30 டிசம்பர் 2013

திருச்சி இளம் பிறை மாநாடும், ஊடக இருட்டடிப்புகளும்


திக்கெட்டும் தக்பீர் முழக்கம்.. திசையெங்கும் பச்சிளம் பிறைக்கொடிகள்.. கண்ணுக்கு எட்டிய தொட்டும் பேரணிகள், தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து சந்தோசப் பெருக்குடன் விரைந்து வந்து கலந்து கொண்ட இளைஞர் பட்டளங்கள், இளஞ்சிறார்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் எனக் கூடி நேற்று திருச்சியே திகைக்க வெற்றியாய் நிகழ்ந்து முடிந்திருக்கிறது தாய்ச்சபை முஸ்லிம் லீக் நடத்திய இளம்பிறை பேரணி மற்றும் மஹல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு மாநாடு.

இளம்பிறை மாநாடு சமுதாய கண்ணியத்தை சத்தம் போட்டு உரைத்திருக்கிறது. முஸ்லிம் லீக் எத்தகையது என்பதையும், ஏகத்திற்கும் வரலாறோ.. அன்றாட நிகழ்வோ கூட தெரியாமல் பத்தோடு பதினொன்றாக முஸ்லிம் லீக் என்ன செய்தது என்றும் அது தமிழகத்தில் இருக்கிறதா என்றும் கிண்டலடித்து பேசியவர்களுக்கெல்லாம் வாய்ப்போட்டு போட்டுள்ளது. முஸ்லிம் லீக்கின் புத்துணர்ச்சியை.. முஸ்லிம் லீக்கிற்கு ஆதரவாக ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தினர் ஒன்று கூடிய நிகழ்வை பார்த்த புதிய இயக்கங்கள் எல்லாம் உண்மையில் கலங்கிப் போய்தான் இருக்கிறது. அடுத்து என்ன செய்யலாம்.. எப்படி மக்களை திசை திருப்பலாம் என்று தான் முயற்சி மேற்கொண்டு உள்ளது. ஆயினும் அதுவெல்லாம் இனி நடக்காது. இந்த இயக்கத்தின் பின் சமூகம் அணி திரளவேண்டும் எனபதில் சமூக மக்கள் தெளிவாக இருக்கின்றனர் என்பதை நேற்றைய நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டியுள்ளது.

முஸ்லிம் லீக்கின் மாபெரும் புத்துணர்வு பரிணாமத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இம்மாபெரும் மாநாட்டில் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான இ.அஹமது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் லீக்கின் தேசிய செயலாளரும், தமிழக தலைவருமான பேராசிரியர் பெருந்தகை காதர் முகைதீன், கேரள நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், கர்நாடக, ஆந்திர, மகாராஷ்டிர, டெல்லி முஸ்லிம் லீக் முக்கிய பொறுப்பாளர்கள், தமிழ்நாட்டு தாய்ச்சபை நிர்வாகிகள், தாய்ச்சபையின் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான், மற்றும் தாய்ச்சபை உறுப்பினர்கள் என அனைவரும் மேடையில் வீற்றிருந்து அனைவரையும் உற்சாகப்படுத்தி சிறப்பித்த நிகழ்வு தாய்ச்சபை வரலாற்றில் புதிய அத்தியாத்திற்கான தொடக்கப்புள்ளி என்றால் அது மிகையாகாது.

முஸ்லிம் லீக்கை பொருத்தவரை அதன் கொள்கைகள், சாத்வீகம், இந்திய இறையாண்மையை மதிக்கும் பண்புகள், இளைஞர்களை வெறியேற்றாத தன்மை, இதன் தலைவர்களின் முதிர்வு இவையெல்லாம் மிக முக்கிய அம்சங்கள். இதையெல்லாம் நிகழ்வில் பேசிய தெசிய தலைவர் அமைச்சர் இ.அஹமாது, மாநில தாய்ச்சபை தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், கேரள எம்.பிஇ.டி.முஹம்மது பசீர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட மற்ற எல்லா தலைவர்களின் உரையும் சான்று பகர்பவையாக இருந்தது என்பது குறிப்பிட தக்க அம்சம் என்று பலராலும் பாராட்டப்பட்டிருக்கிறது. இதில் முத்தாய்ப்பாக வாசிக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் அற்புதமானவை என்றும் அரசியல் நோக்கர்கள், விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர் என்பதும் கவனிக்கதக்கதும், மனமகிழ்ச்சி கொடுப்பதும் ஆகும்.

இக்காலத்து புதிய ஜமாத்துகளின் அல்லது புதிய இஸ்லாமிய கட்சிகளின் கூட்டத்தில் காணக்கிடைக்காத ஒரு பெருங்காட்சி அது கலந்து கொண்ட அனைவரும் சமூக கண்ணியத்தோடு தொப்பிகள் அணிந்து கலந்த கொண்ட காட்சி உயரத்தில் இருந்து போர்க்கும் போது கண்ணுக்கு எட்டிய தூரம் மல்லிகை கம்பளம் பரப்பியது போல் எழிலோடு இருந்தது.

யாரும் எண்ணிப்பார்த்திருக்க முடியாத மக்கள் திரள், திருச்சியெங்கும் தீன் நெறியாளர்களின் வெள்ளம், காசுக்கு ஆள்பிடிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சில ஆயிரம் பேர் வந்தாலே பல இலட்சங்கள் என போலி விளம்பரம் செய்யும் ஜமாஅத் இயக்கங்களுக்கும் மத்தியியில் சமூக உயர்வை பறைசாற்றும் உணர்வு பூண்டு புறப்பட்ட அன்பர்கள் கூட்டம் அலைகடலென இலட்சக்கணக்கில் ஒன்று கூடி ஆர்பரித்தது.

இளம்பிறை மாநாட்டின் வெற்றி சமூகத்தினை கூறுபோட்டு கல்லாகட்டிக்கொண்டு இருக்கும் இயக்கங்களின் வயிற்றில் புளியை கறைத்திருக்கிறது என்பது கண்கூடு. எந்த ஒரு மற்ற அரசியல் தலைவர்கள் வராத பட்சத்தில் முஸ்லிம் லீக் தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டு நடத்தப்பட்ட நிகழ்வில் தமிழக இஸ்லாமியர்கள் அனைவரும் பழைய எழுச்சியோடு கலந்துகொண்டு வெற்றியாக்கி தந்தது தாய்ச்சபைக்கு கிடைத்த இன்றைய அங்கீகாரம் என்றும் சொல்லலாம்.

இளைஞர்களின் இளம்பிறை பேரணி நிகழ்வில் முக்கிய இடத்தை பிடித்தது, அதிலும் குறிப்பாக மிகச்சிறும் பிஞ்சுகள் இரண்டின் சாகசங்கள் எல்லோரையும் கவர்ந்தது. தஞ்சை மாவட்டம் வழுத்தூரிலிருந்து 86 கி.மி. தொடரோட்டம் ஓடி விழா மேடையை வந்தடைந்து பச்சிளம் பிறைக்கொடியை இளைஞர்கள் தேசியத்தலைவர் அஹமது மற்றும் பொதுச்செயலாளர் பேராசிரியர் இவர்களின் கையில் கொடுத்தது விழாவில் அனைவரையும் ஈர்த்த விடயம்,

இவ்வளவு  நடந்திருக்கிறது ஆனால் நாலுபேர் கொடியை பிடித்து கோசம் போட்டு நடந்தாலே மிகப்பெரும் நிகழ்வாக போட்டுக்காட்டும் தமிழ்நாட்டு ஊடகங்கள் மிகப்பெரும் இஸ்லாமியக் கடல் சங்கமத்தை ஒரு சிறு அளவிலாவது காட்டாமல் போனது ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் மிக ஆற்றமுடியா வருத்தத்தை உண்டாக்கிவிட்டது.

நேற்றைய முன் தினம் காலையில் எனது அலுவலகத்திற்கு சென்றவுடன் வந்த அலைபேசியில் அழைத்த ஓர் இளைஞர் அவர் முஸ்லிம் லீக்காரர் என்பதெல்லாம் இல்லாமல் இருந்தும் ஒரு பொது மனிதராக இவ்வளவு பெரிய நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது ஆனால் இந்த தமிழ்நாட்டு ஊடகங்கள் எவ்வளவு பெரிய இருட்டடிப்பு செய்கிறது பாருங்கள் குறைந்த பட்சம் கூட்டணியில் உள்ள கலைஞர் செய்தி டிவி கூட இதை காட்டவில்லை என்று எண்ணும் போது மிகவும் கோபம் வருகிறது என்றார். மாலை எனது தந்தையார் கூட இதே கருத்தை தான் என்னிடம் பகிர்ந்து கொண்டார், இன்று மாலை பேசிய எம்.ஜே ரவூப் அண்ணனுக்கும் இதே ஆதங்கம் எனில் பொதுச்சமூகம் முழுவதும் இந்த ஊடக இருட்டடிப்பை கண்காணித்துக் கொண்டிருக்கிரார்கள் மற்றும் கனத்த மனதுடன் கண்டித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

சன்டிவியில் நேற்று ஏங்கோ கொங்கு வேளாளர் முன்னணி என்ற அமைப்பு நடத்திய மாநாட்டை அது ஆரம்பித்திருக்கிறது என்றும், இவ்வாறெல்லாம் நடக்கிறது என்றும், தீர்மானங்கள் இவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்றும் தேவைக்கு அதிகமாக காட்டிக்கொண்டே இருந்தார்கள் என்றால் முஸ்லிம்களை மட்டும் முஸ்லிம் லீக் மாநாட்டை மட்டும் ஏன் காட்டவில்லை என்பதை சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை.

மோடி வந்தபோது நேரலையாக காட்டாத குறை தான் ஆனால் இன்றோ செய்தியோடு செய்தியாக கூட சொல்ல ஊடகங்கள் முன்வரவில்லை என்றால் இஸ்லாமியர்களை வேறுபடுத்தி பார்க்கும் பார்வை என்பது சொல்லாமலே புரியும். இதற்கெல்லாம் நமது கையில் ஊடகம் இல்லை என்பதும் நாம் ஊடகங்களில் இல்லை என்பதும் தான் காரணம். இந்த ஆற்றாமை நம்மை ஊடகத்தை நோக்கி உந்தித்தள்ள வேண்டும். குறைந்த காலங்களில் நமக்கு ஊடகம் வசப்பட்டக வேண்டும். அதுவே இதற்கெல்லாம் தீர்வாக இருக்க முடியும். இத்தகைய எல்லா இலக்கையும் அடைய நடந்த இளம்பிறை மாநாட்டு 
வெற்றி ஓர் ஆரம்பப்புள்ளி இட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு சமுதாய நலன்களையும் வென்றெடுக்க நாம் தயாராக வேண்டியுள்ளது, அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை.

- வழுத்தூர் . ஜாமுஹையத்தீன் பாட்ஷா.
                                                                                  

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவு


இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவு என்ற செய்தி நெஞ்சுக்கு மிகவும் வலி கொடுத்திருக்கிறது, அவர் எழுபத்தி ஐந்து அகவை ஆனவர் என்ற போதிலும் இன்னும் நிறைவாக அவர் நம்மோடு இருந்திருக்க கூடாதா என்றே மனம் ஏங்குகிறது.


ஏனெனில் இயற்கையை சுரண்டி காசாக்கும் மனிதர்கள் இன்றைய இயற்கை வளங்களையோ அதன் சுரண்டல் காரணமாக நாளைய சமுதாயம் எதிர்நோக்கும் பயங்கரத்தையோ நினைத்து பார்ப்பதில்லை. அந்த விசயத்தில் ஓய்வில்லாமல் தனது வானகம் எனற அமைப்பின் மூலம் அயறாது போராடி இயற்க்கைக்கு எதிரான செயல்பாடுகளை கண்டித்தவர். அவரது வானகத்தின் மூலம் மீண்டும் ஒரு இயற்க்கை மறுமலர்ச்சிக்கும், இருக்கும் வளத்தையாவது காப்பதற்கும், அழிந்து வரும் விவசாயத்தை வளர்தெடுப்பதற்கும் இவர் மேற்கொண்ட பணி யாராலும் அளவிடமுடியாதது.

செயற்கை உர மருந்து உபயோகம், மண் மலடு, தண்ணீர் வளம், இயற்கை வேளாண்மையின் மகத்துவம், இயற்கை வாழ்வியல் என அவர் செய்த பிரச்சாரத்தின் பலன் ஆயிரக்கணக்கான மனங்களை இயற்கையை நோக்கி திருப்பி இருக்கிறது என்றால் மிகையில்லை. அவ்வாறான சாதனைக்கு சொந்தக்காரர் இன்று இயற்கை எய்திருக்கலாம் ஆனால் அவர் விதைத இயற்கை விதை நமது நெஞ்சில் தூவப்பட்டு இருக்கிறது. ஆழமாக சிந்தித்து அதை ஆலமரமாக வளர்ப்போம் வரும் சந்ததிகளை அவர் கண்ட கனவு மெய்ப்பட காப்போம்.

நம்மாழ்வார் நம்மோடு இருப்பார் நாம் அவரின் பணி தொடரும் காலமெல்லாம். வாழ்க நம்மாழ்வார்.. எங்கும் வளர்ந்து மிளிர்க அவரது தொண்டு. அன்னாரின் ஆத்மா சந்தி அடைவதாக.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

26 டிசம்பர் 2013

நாணமும்.. விலகலும்!மஞ்சம் விரித்து
மல்லிகை பரப்பி
மங்கை வரவை
மன்னவன் யான்
மயக்கத்திலே எதிர்நோக்கி
மாய்ந்திருந்தேன்.

தோழியர் கொடுத்த துணிவோடு
கொஞ்சம் கதவு திறந்து
மஞ்சம் நோக்கி
வெட்க‌ப் பஞ்சமில்லமல்
தரை நோக்கி
தாழ்மையுடன் நின்றவளின்,

தங்க வளையல்
தனை அணிந்த‌
தண்டுக்கை வருடி...
தலைவன் யான் இழுத்தேன்.

தேகம் சூடேற,
வேகமாய் வெட்கம் வர‌
நாண தாகத்துடன்
கை இழுத்துக் கொண்டவளை
அணைத்து நான்
அருகே அமர்த்தியது
என் முதலிரவு.

*

காற்றில் புயலாய்
ஊற்றடெடுத்த காமத்தால்
வீற்றிருந்த எனை அழைத்து
மாற்று மொழி கூறி
ஆடை குறைப்பு கூற்றினை அமுல்படுத்தி
இன்பத்தை ஊற்றிக் கொடுத்தாள் - என்
நாற்றடத்தி மார்பினில் சாய்ந்து
இது நேற்றிரவு.

*

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


எப்போதும் போல் பின் குறிப்பு: 

இந்த கவிதை ஏதோ இன்றோ நேற்றோ எழுதியதல்ல... எல்லா தலைப்புகளிலும் நாம் கவிதை எழுத வேண்டும் என நான் அன்றைய 1997-98 க்களில் எழுதியது. அதாவது எனக்கு திருமணம் ஆவதற்கு சற்றேறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்.
கொஞ்சம் ராவாக இருக்கிறது என்று நினைத்தால் சாரி!
23 டிசம்பர் 2013

இசைக்காக வாழ்வாய்!


இன்றைக்கு வந்த செய்திகள்
நீ அப்பல்லோ ஆஸ்பத்திரியில்
இதயம் சார்ந்து சேர்க்கை என்றது.
ஒன்றும் ஆபத்தில்லை
சிறிய அட்டாக் தான்
"ஆஞ்சியோ" செய்ய ஆயத்தம்
எல்லாம் சரியாகிவிடும் என்றார்கள்.

தமிழ்த் திருநாட்டில் பலருக்கு
இலவசமாய் இசை மருத்துவம்
பார்த்தது நீ!

மயக்கம்,
தலைவலி
மண்டைக்குடைச்சல்
தலைச்சுற்றல்
அதீத டென்சன்
நெஞ்சுவலி
தூக்கமின்மை
மன அமைதியின்மை - ஏன்
பலருக்கு பைத்தியம் என்று கூட
சேர்த்துக் கொள்ளலாம்
இவைகளெல்லாம் அனுகாமல்
இசை மருந்திட்டது நீ!

ராக தேவனே! இசைப் பிறவிகள்...
அதிகம் மெய்மறந்திருப்பார்கள்,
யோகம் கற்காமலே அது அவர்களை ஆக்கிரமிக்கும்,
ஆன்மீகம் இருப்பதால் மனம் அமைதியாகும்.

கவலை விடு,
உன்னால் உலகம் கவலை மறந்தது
உனக்கொன்றும் நேராது.

பல கோடி பேருக்கு
பாட்டால் ஆயுள் நீட்டித்திருக்கிறாய்.
அவ்வளவு எளிதில்
உன்னை இசை விடாது.

இசைக்காக வாழ்வாய்!
பல கோடி மக்களின்
பிரார்த்தனை உன் இதயம் சீராக்கும்.

.-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

20 டிசம்பர் 2013

அஹமது நளீருக்கு ஐந்தாம் பிறந்த நாள்!எங்கள் செல்லக்குட்டி சுல்தான் அஹமது நளீருக்கு இன்று ஐந்தாம் பிறந்த நாள்!

இதே நாளில் இவன் பிறந்த போது நாஙக்ள் அடைந்த சந்தோசத்திற்கு எல்லை இல்லை. 

திருமணம் முடித்து பெறும் முதல் குழந்தை அந்த தலைக்குழந்தை தரும் மட்டற்ற மகிழ்வை ஒரு தகப்பனாக அந்தஸ்து பெற்று புலங்காகிதம் அடைந்து பெறுவது இறைவன் அருளும் பெரும் பேறுகளில் ஒன்று. அந்த ஆனந்த களிப்பை எனக்கு ஊட்டியன் இவன். 

குழந்தை உண்டானதிலிருந்தே என் தாய் தந்தையர் முதன் முதலாக பெற்ற காலத்தில் என்னென்ன ஆனந்தம், அனுபவம் அடைந்திருப்பார்கள் என என்னை ஒவ்வொரு நிலையிலும் சிந்திக்க வைத்தவன். என் தாய் பெற்ற பாட்டை என் மனைவி மூலம் எனக்கு எடுத்துக்காட்டியவன் இவன்.

கண்ணே உன்னை நினைத்து எழுதப்போனால் எழுதி முடிக்க முடியாதடா.. இறைவனருளால் இரண்டு வயதிலிருந்தே பென்சிலோ.. சிலேட்டு குச்சிகளோ பிடிக்காமல் பேனா பிடித்து அகரம் முதல் அனைத்து எழுத்துக்களும் எழுதிக்கற்றாய். உனக்கு பேனா ஒன்று கொடுத்தால் போதும் இரவும் பகலும் எழுத்திக்கொண்டே இருப்பாய். இது உனக்கு இறைவன் அளித்த அருள்.

கண்ணே! நீ நிறை ஞானம் பெற்று சிறப்பாய் சீரோடு வாழ்க!

மணியே! நீ எல்லா அருட் பேறுகளும் பெற்று புகழ் சூழ வாழ்க!

முத்தே! நீ எங்களை மகிழ்வித்து இறையவனும், இறைத்தூதரும் அவர் தம் திருக்குடும்பத்தினரும் உளம் நிறைந்து மகிழும் வண்ணம் வாழ்க!

மகிழம் பூவே! என்றும் நீ நல்ல பூரண உடல் நலத்தோடு பல்லாண்டு.. பல்லாண்டென.. நீண்ட நிறை வாழ்வை நிலத்தினில் பெற்று எல்லோருக்கும் பயன்தரும் சிறப்புயர் செம்மை பெருவாழ்வை பெற்று வாழ்க.

இறைவா! எங்கள் குழக்கொழுந்தை, அருமை மகவை நீ உன் பேரருள் கொண்டு சிறப்பாய் வாழ வை!

எங்கள் உயிரினும் மேலான கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களது நல்லாசிகள் சூழ வையமதில் ஆள வை! ஆமீன்.

வாழ்க! வாழ்க!! வாழ்க!!!


( எனது இரண்டு பிள்ளைகளும் பிறந்தது டிசம்பரில் தான்.)


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

18 டிசம்பர் 2013

பொருள் உலகு!யாரும் நேர் திசையிலில்லை
ஊரும் உலகமும் மாறிவிட்டது

நோக்கமெல்லாம் நோக்கிலில்லை
தூக்கத்திலும் விழிப்பிலும் தூய்மையில்லை

வாழ்வுக்காக பொருளென்பதெல்லாம்
பொருளுக்காக வாழ்வென்றாகிவிட்டது.

பிறப்பிலிருந்தே  பிறப்பிக்கபடுகிறான்
பொருள் நோக்கில்!

அருள் நோக்கெல்லாம் மறைந்து
மருள் உலகில் வாழ்ந்து மடிகிறான்!

வாழ்வின் பொருளே தெரியாது,
வாழ்வெல்லாம் தெரிந்தது பொருள் தான்!

பொருளற்ற வாழ்வை பொருளோடு வாழ்ந்து
சுவடுகள் ஏதுமிலா சூன்யமாய் சாகிறான்.

ஆனாலும்,
பேசும் ஆயிரம்  வெற்று பெருமைகள்
நாயினும் கொடிய வெறிகள்
நோவினையாற்றும் செயல்கள்
சிரிப்பையும் சிலிர்ப்பையுமே தருகிறது!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

16 டிசம்பர் 2013

முஸஃப்பர் நகர் தொடரும் அவலம்!
சில நாட்களாக தொடர்ச்சியாக காதுகளில் படும் முசஃப்பர் நகர் மக்களின் சோக செய்தி மிகவும் என்னை வருத்தத்தில் ஆழ்த்திய வண்ணமே இருக்கிறது.

மிகக்குளிர்,   ஒதுக்கப்பட்டுள்ள முகாம்  சீதோச நிலைக்கு தகுந்தவாறு உறுதுணை தருவதாய்  இல்லாத காரணத்தினால் தினம் தினம் கூடாரங்களில் கொத்து கொத்தாக கடுங்குளிரால் தக்குபிடிக்க முடியாத பச்சிளம் பாலகர்கள் செத்து மடிகின்றனர். மனதை இது மிகுந்த ரணமாக்குகிறது. இது குறித்து சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க உத்திரபிரதேச அரசை கேட்டுக் கொண்டும் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அடுத்து முகாம்களில் காளிகள் புகுந்து ஒண்ட இடமில்லாமல் கூடாரங்களில் குறுகிப்போய் வறுமையிலும், இனக் கொடூரங்களிலும் வாடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய இளம் பெண்களை குறிப்பார்த்து கொடூரமாய் கற்பை சூரையாடுவதும் தொடர்வதாய் அந்த நிகழ்வுகளும் தொலைக்காட்சி சிலவற்றில் வராமல் இல்லை.

கலவரம் நடந்து சில நாட்களிலேயே கூடாரத்தில் புகுந்து அங்கிருந்த இளைஞரை குறிவைத்து காவியாட்கள் நடத்திய காளியாட்டத்தில் அவர் கொடூரமாக கொல்லப்பட்டதும் அவர்களுக்கும் மூகமில் இருக்கும் இளைஞர்களுக்கும் ஏற்பட்ட மோதல்களும் நினைவிருக்கலாம்.

கலவரத்தால் வாழ்வாதாரம் இழந்த இந்த பராரிகளுக்கு ஒழுங்கான முகாம் கூட அமைத்து தர இந்த அரசிற்கு வக்கில்லை, பல சமூக இயக்கங்கள் முசாபர் நகரை மையப்படுத்தி வசூல் வேட்டை நடத்தினாலும் எந்த அளவிற்கு அவர்களுக்கு ஆருதல் அளிக்கும் வகையில் அது சென்று சேர்கிறது என்பது கேள்விக்குறியே! அங்கனம் அது சென்று சேர்ந்து அவர்களின் துளியளவு இன்னலுக்கு மருந்தானாலும் அது மிக ஆருதலே. அந்த வகையில்  ஒரு ஆருதலான விசயம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் குர்ரம் உமர் அவர்களின் தன்னலம் கருதா சமூக தொண்டு. உமர் அவர்கள் பாதிக்கப்பட்ட அவர்களை பல முறை சென்று தொடர்பு கொண்டு அவ்வப்போது அரசாங்கத்தை அணுகி அவரக்ளுக்கு வேண்டியதை செய்ய சொல்லி குரல் கொடுத்தும், அவரால் இயன்ற பல உதவிகளை செய்தும் வருவது வரவேற்பிற்குறியது, இரண்டு நாட்களுக்கு முன்பு  கூட தங்களால் இயன்ற குளிர் கம்பளங்களை கொண்டு சென்று குளிரால் வாடும் அவர்களுக்கு கொடுத்து வந்தார். அவருக்கு நான் இத்தருணத்தில் நன்றி கூறிக்கொள்வதுடன் துஆவும் செய்கிறேன்.

ஆதரவற்ற என் சமூக மக்களுக்கு விடிவு காலம் எந்நாளோ..? அநீதிகள் மாய்ந்து நீதி அரசாள்வது தான் எந்நாளோ..? புரியவில்லை ஆனால் இதற்கெல்லாம் விடிவென்பது சமூக ஒற்றுமை மூலம் மட்டுமே உண்டாகும். பாசிச சக்திகளில் கைகளில் கொடும் ஆயுதங்கள் நம்மை சாய்ப்பதற்கும், மாய்ப்பதற்கும் இருக்கும் வேலையில் நம் சமூகம் ஓரணியில் ஒன்று சேருமா..?  உணர்ச்சி வசப்படுத்தி மீண்டும் மீண்டும் சமூகத்தை பாதகத்தில் தள்ளும்  இயக்கங்களுடன் சென்று கெடுமா?  அல்லது முஸ்லிம் லீக் போன்ற சாத்வீக அரசியல் அமைப்போடு இச்சமூகம் ஒன்றிணைந்து வெல்ல களம் காணுமா..? என்பதே இன்றைய கேள்வி.


- வழுத்தூர் ஜா. முஹையத்தீன் பாட்ஷா

05 டிசம்பர் 2013

சரித்திரம் இன்னும் இருக்கிறதுஜனாஸா தொழுகை நடத்தி
புதைக்கப்பட்டது,
பெருமை வாய்ந்த
இந்தியத் திருநாட்டின்
வானளாவிய பெருமைகள்!.

அரசியல் இலாபத்திற்காய்
வாழும் பேரினத்தின்
தொழுகைத் தளம்
இடிக்கப்பட்ட் தருணம்.

****

மெய்ஞ்ஞானம் வளர்த்த
பாரதத் தாயின்
பொன்மேனி சிதைக்கப்பட்டது

பொய்ஞ் ஞானத்தால்
வெறியூட்டப்பட்ட
வேட்டை நாய்கள்
பாய்ந்து குதறியதால்!

*****

"ஈஸ்வர்" என்பதும் "அல்லாஹ்" என்பதும்
இறைவனை குறிக்கும் இருபெயர்கள்
என்று போதிக்கப்ட்ட திருநாட்டில்,
ஈட்டியும், உடைப்பாறையும், செங்கல்லும்
எடுத்துவர பணிக்கப்பட்டனர்
அறிவு மங்கிய மந்தைக் கூட்டத்தினர்!

அண்ணன் தம்பியாய்
வாழ வகையிருந்தும்
அத்துவானிய சூழ்ச்சிகளால்
ஆடும் ஓணானுமாய் ஆகி நின்று
பலர் ஆவி பறித்த சோகம் - இது
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட தேசம்!

****

பல்லாயிரம் பிரிவிருந்தும்
பரிவுகாட்டி பாசம்காட்டி
பகிர்ந்துண்டு பாமரரும் வாழ்ந்த நாடிது.
வேற்று'மை' கொண்டு பிரித்துக் காட்டி
ஓட்டுக்காக ஒழுகிய இரத்தத்தில்
காட்டுக்கு சென்று வனவாசம் பூண்ட தனக்கு
இரத்த அபிசேகம் செய்யச்சொன்னானா இராமன்???


ஆயிரத்திற்கும் மேலான
ஆண்டுகள் அண்ட
சமூகத்தின் சரித்திர புதையல் சிதைக்கப்பட்டது
அறுபது ஆண்டுகால ஆட்சிபீடத்தில்!

ஆயினும் சக்கரம் சுழல்கிறது
சரித்திரம் இன்னும் இருக்கிறது.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

29 நவம்பர் 2013

துபாய்!

உழைக்க இடந்தந்து
பிழைக்க வழிதந்து
கண்ணில் ஒளிதந்து
மகிழ்ச்சி களிதந்த தேசம்.

*

ஊழல் இல்லாத சூழல்

கூணல் இல்லாத அரசு

*

களவாணி அரசியல்வாதிகள் இல்லாத தேசம்
கரண்ட் கட்டுகள் இல்லாத பிரதேசம்.


*


உழைப்பாளிகள் கட்டிய இமயம்,
களைப்படையாத நிலையம்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

15 நவம்பர் 2013

உறைந்து கிடக்கிறது !சுற்றுச்சூழல் அனைத்தும்

சூனியம் செய்கிறது,
நற்சிந்தனைக்கு.

*


விருப்பமுடன் வளர்த்த அன்பின் கோட்டை அடியோடு சாயும்
நாவில் சறுக்கி விழும் ஒற்றைச் சொல்லால்!

*

வளர்ந்ததில் வெறுப்பே மேலிடுகிறது

குழந்தையின் குணத்தை கொலைசெய்தோம்!

*

சேகரிக்கப்பட வேண்டிய 

முத்துக்களை சிந்தியே செல்கிறது.
மழலை!

*

கூர்மையான ஆயுதங்கள் ஏதும் வேண்டாம்
வேல்விழி பார்வை ஒன்று போதும்
என்னை கொல்ல!

*

உண்மையில்

வேலையில்லாத நாட்களில் தான்
மூளை வேலை செய்கிறது.

*


இன்னும் என்ன சொல்ல!
திண்ண திண்ண திகட்டா சுவை,
வண்ணக் கண்ணம்!

*

சச்சரவுகளின் சுற்றுச்சுவர் வலிமைபெறுகிறது,
அவ்வப்போது நடக்கும் நீயா நானாவில்.

*

மறைந்து கிடக்கவில்லை எங்கோ,

உறைந்து கிடக்கிறது நம்மில்.
மகிழ்ச்சி!

*

உடையும் என்று தெரிந்தே

நொறுக்கப்படுகிறது.
இதயங்கள்!

*

வான்மதி பார்த்தால் வரும் நிம்மதி - நம்
திருமதிகளை பார்த்தால் நிர்கதியாகிவிடுகிறது.

*

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

14 நவம்பர் 2013

சிறப்பான தலைவர் நேரு!வாசித்தல் எனக்கு ஆசிய ஜோதி ஜவஹ்ர்லால் நேரு மீது மதிப்பையும், மரியாதையையும் தந்திருக்கிறது. அவர் அகில இந்திய தலைவர் என்பதையும் மீறி சர்வ தேச அளவிலும் மதிக்கத்தக்க சிறப்பான ஆளுமையாக இருந்தார். அவருக்கு பின் இந்திராவை சொல்லலாம். இவர்களுக்கு பிறது இந்தியாவிலிருந்து சர்வதேச ஆளுமையாக மதிக்கத்தக்க ஒருவரை சுட்டிக் காட்டுவது வெற்றிடமாகவே இருக்கிறது.

நேரு மிகச்சிறந்த தலைவர், பன்முகம் கொண்ட இந்திய சமூகத்தில் பெரும்பான்மை மக்களுடன் சிறுபான்மை மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை வழி நடத்தியவர்.

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாகவும், படேல் போன்ற பாசிச சக்திகளை லாவகமாக கையாண்டு இந்திய துணைகண்டத்தின் பாரம்பரிய பெருமைக்கு விபரீதம் நேராமல் காத்தவர். இப்படியாக நேருவின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நேருவின் "டிஸ்கவரி ஆஃப் இந்தியாவும், ஃப்ரீடம் அட் மிட் நைட்"  என்ற இரண்டு உலகப்புகழ்பெற்ற புத்தகங்களை படிக்க பெரும் ஆவல்.

குழந்தைகளின் மீது பேராவல் கொண்ட நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக இந்தியா முழுவது கொண்டாடி களிக்கிறது.

நாளை பெரும்பாலான பள்ளிகளில் இனிப்பு வழங்குவார்கள். குழந்தைகள் மகிழ்வார்கள்.

அனைவருக்கும் ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் (குழந்தைகள் தின) வாழ்த்துக்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

11 நவம்பர் 2013

என் கேள்விக்கென்ன பதில்..?


நாயகன் படமெல்லாம் பார்த்ததில்லை இவன், பார்த்திருக்க வேண்டுமே என்றெண்ணும் அளவுக்கு இவனுக்கு வயதும் இல்லை.

ஆனாலும் சில கூட்டங்களுக்கு அழைத்து செல்கையில் மேடையில் யார் தோன்றினாலும் என்னைப் பார்த்து கேட்பான் " இவர் நல்லவரா..? கெட்டவரா..?

யார் அழைபேசியில் அழைத்தாலும் என்னைப் நோக்கி கேட்பான் "நீ இப்போது பேசியவர் நல்லவரா..? கெட்டவரா..?

முகநூல் பார்த்தால் பக்கத்தில் அமர்ந்து கொண்டு முகங்களை சுட்டி என்னை விழித்துக் கேட்பான் " இவர் நல்லவரா..? கெட்டவரா..?

இவர் நல்லவரென்றாலும், கெட்டவரென்றாலும் விடாது ஏன்? எப்படி? என்றெல்லாம் வினவி எளிதில் சமாதானமாக மாட்டான் என் மகன்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

07 நவம்பர் 2013

அமீரகத்தில் அருள் மழை!

அமீரகத்தில் அருள் மழைப் போல பனிமழைப் பெய்கிறது.

மாலை ஐந்துரை மணி நெருங்கும் வேலையிலெல்லாம் முழுவதும் இருட்டிட எல்லா முஸ்தீபுகளையும் எடுத்திருந்தது வானம். நேற்று முன் தினம் அடித்த மணல் காற்று பனி ஆரம்பிக்க போகிறது என்ற சூழல் மாற்றத்திற்கான அறிகுறி. அதன் விடையாக இன்று பனி மாலை வேலையிலேயே கடைபோட ஆரம்பித்துவிட்டதை துபாய் பைபாஸ் சாலையின் இருமருங்கிலும் கண்ணுக்கு எட்டும் இருக்கும் பாலைவெளி தெளிவாக தெரியாதவாறு பனிப்படலம் அலசலாக திரை அமைத்து அற்புத சூழலை உண்டாக்கி வைத்திருந்தது, அதுவும் வாரக் கடைசி மனநிலை கூடுதல் குதூகளம் தந்தது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

02 நவம்பர் 2013

அகமலர்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.திருநாட்கள் வாழ்வில் அவசியம்
திருநாட்கள் நம்மை புதுப்பிக்கிறது
திருநாட்கள்  நமதுக்கு குதூகல‌ம் அளிக்கிறது
திருநாட்கள் நமக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது
திருநாட்கள் நமக்கு சிறப்பான மகிழ்வளிக்கிறது
திருநாட்கள் நம்மை நமது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மகிழ்வளிக்க ஆவன செய்கிறது.

தீபாவளிக்கும் தமிழருக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா என விவாதித்தல் வீண்னெபேன் நான்,

நரகாசுரனை கொன்றதாலோ அல்லது இல்லையோ

ராமன் வனவாசம் விட்டு வந்ததாலோ அல்லது இல்லையோ

நம்மை கொண்டாட ஒரு நாள்.. நாம் மகிழ்திருக்க ஒரு நாள்

ஆதலால் கொண்டாடுங்கள் தீபாவளி திருநாள்!

நண்பர்கள் அனைவருக்கும் என் அகமலர்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

31 அக்டோபர் 2013

இந்தியாவை பெருமிதப்படுத்திய இதயம்!

" இந்தியாவிலிருந்து ஏகத்துவத்தின் ஞானத்தென்றல் வீசுவதை உணர்கிறேன்"

தன் மேலங்கியை சற்று ஆசுவாசப்படுத்தும் விதமாக தளர்த்தி "அறிவின் தாயகம்"  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) மேற்கண்ட வாசகங்களை சொன்னார்கள்.

திருமூலரும், அகத்தியரும், திருவள்ளுவரும் விதைத்த ஏகத்துவ ஆன்மீகக் கருத்து ஆன்மீக பேரொளியாய் திகழ்ந்த நபிகள் நாயகத்திற்கு தெரிந்ததனால் தான் இக்கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இத்தத்துவம் அன்றிலிருந்தே அறியப்பட்டதனால் தான் இந்திய பூமி இஸ்லாத்தை விருப்பமுடன் உள்வாங்கிக் கொண்டது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

சிக்காத சிறு புள்ளி!

மிகப்பெரிய சண்டையின் அந்தியில், 
ஆதிப்புள்ளியாய்  மீந்திருக்கும் 
கண்ணுக்கே சிக்காத சிறு புள்ளி!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

30 அக்டோபர் 2013

கனவு மொழிகள்!

எனக்கு உருது, அரபி மொழிகளில் எழுத படிக்கவும், நம் அணடை மாநில மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்றறைவ்களையும் ஓரளவாவதும் கற்க வேண்டும் என்பது மன வேட்கை!

ஆனாலும் எத்தனையோ மலையாளிகளிடம் இதுகாரும் பழகி என்ன பயன் அவர்களது அட்சரத்தில் அ, ஆ கூட கற்கவில்லை. 

பெங்களூருவில் உருது முஸ்லீம்களிடத்திலும், துபாயில் ரூம் மேட் பாக்கிஸ்தானியுடனும் பழகியும் என்ன அதுவும் பாழ்! ஒரு அலிப், பே கூட பே! 

கன்னடத்தில் மாத்தாட மனதெல்லாம் ஆசை ஆனாலும் அவ்வப்போது அந்நாளில்  இரவு நேர கன்னட செய்தி கூட‌ தூர் தர்சனில் கேட்போன் அத்தோடு முடிந்தது. அதுவும் சுத்தப்பட்டு வரவில்லை! 

டீ பாயிலிருந்து அலுவலக நண்பர்கள் வரை தெலுங்கர்கள் இருந்தென்ன ஒழுங்காக ஒரு எழுத்துக்கு வழியில்லை!

அரபு நாட்டில் இருந்தும் சின்னஞ்சிறு வயதில் மதரஸாவில் ஓதியதன் பொருட்டு படிக்க முடிந்திருக்கும் அரபி எழுத்துக்களோடு சரி, சரள அரபியும் மாஃபி! 

தொழில் ரீதியாக வந்த நிர்பந்தத்தின் காரணமாக ஏதோ ஆங்கிலம் தெரிந்து தப்பிக்கிறோம். 

தாய்மொழி அவசியம் மூச்சை போன்றது. அத்தோடு பிறமொழி அறிவென்பது கூடுதல் கண்களும், காதுகளும் பெற்றது  போன்றது.

நேற்று எனது நண்பர் மலையாள புத்தகத்தை மொழி பெயர்க்கிறேன் என்றவுடன் நான் நம்பவில்லை அவரை படிச்சச்சொல்லி அதை பரிசோதித்தபின்பே நம்பினேன். அது தொடர்பாக எழுந்த சிந்தனையில் மேற்பட்டவை எனக்குள் குடைந்தெடுத்தது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

26 அக்டோபர் 2013

பிலாலியா ஆலிம்களுக்கு வாழ்த்து

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

பிலாலியா ஆலிம்கள் வெகுஜன நாளேடான தினத்தந்தியில் கட்டூரைகள் எழுதத் தொடங்கியுள்ள செய்தி அறிந்து மிக்க மகிழ்வும், பெருமிதமும் அடைந்தேன். இது போன்ற தேர்ந்த அறிஞர்கள் எல்லாம் ஊடக‌த்தை    இஸ்லாத்தை சிறப்பாக சொல்ல பயன்படுத்தவில்லையே என்ற குறை எனக்கு இருந்தது ஆதலால் இந்த செய்தி என்னை மிகவும் சந்தோசப்பட வைத்ததெனலாம். வாழ்த்துக்கள். வல்ல அல்லாஹ்வும் அவனது தூதர் நபிகள் நாயகம் ஸல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களும் அருள்வார்களாக!


மேலும் நான் எப்போதும் அன்பர் முதுவை ஹிதாயத் அவர்கள் மூலம் அமீகரத்தில் நடக்கும் வெள்ளிக்கிழமை குத்பாவின் தமிழாக்கத்தை வாராவாரம் பெற்று வருகிறேன். அதை விருப்பமுடன் படித்தும், பல விசயங்களை அறிந்தும் வருகிறேன். இம்மாதிரியான அறப்பணிகளை செய்யும் தங்களுக்கும் அதை அனுப்பித்தரும் அன்பர் ஹிதாயத் அவர்களுக்கும் எனது இதயப் பூர்வமான நன்றிகள்.

குறிப்பு: தந்தியில் எழுதிய கட்டுரையில் நபிகள் நாயகம் ஸல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை குறிப்பிட நபி(ஸல்) என்றே குறிப்பிட்டிருந்தீர்கள், ஆகவே வெறுமனே நபி (ஸல்) என எழுதாமல் சிறப்பாக தமிழகத்து சகோதர சமூக‌ / மத- த்தவர்களும் "நபிகள் நாயகம் (ஸல்..) " என்றே அழைக்கும் பாங்கு இருப்பதால் அவ்விதமே "நபிகள் நாயகம் (ஸல்..) " என எழுதினால் நலமாக இருக்கும்.

அன்புடன்,

வழுத்தூர் . ஜா.முஹையத்தீன் பாட்ஷா

18 அக்டோபர் 2013

நல்ல விசயங்கள்கீழ்காணும் நல்ல விசயங்கள் நான் எழுதியதல்ல.. ஆனால் நான் மொழியாக்கம் செய்தது. 

எனக்கு வந்த மெயிலின் ஆங்கில வாசகங்களை மொழிபெயர்த்தால் நண்பர்களுக்கும் நலம் பயக்கும் என்பதால் மொழியாக்கம் செய்து இங்கே பகிர்கிறேன்.


நாளும் 10 முதல் 30 நிமிடம் வரை நடைபயிற்சி முக்கியம், அதிலும் புன்னகைத்தவாறே நடப்பது மிக நலம், இது நிகரற்ற மன அழுத்தப்போக்கியாகும்.

• ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 நிமிடமாவது மெளனமாக அமர்ந்து தியானம் செய்க! அறையை தாழிட்டாலும் நலமே.

• கண்டிப்பாக காலந் தவறாமல் தொழுகை செய்க, உடற்பயிற்சியும் வேண்டும்.

• 6 வயதிற்கு குறைந்தவர்களுடனும், 70 வயதினை தாண்டியவர்களுடனும் கலந்து அதிக நேரம் செலவிடுதல் இது மிக முக்கியம்.

• மரத்திலிருந்தும், செடிகொடிகளிலிருந்தும் வரும் உணவை அதிகமாக உண்ணுங்கள், அதிலிருந்து தயாரிக்கப் பட்டதை (சமைக்கப்பட்டதை) குறையுங்கள்.

• பச்சைத் தேனீரும், தண்ணீரும் அதிகம் குடியுங்கள், பாதாம், வால்நட், ப்ரூகூலி அதிகம் சாப்பிடலாம்.

• நளுக்கு குறைந்த பட்சம் 3 பேரையாவது மென்சிரிப்பு செய்திட முயலவும்.

• வீடு, கார், மேஜை இவைகளை குப்பை மேடுகளாய் ஆக்காமல், பூந்தோட்டமாய் அழகாக்கினால் வாழ்வில் புத்துணர்வை கொண்டுவரும்.

• உங்கள் அற்புத ஆற்றலை வீணான அரட்டை, பழங்கதை பேசுதல் அல்லது கழித்து பாழாக்காமல், நேர்மறையாய் சிந்தித்து செயலாற்றுதலில் முதலீடு செய்வோம்.

• அரசனைப் போலே காலை உணவும், குடிமகன் போலே பகல் உணவும், இல்லாத ஏழைப்போல் இரவு உணவும் இருக்க வேண்டும்.

• வாழ்க்கை நமக்கு முழுக்க சாதகமாகவே இல்லாவிட்டாலும், நல்லதாக இருக்கிறது, அதை நம்புங்கள்.

• வாழும் வாழ்க்கையே குறைவான வாழ்நாட்கள் தான் அதை மற்றவர்களை வெறுப்பதில் வீணடித்திட வேண்டாம்.

• வாழ்வில் எதற்கும் நம்மை விட்டால் வேறு ஆள் இல்லை என நீங்களே உங்களை வருத்திக்கொள்ள வேண்டாம், எதையும் யாரும் செய்வார்கள்.

• ஒவ்வொரு வாதத்திலும் நீங்களே வெற்றி பெற எண்ண வேண்டாம், தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள்.

• கடந்த காலம் குறித்து திருப்தி அடையுங்கள், அது உங்கள் நிகழ்காலத்தை மேன்மையாக்கும்.

• எப்போதும் மற்றவர்களோடு உங்களை ஒப்பிட வேண்டாம், ஏனெனில் அவர்களின் வாழ்க்கைப் பயணம் எதை நோக்கி என்பது உங்களுக்கு தெரியாது.

• உங்கள் வாழ்க்கையில் மகிழ்வை உங்களைத் தவிர யாரும் உண்டாக்க முடியாது.

• வாழ்வின் எந்த சோகத்தையும் குறித்து வைத்து கொள்ளுங்கள், அவைகள் 5 வருடங்கள் கழித்துப்பார்த்தால் இருக்குமா?

• எல்லோரையும் மன்னியுங்கள் அவர்கள் எதை செய்த போதிலும்.

• உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன சிந்திப்பார்கள் என எண்ணுவது உங்கள் வேலை அல்ல.

• காலம் அனைத்தையும் சிறப்பாக்கும்.

• நல்லதோ, கெட்டதோ அனைத்து சூழ்நிலைகளும் மாறும்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

13 அக்டோபர் 2013

வரும்... ஆனா வராது!

துபாய் குளிர்ந்துவிட்டது
***********************************
வாட்டி வதம் செய்த கோடையின் கொடூரம்! அது செப்டம்பர் முப்பதிலிருந்தே தணிய‌ இவ்வருட வெம்மையிலிருந்து துபாய் விடுதலையானது. அக்டோபரின் முதல் இரண்டு நாட்களின் காலை நேரங்கள் பனிமிகும் நாட்களை நினைவு படுத்தி புகைமூட்டம் போலே  இருக்கத்தொடங்கிய போதும் கூட பின் நாட்களின்  பகல் பொழுதுகளில் பகலவன் கொஞ்சம் படுத்தி எடுக்கத்தான் செய்தது. இருந்தாலும் இரவு குளிர் இதமளிக்க தவறுவதில்லை ஆதலால் அமீரகம் அலுவல் முடித்து குடும்பம் சகிதமாக வெளியே வரும் எல்லோருக்கும் ஏசியாகத்தான் இருக்கிறது.திடீர்!
*******
நல்ல மனநிலையிலிருந்த வானத்திற்கு என்ன ஆனதோ தெளிவாக இருந்த அது திடீரென இன்று மாலை ஐந்து மணிவாகிலெல்லாம் மயங்கி சரிந்தது, இருட்டிற்கும் வெளிச்சத்திற்கும் மத்திய நிலை... மெல்லிய பொடி மண் காற்று வான்நிலையில் அப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருந்தது. வெப்பநிலை தப்பு சொல்லமுடியாதவாறு குளிராக இருந்தாலும் அலுவலகம் முடித்து மகிழ்வுந்தை செலுத்த சற்று சிரமமாகவே இருந்தது. இருந்தாலும் செலுத்தியே ஆகவேண்டும். அப்படியே நான் இருக்கும் அரேபியன் ரேஞ்சசிலேயே இருந்துவிட முடியாதே!புறப்பாடு
***************
மகிழ்வுந்தின் திறவியை திருக.. செலுத்த தயாரானது.  நினைத்ததை விட சற்றே வெளிப்புறத்தில் பார்வை பதிக்கமுடியாததாகிப் போனது, இருந்தாலும் இதுதான் இன்றைய நிலை என எண்ணி மகிழ்வுந்து விரைந்தது. சன்னலை திறந்து ஓட்டிச் செல்கையில் மண் பொடியால் எழுந்த சிறு அரிப்பு கண்ணாடியை மூட வைத்தது.வானத்தில் போகுதோ
******************************
சீதோதசநிலை சிலிர்ப்பை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது என்பதில் மனம் மகிழ்வடைந்திருந்தது. மகிழ்வுந்து துபாய் பைப்பாஸ் சாலையின் ஆறு வழிச்சாலையின் இரண்டாவது வழித்தடத்தில் விரைந்திருக்க.. அடைமழை ச்சோ...ஓ..ஒ... வென பெய்திருந்து அந்த மழையினூடே மகிழ்வுந்து சென்றிருந்தால் எப்படி இருக்குமோ அவ்வாறான சூழல் ஆனால் மழை மட்டும் தான் இல்லை.. மகிழ்வுந்து ஏதோ மிதப்பது போல் ஒரு உணர்வு.. எனது மகிழ்வுந்திற்கு முன்னும். இடதும், வலதும் செல்கிற வாகனங்களெல்லாம் ஏதோ எதிரே குறிப்பிட்ட அளவு தெரிகிற பாதைக்குமேல் உள்ள புகையில் சென்று  வானில் புகுந்து கொண்டே இருப்பது போல் தான் இருந்தது. அதில் எனது வாகனமும் விதிவிலக்கல்ல..! புகையினூடே புகுந்து வானில் மிதந்தது...  மிதந்து... கொண்டே வடிவேலு காமெடியான "வரும் ஆனா வராது" என்பது போலவே மகிழ்வுந்தை செலுத்தி..ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்தேன்.


தேங்க் காட்! வித் குட் மூட்.

(இது போல் எத்தனையோ பதிக்கப்பட வேண்டிய அனுபவங்கள் அனுதினம் நடந்தாலும் இதை பதிக்க நாடியது மனம்)


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

04 அக்டோபர் 2013

தலைவர் சிராஜுல் மில்லத்-ன் 88ஆம் ஆண்டு பிறந்த நாள்

அறிஞர் அண்ணா மற்றும் கலைஞருடன் தலைவர் சிராஜுல் மில்லத் அ.கா.அ. அப்துல் ஸமது அவர்கள் 


சந்தனத் தமிழ் வித்தகர், மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று "நல்லப்பேச்சுக்கு அழகு நாற்பது நிமிடங்கள்" என்று அலுத்துப் போகாத மேடைப் பேச்சுக்கு இலக்கணம் வகுத்த மேடைப்பேச்சு சிற்பி, எவ்வளவு பெரிய எதிர்ப்புக் கணைகளையும் கூட தனது சாந்தக் குரலால் எதிர் தரப்பு தன் குற்றம் உணருமாறு உரைத்திடும் வல்லமை பெற்றவர். கேட்டுக்கொண்டே இருக்கலாம் இவரது பொது மேடைப்பேச்சுக்களை ஆனால் அவர் இன்று இல்லை. ஆம் மேற்கண்ட வாசனை வாசக‌ங்கள் சுட்டிடுவதெல்லாம் மறைந்த மாமேதை முன்னால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் ஒப்பற்ற தலைவர் "சிராஜுல் மில்லத்" அல்ஹாஜ் அ.கா.அ. அப்துல் சமது அவர்களைத்தான்.  அம்மாமேதையின்  88 வது பிறந்த நாள் இன்று.

தலைவர் பெருந்தகை அவர்கள் பேச்சில் மட்டுமல்ல..  அவரது தலைமைத்துவ பண்பு,  சிறுபான்மையினர் நலனை பேணுவதிலும் அவர்களது உரிமைகளை மீட்டெடுப்பதில் அவர் கையாண்ட மென்மை மற்றும் ஆரசியல் சாதுர்யம், சமூக நல்லிணக்கத்தை பேணுவது, இந்திய அரசியல் அமைப்பிற்கும்,  அதன் ஒருமைப்பாட்டிற்கும் ஊறு நேராத வகையில் அதன் மாண்பை போற்றும் வகையில் இந்திய இஸ்லாமிய மக்களை வழி நடத்தியது இவைகளெல்லாம் இவரின் சிறப்பம்சங்கள்.

இவர் அன்றைய தேசிய தலைவர்களான இந்திரா அம்மையார், ராஜிவ் உட்பட எல்லா தலைவர்களுடனான  இவரின் தோழமை இந்திய இஸ்லாமிய மக்களுக்கு பல சாதனைகளை செய்ய ஏதுவாக அமைந்தது. இஸ்லாமியர்களுக்கும் பொது சிவில் சட்டம் தான் பின்பற்றப்பட வேண்டும் என்ற வாதங்களெல்லாம் வைக்கப்பட்ட அந்நாளில் தலைவர் அவர்கள் அன்றைய பிரதமர் ராஜிவ் காந்திக்கு இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களுக்கு சரிஆத் சட்டத்தின் முக்கியத்துவத்தையும் சன்மார்க்க அறிஞர்களான உலமாக்கள் மூலம் விளக்கி ஷரிஆத் சட்டத்திற்கு பாதுகாப்பு வாங்கி தந்தது முதல்  இவரின் வாழ்வியல் வென்றெடுத்த பல சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக இவர் செய்த பணிகள் பாராட்டிற்குரியவை. தமிழ்க தலைவர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களோடும் அவர்களே தவிர்க்க இயலாத தோழமையாக இருந்து சமூகத்திற்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்தார். அப்பேற்பட்ட ஆளுமைகள் நிறைந்த தலைசிறந்த தலைவரின் பிறந்த நாளில் அவரது மிதவாதத்தை, சமய நல்லிணக்கத்தை, அடக்கத்தை, அறிவின் நுணுக்கத்தை நாமும் பின் பற்றி சமூக மேம்பாட்டிற்காக உழைப்போம் என உறுதி மேற்கொள்வோம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

26 செப்டம்பர் 2013

சிக்கந்தர் படிப்பகம், சரபோஜிராஜபுரம் வழுத்தூர்.கீழ்கண்ட கவிதை தஞ்சை மாவட்டம் வழுத்தூர் சாலைத் தெருவில் செளக்கத்துல் இஸ்லாம்  பாலிய முஸ்லிம் சங்கம்  மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே முன்பு இருந்த  "சிக்கந்தர் படிப்பகம்" பற்றியதாகும், சிறப்பாக இயங்கி வந்த அந்நூல்கம் பின்னாளில்  நலிவடைந்த நிலையில் இருந்த காரணத்தால் அதை மீட்டெடுக்க வேண்டி 1996-97-ல் மறைந்த சாலைத்தெரு துருவத்தார் ராஜ் முஹம்மது அவர்கள் மகத்தான களப்பணியை மேற்கொண்டார். அதில் பலரும் சிறப்பாக பங்கெடுத்தனர். (அதைப்பற்றிய பதிவு ஒன்றை கண்டிப்பாக எழுத வேண்டுமென என் மனம் நாட்டம் கொண்டுள்ளது) அத்தருணத்தில் அவரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த கவிதை பெரிய தாளில் (Chat paper) எழுதி தொங்க விடப்பட்டு அது சில ஆண்டுகள் வரை அங்கேயே நிலைத்திருந்தது. அதை பதிவு செய்யவே இங்கே இடுகையாக்கினேன்.

இளஞ்சிங்கங்களே! 
சமுதாய அங்கங்களே!! 

சிக்கந்தர் படிப்பகம் 
சிந்தனை சிறகுகளின் சிம்மாசனம்,
அறிவின் ஆலயம்,
நாளிதழ், வார இதழ் , மாத இதழெல்லாம்
பீடுநடை போட்டுவரும் நூலகம்.

வந்தாரை வாழவைக்கும்
வழுத்தூரில் வகையின்றி நம்
படிப்பகமும் வாடலாமோ?!

நம் முன்னோர் 
செதுக்கி வைத்த சிற்பமல்லவா - அது 
சிறப்பிழந்து போகலாமோ?

மலர் பொய்கையாய் இருந்த போது 
மகிழ்ச்சிக் கனாக் கண்டு 
தாதுண்ண வரும் வண்டுகள் போல்
தேடி வந்த தகைசால் பெரியீர்!
தார்பாலையாய் நூலகமும் 
தரம்மாற தலையசைக்கலாமோ?

ஆயிரம் நூல்கள் இருந்ததே
பாயிரம் பாடத்தான் ஆளில்லை!
ஆன்மீகம், அறிவியல், அரசியல்
பால்நிகர் வரலாறு, இலக்கிய படைப்புக்கள்
எதில் குறை?

பொழிவு பெற வேண்டுமானால் 
பொருள் தாரீர்! - இன்றேல்
பொன்னகை நிகர் செயல் தாரீர்!! - இன்றேல்
பொதிகை தென்றல் நிகர் சொல் தாரீர்!!!

-ஜா.முஹையத்தீன் பாட்ஷாஎன் நோட்டு புத்தகத்தில் அன்று எழுதி வைத்திருந்த அந்த வரிகள் உங்கள் பார்வைக்கு.


01 செப்டம்பர் 2013

ஏசுவின் முதல் புதுமை!பல்லவி:
ஏசுவின் முதல் புதுமையே
பேசுவோம் அவர் பெருமையே

சரணங்கள்:
இருமனம் சேரும் திருமண நேரம்
பறிமாறும் விருந்தில் பானங்கள் தீர‌
வானத்தில் மேகங்கள் வருசிக்கும் மழைபோல்
கானத்தில் முடியாத கருணை செய்யவே
வந்தீர் வந்தீர் தருணம் வந்தீர்   ஏசுவின்...           

பயந்தவர் முகத்தில் பரவசம் பொங்க
வெறும்நீர் தனையே அரும் ரசமாகவே
நறும் பாசமுடனே  பெரும் அதிசயம் செய்தே
காணா ஊர் கல்யாணம் காணவே செய்தீர்
தேனாய் தித்தித் திடும் பானமதை
தந்தீர் தந்தீர் ஆனந்தம் தந்தீர்   ஏசுவின்...


18 ஆகஸ்ட் 2013

துணையுடன் துயிலும் இரவெப்போது???தனியாய் துயிலுகிறேன்
துணையுடன் துயிலும் இரவெப்போது???

கற்பனை கற்கோட்டைகளெல்லாம்
வேதனை வெந்நீரூற்றில் வெந்ததுவே!

உள்ளிருக்கும் உஷ்ணங்கெளெல்லாம் தணிய
ஊற்றுக்குளிர் நீர் போல்
ஏற்றமிக்க துணை எனக்கும் அமையுமோ(?) வென...
காத்துக்கிடக்கும் இக்கன்னிகைக்கு
கன்னத்தில் முத்தக்கறை படியும் நாள் என்றோ???

வருங்கால கணவனின் கனவோடு
அரும்பிய உறக்கத்தில் ஆழ்ந்த நேரம்...
அள்ளி அணைத்தேன் தலையணையை
"தலைவனென்றெண்ணியே" !!!

இந்த பிரம்மைகளுக்கெல்லாம்
பிரம்படி எப்போது???

எங்கோ இருக்கும் என் தலைவா!!!
உனக்காக உரமிட்டு உடல் வளர்த்தேன்,
உன் கண்கள் பார்த்தே - இந்த
காதல் மலர் வெடிக்கப்போகும் நாள் எது??? என்ற ஏக்கத்தில்
எத்தனை முதிர்ந்து அதிர்ந்து போன கன்னிகைகள்!!!!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

குறிப்பு: எழுதியது 1996 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் திகதி... "இரவுகள்"  என நான் எழுதிய தொடர்கவிதை தொகுப்பிலிருந்து

26 ஜனவரி 2013

மறந்தது, மறுப்பது...!ஒருவர் கிழக்கே என்கிறார்

மற்றொருவர் மேற்கே என்கிறார்
பிரிதொருவர் தெற்கே என்கிறார்
இன்னொருவர் வடக்கே என்கிறார் - ஆனால் 
எல்லாருடைய திசைகளும் 
ஒரு மையப்புள்ளியிலிருந்தே என்பதை 
மறந்துவிட்டார்கள்,
யாரும் உணர மறுக்கிறார்கள்
என்பதே தற்போதைய கவலை!

- வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா24 ஜனவரி 2013

சத்தியத்தின் ஜனனம்பல்லவி:

சத்தியத்தின் ஜனனம்-பொய்
சித்திரங்கள் மரணம்-இருள்
பக்தியெங்கும் தகனம்-மருள்
மிக்கவர்கள் சலனம்-அருள்
பொங்கிவந்த தருணம்-திரள்
மகிழ்ச்சியிலே நடனம்-மன
மகிழ்ச்சியிலே நடனம்.. நடனம்.. நடனம்.. - சத்தியத்தின்...
                            
சரணம்:

பிறப்பில்லாத பேருண்மை
பிறவி எடுத்ததே
இளமை மூப்பு இவைகளெலாம்
வழமை ஆனதே
புலன் கடந்த பூர்வீகம்
உடல் எடுத்ததே
பார்வைப்பட உடலெடுத்து
பாதம் தந்ததே... பாதம் தந்ததே... சத்தியத்தின்...


பாதம் தந்த சாதகமே
போதம் தந்ததே
போதமான ரகசியங்கள்
தூது வானதே
தூதுவான அரும்பொருளே
வேத மானதே
வேதமதின் விளக்கமிங்கு
பேதமற்றதே...பேதமற்றதே... சத்தியத்தின்...

பேதமில்லா மாதவமே
கீத மானதே
கீதமான அழகுக்குரல்
மோகம் கொடுத்ததே
மோகமான மணித்துளிகள்
தாகம் தீர்த்ததே
தாகம் தீர்த்த முக்திநிலை
பேரின்பமானதே..பேரின்பமானதே.. சத்தியத்தின்...

சித்தியான முக்திநிலை
சொர்க்கம் ஆனதே
சொர்க்கமதைத் தந்தவரும்
தாங்க ளல்லவா
தாங்கள் எங்கள் அன்புமிகு
நாத ரல்லவா
நாநிலங்கள் போற்றுகின்ற
நதரல்லவா.. நபிநதரல்லவா..! நபிநதரல்லவா..!! சத்தியத்தின்...


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


பி.கு :
2000  லிருந்து 2002க்குள்  எழுதி இருப்பேன். சரியாக நினைவில்லை

22 ஜனவரி 2013

சீரழியும் சமுதாயம்

முகநூலில் சில தினங்களுக்கு  முன் நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹிவசல்லம்) நேசர்கள் வட்டத்தில் பதிவு செய்தது...

தமிழ் சமுதாய இஸ்லாமியர்களை இன்றைய நவீன இயக்கங்கள் சீரழித்துவிட்டது… அவர்களின் அறிவை மழுங்க செய்து முந்தைய அறிஞர்களை, ஞானத்திற் சிறந்த மேதைகளை எல்லாம் எள்ளி நகையாடக்கூடிய வகையில் இவர்களின் அறிவை அழித்துவிட்டனர்.. அறிஞர்களை மதிக்காத சமுதாயம் அறிவை ஏற்காத சமுதாயம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை, ஞானிகளை, மேதைகளை வெறுப்போடு இழிந்துரைக்கின்றனர் எனறால் இவர்களுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று தான் பொருள். 


அறிஞர்களை ஏற்காதவர்கள் அறியாமை இருளில் இருப்பதாக தான் அர்த்தம், அறிவெனும் ஒளியை ஏற்காது அறியாமை இருளில் சமுதாயம் இருந்தால் ஒருகாலும் உருப்படாது என்பது திண்ணம். அந்த செயற்கரிய காரியத்தை தான் திறம்பட செய்து இளைஞர்களை, பெண்களை, குழந்தைகளை என சமூதாயத்தையே பாழுங்கிணற்றில் தள்ளி ஒரு நூற்றாண்டினையே மிக தீவிரமாக கரித்துவிட்டனர் இவர்களின் தலைவர்கள்!? இவர்களை பின்பற்றும் சமூகம் எப்படி வாழும் இனி வீழும் தான்!

அத்தகையவர்களின் அறிவீன சிந்தனைகளை நம் போன்ற நாயகநேசர்கள் மட்டுமே முறியடிக்க முடியும். வாருங்கள் ஆன்ற அறிவினை வளர்ப்போம்.. அல்லாஹ், ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) -ன் அவர்களின் தூய்மை சமுதாயம் படைப்போம். வளங்களும் நலங்களும் அப்போது மட்டுமே சூழும்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

12 ஜனவரி 2013

முகநூல் நிலைத்தகவல்கள் 2011 - 1

தங்கை சஃபிக்கா திருமணம் பிப். 06 - 2011


"இறையருளால் எனது அருமை சகோதரி அல்ஹாஜ் MJ பஷீர் அஹமது & ராபியத்துல் பஷீர், அவர்களின் செல்வ மகள் ஸஃபீக்கா ஷனோஃபர் MBA.,-நாச்சியார் கோயில் அல்ஹாஜ் அமீர்தீன் செல்வமகன் நெளஷாத் அலி MBA இவர்களின் திருமணம் 06-02-2011 நேற்று பாபநாசம் தாமரை மஹாலில் கோலாகளமாக நடந்தேறியதை மிக்க மகிவோடு பகிர்ந்துகொள்கிறேன். சீரும் சிறப்புமாக நடந்தேறிய எங்கள் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்து தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கிய நமது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் ஒப்பற்ற தமிழ் மாநில தலைவர் 'முனீருல் மில்லத்' கே. எம்.காதர் மொகிதீன் M.A., Ex.M.P அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்பிக்கிறேன்.மணமக்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு மகிழ்வுடன் வாழ எல்லோரும் வாழ்த்தி துஆ செய்யுங்கள்

படத்தில்...
முனீருல் மில்லத்' கே. எம்.காதர் மொகிதீன் M.A., Ex.M.P அவர்களுடன் நானும் எனது தந்தை அரச்சலை ஜனாப்.ஜாஃபர் சாதிக்(வலது கடைசி) மற்றும் எனது பெரிய தந்தை அரச்சலை ஜனாப். குலாம் முஹைதீன் (வலதிலிருந்து இடதாக என் தந்தைக்கு அடுத்து)
இவண்,
ஜே. முஹையத்தீன் பாட்ஷா
07-FEB 2011 


ரபிய்யுல் அவ்வல்
"கடைத்தெருவில் ஒரு டீ வாங்கி கொடுத்தவரு நேரில் வந்துவிட்டால் நம்மை அறியாமலே உதடுகள் புன்னகை பூத்து, சலாம் சொல்லி நன்றி தெரிவிக்கும். இவ்வளவு உயர்வான சமூகமுறையை சொல்லித்தந்து சிறப்பான மார்க்கத்தில் நிலைபெறச் செய்த இறைவனே போற்றும், இறைவனே புகழை பிரஸ்தாபித்து உயர்த்திய அகிலங்கள் போற்றும் முஹம்மதரை.. அவர்களின் பிறந்த மாதமாம் ரபிய்யுல் அவ்வல் வந்து விட்டால் எங்கள் வாழ்வில் இறை ஒளியை ஏற்றிய மாநபியே என நன்றி உள்ள நெஞ்சங்கள் அவர்களின் புகழை பாடும்..பாடி உருகும்.. நன்றி கொன்ற நெஞ்சங்கள் எப்படி இதையெல்லாம் செய்யும்.. அவர்கள் முஹம்மது ரஸூலுல்லாவோடு இல்லாத ஏதோ வொரு அல்லாஹ் என்ற வார்த்தையை வம்பாக மட்டும் (தத்துவமோ யதார்த்தமோ அறியாமல் ) வைத்துக்கொண்டு ஈமான் இழந்து திண்டாடுபவர்கள், இவர்கள் குறித்து ஏராளமான நபி மொழி முன் அறிவிப்புகள் உண்டு." 13-FEB 2011

முஸ்லிம் லீக்
"இன்றைய அரசியலில் இஸ்லாமியரின் பாரம்பரியமிக்க பெரும் சக்தி, பல வியூகங்களால் தன் சாதுர்யத்தால் இது நாள் வரை படோடோபமில்லாது பலவற்றை சாதித்துள்ள சக்தி இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்." 24-FEB 2011

 -வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

06 ஜனவரி 2013

அன்பை மட்டுமே தேர்ந்தெடுத்த ஏ.ஆர் ரஹ்மான்!இசைத்தமிழ் கண்ட தமிழ்கத்தில் 
இசையை ரசிக்கும் தமிழர்களுக்கு பஞ்சமில்லை!

மெல்லிசையையும்
தேவராகத்தையும் ரசித்து 
சொக்கிக்கிடந்த தமிழ் மண்ணில்
அதிரடி புயலொன்று வீசிற்று!

ஆம்! 

அது பூவில் புறப்பட்ட புயல்
ரோஜாப் பூவில் புறப்பட்ட புயல்!

முதன் முதலாக புயலொன்று
ரோஜா கொடுத்தது அப்போதுதான்!

ரோஜாவின் தாக்கம்
மக்கள் இப்படியொரு புயலா
அதுவும் இசையில் இப்படி ஒருப்புயலா வென
அதிர்ந்து அதிசயித்து ஸ்தம்பிக்க வைத்ததனால்
புயலின் பெயரிலேயே 
இசையை அழைத்தனர் தமிழர்
அவ்விசைக்கு "இசைப்புயலெ"ன்றனர்!

வந்த நாள் முதல் மையம் கொண்டது தான்
இன்னும் அதன் மையல் தீரவில்லை,
பொதுவாக புயல் கடல்விட்டு கரை தாண்டும்
தாண்டினால் வலுவிழக்கும்
இசைப்புயலோ...,
மிக்க வலுவுடன்
தமிழக எல்லை மட்டுமின்றி
தாரணி எல்லைகளை வளைத்துப்போட்டது

தொடர் வெற்றி குவித்தது.
இருபது ஆண்டுகளாய் இசைப்புயல்
தருகிறது எங்களுக்கு  ஆன்மாவின் இசையை!

வருகிறது.. வருகிறது இனியும்
இன்னும் பல அற்புத பேரிசை! 

செவி திறந்து கண்களை மூடி
நெஞ்சத்தின் வழியே இசைஉலகில் 
சஞ்சரிக்க மட்டும் நாம் தயாராவோம்.

புயல் பல இசைப்பூக்கள் சொறியும்.

வாழ்த்துவோம் இன்று பிறந்த நாள் காணும் 

மனிதர்களில் அன்பை மட்டுமே தேர்ந்தெடுத்த 
"இசைப்புயல்" ஏ.ஆர் ரஹ்மானை!


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா