவலாய் இருப்பதாக சொல்லி சவுதியிலிருந்து ஊர் வந்த வெள்ளம்ஜி பஷீர் அவர்களை அழைத்து சந்தித்தார்.  எனக்குத் தெரிந்து அவ்வாரான சந்திப்புக்களில் சமூக சிந்தனையிலேயே வாழ்வை அற்பணித்த அந்த நல்ல உள்ளத்திற்கு தன்னாலான ஆதரவை வெள்ளம்ஜி பஷீர் அவர்கள் வழங்க தவறவில்லை.  இது போல ஒரு சிலர் அரவணைத்தாலும் அந்த பொதுநல உழைப்பாளிக்கு நம் சமூக மக்கள் போதிய ஆதரவினை வழங்கவில்லையோ என்ற அங்கலாய்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.

மறைந்தது மேலான ஆன்மா, அல்லாஹ் ரசூலை மிக உவந்த ஆன்மா, சமூகத்திற்காக இரவும் பகலும் சிந்தித்த ஆன்மா. அது என்றும் இறையருள் சூழ சாந்தியோடு தான் இருக்கும். அன்னாருக்கு எல்லா மேன்மைகளையும் இறைவன் அருளி என்றும் அவரது புகழ் நிலவி இருக்க அருள் செய்வனாக. அவரை இழந்த குடுமபத்தினருக்கும், பிள்ளைகளுக்கும் சப்ரன் ஜமீலா என்ற மேலான பொறுமையை இறைவன் வழங்கி, நிறைவாழ்வு அளிப்பானாக. ஆமீன்.

துஆவுடன்,
வழுத்தூர் . ஜா.முஹையத்தீன் பாட்ஷா
17-09-2016
5.52pm

11 செப்டம்பர் 2016

வெள்ளம்ஜி GRAND VILLA விற்கு வாழ்த்து

வெள்ளம்ஜி. முஹம்மது இக்பால்.

பழகுவதற்கு மிக எளிமையான மனிதர், என்றும் எதார்த்தம் உணர்ந்து செயல்படக்கூடியவர். இனிமை இவரது இயல்பு, இரக்கம் இவரது குணம். தேவையில்லாத படோடோபம் இவரிடம் இருக்காது. முழுக்க முழுக்க சாத்வீகமான மனிதர், அன்பை எங்கும் விதைக்க தன்னாலான செயல்பாடுகளை என்றென்றும் செய்துவருபவர். மதம் கடந்த மனிதநேயம் இவரது இயற்கைச் சுபாவம், எங்கு திறமைகள் இருந்தாலும் கைகொடுக்க காத்திருப்பார். இவருக்கு ஆயுதங்கள் வேறேதும் வேண்டாம்… முகம் முழுக்க மலர்ச்சியாய் முழுவதுமாய் அகமலர்ந்து பார்ப்பவர்களிடம் ஓர் மந்திர சிரிப்பைத் தருவார், அது ஒன்றே போதும் எல்லோரையும் வசியப்படுத்திவிடும். மேற்சொன்னவைகள் அனைத்தும் மேலதிகம் இல்லை, இவரிடம் பழகியவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

துபாயில் மீலாது நிகழ்வை தோழமைகளோடு உலக அறிஞர்களை அழைத்து பிரமாண்டமாக 2002, 2003, 2004ஆம் ஆண்டுகளில் நடத்திக் காட்டியவர். ரபிய்யுல் அவ்வல் மாதம் முழுவதும் நபிகளாரின் பெருமையை பல இடங்கள் தேடி சென்று பேசுவார், சிறு அறையில் அன்பர்கள் நடத்தும் மவ்லிது மஜ்லிசுகள், பயான் நிகழ்வுகள், பத்ரு சஹாபாக்கள் நிகழ்வுகள், புர்தா சரீப் மற்றும் திக்ரு நிகழ்வுகள் என எல்லாவற்றிலும் கலந்து கொண்டு எண்ண ஒன்றிப்புடன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் மகத்துவத்தை எடுத்துரைப்பார். கர்பலா தியாக வரலாற்றை தொடர்ந்து இரண்டு மணிநேரத்திற்கு மேல் தண்ணீர் கூட குடிக்காமல் பல ஆண்டுகள் பேசியவர் என்பது நான் வியந்த ஒன்று. எல்லோரும் உடல் சிலிர்த்து, உள்ளம் உருகி அமர்ந்திருப்பர்.

தினத்தந்தி ஞாயிறு மலரில் கிட்டத்தட 70க்கும் மேற்பட்ட வாரங்கள் “அறிவியல் அதிசயம்” தொடர் எழுதியவர் அது புத்தகமாகவும் வெளி வந்திருக்கிறது. அமீரக “கல்ஃப் டுடே” நாளிதழில் நோன்பு காலத்தில் முப்பது நாட்கள் மற்றும் பெருநாள் விடுமுறை வரை என முப்பத்து மூன்று தினங்கள் தொடர்ந்து ஐந்தாறு வருடங்கள் 2006 வரை இஸ்லாமிய ஆங்கில கட்டூரைகளை நம் பாரம்பரிய விசயங்களை உள்ளடக்கி எழுதி உலகுக்கு சொன்னவர். துறை சார்ந்த இதழியலில் அது சார்ந்தும் கட்டூரைகள் அவ்வப்போது எழுதுவபர், இவைகளில் இவரது செவ்வியும் அவ்வப்போது வெளிவரும்.

துபாயில் இயங்கிவரும் தோஷிபா எலெவேட்டர் நிறுவனத்தின் நிர்வாக மேலாளராகவும் அதன் மத்திய கிழக்கு நாடுகளின் பொறுப்புதாரியாகவும் இருந்து செம்மையாக நிர்வாகம் செய்து வருகிறார் முஹம்மது இக்பால். அவரின் தொடக்க காலத்திலிருந்தே வேலை தேடிவரும் தமிழ் பிள்ளைகளுக்கு உதவ ஆரம்பித்தவர் இன்று பலநூறு தமிழ் பிள்ளைகளுக்கு வேலை கொடுத்து பலரது வீட்டின் பொருளாதாரத்திற்கு மூலாதாரமாக இருக்கிறார். லிஃப்ட் அமைத்து கொடுப்பது இவரது நிறுவனம் சார்ந்த தொழில் என்றால் பலரது வாழ்வின் முன்னேற்றத்திற்கு லிஃப்ட் கொடுப்பது இவரது இயல்பு என்று தான் சொல்ல வேண்டும். இதெல்லாம் அவரின் குறிப்பிடத்தக்க சிறப்பியல்புகள்.

முஹம்மது இக்பால், ஆன்மீகம் வளர்த்த தஞ்சை மாவட்டம் வழுத்தூர் மண்ணில் உருவானவர், இம்மண்ணின் ஆன்மீக நாதர்களின் ஈர்ப்பும், தத்துவங்களும் அவருக்குள் தேடலை, வேட்கையை தீயாய் வளர்த்தெடுக்க அவ்வுணர்வுக்கு பதிலாயும், வருடலாயும் அந்த மேன்மக்களே தெய்வீககரங்கள் நீட்டி வாழ்வின் ஆனந்தங்களை அறிவுக்குள் அணிவித்தனர். அவர்களுள் இவர்தம் தந்தையார் மர்ஹூம் சூஃபி. வெள்ளம்ஜி. ஜமால் முஹம்மது அவர்கள் கைபிடித்து ஒப்புவித்த மறைந்த ஞானமேதை மேன்மைமிகு. செய்யது அலவி ஹஜ்ரத் அவர்கள் மிகக்குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் போன்றோரிடமிருந்து வாழ்வு எவ்வளவு அழகான ஒன்று என்பதை, வாழ்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதனை அதன் நுணுக்கங்களை காவிரிக்கரைத்திகழ் ஊரின் ஞானமணம் கமழ பெற்றுக்கொண்டவர் அதன் தனிச்சிறப்பை என்றும் பறைசாற்ற மறந்ததில்லை. 

தனது சொந்த மண்ணின் பெருமையை உலகுக்கு பறைசாற்றி நீண்டு செழித்து வளர்ந்து கிளைபரப்பி நிழல் கொடுக்கும் மகா மரமாகத்தான் முஹம்மது இக்பால் திகழ்கிறார். அம்மரத்தில் நிழலில் ஒதுங்குவோர், அதன் கனிகளை சுவைப்போர் அல்லது அதன் உயரத்தை தூர நின்று சிலாகித்து பேசுவோர் என எல்லோருக்கும் தன் வேர்கள் இறுகப்பற்றி இருக்கும் ஊரின் பெருமையையும் சேர்த்தே பேச வைத்திருப்பது இவரின் சிறப்பு.
முஹம்மது இக்பால் அவர்கள், தமக்கான இல்லத்தை பிற பகுதிகளில் ஏற்கனவே அமைத்திருந்தாலும், தனது சொந்த ஊரான வழுத்தூரில் அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு. இதற்கு மிக தூண்டு கோளாக இருந்த மேன்மைமிகு. சையத் அலவி ஹஜ்ரத் அவர்களை என்றென்றும் நினைவு கூறுவார். அவர்கள் தான் மிக வலியுறுத்திச் சொல்லி ஆரம்பிக்க வைத்தார்கள் என்பார்.
அவ்வினிய இல்லம் இன்று பால் காய்ச்சி நாளை புதுமனை புக இருக்கிறார்கள். அல்லாஹ்வும், நம் ஆருயிர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களும் மற்றும் அஹ்லுல் பைத்துக்களும் கனிந்து அருளட்டும். எங்கள் நெஞ்சில் நிறைந்து வாழும் சூஃபிகள் மென்மையான அஜ்ஜி அத்தா ஜமால் முஹம்மது, மிகக்கனவு கண்ட பெருமாட்டி தாவூத்தம்மா மாமி, எல்லாவேளை தொழுகையிலும் வாழ்வின் மேன்மைக்காக துஆ செய்த என் நன்னியம்மா ஆய்ஷாபீவியம்மா, பேரண்மையாளர் அப்துல் கரீம் அத்தா, நன்முறைப் பேணும் அப்துல் மஜீது சேட் அத்தா, மற்றும் அமைதியின் உருவாய் இருந்த முஹம்மது இக்பால் அவர்களின் நன்னியம்மா இன்னும் நம் நினைவை ஆளும் அத்தனை ஆன்மாக்களும் பூரித்து மனமகிழ்ந்து வாழ்த்துவார்கள்.

புதிய இல்லத்தில் குதூகலம் பூத்து குலுங்கட்டும்.ஆனந்தம் விளையாடட்டும். அதில் அவர்தம் அழகிய குடும்பம் சிறந்து வாழட்டும். அவரது துணைநலம் ஓங்கி சிறந்து இருக்கட்டும். பிள்ளைகள் மாஹிர், சாயிரா, ஜாஹிர் சாதித்து வாழ்வாங்கு வாழட்டும். அவர்களின் இனிய சந்ததியினர் இவரின் பெயர் மணக்க புகழாட்சி நடத்தட்டும். இவர்களால் வழுத்தூரின் புகழ் என்றும் ஓங்கட்டும்.
புதுப் பொழிவுடன் மலரும் புதிய வெள்ளம்ஜி இல்லத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
11-9-2016 8.34 pm

வீட்டின் புகைப்படங்களை அன்போடு அனுப்பித் தந்தவர் தம்பி மாஹிர். அவருக்கு என் இதய நன்றிகள்.


07 செப்டம்பர் 2016

எந்தச் சணத்திலாவது..!



திடீரென எந்தச் சணத்திலாவது
எதிர்பாராத ஒன்று நடந்துவிடுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
கொடுங்கேள்விகள் அழுத்துகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
குலுங்கிக் கதறி அழத்தோன்றுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
உன் நாளை எதுவாகுமென வினாதொடுக்கிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
ஏதும் இதுகாறும் செய்திட்டாயாவென்கிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
துணைமனம் தேடி நெஞ்சம் விம்முகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
பெரும் காரிருள் சூழ்ந்து போகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
மனம்பதைக்க பயமுறுத்திச் செல்கிறது
திடீரென எந்தச் சசணத்திலாவது
அதிர்ச்சிப் பேய் அறைந்துவிடுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
மரணத்தை கண்முன்னே காட்டிச்செல்கிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
சலனமற்று இருத்தி வைக்கப்படுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
மனம் மிகஒன்றி இதைமட்டும் தாவென வேண்டுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
இவையெல்லாம் மறந்து மனமாற்றம் பிறக்கிறது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

02 செப்டம்பர் 2016

வாழ ஆசைப்படும் மனிதர்கள்

அவன் "சுப்ஹானல்லாஹ்" சொன்னான்
எதிர்பாரா உதவி என்மூலம் கிடைத்ததும்,
நானும் கண்டேன் அவன் முகத்தில்!
(சுப்ஹானல்லாஹ் - இறைவன் மிகத்தூய்மையானவன், நமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு.)

***
தனிமைகூட துயரமல்ல
தனிமைப்படுத்தப்படுவதல்லாமல்!


***

எல்லோரும் அதிகம் வாழ
ஆசைப்படுகிறார்கள்

துயரமெல்லாம்
இதுவரை வாழ்ந்த வாழ்வில்
அவர்கள் என்றுமே வாழாதது தான்.

மேலும் அவர்கள்
மிகுந்த சிரமப்பட்டு
யோசிப்பதெல்லாமும் கூட
வாழ்க்கையில் வாழ்வதற்கு தான்.

ஆனாலும், வாழ்தல் என்பது தான்
பெரும்பாலும் நிகழ்வதில்லை.

***

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

தனிமை கொண்டாட்டத்தின் உட்சம்!

என் நண்பனான நானும்
என் எதிரியான நானும்
நானான நானும்
எப்போதும் இணைந்திருக்கையில்
நீங்களெல்லாம் நினைப்பது போல
எனக்கேது தனிமை..!

*

என் மிக நீண்ட உலகத்தை
என்னையன்றி யாரறிவார்.
எனக்கு நானே.. நான் மட்டுமே
நெருக்கமும்.. தொலைவும்,
எனக்கு நானே.. நான் மட்டுமே
விடியலும்.. இரவும்,
எனக்கு நானே.. நான் மட்டுமே
உறவும்.. பகையும்.


*
என் சந்தோச சாம்ராஜ்யத்தின்
வித வித பூக்களின் புன்னகையும்
பசுங்கிள்ளைகள் மற்றும் சிட்டுக்களின் கீச்சுக்களும்
பூபாள இசைகளும் ஓடைகளின் சலசலப்பும்
நீங்கள் அறிய வாய்ப்பில்லை தானே!


*
என் சூரிய சந்திரர்களை
நீங்கள் சந்தித்ததில்லை தானே
என் இல்லத்து விண்மீண்கள்
உங்கள் கண்களுக்கு
அகப்பட்டவை இல்லை தானே
பின் நீங்கள் எப்படி அறிவீர்கள்
நானே நிரம்பிய என் பரப்பில்
என்மையின் கூட்டம் மிக நிரம்பிக்கிடக்கிறது


*
இது வருத்தத்தின் பட்சமல்ல,
எனக்கு நானே முழுமையாக
கிடைத்திருக்கும் திருவிழா
என் தனிமை என்பது
கொண்டாட்டத்தின் உட்சம்!


*


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

மென்கண்ணமும் என் விரல்களும்


தொழுது கொண்டிருந்த
பாக்கிஸ்தானிய அப்பனின் பக்கத்தில்
அவன் விழுது ஒன்று அமர்ந்திருந்தது.
பசுமிளங்குருத்து
பள்ளிவாசலில் இருந்த போதும்
ஏதோ ஓர் உலகின் புள்ளியில்
மகிழ்ச்சியை அள்ளி.. அள்ளி
அவன் வாசலில் இட்டுத்
துள்ளிக்கொண்டிருந்தது.
மெய்மறந்து கண்டிருந்தச் சனத்தில்
என் இந்திய விரல்கள் தொட்டு
அப்பிக்கொண்டேன்
அவன் அழகிய கண்ணங்களின்
மென்மையை!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

01 செப்டம்பர் 2016

முளைத்த வெங்காயம்

J Mohaideen Batcha
1 September 2014 ·

பிறகென்ன!
*****************
நினைக்கலாம் நாம் எதையும்!
நடக்கட்டும் இங்கு எதுவும்!!
அனைத்துமே அதன் அசைவே!!!
*****
J Mohaideen Batcha
30 August 2013 · Dubai
முட்கள் நிறைந்த பாதைகளில்
பயணிக்கிறோம் என்று தெரிந்தே
நாம் பயணம் தொடர்கிறோம்.
சிக்கல் நிறைந்த பொழுதுகள் என அறிந்தும்
நாம் விடியல்கள் தேடி விரைகிறோம்

வாழ்க்கை என்பதை வாழத்தான்
பறவைகளுக்காய் காத்திருக்கும் வேடந்தாங்களாய்
வேட்கை அடங்காமல் காத்திருக்கிறோம்.

J Mohaideen Batcha
30 August 2013 · Dubai ·

உற்சாகம் எப்போதும் உள்ளத்தின் உணவானால்
உற்சவம் நிகழுத்தும் வெற்றிகள் அணிவகுத்து.

J Mohaideen Batcha
30 August 2014 ·

வலிய போய்
வழிய... வழிய...
செய்யப்படும் அன்புகள்
பெரும்பாலும்
வாசல்கதவுகள் அடைப்பட்டிருப்பதால்
வந்தவழியே திரும்புகின்றன!
கையிலிருக்கும் ரோஜா
இதழ்கள் உதிர்ந்து வாடுகிறது.

J Mohaideen Batcha
28 August at 22:09 ·

மலிவு விலையில் கிடைக்கிறதே என்று
மிடில்கிளாஸ் மாதவன்கள்
வாங்கி சேமிக்கும்வெங்காயம் கூட
சமைக்கமுடியாமல் முளைத்துவிடுகிறது!

J Mohaideen Batcha
28 August 2013 ·

காலம் எப்படி அழகானதோ..அரிதானதோ.. அது போலவே
காலம் கடியதும் கொடியதும் கூட.. !
அது தன்மீது தொடுக்கப்பட்ட
எந்த கேள்விகனையையும் மறந்தும் விட்டது இல்லை,
தருணம் பார்த்து பதில் தந்தே தீரும்.

J Mohaideen Batcha
23 August 2013 · Dubai ·

அடுத்த வினாடியின்
விடை தெரியாமல் தான் துடிக்கிறது
நம் நாடி!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா