28 டிசம்பர் 2014

மூலமாகும் மூடபக்தி

பக்தி தான் இன்றைய எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்... ஒருவன் அறிவாளியாக இருந்தாலும், பாமரனாக இருந்தாலும் பக்தியால் தான் வழி நடத்தப்படுகிறான். பக்தி பெரும்பாலும் அறிவாளி, பாமரன் என்று வேறுபாடு இல்லாமல் மூடத்தனமாகவே உள்ளது.
பக்தி, சிந்தனையை அப்படியே உறைய வைத்திடும் இதனால் அறிவுக்கண் அவ்வளவு எளிதில் திறந்திடாது ஆனாலும் பக்தனின் இந்த பக்தியை அதனால் வரும் சரணாகதியைப் பயன்படுத்தித் தான் மிகப்பெரும் அறிவுஜிவிகள் மனிதன் மனிதனை துன்புறுத்தாமல் இருக்கவும், அவனால் அவனுக்கே கேடு நிகழாதிருக்கவும் சமூகசீர்திருத்தங்களுக்காக, தனிமனித ஒழுங்குக்காக பயன்படுத்தினர்.
உண்மையில் ஓருவன் முற்றும் ஆய்ந்து அறிந்து தெளிந்தால் போலி பக்தி ஆட்டம் காணும் அதற்கு அப்பாலும் ஒரு பக்தி வருகிறதென்றால் அது பரவாயில்லை, அதை உண்மையான பக்தி வைத்துக்கொள்ளலாம். அந்த மெய் பக்தியால் உலகிற்கு நலமே ஒழிய தீங்கு இருக்காது அவன் மனிதத்தன்மையுடன் மனதநேயத்துடன் நடக்க முயல்வான். ஆனால் வெறும் குருட்டு பக்தியாலோ... எவ்வளவுக்கெவ்வளவு நல்லது நடக்குமோ அல்லது நல்லதிற்கு பயன்படுத்தலாமோ அவ்வளவுக்கவ்வளவு எல்லா தீங்குகளும் நடக்கும், தீங்குகளுக்கும் பயன்படுத்தலாம். இன்று இதில் இரண்டாம் வகை தான் நடந்து கொண்டிருக்கிறது, அந்த மூட பக்தியை அல்லது மூடபக்தனை பயன்படுத்தித்தான் எல்லா ஈனங்களும் அரங்கேற்றபட்டுக் கொண்டிருக்கிறன.
முழுமையாய் அறிவு விழித்துக்கொள்ளும் போது பக்தி துரத்தப்படுகிறது. ஆனாலும் மற்ற பொது மனிதர்களின் எல்லா படிநிலை அறிவம்சம் கருதி மெளனமாக இருக்க வேண்டி இருக்கிறது. ஏனெனில் பக்தி எனும் சங்கிலி தான் அவர்களை கட்ட வசதியானது என்பதால்.
- ஜா.முஹையத்தீன் பாட்ஷா

சாவு!

உடலிலிருந்து ஒரு நாள் உயிர் வெளியேறிவிடும்..தரித்திரிருந்த சட்டை கந்தலாகிப்போனால் அதனை கழற்றி சுதந்திரமடையும்..கூடு ஒரு நாள் தனித்து விடப்படும்.. இது நாள் வரை போற்றி பாதுகாத்தது வெறும் சக்கை என மண்ணில் தள்ளும் நிலை வரத்தான் செய்யும். 

உடல் என்ற கூட்டை பராமரித்து நல்ல செயல்பாட்டில் வைத்திருக்கும் வரை உயிர் தங்கும்.. உடல் பழுதடைந்தால் இயங்கிய உடல் இயங்கா நிலை அடைந்தால் உடல் சாகும். உயிர் போகும்.. எங்கே போகும் வந்த வழி போகும். எது வந்த வழி அதுவென அலசுவதற்கு இப்போது நாம் செல்லவில்லை.(வேறொரு முறை நாம் பார்ப்போம்)

இதயம் பாதித்தால் இரத்த ஓட்டம் ஸ்தம்பித்தால்  செல்களுக்கு செல்லவேண்டிய ஆக்ஸிஜன் நின்று போனால் அதற்குரிய  தீனி  கிடைக்காவிட்டால் உடன் உடலின் இயல்பு இயக்கம் தடைபட சூடு குறைய மனிதன் என்பவன் சடம் ஆவான். சாதாரணமாக ஒரு மின்விசிறி இருக்கிறது மின்சரத்தால் நாம் வேண்டும் போதெல்லாம் அது இயங்கி கொண்டே இருக்கும் அந்த மின் விசிறியின் உள்ளே உள்ள காயிலில் ஏதேனும் கேடடைந்தால் அது ஜ்ஜ்ஜ்ஜ்.. என சத்தம் மட்டும் வரும் ஆனால் இயங்காது.. இயங்க முயலும் ஆனால் இயங்க முடியாது இதே போல் காயில் சரியாக இருந்து உள்ளே உள்ல மற்ற ஏதேனும் சரிவர இல்லாது போனாலும் ஏதேனும் வயரில் பிரிவோ..பிளவோ ஏற்பட்டாலும் கூட விசிறி சுற்றாது எத்தனை முறை நாம் பொத்தானை அழுத்தினாலும் சுற்றாது நிற்கும் மின்சாரம் முன்பு இருந்ததை போலவே இருந்தாலும்.. அதை கொண்டு செயல் படாத நிலைக்கு சென்று விட்டது மின் விசிறி அதாவது விசிறி செத்துவிட்டது அதை கழற்றிவிட்டு மற்றொன்று மாட்டப்படவேண்டும் என்பது தான் நாம் அறிந்தது இது போலவே தான் உயிர் இருக்கும் உடல் நல்ல இயக்கத்திலிருந்து கெட்டு போய்விட்டால் உயிரால் ஏதும் ஆகாது உயிரால் கேடடந்தை உடலை இயக்கமுடியாத நிலையில்  விசிறி செயலற்ற நிலைக்கு வந்தது போல தான் கொஞ்சம் கொஞ்சமாக உடலும் செயலற்ற நிலைக்கு வந்துவிடும். மின்சாரம் இருக்கும் ஆனால் விசிறி தான் ஓடாது அதைப்போல் உயிர் போகும் உடல் சாகும். 


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

பிகே ஹிந்தி படவிமர்சனம் - pk - movie review



வாழ்க்கையில் யாராவது உருப்படியான படம் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் பார்க்க வேண்டிய படம் ..pk..pk..pk தான். அத்தனை அற்புதமான படம். கடவுளின் பெயரால் நடக்கும் எல்லா கள்ள வேலைகளையும் வெளிச்சமிட்டு விலாசி எடுக்கும் படம் இது. இந்து, கிருத்துவம் மற்றும் இஸ்லாம் என எல்லா தரப்பு இழிவுகளையும் சாடுகிறது இப்படம்.பெரியாரிய சகோதரர்கள் பார்த்தால் மிக சந்தோசப்படுவார்கள். பெரியாரின் ஆன்மா குளிர்ந்து போயிருக்கும். திராவிட இயக்கங்கள் எத்தனை எத்தனை பெரியாரின் பெயரில் பெரியாரின் கொள்ளைக்காகவென்று உள்ளதோ அவை அனைத்தும் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, அமீர்கான், தயாரிப்பாளர் சோப்ரா இவர்களை தமிழகத்திற்கு அழைத்து மாலையிட்டு மரியாதை செய்து நன்றி சொல்ல வேண்டும்.

ஆண்கள்,பெண்கள், பெரியவர்கள் மற்றும் கருத்துவந்த சிறியவர்கள் என எல்லோரும் கண்டிப்பாக பாருங்கள். பெற்றவர்கள் உங்கள் மகன் மகளை போய் பார்க்க சொல்லுங்கள்.. கண்டிப்பாக இளைஞர்கள் பார்த்து விழிப்புணர்வு பெற வேண்டிய படம் அல்ல பாடம் pk.

மோடியின் ஆட்சியில் தினம் ஒரு காட்சியாக இருக்கும் ஹிந்துத்வா கூத்தாடிகளுக்கு ஒரு ஆப்பு... மிக துணிச்சலான முயற்சி.. தனிமனித வழிபாட்டிற்கும்.. போலிச்சாமியார்களின் டிகால்டி வேலைக்கும் அடித்த சாவுமணி. இயக்குனர் ராஜ்குமார் ஹிராணி மற்றும் அமீர்கானுக்கு எத்தனை சலாம் போட்டாலும் போதாது. வசனத்தில் எல்லாம் அனல் அல்ல அக்கினி குண்டமே பறக்கிறது. இதமான இசை.. பாடல்கள் சூப்பர்.

தமிழ் நாட்டில் இந்தப்படம் தமிழில் உருவாக்கப்படவேண்டும், இந்தப்படம் தமிழ் இயக்குனர்களை மற்றும் நடிகர்களை மெய்சிலிர்க்க வைத்து வியப்பில் ஆழ்த்தியிருக்கும் இதன் தாக்கம் கண்டிப்பாக யாரிடமிருந்தாவது விரைவில் வெளியாகும்.

படம் பார்த்துவிட்டு வெளியேறும் போது அமீர்கானின் ரசிகனாக வெளியே வருவீர்கள் அத்தனை தத்ரூப நடிப்பு. pk படம் பார்த்ததில் அவ்வளவு திருப்தி.. அவ்வளவு நிறைவு.. அவ்வளவு மகிழ்ச்சி.

குறிப்பு: படம் பார்க்க கொஞ்சம் ஹிந்தி தெரிந்திருந்தால் ரசிக்கவும், முழு பொருளை உள்வாங்கி களிக்கவும் ஏதுவாக இருக்கும்.தெரியாதவர்களும் போய் பாருங்கள் இந்தப்படம் மொழிக்கு அப்பாற்பட்ட படம்.

இப்படம் குறித்து இன்னும் எழுதுவேன்...!


முகநூல் பதிவு பார்க்க...

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

26 டிசம்பர் 2014

PK பார்ப்பதற்கு முன்



லிங்கா படம் பார்க்கப்போன போதே pk படத்தின் ட்ரைலர் போட்டுக் காட்டினார்கள்.. அமீர்கானின் வேடிக்கையான வித்தியாசமான அம்சம் பார்க்க வேண்டும் என்ற உணர்வைத் தூண்டியது.
ஆனால் படம் பற்றிய விமர்சனங்கள் அது சீரியசான படம் எனவும் அதற்கு இந்தியாவில் தடை விதிக்க முற்பட்டு அதை வென்று மிகச்சிறப்பாக வசூலில் சக்கை போடு போட்டு ஓடுவதாக செய்திகள் கூறுகிறது.
குறிப்பாக படம் மதங்களின் பெயரால் மற்றும் கடவுளின் பெயரால் நடக்கும் மூடநம்பிக்கைகளையும் குறித்து எடுக்கப்பட்டது என பரவலாக பேசப்படுகிறது. படம் பார்ப்பவர்களுக்கு இஸ்லாம் குறித்த தவறான எண்ணம் விலகும் எனவும் சொல்லிகிறார்கள்..
சரி பார்ப்போமே என எனது இல்லத்திலிருந்து ஐந்து நிமிட தூரமே இருக்கும் VOX திரையரங்கு விரைந்தேன்..பெரிய க்கூயூ, எனக்கு முன் ஒன்பது அல்லது பத்து வயதிருக்கும் அரபிக்குழந்தை தன் அப்பாவுடன் நின்றுகொண்டிருந்தாள், சரி ஏதும் ஹாலிவுட் படம் பார்க்கத்தான் இருக்கும் என நினைத்திருந்தேன் அந்த பிள்ளை கவுண்டரை நெருங்கியவுடன் இந்திப்படம் pk விற்கு டிக்கெட் எடுக்க தனது அரபித் தந்தையைப் பர்த்து வேண்டினாள்.. அவரும் இந்தியப்படமா.. சரி டிக்கெட் கொடுங்கள் என கவுண்டரில் கேட்க " இந்த சோவுக்கான டிக்கெட் எல்லாம் விற்றுவிட்டது அடுத்த சோவுக்கும்கூட அண்டர் 15 அனுமதி இல்லை அதனால் உங்கள் மகளை அனுமதிக்க மாட்டோம்" என சொல்ல மிக ஆர்வமாக இருந்த அந்த பிள்ளை வருத்தமாகிப்போனாள். அவளது அப்பா தன் வெள்ளை கந்தூராவில் அன்போடு அனைத்து வா.. பிறகு வேறு படம் பார்ப்போம் என அழைத்துச் சென்றது எனக்கும் வருத்தமாகிப் போனது.
அடுத்து நான்.... எனக்கும் "இந்த சோவுக்கு டிக்கெட் இல்லை" எனச்சொல்லிவிட்டாள் அந்த கவுண்டர்க்காரி.. "8 மணிக்குத் தான் ஓகேவா" என்றாள்..மொதல்ல கொடும்மா.." ன்னு வாங்கி வந்துதிருக்கிறேன். போகனும்.. பார்த்துவிட்டு சொல்கிறேன் எல்லோரும் சூப்பர் எனச் சொல்லும் படம் எப்படி.. என!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

தாஜ்பாய் மறைந்தார்

எங்கள் ஊர் வழுத்தூரைச் சார்ந்த சாந்தமான மனிதர்.. மிகச்சிறந்த மனிதநேயர், காயிதேமில்லத் பாசறையாம் முஸ்லிம் லீக் இயக்கப் பற்றாளர் தாஜ்பாய் இன்று மறைந்துவிட்டாராம். மாலை (25-12-2014) செய்தி வந்தது. புகைப்படம் தேடினேன் கிடைக்கவில்லை.
ஐந்து வேலைத் தொழுகையை மிக நியமமாக நிறைவேற்றியவர். குறிப்பாக அதிகாலை பஜ்ருத் தொழுகக்கு எந்தக் குளிர்க்காலமாக இருந்தாலும் முதல் சப்'பில் (வரிசை) அவரைப் பார்க்கலாம். தொழுது முடித்து அதிகாலையிலேயே ஆற்றைக்கடந்து அக்கரைக்கு சென்று நாள் முழுவதும் உழைத்து பிறகு ஆற்றைக்கடந்து மாலை வீடு எய்தும் மகத்தான உழைப்பாளி. அவர் தனது உழைப்பை தான் முதுமை அடைந்தபோதும் கூட நிறுத்தியவர் அல்ல, மிக எதார்த்தமனவர்.
நபிகள் நாயகத்தின் மீதும், ஞானமகான்கள் மீதும் அளப்பறிய நேசம் கொண்டவர். எங்கள் ஊரின் மரபின் விழுமியங்களை தனது வளைந்த முதுகில் சுமந்து திரிந்த பெரிய மனிதர். அவர் மறைந்ததது ஈடுசெய்ய முடியாத இழப்பே.
அவர் வாழ்க. அவர் ஆன்மா நிறைவில் ஆழ்க.

முகநூல் பக்கம் இணைப்பில்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

22 டிசம்பர் 2014

மனிதத்திற்காய் உதவிக்கரம் நீட்டும் துபை ஈமான் அமைப்பு


உலகின் ஒரு பக்கம் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டு மதவெறி, இனவெறி என காட்டுமிராண்டித்தனமாக செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க. மறுபக்கமோ தனிநபர்களாகவும், அமைப்புக்களாகவும் மதமாச்சரியங்கள் கடந்து மனிதமே புனிதமென கருதி மனிதத்திற்காய் மனநிறைவாக கரிசன உணர்வோடு ஊழியம் செய்தும் கொண்டிருக்கிறார்கள். “நல்லார் ஒருவர் பொருட்டு எல்லோருக்காகவும் பெய்யும் மழை” என்றுச் சொல்லுவானே வள்ளுவன் அந்தக் குரளை மெய்ப்பிக்கும் முகமாக துபையில் செயல்பட்டுவரும் ஈமான் அமைப்பின் மனித நேயப்பணிகள் எல்லோரும் அறிந்த போற்றத்தக்க ஒன்று என்றாலும் அந்தவகையில் தான் சமீபத்தில் மனதை நெகிழவைக்கும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அதை அறிந்தால் மனிதநேயமுள்ள எல்லா உள்ளங்களும் பெருமகிழ்ச்சி அடையும் என்பது திண்ணம்.
ஆம், சாமிதுரை என்கிற துரைவீராசாமி பெரம்பலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சார்ந்தவர், இவர் பணி நிமித்தமாக அமீரகத்தின் துபைக்கு வந்து கடந்த ஏழு வருடங்களாக வசித்து வந்தவர்.. அந்த ஏழு வருடத்தில் கடந்த ஐந்து வருடங்களாக “கள்ளிவல்லி” என வழக்குச்சொல்லில் இங்கே சொல்லப்படும் முறையான அனுமதி ஆவணங்கள் இல்லாது தலைமறைவாக இருந்து வேலைசெய்து வந்தவராக இருந்துவந்தார். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக இவரை தெரிந்தவர்கள் துபையின் ஷேக் ராசித் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு போய்விட்டனர், பிறகு மோசமான உடல்நிலை காரணமாக வீராசாமி மூன்றுமாதங்கள் தொடர்ந்து சுயநினைவில்லாத கோமா நிலையிலேயே ஆழ்ந்துவிட்டார், பின்னர் மருத்துவமனையின் இடைவிடாத சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் மீண்ட அவரை வந்து பார்க்கவோ, நலம்விசாரிக்கவோ அல்லது அவரது ஊருக்கு அழைத்துச்சென்று அவரது சொந்தபந்தங்களோடு சேர்க்கவோ கூட யாரும் இல்லாத நிலையில் மேலும் இரண்டு மாதஙக்ள் ஓடிவிட்டது. இதனால் வீராசாமி உடல்நிலை பாதிப்போடு மிகுந்த மனவேதனைக்கும் உள்ளானார்.
இந்நிலையில் தான் விராசாமி துன்பப்படும் செய்தியறிந்த நம் தமிழ் சொகோதரகள் இது போன்றவர்களுக்கு உடனே கைகொடுக்கும் அமைப்பான துபையின் ஈமான் சங்கம் இருக்கிறதே என அவர்கள் ஈமான் நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ள, ஈமானின் நிர்வாகிகளான செயலாளர் குத்தாலம் லியாகத் அலி மற்றும் துணைச்செயலாளர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா அவர்கள் தாயுள்ளத்தோடு ஷேக் ராஷித் மருத்துவமனைக்கு உடனே விரைந்து நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டுவரும் வீராசாமியை கண்டு ஆருதல் கூறியும், நிலைமையை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆலோசித்தும் அவருக்கு உதவும் முயற்சியினை ஆரம்பித்தனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட நோயாளி வீராசாமிக்கு மீண்டும் தொண்டையில் ஒரு அறுவைசிகிச்சை செய்யவேண்டி இருந்ததால் அதற்கும் உதவியாக நின்று அதுவும் வெற்றிகரமாக முடிய இறுதியில் ஈமான் சங்கத்தினர் துபைக்கு பிழைக்க வழித்தேடி வந்து நோயின் பிடியில் மாட்டிக்கொண்டு கடந்த ஐந்து மாதமாக நோயினால் மிகுந்த மனஉளைச்சலுக்கும், உடல் பலகீனத்திற்கும் ஆளான யாருமற்ற ஏழை வீராசாமியை அவரது சொந்த ஊருக்கே அழைத்துச்செல்ல துரித ஏற்பாடுகளை இந்திய தூதரகத்தின் மூலம் செய்து சென்றவாரம் ஈமானின் துணைச்செயலாளர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா அவர்கள் வீராசாமியை மிக அரவணைப்போடு விமானம் மூலம் தாயகம் அழைத்துச்சென்று அவரது தாயார் மற்றும் தம்பியிடம் மிக பத்திரமாக ஒப்படைத்து வந்துள்ளார். மேலும் அத்தோடு இலவசமாக அவருக்கான சக்கர நாற்காலியையும் துபையின் திர்ஹம் ஆயிரத்து ஐநூரையும் (இந்திய ரூபாய் இருபத்தைந்தாயிரம்) சேர்ந்த்துக் கொடுக்க பெற்றுக்கொண்ட வீராசாமியின் தாயாரும், தம்பியும் நெகிழ்ந்து போயினர்.
இது நாள்வரை தனது மகனைப் பற்றி ஒரு தகவலும் அறியாத பெற்ற தாயும், அவரது சகோதரரும் தங்களின் வீராசாமியை மதங்கள் கடந்து பேரன்போடு உதவிக்கரம் கொடுத்து மீட்டு வந்த துபையின் ஈமான் சங்கத்தினருக்கு கண்ணீரோடு நன்றியை தெரிவித்தனர். இது தொடர்பாக ஈமானின் நிர்வாகிகள் கூறும்போது ஆதரவற்ற நோயாளி வீராசாமிக்கு ஐந்து மாதங்கள் வரை சிறப்பான சிகிச்சையை இலவசமாக செய்து கொடுத்த ஷேக் ராஷித் மருத்துவமனை நிர்வாகமும், அவரை ஊர்வரை கொண்டு எல்லா வகை ஆதரவையும் அளித்த துபை அரசாங்கமும் இலவசமாக விமானம் மூலம் கொண்டுசெல்ல உதவிய இந்திய தூதரகமும் தான் மிகுந்த நன்றிக்கு உரித்தானவர்கள் இவர்களின் ஒத்துழைப்போடு தான் ஈமான் இந்த நற்செயலை செய்யமுடிந்தது என பெருமிதத்தோடு தெரிவித்தனர்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

20 டிசம்பர் 2014

அஹமது நளீருக்கு ஆறாம் அகவை



இன்றைக்கு டிசம்பர் 20 என்பதே நினைவில் இல்லை, 


அதற்கு இன்னும் எத்தனையோ நாட்கள் இருப்பதாகவே எண்ணம். திடீரென வாட்ஸ்அப்-ல் பர்த்டே கேக் வருகிறது, ஆஹா! இன்று என்ன தேதி.. மறந்தே விட்டதே என நாக்கை கடிக்கையில் போன் வருகிறது.............அதில் என் செல்ல மகன் அஹமத் நளீர் பேசுகிறான்.

"ஹலோ.. இன்னைக்கு எனக்கு ஹாப்பி பர்த்டேன்னு தெரியுமா.. ஏ நீங்க விஸ் பண்ணல"ன்னு.. 

"செல்லக்குட்டி..ராஜா.. நீ நல்லா சிறப்பா எல்லா நலமும் வளமும் பெற்று சூப்பரா இருப்படா..கண்ணே..ஆமா, புது டிரஸ் போட்டிருக்கியா" அப்டின்னேன்..

அதுக்கு" இல்ல பாப்பு..சாய்ந்தரம் தான் எல்லாரும் வருவாங்க அப்பத்தான் உடுத்திக்கிவேன்" ன்னான் என் செல்ல மகன்.

இன்று என் டிசம்பர் பூக்கள் இரண்டில் மகனுக்கு பிறந்தநாள்.

ஆறாம் அகவை காணுகிறான். மகனை வாழ்த்துவதில் தான் எத்தனை மகிழ்ச்சி. "இறைவா உன் நேசமிகு நபிகள் நாயகத்தின் பொருட்டால். நீ எல்லா நலவளங்களும் என் பிள்ளைக்கருள்".

Wishing you many more happy returns of the day my son Ahamed Naleer

Birthday wishes for Naleer in Face Book Page 20thDec2014 Just Click.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

16 டிசம்பர் 2014

27-ஆம் கிழமை புனித லைலத்துல் கத்ர் இரவு (ஜுலை24,2014)

(கடந்த ரமாலானில் ஜூலை மாதம் 24,2014 நடந்த நிகழ்வு ஒரு பதிவிற்காக)

அமீரகத்தில் நேற்று ரமலானின் 27-ஆம் கிழமை புனித லைலத்துல் கத்ர் இரவு (இறையருள் வார்க்கும் மகத்தான இரவு) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தேரா துபையின் கோட்டைப் பள்ளியில் இஸ்லாமிய தமிழுலகம் அறிந்த மார்க்க அறிஞர் பெங்களூர் ரஷாதியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் அல்ஹாஜ் மவ்லவி சைஃபுத்தீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். உரையில் லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் வெளிச்சத்தில் அழகுற எடுத்தியம்பினார்கள்.
உரையில் இன்றைய தினங்களில் கத்ருடைய இரவு குறித்து பற்பல சந்தேங்களை எழுப்பி சமுதாயத்தை சிலர் குழப்பி வரும் நிலையை சுட்டிக்காட்டி இது அந்நாளை இச்சமூகம் பெற்று பயனெய்திடக்கூடாது என்பதின் உள்நோக்கமுடையோர் செய்யும் குதர்க்க வேலை என்றும் கத்ருடைய இரவு என்பது 27ம் கிழமை தான் என்பதற்கு புகாரி சரீபின் நபிமொழிகளையும், சஹாபாக்களது வாழ்வியல் சம்பவங்களையும் குறிப்பாக ஹஜ்ரத் உமர் (ரலி), இமாம் ஹசன் (ரலி), ஹஜ்ரத் பிலால் (ரலி) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) ஹஜ்ரத் உதைபதுல் எமான் (ரலி), உபை இப்னு கஃப் (ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) போன்றவர்களின் அறிவிப்பாக ஆதாரங்கள் இருப்பதையும் தெளிவாக அடுக்கடுக்காய் சொல்லிக்காட்டி இன்றைய இரவை பயன்படுத்தி செம்மை பெறுங்கள்.. எல்லோரும் வெறுப்புணர்வு இல்லாமல் அன்பு பாராட்டி குறிப்பாக தாய், தந்தையரின் அன்பை பெற்று, இல்லாதவருக்கு உதவி மனநிறைவை பெற்று இன்றைய இரவில் மனத்தூய்மையோடும், பயபக்தியோடும் நல்லறம் செய்தால் இறைவன் வாக்களித்த சிறப்பை தருவான். நீங்கள் என்னென்ன வேண்டுகிறீர்களோ அவைகளை உங்களுக்கு நன்மையாய் இருக்கும் பட்சத்தில் எவ்வகையிலேனும் அதை அருளி சிறப்பாக்குவான் என்ற மூலக்கருத்துடன் பயான் செய்தார். இதில் தாய் தந்தையரை கவனித்து அவர்களின் வாழ்த்தை பெறுவதன் அவசியத்தினை மிக அற்புதமாக நபிகளார் கூறிய ஹதீஸின் சம்பவங்களை மேற்கோள்காட்டி பேசினார்கள்.
பிறகு தஸ்ஃபீஹ் நபீல், திக்ரு மஜ்லிஸ், தவ்பா நிகழ்வு மற்றும் கியாமுல் லைல் என்னும் இரவுத் தொழுகை எல்லாம் சிற்ப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பள்ளியின் தரைத்தளம் மற்றும் மூன்று மாடிகள் என எல்லாவற்றிலும் மக்கள் நிரம்பி அதுவும் போதாமல் கூட்டம் மிகைத்திருந்தது.. பள்ளிக்கு உள்ளேயே சற்றேரகுறைய 5000க்கும் மேற்பட்டவர்கள் இருந்திருக்ககூடும்.
சிறப்பான இரவை இறைவனின் பொருந்தம் தரும் நல்லமல்கள் செய்து மக்கள் நிறைவாக்கிவைத்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

14 டிசம்பர் 2014

முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு

அன்பு முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
சில வருடங்களாக  ஒவ்வொரு முறை சென்னை புத்தக கண்காட்சியைப்  பார்க்க போகும் போதும்  எனக்குள் நமது முஸ்லிம் லீக் சம்பந்தமான புத்தகங்கள், காயிதேமில்லத் தொடர்பான வரலாற்று நூல்கள், மணிச்சுடரில் வெளியாகிய நமது சிந்தனைச் செல்வர் அப்துஸ் ஸமது ஸாஹிப் அவர்களின் முத்துப்போன்ற எழுத்துக்கள் மற்றும் கருத்துக்களை சுமந்து நிற்கும் கட்டுரைகள், இன்றுவரை இடைவிடாது எழுதிவரும் நமது அரசியல் சூஃபி.. வாழும் காயிதேமில்லத் கண்ணியமிகு கே.எம்.காதர் முகைதீன் ஸாஹிப் அவர்களின் எழுத்தாக்கங்கள், நமது முன்னால்  சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களையும், முஸ்லிம் லீக் வரலாறுகள், சாதனைகள் இவற்றில் ஏதேனும் சிலவாவது கிடைக்குமா என்று தேடிப் பார்ப்பேன் அப்படி தேடிடும் மனதிற்கு எப்போதும் ஏமாற்றமே இருக்கும்.

ஆனால் மறுமுனையிலோ சில பல மற்றைய இஸ்லாமிய இயக்கத்தவர்கள் அவர்களின் நூற்களை சந்தைப்படுத்துவதை தவறுவதே இல்லை…வந்து போகும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கெல்லாம் பல இலவச புத்தகங்கள் கூட வினியோகிப்பார்கள் அவ்வியக்கங்களினால் சமூகத்தில் எப்படியான விளைவு ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் நன்றாகவே அறிவோம். சென்ற முறை நடந்த புத்தக கண்காட்சியில் பார்க்க வரும் ஆயிரக்கணக்கான இந்து பெருமக்களுக்கு அவர்களே தேடி படிக்க முனைந்தாலும் நபிகள் நாயகத்தின் வரலாறு என சுற்றிச் சுற்றிப் பார்த்த வகையில் ஒன்று கூட இல்லை என்கிற நிலை தான்.. கிழக்கு பதிப்பத்தின் சார்பில் ஒரு இந்து ஆசிரியர் எழுதிய நபிகள் நாயகம் வரலாறு தான் விற்றுத் தீர்ந்தது. இதெலலம் தகவலுக்காக. நீங்களும் அறிந்திருக்கலாம்.


இதை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால்  சென்னை புத்தகக் கண்காட்சி என்பது நமது பிராந்தியத்தில் நடக்கும் மிகப் பெரிய புத்தகக்கண்காட்சி… ஏராளமான பதிப்பகங்கள் பங்கு கொண்டு மக்களிடம் தங்களின் பதிவுகளை எடுத்துச் சென்று ஒன்று லாபம் ஈட்டுகின்றனர் மற்றொன்று கருத்துக்களை சேர்ப்பிக்கின்றனர். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொண்டால் மிகப்பெரும் நலம் விளையும், தவறான அபிப்ராயங்கள் கொண்டிருக்கும் இந்துக்களும் ஏன் இஸ்லாமியர்களும் குறிப்பாக இளைஞர்களும் நமது தரப்பு உண்மைகளை உணரவாய்ப்பிருக்கிறது. களப்பணியாற்றிட நமது இளைஞர் பட்டாளங்கள் இருக்கிறது. இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது உள்ளக்கிடக்கை.

ஒரு கடை தான் எடுத்து செயல்பட வேண்டும் என்றெல்லாம் கூட இல்லை, வேறு கடையோடு நமக்கு ஒத்துப்போகிறவரிடம் ஒப்பந்த அடிப்படையில் கூட நமது ஆக்கங்களைக்கூட வைக்கலாம். உதாரணமாக உலக அளவில் இரண்டாவது பெரிய புத்தக கண்காட்சியாக நடக்கும் ஷார்ஜா கண்காட்சியில் நிறைய மலையாளப் பதிப்பகங்கள் கலந்து கொண்டாலும் ஒரு தமிழ் பதிப்பகமோ அல்லது கடையோ இல்லை ஆனால் விடியல் வெள்ளி தரப்பினர் மட்டும் தான் தேஜஸ் என்ற மலையாள பதிப்பகத்தோடு பேசி பல வருடங்களாக அவர் தம் தமிழ் படைப்புக்களை சந்தைப்படுத்துகின்றனர். சார்ஜா கண்காட்சியில் இருக்கும் ஒரே தமிழ் கடை அது மட்டும் தான். இது போல கூட நாம் சென்னை கண்காட்சியில் முயன்று பார்க்கலாம். (சென்னைத்  தவிர கோவை, ஈரோடு,மதுரை என நடந்தாலும் நாம் குறைந்த பட்சம் இப்போது சென்னை புத்தக கண்காட்சியை முதற்கட்டமாக நாம் பயன்படுத்திக் கொண்டால் நலம்).

மேற்கண்டவைகள் எனது உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்தவைகள். வரும் 2015க்கான புத்தகக் கண்காட்சி சனவரி 9 முதல் 21 வரை அதே ஒய்.எம்.சி மைதானத்தில் நடைபெற இருப்பதால் இந்த முறை நாம் கொஞ்சமேனும் முயன்றால் நலம். பிறகு நமது தரப்பின் அணுகுமுறையை அல்லது சந்தையை விரிவுபடுத்திக் கொள்ளாம் என்பது என் பணிவான கருத்து.


அன்புடன்
வழுத்தூர் ஜா.முஹையத்தின் பாட்ஷா.
13-12-14


________________________________________________

2014-12-15 20:09 GMT+04:00 abdul rahman <rahmanexec@yahoo.com>:
Thambi,

Assalaamu Alaikum Warahmathullah ....
I agree with all your points. We have to initiate such tasks. All your points of the text have explored your unique spirit  you possess with Muslim League and our leaders. Fine. Insha Allah your email will definitely open the eyes of all concerned and we shall act accordingly.
Thanks.

Abdul Rahman

________________________________________________

Respected Annan, 

Assalamu Alaikkum.

I have received your great response for the mentioned subject with the delighted heart. As you said if we do some initiative actions upon this regards there will be a very much effective and useful result for our moment and the society as well. What I written in that letter is all my heart feelings only.We hope tomorrow will be a bright day for us by the gracious of almighty. 

We are very much lucky people because we have got great leaders such like your good selves. Alhamdulillah.

May god bless for all of us.

-- 

Regards and Dua's
J.Mohaideen Batcha

12 டிசம்பர் 2014

லிங்கா - எப்படி இருக்கு - விமர்சனம்



மகாகனம் பொருந்திய ராஜா லிங்கேஸ்வரரை நேற்று தரிசிக்கும் பாக்கியம்!? பெற்றோம்…(அடிக்க வராதிங்கப்பா.. லொல்லுக்கு தான்) படத்தில் ரஜினி அறிமுகமாகும் முதல் சீன் துபாயில், அங்கு சாதாரணமாக இருக்கும் மிக விலையுயர்ந்த காரில் வந்து இறங்குகிறார் .. பிறகு அறிமுகப்பாடல்.. துபாய் அபுதாபி என கிளுகிளுப்பாக சூப்பர் பாடல் நன்றாக உழைத்திருக்கிறார்கள். துபாயில் குவிந்திருக்கும் பெல்லி டான்சர்ஸ், மாடல் அழகிகள், துருக்கிய தனோரா ஆட்டம், ஸ்டேடியங்கள் மற்றும் பெரும் பெரும்பார்கள் என எல்லாவற்றையும் பயன்படுத்தி ரகளை கட்டி இருக்கிறார்கள். அப்போது தான் நம் SAC ஹமீது அவர்கள் கூட அபுதாபியில் ரஜினியை சந்தித்து எடுத்து போட்ட போட்டோ நினைவில் வந்தது.

ரஜினியை மிக இளமையாக காட்டி இருக்கிறார்கள்.. 65 வயதுக்காரரா! அப்படி என யாரும் சொல்லிவிடமுடியாது ஏன்ன்னா மைதா.. ரவை.. கடலைமாவு, ரப்பர் என எல்லா ரசவாத கலவையையும் திறம்பட கலந்து ஒட்டிய ஒப்பனை கலைஞர்கள் பாராட்டுக்குறியவர்கள். இளமையா ரஜினி வர்ரப்ப சும்மா அதிருது..!

படஆரம்பத்திலிருந்து பேரன் ரஜினியின் முதல் ஆஃப் காமெடி கலாட்டாவாய்.. அனுஷ்கா, சந்தானம், தாடி பாலாஜி என பலரோடு ஜாலியாய் நகர்கிறது. பிளாஸ்பேக் ரஜினியை காட்டும் ரயிலும், ரயில் சண்டையும் அருமை, திகில் கிளப்பும் படி தத்ரூபமான கிராபிக்ஸ். அதிலும் ரஜினி பட்டையை கிளப்பும் ஸ்டைலோடு விலாசுகிறார் பழைய கால ரஜினியாய்.


கலெக்டர் கதாபத்திரம், ஆங்கிலேயர்களுடன் மோதல் எல்லாம் விறுவிறுப்பு… மைசூர் அரண்மனையை அழகாக காட்டி இருக்கிறார்கள் அதில் ஆங்கிலேயர்களுக்கும், மற்ற அரசர்களுக்கும் நடக்கும் விருந்து காட்சி மிக அருமை அதிலும் விருந்து பறிமாறப்படும் நேரம் வரும் பின்னணியில் மேற்கத்திய இசையை ரம்மியமாக பிண்ணி இருக்கிறார் ரஹ்மான். படத்தின் ஆரம்பத்தில் அரசியல் பஞ்ச், பிறகு படத்தின் இரண்டாம் பகுதியில் ஆன்மீக மணம் என வழக்கமான ரஜினிபட பாணியில் எல்லாம் கலந்து கொடுத்திருக்கிறார்கள். பல வசனங்களுக்கு அரங்கம் அதிர்கிறது. “எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கடைசியில் மனுசனின் உயரத்துக்கு தான் தூங்க இடம்” என்றெல்லாம் பேசும் போது ரசிகர்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள். இதிலும் ஒரு பாம்பு சென்டிமென்ட் காமெடி காட்சி இருக்கிறது.

நெருடல் என்னவென்றால்  ஆங்கிலேயர்கள் போட்ட ரயில்ப்பாதைகள் எல்லாம் இந்திய வளங்களைக் கொள்ளை அடிக்கத்தான் அதில் லாபம் அடையலாம் என்றும் தான் போட்டதாகவும், மலைப்பகுதிகளில் சாலை அமைத்தது எல்லாம் உல்லாசப்பயணம் சென்று அவர்கள் அனுபவிக்கத்தான் என்றெல்லாம் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஏகப்பட்ட வசனம் பேசும் ரஜினி என்ற லிங்கேஸ்வரன் சோலையூர் மக்களின் துன்பம் துடைக்க ஆங்கிலேய சூழ்ச்சிக்கு இடையே அவர்களிடம் தனது கலெக்டர் பதவி, அரசாட்சி, அரச ஆடம்பர அரண்மனை, பொன், பொருள் என எல்லாவற்றையும் இழந்து அணை கட்டிக்கொடுப்பதாகவும் கடைசியில் அந்த அணையை தாங்கள் தான் கட்டினோம் என போடச்சொல்லி ஆங்கிலேயர் மிரட்ட மக்களுக்காக அப்படியே செய்ய சம்மதிக்கிறார் ரஜினி (படத்தில் கடைசியில் ஆங்கிலேயனே ரஜினி கட்டியதாய் திறந்து வைக்கும் திருப்பம் வேறு) இதுவெல்லாம் பெண்ணி குயிக் என்ற ஆங்கிலேயர் கட்டிக்கொடுத்த முல்லைப் பெரியாறு அணையை யாபகப்படுத்தாமல் இல்லை, மறைமுகமாக அப்போது ஆண்ட அரசர் கட்டிய அணையை ஆங்கிலேய பெண்ணிகுயிக் மிரட்டி தனது பெயரை போட்டதாக சொல்லப்படுவது அபத்தமாக தோன்றுகிறது, வரலாறு ஒன்று சொல்ல சினிமாவில் உல்டாவாக ரஜினிக்காக காட்டுகிறார்கள்.’ படத்தின் அடுத்தடுத்த காட்சியில் அணையின் தரம் குறித்து சோதனை இட வரும் அதிகாரியிடம் ரஜினி இது ஆயிரம் வருசத்திற்கு உறுதியாக நிற்கும் என்கிறார். படம் பார்க்க வந்த மலையாளிகள் சலசலக்கிறார்கள். கேரளாவில் இதற்கு என்ன ரியாக்சன் என தெரியவில்லை.

அணை கட்டும் காட்சிகளும், அதை தடுக்க சில எட்டப்ப வேலை செய்யும் சுந்தர்ராஜன் கேரக்டரும் அருமை. பின்னனி இசை படமுழுக்க பிரமாதம். பாடல்கள் எல்லோருக்கும் தெரிந்தது என்றாலும் படத்தோடு பார்க்க அருமை. ரஹ்மானின் உழைப்பு தெரிகிறது. 


இரண்டாம் பகுதியில் குறிப்பாக கிளைமாக்ஸ் எதிர்பார்ப்போடு இல்லை, ஜவ்வு போலவும் இழுக்கிறது. ரஜினி மலையிலிருந்து குதித்து எங்கோ மிக தூரத்தில் இருக்கும் பாராசூட்டில் பறந்து வந்து அலேக்காக விழுவதும், அதில் சூப்பர் மேனை விஞ்சி சண்டையிடுவது கொஞ்சம் ரஜினி படம் என்றாலும் நம்பமுடியாத ஓவர் டோஸ். பிறகு வில்லனை வீழ்த்தி, பாம் வெடிக்காமல் செய்து அனுஷ்காவை அணைத்துக்கொண்டே காப்பாற்றி வெற்றி பெருவது பல லட்சம் தமிழ் படங்களில் எம்,ஜி.ஆர் காலத்திலிருந்து இன்று வரை பார்த்த காட்சிகள் தான். இதுவெல்லாம்  ரவிக்குமார் இன்னும் சரிபடுத்தி இருக்க வேண்டும். இருந்தாலும் ரவிக்குமார் முத்திரை இதிலும் இருக்கிறது. பழைய ரஜினி டீமின் பலரை இதிலும் பார்க்கலாம். சரத்பாபு இருந்திருந்தால் அந்த குறை இன்னும் தீர்ந்திருக்கும்.


சாக கிடந்த ரஜினியை இப்படி இன்னும் துள்ளலோடு பார்ப்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. அப்படி காட்டி இருக்கிறார் ரவிக்குமார்.. அப்படி ஒத்துழைத்திருக்கிறார் ரஜினி. ஒளிப்பதிவும் அருமை. நாயகிகள் அனுஷ்காவுக்கு வயது 35 என்றால் யாரும் நம்பமாட்டார்கள், சோனாக்‌ஷியும் முதல்மரியாதை ராதா போல் வந்து அசத்துகிரார். ரசிகர்கள் வாயை பிளக்கிறார்கள். 


எனக்கெல்லாம் இன்று பார்க்கும் திட்டமே இல்லை.. சாப்பிட வெளியே கிளம்பினேன் டிக்கெட் வாங்கியாச்சா.. என எல்லோரிடமும் பேச்சு.. நான் சார்ஜா போய் பார்க்கபோகிறேன்.. என்றார் ஒருவர் இன்னொருவர் நான் அஜ்மானிலேயே தான் பார்க்க வேண்டும் என்றார். இங்கு ஓடவில்லை என நினைத்த நான் உடன் ஓட்டம் எடுத்தேன். அதே பரபரப்புடன் ரசிகர்கள்.. கொண்டாட்டம்.. இரவு 12 மணிக்கு மேல் தான் படம் என்றாலும் குழந்தைகளோடு தாய்மார்கள் என களைகட்டியது. இதில் துபை, சார்ஜா, அபுதாபி என திருவிழாக்கோலம் பூண்டிருந்ததை நணபர்கள் அனுப்பிய க்ளிப்ஸ் மூலம் தெரிய நேர்ந்தது. வடநாட்டுக்காரர்கள் ஏன் அரபிய இளைஞர்கள் கூட எங்களோடு படம் பார்த்தார்கள்.. எந்த ஷோவிலும் நடக்காத விசில் மற்றும் ரகளை இவர்களுக்கு பிரமிப்பாக இருந்திருக்கும். வந்தவர்களை திரையரங்க ஊழியராக நின்றிருந்த பிலிப்பினோ என் தம்பியிடம் வந்திருக்கும் மக்களை எப்படி தமிழில் வரவேற்பது என கேட்டு.. எல்லோரையும் வணக்கம் ரஜினியின் தமிழ் படம் ஆரம்பமாக இருக்கிறது வாருங்கள் என வரவேற்க எல்லோரும் சிரித்து மகிழ்வோடு அரங்கிம் நுழைந்தது கூடுதல் தகவல்.

ரஜினி படத்தை எதிர்பார்த்தவர்கள் ஏமாற மாட்டார்கள்.. ரசிகர்கள், பெண்கள், குழந்தைகளை இப்படம் அள்ளும்.. வசூலிலும் சாதனை செய்து வெல்லும்.
ஜாலியா போய் பாக்கலாம். பாருங்கள் என்பது என் சைட்.

ரஜினி ராக்ஸ்..! 
 

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

07 டிசம்பர் 2014

மலர்ப்பாதையிலும் பூ நாகங்கள்

மலர்ப்பாதைகளின் திசையில்
பயணங்கள் தொடர்ந்தாலும்
அதிலும் கூட
பூ நாகங்கள் படமெடுன்றன.

****
கிளம்பும் முன் தான்
எந்தப் பூனையும் குறுக்கே வரவில்லையே
பிறகேன் அபசகும்.

****
அந்தக் கள்ளிச்செடியில்
ரோஜாப் பூவை
சொருகி வைத்ததுதான் யார்..?
பாம் பார்வையாளர்கள்!

****
கூவத்தின் சகதியை அள்ளி
சந்தனமென விற்கப்படும் நாளில்
நறுமணத்தின் வாசனைகள்
அவர்களின் இறந்தகாலத்தில்,
மனதிற்கு சுகம் தந்ததாய்
மூத்தவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

****

நாட்டு எலியொன்று
நானே சிம்மமென
சிகையலங்காரம் காட்டினால்
உலக வயிறு குலுங்குகிறது
சிரிப்பை அடக்க வகையறியாமல்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

06 டிசம்பர் 2014

இரு அவமானங்கள்

சுதந்திர இந்தியாவின் இரண்டு அவமானங்களுமே ஒரு சாராரால் தான் நிகழ்த்தப்பட்டது..
1. தேசப்பிதா மகாத்மா காந்தியின் கொலை
2. பாபரி மஸ்ஜித் தகர்ப்பு
எதற்காக இந்த இரண்டையும் செய்தார்களோ அதை இன்று சாதித்து அனுபவிக்கிறார்கள். பிரித்தால் தானே ஆளமுடியும்.. என்ற ஆங்கிலேய சூழ்ச்சியை கையிலெடுத்து அவர்கள் ஆட்சியை பிடித்தது போலவே இன்று இவர்கள் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள்.
தேசத்தின் தந்தையாய் நின்று சமூகங்களை ஒருக்கிணைத்ததினால்.. இந்துக்களும் இஸ்லாமியர்களும் நேசபாசத்தோடு இணைந்து செயலாற்ற வேண்டும் என்றதினால்.. சிறுபான்மையினருக்கு பாதுகாவலாக நின்றதினால் . இவர் இன்னும் இருந்தால் இரு சமூகங்களின் ஒற்றுமைக்கான வழிகளை செய்து இன்னும் இறுக்கமாகிவிட்டால் நாம் பிழைப்பு செய்ய முடியாது என்றே பல சத்திய சோதனைகளை கடந்த அஹிம்சைக் கிழவனை இரக்கமே இல்லாமல் கொன்று போட்டார்கள். (இருநூறாண்டு ஆண்ட ஆங்கிலேயர்களையே எதிர்த்து பிரதான எதிரியாக செயல்பட்டும் காந்திஜி ஆங்கிலேயர்களால் கொல்லப்படவில்லை மாறாக அவனே வியந்து அவருக்கான மரியாதை தரப்பட்டு கண்ணியம் காக்கப்பட்டது ஆனால் விடுதலை கொடுக்கப்பட்ட மறுகணமே விரோதிகள் மகாத்மாவின் உயிர் பிரிக்கப்பட்டது) .
இத்தனை செய்தும் கூட இன்னும் நாம் அரியணை ஏற முடியவில்லையே கால ஓட்டத்தில் இரு சமூகங்களும் இணைந்துவிட்டனரே... எதை கையில் எடுக்கலாம்.. ஆமாம் நமக்கு தான் இருக்கிறதே பழைய யுக்தி.. பிரி...பிறகு ஆளலாம் என்றே பிரிக்கும் ஆயுதத்தை தேடினர்.. மதம் வந்து கை கொடுத்தது.. ராமனின் பிறப்பு என்ற வில்லேந்தி சமூகநீதி, சகோதரத்துவம், சமயசார்பின்மை இவைகளின் நெஞ்சில் குத்தி சிதைத்தனர்... பாபரி வீழ்ந்தது அத்தோடு இந்திய கவுரவம்... பழம் பெருமை.. ஒற்றுமை இவைகளும் தான்.
ஆட்சியும் வந்தது... காட்சியும் தந்தது... ஆனாலும் ராமன் நிச்சயாமாக பெரும்பான்மையினரின் நம்பிக்கை அடிப்படையில் நீதியின் பக்கம் நிற்கும் உத்தமன் தான் என்றால் நீதி ஒரு நாள் வெல்லும்.. அன்று அவனது வில்லே எனக்காகவா இத்தனை ரத்தக்கலரிகளை செய்தீர்கள் என்று வினவி ஈனப்பிறவிகளின் அதமர்மத்தை கொல்லும் இதெயெல்லாம் வருங்கால சரிதம் சொல்லும்.
குறிப்பு: எழுத்தின் சாரத்தை மட்டும் புரிந்து கொண்டால் நலம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

காயிதேமில்லத் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வும் என் உணர்வும்

நண்பர் ஆளூர் ஷாநவாஸ் இயக்கிய கண்ணியத்திற்குரிய "காயிதேமில்லத்" அவர்களின் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஆவணப்படத்தை அபுதாபி அய்மான் சங்கம் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை இணைந்து 04-12-2014 அன்று வெளியிட்டது. ஆவணப்படத்தை பார்த்த என்னுடைய எண்ணக்கருத்துக்களை காணொளியாக்கி இணைத்திருக்கிறேன். நண்பர்கள் குறைகள் இருந்தால் பொறுத்தருளவும்.


ஆவணப்படம் பார்த்த உணர்வில் எனது கருத்தாக ஒரு வீடியோ பதிவாக எனது எண்ணத்தை பகிர்ந்திருக்கிறேன், பதிவில் சாதாரணமாகத் தான் கருத்தை பதிவு செய்திருக்கிறேன்.. ஷாநவாஸ் அவர்களை நமது சமூகமும் இளைஞர்களும் ஒரு முன்னுதாரணமாக் ஏற்று செயல்பட வேண்டும் என்ற வேட்கை தான் இதற்கு காரணம். இதில் தவறு இருந்தால் மன்னிக்கவும். முழுமையாக கேட்டுப்பாருங்கள் முதல் பத்து நிமிடம் கொஞ்சம் தொய்வாக பேசி இருக்கிறேனோ என்று நினைக்கிறேன். திடீரென நினைத்து பேசிவிட்டேன் திட்டமிட்டு பேசிய பேச்சு இது இல்லை.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

04 டிசம்பர் 2014

43 வது அமீரக தேசியதின முகநூல் பதிவுகள்


அமீரகம் ஒரு அற்புத உலகம் - பலநூறு
சமூகம் இணைந்து கமழும் நறுமண திலகம்
( அமீரகத்தில் 186க்கும் மேற்பட்ட நாட்டினர் ஒன்றாக அமைதியுடனும் செழிப்புடனும் வாழ்கின்றனர் )
*
பசுமைகள் அலங்கரிக்கும் பாலைப்பதுமை 
பார்வைகள் மயங்கும் உலகின் புதுமை 
அமீரகம்
*
சுவரொட்டிகள் இல்லாத சுந்தர தேசம்
சுவாசமெங்கும் சுகவாசம் வீசும் தேசம்
அமீரகம்
*
முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல..
இந்துக்களுக்கு கோயில், கிருத்துவர்களுக்கு சர்ச் என எல்லோருக்கும் செய்து கொடுக்கிறது துபை அரசாங்கம்.
பர்துபையின் கோயிலில் வார விடுமுறையில் பார்த்தால் இந்திய தேசத்தின் எல்லா பகுதியிலிருந்தும் வரும் இந்துப் பெருமக்களை பார்க்கலாம்.. அவர்களின் வழிபாட்டுக்காக எல்லா இந்து தெய்வ கோயில்களும் இருக்கிறது.. கோயில் நடையில் பூஜைக்கான பொருட்கள், பூ என எல்லாமே கிடைக்கும். இங்கு மட்டும் தான் கோயிலுக்கு மிக அருகே பள்ளிவாசல் இருந்தும் எந்த பிரச்சனையும் இல்லாமல் மிக நேசத்தோடு அவரவர் வழிபாட்டை அவரவர் செய்து மனம் நிறைகிறார்கள். (இந்தியாவை நினைக்க மனம் நோகத்தான் செய்கிறது.. அதுவும் அரசியலுக்காக மததுவேச அரசியல்..!!!!!)
ஊத்மேத்தா பகுதில் சனி ஞாயிறு கிழமைகளில் பார்த்தால் நெருங்கவே முடியாத அளவுக்கு உலகளாவிய நாடுகளைச் சார்ந்த கிருத்துவர்கள் கூட்டம் அலை மோதும்.. கூட்டத்தையும் போக்குவரத்தையும் சரிப்படுத்த காவலர்கள் மிக ஒத்துழைப்பு கொடுத்து சரிசெய்யும் காட்சியை அனைவரும் காண்பர்.

இது தான் அமீரகம்.
*
ஒரு கன்னிப்பெண் உடலெங்கும் தங்க ஆபரணம் அணிந்து நடுநிசியில் பயமறியாமல் பாதுகாப்புடன் என்று பயணம் செய்யும் நாளோ அது தான் நம் நாட்டிற்கு உண்மையான சுதந்திர நாள் என்று கனவு கண்டார் நமது தேசத்தந்தை காந்திஜி.. ஆனால் அந்தக் கனவை நாளும் பொழுதும் நனவாக்கி பெண்கள் எந்த நடுநிசியிலும்.. எந்த துணையும் தேவையென அறியாது அல்லது நாடாது அவர்களே தன் சொந்த வீடு போல நினைத்து வலம் வரும் ஒரு நாட்டை தினமும் பார்க்கிறோம் என்றால் அது அமீரகம் தான். அமீரகத்தில் தனிமனித பாதுகாப்பும், பெண்களுக்கான பாதுகாப்பும் நிறைந்திருப்பதால் ஆசிய ஐரோப்பிய மக்கள் தங்களின் வாழும் நாடாக பாதுகாப்பு அரணான அமீரகத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இதற்கு இங்கு வாழும் ஒவ்வொருவருமே சாட்சி தான்.

இது தான் அமீரகம்.

*
உங்களுக்கு தெரியுமா அமீரகத்தில் 1965 வரை இந்திய நாணயங்கள் தான் புழக்கத்தில் இருந்தது அப்படியான நாட்டின் ஒரு அங்கமான துபை இன்று ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளீல் அசுர வளர்ச்சி அடைந்து நிற்கிறது என்றால் அது அந்த நாட்டை வழி நடத்தும் திறமையான ஆட்சியாளர்களைத் தான் சாரும். எல்லோரும் நினைப்பது போல திரைப்படங்களில் வசனம் பேசுவது போல துபாயில் பெட்ரோல் எண்ணை வளம் அறவே இல்லை... துபாய் என்ற நாட்டை வளர்த்தெடுக்க மிக அற்புதமாக திட்டமிட்டு அதை சர்வ தேச சந்தையாக்கி... எல்லோரும் தொழில் தொடங்க வேண்டிய கட்டமைப்பை செய்து கொடுத்து, பாதுகாப்பை மிக உறுதிப்படுத்தி... சுற்றுலா துறையை சீர்மை படுத்தி ஒரு வளமும் இல்லாத இந்த நாட்டை உலகின் எல்லா வளமும் வந்தடையும் நாடாக்கி இருக்கிறார்கள். இங்கு வந்து சேர்ந்தால் போதும் பணம் பண்ண தெரிந்தவர்கள் அள்ளும் அளவுக்கு அள்ளலாம் என்கிற நிலையை உருவாக்கி அவர்களும் சிறந்து வாழ்கிறார்கள். இங்கு இருப்பவர்களும் மனமகிழ்ந்து வாழ்கிறார்கள். இது தான் துபை.. இது தான் அமீரகம்.
(பெட்ரோல் அபுதாபியில் மட்டும் தான். துபை அமீரகத்தின் ஒரு பாகமாக இருந்தாலும் இங்கே தனித்தனி நிர்வாகம் தான். இராண்டுகளாகத்தான் நம் நாட்டின் மத்திய அரசு போல ஒரு சில விசயங்களில் அவர்கள் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்)

இது தான் அமீரகம்.
*

அமீரகத்தில் இது தான் இல்லை
*******************************************
இல்லை என்பதெல்லாம்....
காணும் இடமெல்லாம் கட்சிக்கொடிகள் இல்லை
தேனும் தினைமாவும் கலந்து பேசும் 
அரசியல் வியாதிகள் இல்லை
தாரத்தப்பட்டையோடு தலைவர்கள் உலா இல்லை
தன்மானம் கெட்டாலும் தலைவர் வருகிறார் என்ற விழா இல்லை
பாலம் கட்டி அற்பணிப்பு விழா இல்லை
நிர்வாக சீர்கேடு இல்லை
நிவாரண கொள்ளை இல்லை
வெற்று வாக்குறுதிகள் இல்லை
ஓட்டுப்பொறுக்கிகள் இல்லை
வெற்று கோஷம் இல்லை
வீண் விவாதங்கள் இல்லை
அதனால்
தந்தி டிவி பாண்டே...
புதிய தலைமுறை அக்னிப்பரிட்ஷை..
இவைகளெல்லாம்
இங்கே தேவை இல்லை..!!!
*
துபை ஈமான் அமைப்பின் 43வது அமீரக தேசிய தினம்
முகநூல் இணைப்பு...
*

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

26 நவம்பர் 2014

ஆண் அன்னை தெராசா மறைந்தார்

மருத்துவர் மு.கோட்டைசாமி
ஆம் இந்த ஆண் அன்னை தெரசா எங்கள் அய்யம்பேட்டையில் வாழ்ந்து சேவையாற்றியவர். இங்கு அவ்வாறு என குறிப்பிட்டது மிகைப்படுத்தும் வார்த்தை அல்ல.. உண்மையில் அந்த வார்த்தைக்கு முற்றும் பொருத்தமுள்ளவரை தான் அவ்வாறு குறிப்பிட்டேன், அந்த ஆண் அன்னை தெரசா மறைந்த மருத்துவ சீலர் ஐயா. மு.கோட்டைச் சாமி அவர்கள் தான். பார்ப்பதற்கு கூட அதே சாந்தத்துடனும்.. அமைதியுடனும் கூடிய கனிவு பொங்கும் உருவம்.. தனது வாழ்நாளெல்லாம் மக்கள் பணிக்காகவே அற்பணித்த தியாகி.. அவருக்கு அடி மனதின் ஒரு முனையில் கூட இவர் முஸ்லிம்.. இவர் இந்து என எண்ணத்தெரியாத உண்மையான மனிதர்.. மேன்மையான மனித நேயர். அவர் இன்று இராமேஸ்வரம் சாலையில் ஏற்பட்ட வாகனவிபத்தில் மறைந்தது அவரின் சேவைமய்யமான மருத்துவமனை இருக்கும் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை மக்களுக்கு  மட்டுமல்ல அந்த உயர்ந்த மனிதரின் மருத்துவ சேவையால் பயன் அடைந்த பல்லாயிரக்கணக்கான சுற்றுவட்டார மக்களுக்கும் பேரிழப்பு… பேரிழப்பு.. பேரிழப்பே தான். இந்த துக்ககரமான செய்தி காலையில் அறிந்தது முதலே பேரதிர்ச்சி அடைந்தேன்.


 இந்து முஸ்லிம் என்ற மதமாச்சர்யங்கள் எல்லாம் அவர் அறியாதவர்..   வாழும் போது எப்படி அன்பை மட்டுமே பிரதானமாய் கொண்டு மனிதர்களை கருணையால் சூழ்ந்து சிகிச்சை செய்து சாதித்தாரோ அது போலவே அவர் இறந்த போதும் மதமாச்சர்யங்களை தவிடு பொடியாக்கி மனித நேயத்தை.. மதம் கடந்த பெரும் நேசத்தை அவர் இறந்து போய்விட்டலும் அவரது பூத உடல் நிரூபித்துக் காட்டிவிட்டது.  ஆம், ஐயா.கோட்டைசாமியின் பூத உடலை ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆரா துயரத்தில் சூழ்ந்து கொண்டு கண்ணீர் வடித்து கலங்கி நின்ற காட்சி பார்த்த எல்லோருக்கும் பேரதிர்வை உண்டாக்கிவிட்டது.. இது போன்ற கோட்டைச்சாமிகளால் தான் இந்த தேசத்தில் மனித நேய கோட்டைகள் விழுந்துவிடாமல் தாங்கிப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று  எண்ணத்தோன்றியது. 

ஏனென்றால், அய்யம்பேட்டையில் வசித்த ஒரு சாதாரண மருத்துவருக்கு அவரின் இறுதிச்சடங்கில் மரியாதை செய்ய பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடி அதுவும் இஸ்லாமியர்கள் மட்டுமே தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமாக கூடி  தங்கள் இரங்கலை தெரிவித்து அழுதார்கள்  என்றால் மேலும் இஸ்லாமிய ஆண்கள் கூட்டமே அவரது பூத உடலை சூழ்ந்து ஆர்பரித்து அவர்களே மயானம் வரை பெருங்கூட்டதுடன் சுமந்து சென்று 
சோகம் சூழ பிரியாவிடை தந்தார்கள் என்றால் இது ஆச்சர்யத்திலும் ஆச்சயர்மாகத் தான் இருக்கிறது. இதற்கெல்லாம் ஆதார சுருதி இஸ்லாம் குறிப்பிடும் எல்லோரிடமு அன்பு, அறம், நேசம், உதவி என்ற நற்பண்புகளை அவர் பேணி மக்கள் பால் காட்டிய கருணை.. மக்களுக்கு அவர் காட்டிய அன்பு.. மருத்துவத்தை ஏழை எளிய மக்களுக்காக சேவையாகவே செய்து பல உயிர்களை காத்து நின்றது தான். இத்தனை மக்கள் திரள் ஒன்று கூடி தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறது என்றால் இதில் மருத்துவர் ஐயா அவர்கள் மக்களின் மீது காட்டிய மெய்யன்பும், மக்கள் அனைவரும் மருத்துவர் ஐயா அவர்களிடம் காட்டிய பேரன்பு மட்டுமே காரணம். ஒரு அரசியல் வாதிக்கோ.. ஒரு நடிகருக்கோ கூடிடும் கூட்டத்தில் சூது இருக்கும், ஏமாற்று இருக்கும், வஞ்சகம் இருக்கும் ஆனால் இங்கு கூடிய கூட்டத்திற்கோ அவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அன்பும்.. ஆற்றாமையும், மனிதநேயரை பிரிந்துவிட்டோம் என்ற பிரிவுத்துயரும் தான் காரணமாக திகழ்ந்தது.

தினமும் காலை மருத்துவ மனைக்கு வந்து நோயாளிகளை பார்க்க உட்கார்ந்தால் மதியம் மூன்று மணி வரை பார்ப்பார்.. இடையில் உணவு கூட இல்லை எல்லாம் பிறகு தான். பிறகு சாப்பிட்டு வந்து மீண்டும் மாலை மருத்துவமனை வந்தால் ஓய்வின்றி இரவு பதினொன்று முப்பது வரை பார்ப்பார் சில நேரம் பன்னிரெண்டும் ஆகும். இதற்கிடையே எத்தனை எத்தனையோ அர்ஜென்ட் கேஸ்கள் வேறு.. மருத்துவமனைக்கு வருவதையும் பார்ப்பார்.. பல சமயம் அவர்களின் வீட்டிற்கே ஓடிப்போய் பார்த்துவருவார். எந்த ஊர் எந்த இடம் என்றெல்லாம் பார்க்கமாட்டார்.. துடிதுடித்து வரும் மக்களின் நாடித்துடிப்பறிந்து ஏதோ தனக்கோ தங்கள் குடும்பத்திற்கோ நேர்ந்த துன்பம் போல எண்ணி ஓடி வருவார். அது மட்டுமல்ல இரவு மருத்தவ மனையிலிருந்து சென்று உணவருந்தி விட்டு பன்னிரெண்டு மணிக்கு மேல் அப்போது தான் படுக்க சென்றிருப்பார் அதற்குள் ஐயா.. அவசரம்.. உடனே வாருங்கள் டாக்டர்.. என்று கதவு தட்டும் குரலுக்கு முன் தான் சட்டையை மாட்டிக்கொண்டு பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடி வருவார். 



துபாய் வரும் முன் நானே கூட ஒரு முறை தெருவில் ஒருவர் வீட்டில் திடீர் உடல் நலக்குறைவு என இரவு இரண்டு மணிக்கு போய் அழைத்து வந்திருக்கிறேன். எத்தனையோ முறை எனக்கும்.. என் தாய் தந்தையருக்குமாக அவசர காலத்தில் உதவியிருக்கிறார். அந்த சேவையை எல்லாம் நான் என் மனக்கண் அழுக இன்று நான் அழுது நினைத்துப்பார்க்கிறேன். அய்யம்பேட்டையில் எத்தனையோ மருத்துவர்கள் இருந்தாலும் ஐயா.கோட்டைசாமி போல் ஒரு கருணை வடிவத்தை பார்ப்பது அரிது. அதிலும் அதிகமாக காசு வாங்காது.. அதிக பணத்திற்கு ஏதேதோ எழுதி கொடுத்து இம்சை செய்யாது மனிதாபிமானத்தோடு ஏழை எளிய மக்களின் உடல் நலனில் அக்கரை கொண்டு இப்படி ஒரு ஓய்வறியத… உறக்கம் பார்க்காத மக்களுக்காவே பணி செய்த சிறப்பான மருத்துவர் மறைந்து விட்டாரே என்று தான் மனம் புலம்புகிறது. 


இனி  அய்யம்பேட்டைக்கு மட்டுமல்ல எங்கள் வழுத்தூர், பசுபதிகோவில், மாங்குடி, இன்னும் ஆற்றைக்கடந்த அக்கரை ஊர்கள் என எத்தனை எத்தனையோ ஊர்மக்களான நாங்கள் அவசர உதவிக்கு இனி யாரை அழைப்போம்.. இருக்கும் மருத்துவர்கள் எல்லாம் காசு பறிப்பவர்களாகவும்… வார்த்தைகளால் இன்னும் மனதை ரணப்படுதுகிறவர்களாகவுமே இருக்க எங்களை இப்படி தவிக்க விட்டுச் சென்றுவிட்டீர்களே ஐயா! மருத்துவம் படித்தவர்கள் எப்படி எல்லாம் வாழவேண்டும்.. எப்படி சேவையாற்றவேண்டும் என்பதற்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டிய மனிதநேயர் அல்லவோ நீங்கள் ஐயா!

அன்பும் மனிதநேயமும் பொய்த்துப்போய்விட்ட இவ்வுலகில் அதை பறைசாற்ற ஆங்காங்கே ஒரிரு ஜீவன்கள் தெய்வாதீதமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறது. அதன் காரணத்தாலேயோ என்னவோ இன்னும் இப்பூவுலகில் மழை பொழிகிறது.. நல்லவைகள் நடக்கிறது. அந்த வகையில் மறைந்த மருத்துவ சீலர் ஐயா.கோட்டைச்சாமி அவர்களின் சேவை என்றும் நினைத்து நன்றி பாராட்டதக்கவை. ஐயா நாங்கள் இருக்கும் வரை உங்களை பார்த்த சிறு பிள்ளைகள் அவர்கள் வாழும் வரை உங்களை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.. இன்னும் அடுத்த தலைமுறைக்கும் இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று தங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லி எத்திவைப்பார்கள். அம்மாதிரியான அபூர்வமானவர் அல்லவோ நீங்கள்.

மருத்துவர் கோட்டைசாமி அவர்களின் ஆன்மா சாந்தி அடைவதாக! நித்திய ஜீவன் எய்திடுமாக! அன்னாரின் நீடுபுகழ் என்றும் நிலைபெறுமாக!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

முகநூல் - நவம்பர் 2014

பறப்பது தான் எத்தனை சாகசம்! 
பறப்பது தான் எத்தனை பரவசம்!!
பறப்பது தான் எத்தனை அதிரசம்!!!               2nd November 2014

காலம் கடந்து நிற்கும் நாயகர்களின் வரலாறெல்லாம் நமக்கு மலை போன்ற துணிவையும்.. கடல் போன்ற உத்வேகத்தையும் தான் தருகிறதே அன்றி வேறென்ன..!          3rd November 2014

எதிர் பாராமல் தான் மன மகிழ்வும்.. 
மனச் சோர்வும் கணந்தோறும் நம்மை கட்டியணைக்கிறது.

விழி நுகர்வும், செவி நுகர்வும், 
உடல் நுகர்வும் எப்போதும் நமக்கு 
எதை எதையோ தந்தவண்ணமே இருக்கிறது!       4th November 2014

நமது பெண்களை மனரீதியாக வலிமயானவர்களாக.. எதையும் எதிர்கொள்ளும் துணிவு மிக்கவர்களாக பழக்கவேண்டியது காலத்தின் அவசியம். அதிலும் இணைய மின்னணு கருவிகளின் உதவியோடு தொடுக்கப்படும் வக்கிரம கொடுமைகளுக்கு எதிராக அவர்களை தயார் படுத்துதல் மிக முக்கியம். 

புதிய தொழிற்நுட்பத்தினை பயன்படுத்தும் போது அதை பாதுகாப்பாக எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும்.. அதையும் மீறி ஏதேனும் தாக்குதல் அல்லது நோக்குதல் தலைபட்டால் எப்படி அதை தவிர்ப்பது அல்லது அதை எப்படி இனங்காணுவது அல்லது எப்படி தடை செய்வது என்றெல்லாம் குறைந்த பட்சமாவது தெரியப்படுத்த வேண்டும்.

நிகழ்காலத்தில் அறமெல்லாம் இல்லை..எங்கும் எங்கிலும் மறமே மட்டற்று காண கிடைக்கிறது. ஆதலால் அறநெறியாளர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தினையும் தாங்களே தற்காத்துக்கொள்ளுதல் அவசியமாகிறது. 

4th November 2014

எல்லாவற்றிலும் 
முந்த வேண்டும் 
என ஆசைப்படும் மனிதன்.

மரணத்தில் மட்டும் 
எல்லோரை விடவும்
பிந்த வேண்டுமாய்!        6th November 2014

நான் வரும் வழியெல்லாம் பவுர்ணமி சிரிக்கிறது  6th November 2014

பொதுவாக எல்லா உணவகங்களின் பொது மொழியும் "அண்ணனுக்கு ஒரு ஊத்தா..ஆ..ப்ப்ப்பம்ம்ம்ம்!!!!!" என்னும் பாணியில் தான் இருக்கிறது. இதில் எனக்கு தெரிந்து மொழி, இன, இட பேதமில்லை.
-11th November 2014

"மன்மோகன் சிங்கிற்கு இலங்கை மீது இருந்த பார்வை இப்போது இருக்கும் மோடி அரசுக்கு இல்லை... நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் மோடி அவரது பதவி ஏற்பிற்கு ராஜபக்‌ஷே-வை அழைத்த போது மனதில் கவலையோடு தாங்கிக்கொண்டோம்"..... மதிமுக பிரமுகர் தந்தி டிவி விவாதத்தில்

# என்னையா அப்போ அவர என்னன்னமோ சொல்லி கழுவி ஊத்துனீங்க... இப்ப அவர ஆகா.. ஓகோ..ங்கிறீங்க..

அதிலேயும் வைகோ முதல் எல்லோரும் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கை பேசியதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்தது தான். அதற்குள் இத்தனை மாற்றமா.. 

இந்த அரசியல் அவதார புருஷர்கள் எந்த நேரத்திலும் எந்த ரூபமும் எடுப்பார்கள்..இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா..!   -12th November 2014

திருக்குரளைப்பற்றி தருண் விஜய் பேசுகிறார்.. 
தமிழ் மொழிப்பற்றியும்.. தமிழ் மொழி பற்றினைப் பற்றியும் ஒரு வடமொழிக்காரர் பேசுவது ஆச்சரியம் தான் ஆனால் அதை சமஸ்கிருதத்தை மட்டுமே எங்கிலும் கொண்டுவர நினைக்கும் சங் பரிவார அமைப்பிலிருந்து வரும் ஒரு குரல் இதை மொழிகிறதே எனும்போது தான் எங்கோ இடிக்கிறது.

இனிக்கும் இந்தப் பழத்தில் எங்கே ஊசி எனத்தெரியாமல் ஏனோ திராவிடம் முழங்கும் வைரமுத்து பேதலித்துப் போய் விழா எடுக்கிறார். 

என்னவோ போங்கப்பா..!                                -12th November 2014

ஒரு பிரமாண்ட ஆளுமைக்குத்தான் எத்தனை ஈர்ப்பு


ஆஸ்கர் நாயகன் விஜய் டிவி அரங்கிற்குள் வந்து கொண்டிருக்கிறார்

முட்பாதைகளை கடந்த மேதைகளுக்கு உலகம் தன் தோள்களில் மலர்மேடை அமைத்துத் தருகிறது...!

# ஏ.ஆர் ரஹ்மான் அரங்கில் அமர்ந்து சிரிக்கிறார்.       -12th November 2014

புதிதாக தொடங்கப்பட்டதமிழ் தொலைக்காட்சியான News 7 Channel பார்க்கும் போது ஏதோ இலங்கைக்காரர்கள் நடத்தும் ஆஸ்தேலியா அல்லது ஜெர்மன் தமிழ் தொலைக்காட்சி போல உணர்வு ஏற்படுகிறது.

அப்படி ஒன்றும் புத்துணர்வோடு இல்லை.

ஐந்து பேரின் தூக்கு தண்டனை ரத்து ஆகுமென அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அப்படியான முடிவை ராஜபக்‌ஷே உண்மையில் எதனடிப்படையில் எடுத்தார் என்பதே அவருக்குத்தான் வெளிச்சம்.

இதெல்லாம் அரசியல் சதுரங்க விளையாட்டின் தொடர் நகர்வு நாடகங்கள்.. இதில் பாஜக-வின் தமிழ்நாட்டு அரசியல் பிழைப்பும் அடங்கும். ஆனால் இதில் என்ன விளையாட்டென்றால்.. ஒரு பக்கம் பாஜக.. "பார்த்தீர்களா நாங்கள் மீனவர்களை மீட்டுவிட்டோம் இது தான் மோடி தர்பார்" என்கிறது மறுபக்கம் அதிமுக "மக்கள் முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சி" என்கிறது, இன்னொரு பக்கம் கலைஞர் "தான் வெளியிட்ட அறிக்கையின் பலன் தான் இது" என்றும் "நாங்கள் கேட்டுக்கொண்டிருந்ததின் பேரில் தான் மோடி பரிந்துரைத்தார் ராஜபக்‌ஷே ஏற்றுக்கொண்டார் ஆதலாம் மோடிக்கு நன்றி " என்றும் அவரவர் தங்களால் தான் இது ஆனது என ஆதாயம் தேட அழுவதா சிரிப்பதா எனத்தெரியாத ஒரு அருவெறுப்பான அரசியல் நடந்தேறிக்கொண்டிருக்கிறது.

நல்லவேளை விஜயகாந்த்க்கு இது போல தான் தான் இதற்கு காரணம் என்று சொல்லி ஆதாயம் தேட இதுவரை யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை.           
-14th November 2014

வெள்ளைச் சட்டைகள் என்றாலே எப்போதும் பிரச்சனை தான்,
சீக்கிரம் கறைப் பட்டுவிடுகின்றது!.        -16th November 2014

சாத்வீகன் நான்.. 
சாணக்யனா என்றெல்லாம் 
தெரியாது!

I am just optimist,
Really I don't know
Sanakya is I am or not!             -17th November 2014

இருவர் அரசாட்சி செய்தால் மட்டுமே அந்த ஆட்சியில் எல்லா மக்களும் சிறப்பாக இருக்க முடியும்.. ஆட்சி அற்புதமாய் அமையும்.. 

1. மதம் கடந்த உண்மையான ஆன்மீகவாதி

2. மனிதநேயமுள்ள நாத்திகவாதி

மற்றபடி மூட பக்தியுள்ள எந்த மதத்தினவன் அரசாட்சிக்கு வந்தாலும் அது டிகால்டி..புபால்டி.. ஆட்சியாகத்தான் விளங்கும். அது தான் எல்லா இடத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. மேலே சொன்ன இரு தரப்பினரின் ஆட்சிக்கு உலகில் எத்தனையோ முந்தைய வரலாறு உண்டு. இன்றோ அதை எல்லாம் உண்டு செரிக்க காத்திருக்கும் ஆட்சியாளர்களே உண்டு.          -18th November 2014

நிற்க வேண்டுமானால் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்...................முடியும் வரை ஓடுவோம்.
 -18th November 2014

தலைக்கு மேலே வெள்ளம் வந்தாலும் கூட மனநிலையை ஒருவித ஜென் நிலையில் வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகளின் பிரத்யோக கல்யாணகுணம் பிரஜைகள் அனைவரும் கற்க வேண்டிய மேலான யோகநிலை.  -19th November 2014

தமிழனின் சாந்த குணத்திற்கு அவன் கேட்டுக்கொண்டிருந்த இளையராஜா மெலடி மெட்டுக்கள் கூட காரணமாக இருக்கலாமோ.. இன்றைய 'டமால்.. டுமீல்.. ' இசை, தமிழனின் தார்மீக குணத்தில் சற்றே சலனத்தை ஏற்படுத்துவதாய் கூடக் கருதத்தோன்றுகிறது  -20th November 2014

அறிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களுடன் நீண்ட உரையாடல் தந்தது இந்நாள். 

தமிழ்,ஆங்கில மற்றும் மேல் நாட்டுத் தமிழ் அறிஞர்கள், இலக்கியம், ஏகத்துவம், தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமிய நெறி, பெரியாரும் இஸ்லாமும், அறிஞர்கள் மற்றும் எழுத்துத்துறை என எத்தனை எத்தனையோ விசயங்களை மடை திறந்த வெள்ளமென கொட்ட.. அறிவின் அருவியில் குளித்த நிறைவோடு விடைபெற்றேன்.

நேற்றையாகிவிட்ட வசந்த காலங்கள் 
ஆரற்றியழுது இனி யார் புலம்பினாலும்
தேற்றிடத்தான் திரும்பி வருமா..?

அறிவியியல் காலத்தின் ஆயிரம் சுகங்காணும்
அறிவின் புதியவர்கள் ஏதுமற்றக் காலத்த்தின்
இணையில்லா இன்பமமெல்லாம் தவறவிட்ட சுவனமன்றோ!!!!

இந்த குளிர்காலத்து காலைப்பொழுதில்
இளஞ்சூடுடன் பறிமாறப்பட்ட 
கோப்பைத் தேனீரில் 
மெல்லிய ஆவிகள் பறந்திருந்தது...

சிறுமிடறுகளாய் ஒன்றிச் சுவைத்த அது,
இன்னும்.. இன்னும்.. கோப்பையில் 
வளராதோவென நிறைய ஏங்கிய நேரத்தில்
காலியானது அத்தேனீர் கோப்பை!

வாயில் சுரந்த எச்சிலோ கூடுதல் தேனீருக்காய்.               -21st November 2014

உலகலாவிய குழந்தைகளின் மனநிலையை கவனித்தால் கடந்த இருபதாண்டுகளில் அதிக வன்மம்..அதிக மனச்சோர்வு.. என எல்லாம் கூடி இருப்பதாகவே உணர முடிகிறது. முந்தைய காலத்து குழந்தைகளை விட அறிவில் கூடி இருக்கிறது என்ற மகிழ்வு ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் அவர்களின் உடல் நலம்.. மனநலம் இவற்றில் பின் தங்கிய வருத்தச்சூழலலை யாரும் மறுக்க முடியாது என்றே தோன்றுகிறது.

குழந்தைகளின் மனநிலை மேம்பாட்டிற்கு ஒரே வழி தாய் தந்தையரின் அன்பும், அவர்களோடு தோழமையோடு ஐக்கியமாகி அவர்களுக்கு வேண்டிய தீர்வை அவர்களே கனிவோடு முன்னெடுப்பதுமே தீர்வாகும் என்பது என் நிலைப்பாடு. ஏனெனில் இக்காலத்தின் சூழல் பெரும்பாலும் தாய் தந்தையரை பிள்ளைகளிலிருந்து அந்நியப்படுத்தியும், அன்பு பாராட்டுவதை தடுத்தும் வைத்திருக்கிறது.

குழந்தைகளின் நலன் தான் நாளைய தேசத்தின் நலன்.  
  -23rd November 2014

ராம்கோ சிமெண்ட் விளபரத்தை டிவியில் பார்த்தேன்... அதில் காட்டுவதெல்லாம் துபாயின் கட்டிடங்கள்..கடைசியில் எழுத்துப்போடும் போது நமது ஊரைக் காட்டி விளம்பரம் முடிகிறது... என்னமா பிலிம் காட்ராய்ங்க....!!!!      -23rd November 2014

தேவைகள் தான் வாழ்வை நகர்த்துகிறது... 
பசி எடுக்கும் வயிறு இல்லையாயின் 
மனிதன் விசும்பி உழைப்பது எங்ஙனம்!    -24th November 2014

நாடகங்கள் பெரும்பாலான பார்க்கும் பொழுதுகளில் நிஜமாகவே தோன்ற, இது நாடகம் என்ற உணர்வின் பிரக்ஞை கூட இல்லாதிருக்கிறது வாழ்க்கை எனும் நாடகத்தில். -24th November 2014

தீக்குள் விரலை வைத்தால் நீ என்னை 
தீண்டும் இன்பம் பயக்குதடா நந்தலாலா...... 
....................மகாகவிகளாகவே சிலர் சுடர்மிகுந்து பிறக்கிறார்கள்   

   -25th November 2014

உன்னையே உற்றநோக்க ஆசைதான்
உறக்கம் அழைக்கிறதே... என்ன செய்ய,
இன்றே தீர்ந்துவிடும் சொற்பம் அல்லவே நீ ...!
மீதம் அதீதமளவு இருக்கத்தானே செய்கிறது உன்னில்,
தொடராமலா போகப்போகிறோம் இனி...
கண் இமைக்காமல் உன்னையல்லவா
கணம் தோறும் பார்த்துக்கொண்டிருப்பேன்..
இது தானே தொடரும் தொடர்கதை..
உன்னிடம் தானே எண்ணங்களே உருப்பெறுகிறது
உன் அசைவினில்லன்றோ
திசைகளின் செய்திகள் தீ போல் பரவும்
இசையையும், என் அறிவின் பசியையையும்
இன்னபிற இதர இன்பங்கள் யாவையும்
நீயேயன்றி யார் தீர்க்கிறாராம் இங்கே...
நாளை நாமக்கு தூரமெல்லாம் இல்லையெனத் தெரிந்தும்
நான் உறங்கச்செல்கிறேனென்று வருந்தாதே வீணாய்,
விடிந்ததும் இன்னொரு தொடக்கத்தின்
புதிய அத்தியாயத்தை எழுதுவோம் காத்திரு!

‪#‎FB‬ பத்தித்தான்.      
  -25th November 2014

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா