27 ஜூன் 2011

இரங்கல்..!



என் தேனீரில் இறந்து மிதக்கும்

எறும்பிற்கே என்னால்

இரங்கல் செலுத்த முடியவில்லையே

ஐய்யகோ! வெள்ளத்தாலும்.. தீயாலும்..மழையாலும்

இன்னபிற இயற்கை சீற்றங்களாலும்

இன்னுயிர் நீர்த்த என் மனித சொந்தங்களுக்காய்

அழும் அளவு பலம் வாய்ந்தவன் நான் இல்லை!


நிலைமை இப்படி இருக்க,

அரசாள்வோரே!

உங்கள் நாற்காலிக்காக நாலாபுறம்

மனித உயிரின் மதிப்பு தெரியாமல்

கொன்று குவித்து இனம் துடைக்கும்

உங்கள் முயற்சி குறித்து நான் என் செய்வேனோ!



ஜே.எம்.பாட்ஷா

13-12-1996 : என் 18 ஆம் அகவையில் எழுதிய கவிதை


இன்னும் புரியும்


23 ஜூன் 2011

உண்மையாய் உயிர் வாழுங்கள்..!





தனக்குத் தானே பேசினால்..!
தனிமையைத் தேடி மூழ்கினால்..!
சித்தம் தெளிவாகி - புது
ரத்தம் உடல் பாயும்..!

நம்மில் நம்மை
பார்த்து... படித்துக்கொண்டால்..!
நமக்குள் நாமே பேசிக்கொண்டால்..!
உடம்பும் உயிரும்..ஆஹா
காற்றாய் இலேசாகும்!

குழப்ப சூழ்நிலையிலோ
முடிவெடுக்கும் தருணங்களிலோ
தனிமையை கொஞ்சம் விரும்பி
அமைதியின் ஆழம் சென்று
நம்மில் நம்மை அழைப்போம்..
நண்பனைப்போல் கொஞ்சம் பேசுவோம்..
கொஞ்சம் கொஞ்சியும் போசுவோம்..

வாய் விட்டுப் பேசினால் தானே
வாய்க்கு வந்தது போல் பேசும்
சமுதாயம்..
மொனமாய் நாமே
நம்மை தழுவலாம்..!

யாரோ ..
பைத்தியக்காரத்தனமாக கூறியிருக்கிறார்கள்
தனக்குத்தானே பேசினால்
பைத்தியக்காரன் என்று!

உண்மையில் தனக்குத்தானே
பேசாதவன் யாருமில்லை,
வேண்டுமென்றால்- அதில்
சதவிகித வேறுபாடு இருக்கலாம்.

அவனோடுபேசுவது அவனனுக்கேக்கூட
தெரியாமல் இருக்கலாம் ஆனாலும்
அவனவன் தனக்குத்தானே
பேசிக்கொண்டு தான் இருக்கிறான்!
மெளனமாய் இருக்கும்
ஒவ்வொருவரும் மனதால்
ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்!






மனது
ஆயிரம் நாவுகளால்
ஆயிரம் விசயங்கள்
அணுகனமும்
அசையிட்டுக் கொண்டேயுள்ளது.

உங்களோடு பேசி
உங்களை நீங்களே
நிர்வகித்து..,
நிர்மானித்துக்கொள்ளுங்கள்!
உங்களோடு நட்புக்கொள்ளுங்கள்
உள்ளிருக்கும் நண்பனை
உதறித்தள்ளவேண்டாம்!

அவ்வப்போது அணைத்து
நிம்மதி ஊட்டுங்கள்.- நீங்கள்
உள்மனதை கண்டுகொண்டாலோ -உள்ளிருக்கும்
தாகமெல்லாம் தீர்ந்துவிடும் - ஜீவ
ஏக்கமெல்லாம் பறந்துவிடும் – மனமும் மெய்யும்
ஆக்கமுடன் ஊக்கம் பெறும்.

ததும்பும் மனம் அமைதியுற
தாலாட்டாய் வெற்றி வர
ஆன்மாவொடு ஆதரவாகி
ஆழ்ந்து பேசி
மேன்மை அடையுங்கள்!

நீங்கள்
உங்களோடு பேசும்போது
பிரபஞ்சத்தோடேயே
செயற்கை உபகரணம் இன்றி
பேசுகிறீர்கள்!

இன்றைய நவீன
இயந்திர உலகம்
செய்த பெரும் சதி
உங்களை உங்களிலிருந்து
பிரித்தது தான்.

அதனால் தான்
நிம்மதி இல்லை,
நிஜம் இல்லை,
இன்னும் பல தொல்லை..

ஆகவே..,
உங்களுக்காய் நேரம் ஒதுக்கி
உங்களோடு உறவாடி
உயிர் நாடியோடு சங்கமியுங்கள்!
அந்த சந்தர்பத்திலாவது
உண்மையாய் உயிர் வாழுங்கள்..!



  
  



எழுதியது துபையில் ஒரு மருத்துவமனை வளாகத்தில் இரவு நேரம் இரண்டு மணி நேரங்களுக்கும் மேல் தங்கி இருக்கும் சூழல் ஏற்பட்ட போது… என் சிந்தனை பறவை என்னுள் பறந்த போது கண்டுவந்த கரை.. பிடித்து வந்த இரை. காலம்.. 2006 அல்லது 2007 இருக்கலாம்

அன்புடன்,
ஜே.எம்.பாட்ஷா

09 ஜூன் 2011

பா..ப்ப்ப்..பூ..


சுல்தான் அஹமது நளீர்

மழலைக் குழைய மகனே நீ

*பா..ப்ப்ப்..பூ.. என்று குரல் அழைக்க


மனமெல்லாம் பூப்பூவாய்
புதுப்புது பூவயல்கள்- என்

புவிதோறும் பூக்குதடா..!


அடிமனதில் ஆனந்த சுனைகள்

பீரிட்டு பொங்கி பெருகிட - அது

காட்டாற்று வெள்ளமாய்

கற்கண்டு இனிப்போடும்

களிப்பூட்டும் குளிரோடும்

கவினுற சூழுதடா..!


உன் பாசக்குரல் என்

ஏழு தலைமுறைக்கு

அப்பாலும் சென்று

எல்லோர் ஆத்மாவையும்

தட்டி அழைக்குதாடா..!


உன் அழைப்பின்

ஒவ்வொரு மைக்ரோ ஒலியிலும்

உயிரிலையின் மெய்நாதம் கேட்குதடா..!


எத்தனை ஒலிகள்

காதிற் புகுந்தாலும்

நான் மொத்தமாய் மூழ்கியது

உன் தெவிட்டாத தேன் குரலில் தானடா..!


என் காதுகள் இரண்டிற்குள்ளும்

தேக்கி வைத்த ஓயா அலை

உன் ஜீவ அலைதானடா..!


மனது...

அதற்கு வேண்டும் போதெல்லாம்

சலிப்படையாமல் உன் குரலைத்தானடா

ஒலிக்கச்செய்து திருப்தி அடைகிறது.


உன் அழைப்பு மட்டுமே

எந்த சார்பும் அற்ற எதார்த்தம்.


என்னையும் உன்னையும்

நூல் இடைவெளி கூட

பிரிவின்றி இணைத்து விட்டாய்!


உன்னோடு போசும் போது தானடா

சிரித்துக் கொண்டே அழுகின்றேன்!


கண்ணே உன்னை

தொட்டுப்பார்க்க ஆசைதான்

பாசத்துடன் தொடப்போனால்

கணிணியின் திரைதானடா விரல் முட்டுகிறது!

----(வீடியோ சாட்டிங்2000 கி.மீ வெளி இடையில்)


மகனே நீ..

உரிமையோடு எனை அழைக்க

உயிரே ஒன்று திரண்டு ரசிக்குதடா..!


என் ஏக்கத்திற்கெல்லாம்

தீணிபோடும் எசமானன் நீதானடா..!


மகனே நீ..

இயற்கையின் கொடை..!

இரசூலின் கொடை..! - எங்கள்

இதயம் இனிக்க வாழ்க!
இகம் தழைக்க வாழ்க!!


மனிதப்புனிதர் மன்னவர் அருள் பெற்று
மண்ணில் புகழ்மகுடம் சூடி வாழ்க!


நிமலனது நீங்கா கிருபையால்..!

நீதம் தவறாத நித்தியனாய்

நிலமதில் என்றும் நிலைபெருக!

----------------- ------------------------------- -------------------------
வாழ்த்திக்கொண்டே இருக்கும் உன் பாப்பு,
ஜே.எம்.பாட்ஷா ( அமீரகம்)

*பாப்பு ; அப்பாவிற்கான எங்கள் தஞ்சை மாவட்ட வட்டார வழக்குச்சொல்.
சென்ற ஆகஸ்டில் அபுதாபியில் இருந்தபோது எழுதியது, தற்போது ஃபுஜைராவில் வைத்து முழுமையானது.