19 மார்ச் 2016

அத்தரின் மணம்



எடுத்த நொடிப்பொழுதில் முகரத்தூண்டிது 
பின் மனதிற்குள் ஊடுருவி 
இரம்மியம் தந்தது அது,
ஒரு இம்மிப்பொழுதின் இலயிப்பில்
மகிழ் சிகரமும் கொண்டு சென்றது, 
மாற்றுச்சட்டைகளை தேடிய தருணத்தில்
எப்போதோ சட்டைமாட்டியில்
தொங்க விடப்பட்ட
அரையழுக்குச்சட்டையில்
அப்பிருந்த அத்தரின் மணம்.


******

சிரித்துக்கொண்டே 
நீ கொடுத்த
மலர் கூடையில்
கொத்துக் கொத்துக்களாக 
சிரித்துக் கொண்டிருக்கிறது
ஜென்மங்களின் நயவஞ்சக செடிகளில்
பறிக்கப்பட்ட விசப்பூக்கள்!


******

கனிகளின் தித்திப்பினை
வழங்கவில்லை அவர்களென
புகார் சொல்லும் சனத்தில்
நாம் கொடுத்த 
காய்களின் கரகரப்பு
இன்னும் அவர்களின்
தொண்டைக்குழியில் என்பதை
மறந்துவிடுகிறோம்.




******

மழலை தேசத்து மலர்களுக்கு
அவை பேசும்
உடல் மொழிகளும்
வாய் மொழிகளுமே 
அரண்.




******

குட்டி குட்டி நிலவாக தோன்றினாலும்
வெட்டித் தான் எறியவேண்டும்
விரல் நகத்தை!

******

விடாப்பிடியாக
தரதரவென எழுத்துக்களின்
கழுத்தைப் பிடித்திழுத்து
கவிதை செய்பவன் நானல்ல!
தானே ததும்பி வருவதற்கு
தடம் அமைக்க
தெரியாதவனும் நானல்ல..!
கவிதை பயிர் செய்வது
என் தொழிலல்ல..,
அதுவே என் உயிர்.

******

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: