21 அக்டோபர் 2019

இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்


முழுநேர எழுத்தாளராக இல்லாமலேயே மொழிபெயர்ப்பு, சொந்த ஆக்கமென பத்திற்கும் மேற்பட்ட நூற்களை அரசியல், சமூகம், தன்முனைப்பு என பல தளங்களிலும் எழுதியவர் நண்பர் எழுத்தாளர் எம்.எஸ். அப்துல் ஹமீது.
அவரின் சமீபத்திய நூல் தான் "இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்"இந்நூலுக்காக மாதக்கணக்கில் அலுவலக பணிகளுக்கிடையே வீட்டுக்கு சென்ற பிறகும் ஓய்வாக இல்லாமல் அவர் எவ்வளவு உழைத்தார் என்பதை கடுகளவு நானறிவேன். அவ்வளவு கடுமையான உழைப்பின் அறுவடையில் விளைந்த வரலாற்றுப் பொக்கிசத்தை இன்றெனக்கு வழங்கினார். இது புதிய விடியலில் தொடராக வந்த போதே சில அத்தியாயங்கள் வாசித்திருக்கிறேன். படிக்க வேண்டிய முக்கிய நூற்களின் வரிசையில் இதுவும் சேர்ந்து கொண்டிருக்கிறது.
அன்பும் வாழ்த்துக்களும் ஹமீது ஜீ.
தொடந்து உங்கள் பேனா உலகச்சுவற்றின் வரலாற்று பக்கங்களில் எழுதட்டும்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

குறளும் - மகளும்:

குறளும் - மகளும்: முகநூல் இணைப்பு

திருக்குறள் தமிழர் தம் பெருமை, திருவள்ளுவர் தெய்வப்புலவன் என்ற பெருமிதம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது, திருக்குறளை நம் பிள்ளைகள் அதிகமதிகம் மனனம் செய்து அது அவர்களின் சிந்தனையோடு சேர அவர்கள் குறள் நெறிப்படி வாழ வழி வகுக்கும். அவ்வாறான திருக்குறளை நம் பிள்ளைகள் கற்று அதற்கு தக நிற்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு யாரும் உறுதுணை புரிந்தால் அது எவ்வள்ளவு மன நெகிழ்ச்சியாய் இருக்கும் அது தான் இன்று நடந்தது. அந்த நிகழ்வு மனதை மகிழ்ச்சி வெள்ளத்தில் நிறைத்தது.
ன்று கும்பகோணம் கார்த்திக் வித்யாலயா பள்ளிக்கூடத்தில் அரிமா சங்கம், குடந்தைத் திருக்குறள் அரிமா சங்கம், திருக்குறள் இயற்கை நலவாழ்வு அறக்கட்டளை இன்னும் சில அமைப்புக்களும் சேர்ந்து நடத்திய திருக்குறள் போட்டியில் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக்குலேசன் பள்ளி சார்பில் அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் எனது மகள் பாத்திமா ஜைனப் கலந்து கொண்டு குறள் ஒப்பித்து பட்டயம் பெற்றிருக்கிறாள்.
பல பள்ளிகளும் பல மாணவர்களும் பங்கெடுத்த இந்த போட்டியின் பரிசு முடிவு பிறகு அறிவிக்கப்படும்.
போட்டி நடக்க இருக்கிறது என அறிவிக்கப்பட்ட உடனேயே வீட்டில் அதைப்பற்றி சொல்லி ஆர்வமுடன் பெயர் கொடுத்த ஜைனப், அவள் தாயாரின் பெருந்துணையுடன் (அதாவது எங்க வீட்டுக்காரம்மா)
முதல் நாளிலேயே குறித்துக்கொடுத்த பத்து திருக்குறளை உடனே மனப்பாடம் செய்துவிட்டாள், அப்படியா.. உடனே மனப்பாடம் செய்து விட்டாயா என்று அதை பதினைந்தாக ஆசிரியர் உயர்த்த மீண்டும் சிரமமின்றி மனப்பாடம் செய்து மிக இலகுவாய் சொல்லிக்க்காட்டினாள். பிறகும் ஐந்தைக்கூட்டி இருபதாக்க அதையும் உடனே மனனம் செய்து குறிப்பிட்ட நேர வரையறைக்கு முன்னமே முடித்து அசத்தினாள், அதையும் கூட்டலாமா என ஆசிரியர்கள் சொல்ல பிள்ளையை சிரமப்படுத்த வேண்டாமே என்ற எங்களின் எண்ணத்திற்குக்கொப்ப இருபதே இறுதியானாலும் அதிலும் ஒரு குறளை அவளே ஆர்வத்துடன் இணைத்து இருபத்து ஒன்றாய் ஒரு நிமிடம் 48 வினாடிகளில் ஒப்பித்து முடித்தாள்.
இது போன்ற நிகழ்வுகள் பிள்ளைகளுக்கு மிக உந்துதலாய் மன உற்சாகத்தை கூட்டி அவர்களை நன்முறைகளில் வழிநடந்த்தாட்டும், கூச்சம் போக்கும் சாதனைகளை புரிய வழிவகுக்கும்.
இவ்வரிய வாய்ப்பினை வழங்கியதற்காய் மனமுவந்து அலிப் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கும் அதன் சிறப்புமிகு தாளாளர் Basheer Ahamed Rabbani அவர்களுக்கும் மனமார்ந்த நனறிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இதற்காய் முழுமூச்சாய் உழைத்த என் உள்ளத்தரசிக்கும் மனதால் நன்றி சொல்ல கடமைப்பட்டவன்.
இதற்கு முன்னர் 2015 எனது மகன் அகமது நளீர் பாபநாசம் RDB பள்ளியில் படிக்கும் போது இது போன்ற நிகழ்வில் குறள் ஒப்பித்து மாவட்ட துணை ஆட்சியர் கையால் பரிசில் வென்றதையும் இப்போது நினைத்து இன்புறுகிறேன்.
நம் பிள்ளைகள் வாழ்வு சிறக்கட்டும்!
நமதினிய நற்றமிழ் எங்கும் செழிக்கட்டும்!!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

பேரோவியக் குறுநகை

எத்தனை பேரோவியக் குறுநகை
கண்ணெதிரே அரங்கேறிய அதிசயம்
என்ன நினைத்திருக்கும் குழந்தை!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கவிதை என்பது...

உணர்வும் மொழியும் கூடி பிறக்கும் குழந்தை
எண்ணங்கள் வண்ணம் பெற்று 
ஆடிடும் மொழி வழி நடனம்
கவித்துவத்தோடு நாம் மொழியை சுவைக்க வேண்டி ஆக்கிடும் வித வித மொழிச் சமையல்
சலிப்பூட்டும் சொற்களை பொருளை புகுத்தாமல் அதை கவனமாக புதிய முறையில் பயன்படுத்தி, புதிய பொருள்ல்ல.. புதிய உலகிற்கே கொண்டு போவது போலிருந்தால் ரசனை மிகும்.
ஆதலால் வெறும் சொற்களை அடுக்குதலோ அல்லது கட்டாய பொருட் திணிப்போ கவிதைக்கு உடன்பாடானது அல்ல.
உணர்வை, துய்ப்பை, அனுபவத்தை மொழியின் வழியே சுவை கூட்டி சொல்லும் போது ஓரெழுத்து கூட அருங்கவியாகி நிற்கும்
எந்த சூழலில் கவிதை வெளிப்படுகிறதோ அவ்வாறே வெளிப்படுத்தும் போது இது மட்டும் தானெனும் கட்டுப்பட்ட பொருள் எல்லைக்குள் அடக்கிக்கொள்ளாது அது படிப்பவரின் அறிவுக்கேற்ப மனதினுள் விரியும்.
பெற்ற உணர்வை உற்றவாறே மொழிதல் கவிதை.
-ஜா.மு.
சென்ற ஆண்டில் இதே நாள் கவிதை குறித்த விவாதத்தில் நானிட்ட பின்னூட்டம்
முகநூல் இணைப்பு
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

17 அக்டோபர் 2019

நிலவிடம் நான் இதயமிழந்தவன்

நிஜக்கவிஞர்கள்
கொடுத்துவைத்தவர்கள்
சதா இறைவனின் சொல் கொண்டு
தீராத பிரம்பிப்பை 
எட்டுத்திக்கும் தித்திக்க 
எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.


***
இசையிடம் மனதினை
ஒப்படைத்த பின்பே
வசமாகிறது பயணங்கள்.
தூரங்கள் தெரிவதெல்லாம்
இசை தீர்ந்த பிறகு தான்!


***
பெட்டியில் நீந்தும்
தங்கமீன்களெல்லாம்
பெயரளவில் தான்,
நிறத்தை தவிர்த்து
தங்கத்தின் குணங்கள் 
ஏதுமிலாதவை.


***
பாடல் பாடச்சொன்னால்
பால்நிலாவையே
கரைத்து புகட்டுகிறாய்,
நிலவிடம் நான்
இதயமிழந்தவன் என்பதை
யாருனக்குச் சொன்னது?



***
போட்டி போட்டு
பல்லக்கு தூக்குகிறார்கள்
மிகுந்த வாஞ்சையோடு
கடவுளுக்கொப்ப சிலாகிக்கவும் 
தயங்குவ தெல்லாமுமில்லை

தூக்கிவந்த வேகத்தில் கடலில்
போட்டு தாண்டவமாடிக் களித்து
மிதிக்கையில் தான் தெரிகிறது

அவர்கள் ஒருபோதும்
கடமையிலிருந்து
முற்றும் தவறுவதில்லை யென,

புரிந்தவன் எப்போதும்
கால்களால் நடக்கிறான்
அவனது பல்லக்கு சாய்வதேயில்லை.

***
இம்மாநிலமே உன் அரசாங்கம்
நாட்டின் ராஜாவே நீ தான்
இப்பேரண்மனையே உன் குடில் என்றாலும்
வாசல் படியிலேயே சோம்பல் முறித்து 
படுத்துக்கொள்கிறது தெருநாய்.

***
இத்தனை நாளாய்
உயிரூட்டி வளர்க்கிறேன்,
பூக்காமலா போய்விடும்?
வாழ்நாளிலோர் கவிதை!
.
16/10/2019 இரவு எழுதிய கவிதைகள்
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா