17 அக்டோபர் 2019

நிலவிடம் நான் இதயமிழந்தவன்

நிஜக்கவிஞர்கள்
கொடுத்துவைத்தவர்கள்
சதா இறைவனின் சொல் கொண்டு
தீராத பிரம்பிப்பை 
எட்டுத்திக்கும் தித்திக்க 
எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.


***
இசையிடம் மனதினை
ஒப்படைத்த பின்பே
வசமாகிறது பயணங்கள்.
தூரங்கள் தெரிவதெல்லாம்
இசை தீர்ந்த பிறகு தான்!


***
பெட்டியில் நீந்தும்
தங்கமீன்களெல்லாம்
பெயரளவில் தான்,
நிறத்தை தவிர்த்து
தங்கத்தின் குணங்கள் 
ஏதுமிலாதவை.


***
பாடல் பாடச்சொன்னால்
பால்நிலாவையே
கரைத்து புகட்டுகிறாய்,
நிலவிடம் நான்
இதயமிழந்தவன் என்பதை
யாருனக்குச் சொன்னது?



***
போட்டி போட்டு
பல்லக்கு தூக்குகிறார்கள்
மிகுந்த வாஞ்சையோடு
கடவுளுக்கொப்ப சிலாகிக்கவும் 
தயங்குவ தெல்லாமுமில்லை

தூக்கிவந்த வேகத்தில் கடலில்
போட்டு தாண்டவமாடிக் களித்து
மிதிக்கையில் தான் தெரிகிறது

அவர்கள் ஒருபோதும்
கடமையிலிருந்து
முற்றும் தவறுவதில்லை யென,

புரிந்தவன் எப்போதும்
கால்களால் நடக்கிறான்
அவனது பல்லக்கு சாய்வதேயில்லை.

***
இம்மாநிலமே உன் அரசாங்கம்
நாட்டின் ராஜாவே நீ தான்
இப்பேரண்மனையே உன் குடில் என்றாலும்
வாசல் படியிலேயே சோம்பல் முறித்து 
படுத்துக்கொள்கிறது தெருநாய்.

***
இத்தனை நாளாய்
உயிரூட்டி வளர்க்கிறேன்,
பூக்காமலா போய்விடும்?
வாழ்நாளிலோர் கவிதை!
.
16/10/2019 இரவு எழுதிய கவிதைகள்
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: