29 மார்ச் 2016

தொலைவின் நீட்சி

போகவேண்டிய தொலைவின் நீட்சியறிந்தும்
வெறுமனே சிந்திக்கிடக்கும் 
கடலைகள் பொறுக்கி தோலுரித்து 
வாயால் ஊதி மகிழ்ந்து குதித்து
மொட்டை மரத்தின் நிழல் யாசித்து
வாழ்க்கை கடத்திக்கொண்டிருக்கிறோம் நாம்!


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

உருவாகிறது அரியாசனம்

சூழ்ச்சி
பெய்ப்பிரச்சாரம்
கள்ள நோட்டு
கருப்புப் பணம்
கபடநாடகம்
அற்பத்தனம்
அட்டூழியம்
சந்தர்ப்பவாதம்
இவைகளின் பெருமுதலீட்டில்
லாப நஷ்டக்கணக்குகளின்
வியாபாரப் போட்டிகள்
அறிவிக்கும் வெற்றிகளின்
முடிவில் உருவாகிறது
தமிழர்களின்அரியாசனம்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

வலிகள் தந்த வழி

ஒளியில்லாத காடாய்
கூரான கற்களும்
உடைபட்ட சிற்களும் தான்
வெளியெங்கும் விரித்து
எழுதப்பட்டிருந்தது முகவரியென,
பெரும் பாடாய்
அனுமானத்தின் பலத்தோடு
வந்த அச்சத்தினை
வழிமுனையே விட்டுவிட்டு
தத்தித் தயங்கித் தடுமாறி பின்
ஒருவழியாய் நினைத்த இடம் வந்தவுடன்
நிம்மதிப் பெருமூச்சு விட்டோமே
முதன்முறை,
அந்தவழியா...!!!
இப்போது பழக்கமாகி
வெகுசரளமாய் வழக்கமாக
பயணிக்கும் இந்தவழி???
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

24 மார்ச் 2016

வழுத்தூர் ஷாஹ் முஹம்மது வலியுல்லாஹ் 2016 -ம் ஆண்டு உரூஸ்தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மெஞ்ஞானப்பெருமகான், சோழ மன்னனின் தனிமரியாதைக்குரிய ஞானியாகத்திகழ்ந்த பெருமேதை, பகுதாதிலிருந்து தென்னகம் வந்த இறைநேசர் தஞ்சை தரணியெங்கும் ஞானமணம் மணக்கவைத்த வள்ளல் நாகூர் ஷாகுல் ஹமீதரசர் அவர்கள் தங்களின் பயணத்தில் ஜியாரத் செய்து சென்ற பெருமகனார் ஹள்ரத் அஷ்ஷைகு முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர உரூஸ் முபாரக் வெகு விமர்சையாக நடந்தேறியது. பெருவாரியான மக்கள் நிகழ்வில் கலந்துகொன்டு இறையருள் ஆனந்த பெருநெகிழ்வடைந்தனர். இன்று காலை ஹந்தூரி நிகழ்வும் சிறப்பாக நடந்தது.

நிகழ்வில் அருளிசை அரசு எஸ்.எம். அபுல்பரக்காத் அவர்களின் சூஃபி இஸ்லாமிய இசைநிகழ்ச்சியும் நடைபெற்றது குறிப்பிட தக்க செய்தி. மாஷா அல்லாஹ்.
விழா சிறக்க துணைநின்ற எல்லா அன்பர்களுக்கும் இறைவன் நிறையருள் புரிவானாக. ஆமீன்.-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

23 மார்ச் 2016

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஐந்து தொகுதிகள்

மகிழ்ச்சி:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஐந்து தொகுதிகள் என்ற அறிவிப்பால் மனம் நிறைந்திருக்கிறது, சமுதாயம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது.
முந்தைய மனக்குறைகளை இம்முறை நிறைவு செய்தும் நூற்றாண்டு கண்ட பேரியக்கத்திற்கு சிறப்பு செய்தும் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத், சந்தனத்தமிழ் வித்தகர் சிராஜுல் மில்லத் அப்துல் சமது, தற்போதைய தலைவர் பேராசிரியர் போன்றோரின் நட்புக்கு பெருமை செய்தும் புதிய இலக்கணம் எழுதியிருக்கிறார் கலைஞர், பெருந்தன்மையோடு திமுக நடந்துகொண்டிருக்கிறது.
பெற்றுத்தந்த தாய்ச்சபைத் தலைவர் பேராசிரியர் உள்ளிட்ட குழுவினருக்கு மனம் நிறைந்த நெகிழ்ச்சிகள். ஐந்து பேரும் தமிழக சட்டமன்றத்திற்கு சென்று சமுதாய உரிமைகளை வென்றெடுப்பதற்கும், திமுக தலைமையில் புதிய ஆட்சி மலர்வதற்கும் உள்ளார்ந்த வாழ்த்துக்கள்.-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

துபாய் காலநிலைசூரியகிரணங்கள் பூமியில் விழாதபடி
குப்புறப்படுத்து தன் முதுகை
விரித்துத்தான் வைத்திருக்கிறாள் மேகமாது,
அவள் தளிருடலின் குளிரெழிலில்
மயங்கித்தான் கிடக்கிறோம் இன்னும்

அவள் மார்பகம் சுரந்த
பால்மழையில் நனைந்த நாங்கள்
இரண்டுவாரங்களாக மேகமோகம் தீராது
கிரங்கி சுகித்திருக்கிறோம் இதமான
அவள் மென் தீண்டல்களின் சுகானுபவத்தையும்
கதகதப்பான பாசத்தழுவல்களின் இளஞ்சூட்டையும்.

எங்கள் கவலையெல்லாம்
(முதலமைச்சர் கொடநாடு போவதைப்போல)
சிங்காரி அவள் சிகையலங்காரம் செய்ய
மாயலோகம் சென்று மயக்கும் எழில்பெற்றுவர
செலவிடும் அந்த கொடுங்கோடையின்
ஆறு மாதத்தைப் பற்றித்தான்…
கதி அதோகதி தான் அவளில்லாமல்.

8.03 காலை 23-3-16

தமிழகத்தில் வெயில் வாட்டி வதம் செய்யும் நேரத்தில், அமீரகத்தின் காலநிலை இன்னும் இதமாகவே இருக்கிறது, இன்னும் சில நாட்களில் கோடை ஆரம்பித்து அதன் கோபம் காட்டும்.


- வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா22 மார்ச் 2016

சூப்பர் சிங்கர் 2016 முடிவு முன்பே முடிவு செய்யப்பட்டதா.?சூப்பர் சிங்கர் பற்றி கீழே பகிரப்பட்டிருக்கும் செய்தியை இரண்டு தினங்களுக்கு முன் பார்த்து அதிர்ந்தேன், அவ்வளவு முக்கியமான விசயம் இல்லை என்றாலும் ஒரு ஊடகம் உலகத்தமிழர்களை எவ்வளவு இழிச்சவாயன்களாக ஆக்கி பிழைப்பு நடத்துகிறது என்பது தான் அது, சரி நாமும் இது உண்மையா என பார்க்கும் போது தான் புரிந்தது ஆனந்த அரவிந்தாஷன் கீழே குறிப்பிட்டபடி
1. இந்த வான்வெளி விடியாதோ - படம்: ஆரோகணம்(2012)
2. யார் வீட்டு மகனோ -
படம்: நீர்ப்பறவை(2012) மற்றும்
10 எண்றதுக்குள்ள, இவன் வேற மாதிரி, பாண்டிய நாடு, மத யானை கூட்டம், உள்ளிட்ட பல படங்களில் பாடியிருக்கிறார், மேலும் மேற்படி நபர் பல ஆல்பங்களிலும் பாடி வரவேற்பு பெற்றிருக்கிறார் இருக்கிறார், எந்த அளவுக்கென்றால் அவரின் யூ டியூப் பதிவுகள் ஒவ்வொன்றும் முன்பே ஒன்றரை லட்சம் பார்வையாளர்களை தாண்டி பார்க்கப்பட்டிருக்கிறது.. இவர் வென்றார் என்ற அவரது பேஸ்புக் பதிவுகல் அவரின் பக்கத்து போட்டோக்கள் எல்லாம் யாரும் நம்பமுடியாதபடி பல லட்சத்தை தாண்டி லைக்கும் ,சேரும் செய்யப்பட்டிருக்கிறது..இதுவும் ஆச்சர்யத்தை தந்தது.
பரீதா நாலரை லட்சம் வாக்குகள் வாங்க இவரோ அவரைவிட 5 லட்சாம் வாக்குகள் அதிகமாக ஒன்பதரை லட்சம் வாக்கு வாங்கி இருக்கிறார் என்பதிலும் உண்மை தன்மை இருப்பதாக தெரியவில்லை அப்படியே இருந்தாலும் முன்பே பல லட்சம் ரசிகர்களை (அதுவும் மலையாள ரசிகர்கள் அதிகம் இருக்க வேன்டும் என நினைக்கிறேன்) பெற்ற பாடகருக்கு பரிசு என்பது பொருந்தாது, பைனலிஸ்ட்-ல் இருந்த லட்சுமி, சியாத் என்ற ஏனைய மளையாளிகள் வென்றிருந்தாலும் அல்லது பலரால் எதிர்பார்க்கப்பட்ட பரிதா வென்றிருந்தாலும் தகும்
ஆனால் பிண்ணனியில் திரையிசை பாடும் ஒரு பாடகரை பாடவைத்து அதில் அவரை வெளியேற்றி... பிறகு வைல்ட்கார்டில் கொண்டுவந்து பிறகு முதல் பரிசு என்பதெல்லாம்..என்ன டீல்??? வாய்ப்பில்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அது வேறு.. ஆனால் இப்படி எல்லோரையும் கேனயன்களாக்குவது விஜய் டீவிக்கு நல்லதல்ல....
எல்லாவற்றையும் விட விழா மேடையில் சந்தோஷ் நாராயணன் வெற்றி பெற்றவருக்கு படத்தில் பாட வாய்ப்பு என அறிவிக்க அரவிந்தின் எதார்த்த நடிப்பை யாரும் தூக்கி சாப்பிட முடியாது.
ஏழுபது லட்சம் வீட்டை நாங்கள் முன்பே முடிவு செய்த மலையாளிக்கு தான் அதுவும் இவருக்கு தான் கொடுப்போம் என முன்னமேயே அறிவித்துவிட்டு பாடச்சொன்னால் உத்தமம். இது மொழி வெறியோ அல்லது இனவெறியோ அல்ல விஜய் டிவியின் செயல்பாடுகளால் எழுந்த கேள்விக்கனைகள். மேலும் அரவிந்திற்கு கொடுப்பதில் யாருக்க்கும் எந்த பிரச்சனையும் இல்லை முன்னமேயே தன் தளத்தை அமைத்துக்கொண்டவருக்கு காவடி எடுத்தது தான் எல்லோராலும் கோபமாக பகிரப்படுகிறது.
*************************************************
- Vijayachakravarthy SP அவர்களின் பதிவு
விஜய் டிவியின் ஜூப்பர் ஜிங்கரில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்ற நபர் வெற்றி பெற்றார் என்பதை தெரியாதவர்கள் இன்று தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது.
அதில் ஒரு எபிசோட் கூட பார்த்ததில்லை என்பதால் அந்த நபரின் முகம் கூட எனக்கு தெரியாது. ஆனால் சற்றே வித்தியாசமான அந்த பெயரை எங்கேயோ கேட்ட மாதிரியே இருந்ததாக மனதை குடைந்து கொண்டே இருந்தது.
பாட்டு கேட்பது ரொம்ப பிடித்தமான பொழுதுபோக்கு என்பதால் என் மொபைலில் கிட்டத்தட்ட 2500 பாடல்கள் வைத்திருக்கிறேன்.
பெரும்பாலானவையில் பாடல்களை பற்றிய விவரங்களை (படத்தின் பெயர், பாடகர்கள், இசையமைப்பாளர்..) தெளிவாக tag செய்திருப்பேன்.
அந்த தொகுப்பில் இந்த பெயரை போட்டு தேடியதில் வந்து விழுந்தன அதிகம் பிரபலமடையாத ஆனால் எனக்கு மிகவும் பிடித்த இரு பாடல்கள்.
1. இந்த வான்வெளி விடியாதோ - படம்: ஆரோகணம்(2012)
2. யார் வீட்டு மகனோ -
படம்: நீர்ப்பறவை(2012)
இரண்டு பாடல்களும் Male Solo, பாடியவர் ஆனந்த் அரவிந்தாக்ஷன்!
இன்னும் கொஞ்சம் தேடிப்பார்த்ததில் 10 எண்றதுக்குள்ள, இவன் வேற மாதிரி, பாண்டிய நாடு, மத யானை கூட்டம், உள்ளிட்ட பல படங்களில் பாடியிருக்கிறார் இவர். இந்த தகவலை எதாவதொரு எபிசோடில் சொன்னார்களா என்பது தெரியவில்லை. ஓரளவு தொடர்ச்சியாக பார்த்தவர்களிடம் கேட்ட போது அவர்களுக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
பார்வையாளர்களை எவ்வளவு கேனையர்களாக நினைத்திருந்தால் ஒரு பிண்ணனி பாடகரை போட்டியாளராக கொண்டு வந்து, அவரை பாதியில் எலிமினேட் செய்து, மீண்டும் wild card என்ற பெயரில் உள்ளே கூட்டி வந்து, மக்களை முட்டாளாக்கி எஸ்.எம்.எஸ் ஓட்டு போட வைத்து அவரை வெற்றியாளராக தேர்ந்தெடுப்பார்கள்.
இது ஒரு பெரிய ஏமாற்று வேலை என்று பல முறை பலர் சொன்ன போது ஏற்றுக்கொள்ளாதவர்கள் இது போன்ற போலி நிகழ்ச்சிகளை ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் உருப்படியாக எதாவது செய்யலாம்.
- Vijayachakravarthy SP


21 மார்ச் 2016

சமாதானம்

'வா..வா.. ட்ரஸ் போட்டுக்கோ'
எல்லோரும் வெளியே போகிறோமென
வீட்டில் விளையாட்டில்
திளைத்திருந்த குழந்தையை
கூட்டிச்சென்றார்கள்.
சென்ற சூப்பர் மார்கெட்டில்
அடுக்கி வைக்கப்பட்டிருந்த
அழகான சாக்லெட்கள்
குழந்தையை அகலாதிருக்க செய்து
கனைகள் வீச..
‘அந்த சாக்லெட்ட வாங்கித்தா…..’
விரல் நீட்டி அதைக் காட்டி
கேட்டு…. கேட்டு.. அழுகிறது
அந்தச் சுட்டிக்குழந்தை.
ஒருவரோடொருவர்
முகம் பார்த்துக்கொள்கின்றனர்
தாயும் தந்தையும்…,
எடுக்க நெருங்கிய தகப்பனிடம்
வாங்கிக்கொடுக்கவேண்டாம் என்கிறாள் தாய்
கண்ணால் சமிக்கை செய்து.
அழும் குழந்தையிடம் அக்கரையாக
“வேண்டாண்டா… என் செல்லம்ல…
வ்வே… அது.. நல்லாவே இல்லியாம்..
நம்ம பக்கத்தூட்டு அக்கா சொன்னா..
அம்மா சொன்னா கேட்டுக்கனும் என்ன…
இது பாப்பாவோட உடம்புக்கும் நல்லதில்லையாங்..
அடுத்த தடவ வேற கடையில
நல்ல சாக்லேட்டா பாத்து
அம்மாவே வாங்கித்தருவேணாம்... ஓகே…,
என் செல்லம்ல.., உம்ம்ம்மா!!!”
என சொல்லின் ஈற்றில்
ஒரு முத்தம் தைக்கிறாள்,
ஆசைப்பட்ட குழந்தை
அழைத்துவரப்படுகிறது
நிறைவேறாத ஏக்கத்தோடும்
அழுது வடிந்த கண்ணங்களோடும்…!
சற்றுநேர கொஞ்சல்கள் சில்வற்றில்
சகஜமாகிறது குழந்தை.
வாழ்வின் நிறைய எதிர்பார்ப்புகளோடு
பல நேரங்களில் நாம் சமாதானம் ஆவதைப்போல.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

20 மார்ச் 2016

குழப்பத்தில்!

ஒருவர் டீ நல்லதென்கிறார்.
இல்லை இல்லை..
காபி மூளை சுறுசுறுப்பாகும்
அதனால் அதைக்குடி என்கிறார் பிரிதொருவர்.
பழஞ்சோற்று கஞ்சிக்குடி
பலம் பெருகுமென்கிறார் எனக்கொருவர்.
மல்லிக்கசாயம்
மகிமை வாய்ந்ததென்கிறார்
மருத்துவரொருவர்.
தண்ணிர் போல் ஒரு
தகைசால் பொருளில்லை
அதுவே குடிக்கச்சிறந்ததென்கிறார்
தெரிந்தவருவர்.
"எந்தெ கஸ்மாயமும் பியிக்காது
காலைல எந்திருச்சாக்க நமக்குல்லாம்
டாஸ்மாக் தான்"
என்கிறார் அவரொருவர்.
இதில் எது சிறந்ததென குழப்பம் தீராது...
ஓட்டுப்போடப்போகும்
தமிழ் வாக்காளனாய் 
தவிக்கிறான் இவன்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

19 மார்ச் 2016

குழல் மயக்கம்


எங்கும் குழலோசை கேட்கிறது
என்னை அதனுள் அழைக்கிறது..!

மெல்ல.. மெல்ல..

என்னை ஆட்கொ(ல்)ள்கிறது
அந்த குழல்!

குழலால் கொ(ல்)ள்ளப்பட்ட நான்
கரைந்து அதனோடே வசனிக்கிறேன்
.
.
.
உயிரை அறுக்கும் 
இந்த இசைமொழி
எங்கு கற்றாய் குழலே!
என் ஜீவனை 
பறித்துக்கொண்டு போகிறாய்!


இசைக்கும் இந்த குழலோசை
உடலின் எல்லா மைக்ரோ துவாரங்களிலும் 

உள்நுழைந்து உயிரோசை மீட்டுகிறது
அணுக்களிலெங்கும்
அணுக்கமாய் நீ பரவ
செயலற்று கிடக்கிறது
என் "நான்".


ஓ...குழலிசையே!
நான் கொஞ்சம் 
மிஞ்சவேனும்
பார்த்துக்கொள், 
எல்லா வற்றையும் 
நீயே திருடிச்செல்லாதே.


செவிப்புலன்கள் தானே 
இசை நுகரும்..
இங்கே உடலெங்கும் காதுகளாக
உன் காதலில் மயங்கிக்கிடக்குதே
அது உயிரினூடே உயிர் வருட
அதே ரீங்காரத்தின் எதிரொலியில்
மோனம் பூத்து நிறையுதே!


குழலில் நுழைவது 
வெறும் காற்றானால்
எப்படி இந்தப் பிரபஞ்சத்தையே 
அதிரவைக்கிறது..?
அதை யாரோ
இசைக்கிறாயெனினும்
அதன் உயிரருந்தும்
நுணுக்கமாய் ஆகியது எது..?


எனக்கோ
உன் முகவரி தெரியாது...
மிக நெருங்கிக்கலந்ததால் உன்னிடம்
என்னை இழந்து
சம்பாசனை புரிந்தேன் தான் 
அதனால் என்னையே நீ
நித்தியமாய் கேட்கிறாய்
உன்னை பிரியவும் முடியாமல்
என்னை இழக்கவும் முடியாமல்
தவிக்கவிட்டு விட்டு
என்னை ஏன் இம்சிக்கிறாய்?!


இனி நானெப்படி தரையிறங்குவேனாம்...!!!
உன்னோடு வெளியெங்கும் விரவி விட்டபிறகு,
ஐயோ! உன் இசையை கேட்குமுன்னே
இதை நான் யோசித்திருக்கவில்லை!


பேய்க்கு பயப்படாதவன்

முதன் முதலாய் 
உன் நோய்க்கு பயப்படலாகினேன்.
நீயே வந்து என்னை 
கடைத்தேற்று..
இம்முறை நீ
குழலெடுத்து வராதே!


என்னை கிரங்கவைத்த 

லைலாவே.. என் குழலே...
செத்துவிட்ட என்னைஉயிரூட்டி 
மீண்டும்..மீண்டும் சாகடி
உன்னில் சாவது தான் 
எனக்கு எத்தனை இன்பம்.


இப்போது தான் உணர்கிறேன்
ஜலாலுத்தீன் ரூமியிடம்
எப்படி நெருங்கினாய், 
கண்ணனோடு எப்படி 
ஐக்கியப்பட்டாய் என்று.


குழலின் மொழி தெரியாதவர்கள்
தப்பித்த அதிஷ்டசாலிகள்.யாரேனும் வாருங்கள்
என் சுயம் பற்றி எனக்கு 
நினைவூட்ட..!


நனவுக்கும் நினைவுக்கும்
இடைபட்ட ஏதோவொரு வெளியில்
நான் கிடத்தப்பட்டிருக்கிறேன்..

உதவிடுவீர்களா..
உங்களில் யாரேனும்?

அந்த குழலோசை
இந்நிலைக்கு கொணர்ந்துவிட்டது.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

அகல் விளக்கு


அழகிய மாடத்தில்
ஏற்றப்பட்ட அகல் விளக்கு
அற்புதமாய் எரிந்திருந்தது...

திடீரென வந்த கொடுங்காற்று
தீபத்தை திருடிச்செல்ல
இருள் கொடுத்து
துக்கம் நிரப்பியது.

மாடத்தை ரசித்து நின்றவர்கள்
கொஞ்சநேரக் கைசேதத்திற்குப்பின்
சகஜமெய்தினர் எப்போதும் போல...

மாடத்தை அலங்கரித்தவன்
அகல் விளக்கில் தீபமேற்றி
அதனொளியில் கிரங்கிக்கிடந்தவன்,
கலங்கித்தவிக்கிறான் இப்போது
கண்ணொளியேபோனது போல்.

கடைத்தேற்ற யாருமின்றி
கண்ணீர் கைகுட்டையாகி
துக்கத்தை தோழமைக்கழைத்து
துவண்டுழல்கிறான்.

எல்லோருக்கும்...
அணைந்தென்னவோ
அகல் விளக்குத்தான்,

விளக்கேற்றியவனுக்கோ
விடியாமலேயே போனது...

பறிபோனது
கண்ணொளியன்றோ!


முஹையத்தீன் பாட்ஷா


அத்தரின் மணம்எடுத்த நொடிப்பொழுதில் முகரத்தூண்டிது 
பின் மனதிற்குள் ஊடுருவி 
இரம்மியம் தந்தது அது,
ஒரு இம்மிப்பொழுதின் இலயிப்பில்
மகிழ் சிகரமும் கொண்டு சென்றது, 
மாற்றுச்சட்டைகளை தேடிய தருணத்தில்
எப்போதோ சட்டைமாட்டியில்
தொங்க விடப்பட்ட
அரையழுக்குச்சட்டையில்
அப்பிருந்த அத்தரின் மணம்.


******

சிரித்துக்கொண்டே 
நீ கொடுத்த
மலர் கூடையில்
கொத்துக் கொத்துக்களாக 
சிரித்துக் கொண்டிருக்கிறது
ஜென்மங்களின் நயவஞ்சக செடிகளில்
பறிக்கப்பட்ட விசப்பூக்கள்!


******

கனிகளின் தித்திப்பினை
வழங்கவில்லை அவர்களென
புகார் சொல்லும் சனத்தில்
நாம் கொடுத்த 
காய்களின் கரகரப்பு
இன்னும் அவர்களின்
தொண்டைக்குழியில் என்பதை
மறந்துவிடுகிறோம்.
******

மழலை தேசத்து மலர்களுக்கு
அவை பேசும்
உடல் மொழிகளும்
வாய் மொழிகளுமே 
அரண்.
******

குட்டி குட்டி நிலவாக தோன்றினாலும்
வெட்டித் தான் எறியவேண்டும்
விரல் நகத்தை!

******

விடாப்பிடியாக
தரதரவென எழுத்துக்களின்
கழுத்தைப் பிடித்திழுத்து
கவிதை செய்பவன் நானல்ல!
தானே ததும்பி வருவதற்கு
தடம் அமைக்க
தெரியாதவனும் நானல்ல..!
கவிதை பயிர் செய்வது
என் தொழிலல்ல..,
அதுவே என் உயிர்.

******

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

16 மார்ச் 2016

விலையுர்ந்த எழுதுகோல்!அது ஓர் விலையுர்ந்த எழுதுகோல்!
மனங்கவர் வண்ணம்,
அத்தனை வசதி அதில் எழுத,
கம்பீரம் மினுங்கும்
சட்டைப்பையில் சொருகியிருந்தாலே,
விரல்பிடித்து எழுதினால் வீசும் பெருமை,
பல முக்கிய கையெழுத்தெல்லாம் அதில் தான்
மை தீர்ந்து போனது,
.
.
.
பின்னாளில்
கைகளும் தேடா அது
அள்ளப்படுகிறது, 

குப்பைகளோடு சேர்த்து .

*****

இறுகிய மனம் 
எழுத மறுக்கிறது
கவிதை.


*****


மதவாதப்பேய்கள் நடத்திய
ஊர்வலத்தில்
கலவரத்தை அடக்கிய
காவலரின் குதிரைக்கால்கள்
முறிக்கப்படுகிறது
மேனகாக்கள் மெளனம் காக்கிறார்கள்.


‪#‎உத்ரக்காண்ட்‬ பாஜக பேரணி கலவரம்
*****

போகிற போக்கில் 
எதிர்படும் தூசுகள் போலத்தான்
யாருக்கோ நேர்திட்டதாய்
கவனத்திற்கு வந்திடும்
எல்லா பெருஞ்சோகங்களும்,
அந்த முள் நம்மை தைக்காதவரை.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

பிறந்த நன்னாள்இன்று உன் பிறந்த நன்னாள்

வாழ்க என்று
பிரித்துச் சொல்வதற்கு கூட
மனம் இல்லை
நாம் தான் ஒன்றோடொன்றாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறோமே!

எப்போதும்
கூடி மகிழ்வோம்
பாடித்திரிவோம்

சூழ்நிலைகளில்
சேர்ந்தே அழுவோம்
சோர்ந்தே விழுவோம்

கோபம் வந்தால்
திட்டிக்கொள்வோம்
முட்டிக்கொள்வோம் - பின்பு
கட்டிக் கொள்வோம்

சண்டை இடுவோம்
பேசாதிருப்போம்
வெறுப்பது போல்கூட
இருப்போம்
ஆனால் அடுத்த கணம்
நீயன்றி யாருள்ளார்
எனக்கிங்கு என்றே
அன்பைப் பொழிவோம்
ஆறுதல் பெறுவோம்.

அன்பே.....

இதயத்தின் பலம் நீ
கண்களின் ஒளி நீ
செவியின் ஒலி நீ
மூச்சு நீ என் பேச்சு நீ
உணர்வு நீ
உணவும் நீ

இரவிலும் நீ பகலிலும் நீ
நினைவிலும் நீ நனவிலும் நீ
அண்மையில் நீ தூரத்தில் நீ
நினைவில் நீ நனவினில் நீ

வார்த்தைகள் எல்லாம் இல்லை
இன்றுனை வாழ்த்த..
நீயே என் வாழ்வானாய்.
வாழ்க என் வாழ்வே!
வருவாய் என்னோடு என்றும் என் மகிழ்வே!.

- அன்போடு உன் நான்.


( என் பெருந்துணைக்காய் சென்ற பிறந்தநாளில் எழுதியது)

 ஜா.முஹையத்தீன் பாட்ஷா

14 மார்ச் 2016

சாதிய கொலை


எவன் கொணர்ந்தான்
இந்த வர்ணங்களை..
எவ்வளவு கழுவினாலும்
போகாமல்
திமிறுடன் உயிர் திண்று 
உயிர்பெறுகிறது..?

தன்மான பெரியாரின்
தடிகளை பிடுங்கி
எரியும் தீயில் இட்ட
அரசியல் வாதிகளால்
இன்னும் சுடர்விட்டு
எரியும் தீயில்
சாம்பலாகிறார்கள்
கீழ்த்தளத்தில் உள்ளோர்.

வறியவர்களுக்கு
உயிரும் உணர்ச்சிகளும் இருப்பதையே
ஏற்றுக்கொள்ள முடியாத
அடிப்படை அறிவில்லாத
தரந்தாழ்ந்த சமூகம்
தங்களை தாங்களே
உயர்வானவர்களென்று
பிதற்றி நாற்றம் பரப்புகிறது

எவ்வளவோ தத்துவம் பேசிய தமிழனே
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றவனே
திருக்குறள் என் வேதம் என மார்தட்டியவனே
ஒப்பற்ற சித்தாந்தம் எமதென நெஞ்சு புடைத்தவனே

இவையணைத்தும் எடுத்துச்சொல்லியுமா
இன்னும் நீ சாதி இழிவைச்சுமக்கிறாய்

உலகையே கைக்குள் கொண்டுவரும்
கணிணி யுகத்திலும் சாதியை நம்பினால்
உன்னைப்போலொரு சண்டாளன் வேறில்லை

உன்னுள் பெரியாரை
மீண்டும் உயிர்த்தெழவை

சார்பற்ற சிந்தனைக்கு கூர்தீட்டு

கொஞ்சமாவது
உயிர் கொண்டு திரிவதை
ஊர்ஜீதமாக்கு.

இளைஞர்களே சிந்திப்பீர்
தீய சாதியத்தை ஒழிப்பீர்.

உடுமலைப்பேட்டை தலித் தம்பதியினர் பட்டப்பகலில் ரவுடிகளால் வெறித்தனமாக வெட்டப்பட்ட சம்பவம் தமிழர்கள் அனைவரையும் வெக்கித் தலைகுனிய செய்திருக்கிறது.

****

மகனுக்கு ஆட்சி பெரிது
அரசியல் சூழ்ச்சி பெரிது
இவ்ளோ நேரம்
முக்கியமான செய்தி சொல்லிருக்கேனே
அதப்போடுங்க!
இறந்தவன் உயிர் பெரிதல்ல.


****
அரசியல் முகமூடி இருப்பதால்
ஒவ்வொருமுறையும் ஜெயிக்கிறது
ரவுடிகளின் ரத்தம் தோய்ந்த அறுவாள்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

08 மார்ச் 2016

கொண்டாடுவோம் தாய்மையை!


காலம் பூராவும் கடன்பட்டு
பணிவுடன் கனிவுகூட்டி
பாசத்துடன் பணிவிடைதனை
வாழும் நாளெல்லாம்
வாழ்த்தி நிதம்செய்தாலும்,

தாயே... தாரகையே..
தாரணியில் என்னொளியே என்றாலும்

உனைச்சுமந்த கர்ப்பக்காலத்தில்
உதைத்தாயே உன் தாயை
நீ உதைத்த அந்த ஓர் உதைக்கு
இவையெல்லாம் ஈடாகாதே,

ஆதலால் மானிடர்கால்
தாயை போற்றுவீர்
எங்கெங்கோ சுவனம் தேடி
எதற்கும் அலையாதீர்,

உன் தாயின் காலடியில்
உனக்கான உயர் சுவர்க்கம் - அவள்
உள்ளம் குளிரவைத்து
உயர்வுடன் நீயும் அடைந்துகொள்
என்றார்கள் ஆறாம் வயதில்
அருந்தாயை இழந்தே
அன்பு தேடி வாடிய
அண்ணல் முகம்மது நபியவர்கள்!

கொண்டாடுவீர் அன்புடையீர்
பெண்மையின் உன்னதத்தை.

-வழுத்தூர் முஹையத்தீன் பாட்ஷா

07 மார்ச் 2016

அகதியின் சாவு


ஒரு அதிகாரியின் வன்மம் தெரிய
ஒரு உயிர் பலியாகவேண்டி இருக்கிறது
இன்னும் அதிகாரத்தின்
குரூரத்தின் பிடியில் சிக்குண்டு
உயிர் மட்டும் பலியாகாது
உயிர் பதைத்து நிதம்சாகும்
உயிர்கள் நிறைய என்பதை
நிரூபணம் செய்கிறது
நிகழ்ந்திட்ட சம்பவம்.
ஒன்றுமற்றவர்கள்
அடைக்கப்பட்டிருப்பது
வலிமைவாய்ந்த
பல சுற்று மதில்*களுக்கு
உள்ளே என்பதால்
உலகத்தின் பார்வை படுவது
இதுபோன்ற நிகழ்வுகளில் தான்.
அதிகாரத்தை
நிராயுதமாக எதிர்க்க
அவருக்கு தெரிந்த ஆயுதம்
அவருக்கு கிடைத்த ஆயுதம்
உயிர் மட்டும் தான்
"அகதிகள் தானே" என
இழிநிலையோடு நடத்தும் சுபாவம்
இனஅழிப்பை விட கொடூரம்
தமிழன் எனும் போர்வையில்
எண்ணற்ற ஓணாய்கள்
ஒளிந்துகொண்டு ரத்தம் குடிப்பற்கு
இதைவிட
வேறென்ன சான்றுவேண்டும்!
மதில் - அதிகாரம் சுமந்தவர்கள்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

04 மார்ச் 2016

இன்றைய கதை"கதைச் சொல்லுப்பா"
எனக்கேட்கும் செல்லமே
உனக்கான ஒரு கதைக்கூட
சொல்லத்தெரியாத
எங்கள் கதை
தெரியாதடா உனக்கு,

எங்கள் சிந்தனையோ
வறட்சியில் உளல்கிறது
எங்கள் கற்பனையோ
சாம்பலாய் கிடக்கிறது
ஏதோ ஒரு மாய மானைத்தேடி
சனங்கூட ஓயாமல்
இளைப்பாறாது ஓடிக்கொண்டிருக்கிறோம்.

கண்கள் கட்டப்பட்ட
அப்பாக்கள் நாங்கள்
எந்த கிரகத்தில்
இருக்கிறோமென்று
எங்களுக்கே தெரியவில்லை

அந்த கதைநதி
உன் பாட்டிக்காலத்தில்
கரைப்புரண்டோடியது
இப்போது அதில்
மணலுக்குக்கூட பஞ்சம்.

அப்போது அந்த கதைநிலம்
உன் பூட்டன் காலத்தின்
இருட்டுத் திண்ணைகளில்
முப்போகம் வெள்ளாமை தந்தது,
இப்போது தான்
திண்ணைகளே இல்லையே
பூட்டனும் புதைந்தானே
கதைகளும் தீர்ந்துவிட்டதே,

என்ன செய்ய எங்களுக்கு
கதைகளும் தெரியாது
கலைகளும் தெரியாது
நிஜமும் தெரியாது
நிலையும் தெரியாது
நேரம் மட்டும் இல்லை எனச் சொல்லும்
இயந்திரங்கள் நாங்களாகிப்போனோம்.

செல்லமே...
நீயாவது கதைப்பழகு
மாறட்டுமடா உன் உலகு.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

02 மார்ச் 2016

எங்கே செல்லும் இந்த பாதை!எங்கேயோ அழைத்துச்செல்கிறது
வாழ்க்கை,
எங்கே என்று தான் தெரிவதில்லை!

போட்டிருக்கும் பாதையில்
போடலாம் நடை என்றால்
சற்றும் அறியாத
முற்றும் தெரியாத
புதியதோர் பாதை 
புரியாது விரிகிறது
புதிராகவே விரிகிறது!

எடுத்த அடி தான் எங்கேயோ
அடுத்த அடி தான் எங்கேயோ
என்பது தான் விளங்கவில்லை!

நடப்பது தான் நடக்கும்
இதில் நாடாள்பவனும்
நாதியற்றவனும் அடக்கம்!

மாட்டேனென 
மறுதலிக்க முடியாது,
எனக்கானதல்லவென - யாருக்கும்
மாற்றிவிட முடியாது!

இயற்கையின் நியதியாய்
இயங்கிவரும் இதையெல்லாம்
எள்ளளவும் மனிதனினால்
வெல்லவெல்லாம் முடியாது!

எப்படி.. எப்படியெல்லாம்
எட்டியவரை சிந்தித்து
எதைச்செய்து சுழன்றாலும்
சுற்றிவரும் காடிகாரம்
எப்படிச் சுழற்றுமென்று
எவருக்குமே தெரியாது!

நொடிமுள்ளின் அடுத்த நொடி
இன்பத்தின் பிடியிலா - அல்ல
இதயம் நொருங்கும் இடியிலா
இது யாருக்கும் தெரியாது!

எல்லாம் அவன் செயலென
எல்லோரும் சொல்லுகின்றார்
எல்லாமுமான அவனை
எதுவுமே அறியாது! 

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா