19 மார்ச் 2012

மனிதசக்தி.. மகாசக்தி!


அப்பப்பா... மனிதா..!
நீ உலகியல் உயிரிகளின் 
சக்திகளில் மிகப்பெரியவன்
உன்னால் முடியாது தான் எது..!

ஐம்பூதங்களையும் ஆட்டிப்படைக்கும்
கூர்மையான பார்வை பெற்ற
ஆற்றல் கொண்டவன் நீ..!
  
உன் உச்சகட்ட சக்திக்கு முன்
ஏதும் பெரிதில்லை..!
ஏதும் வலிதில்லை..!
ஏதும் கடிதில்லை..!

உன் வைரக்கியத்திற்கு முன்
பூமியும்.. கடலும்.. 
வானமும்.. அதன் வகைகளும் கூட
வரையில்லை.. தடையில்லை..!

உன் அறிவு 
தூரங்களை கடந்து ஊடுருவும்!
உன் கருவி 
வான்கிழித்து வேகத்தில் பாயும்!

பிரமிப்பிற்கு அப்பாற்பட்ட
பிரமிப்பாய்.. 
பிரமாண்டமாய்.. விளைகிறது
மனித அறிவிலிருந்து
வெளியாகும் சக்திளெல்லாம்!

அறிவு
தீயினும் மேலாக எங்கும் விரவும்!
காற்றினும் மேலாக. எங்கும் புகும்!

இவன் இதுவரை சாதித்தததெல்லாம்
இதுதான் இவன் சக்தி என
முற்றிட முடியாது..!

இப்போதுவரையிலான 
இவனின் செயல்பாடுகளெல்லாம்
இவனின் பகுதி வெளிப்பாடுகளே..!
இவனின் பூரணம்….
இவனாலேயே அளவிட முடியாதது!
ஏனெனில் இவன் இறைவனின் பிரதிநிதி!

ஜா. மு. பாட்ஷா

இந்த கவிதை திரு.அப்துல் கலாம் அவர்களின் அக்னிச் சிறகுகள் படித்து விட்டு அதன் தாக்கத்திலிருந்து வெளிவர முடியாத அன்றைய நாட்களில் (2006) துயாய் ஆர்.டி.ஏ. பஸ்ஸின் ஒரு பகல் பயணத்தில் எழுதியது

18 மார்ச் 2012

பட்டமளிப்பு விழா வாழ்த்துமுதலானவனின் மூலத்தை அறிந்து
முஹம்மதரின் அடிமையென பறைந்து
முஹ்யித்தீனியத்தால் எஜமானாகி உயர்ந்து
மூடர்களின் அறிவுக்கண்ணைத் திறந்து
ஏகத்துவ மெய்ஞ்ஞான விளக்கேற்றிவைத்த
வலிமார்கள் வாழ்ந்து வழிகாட்டி கொண்டிருக்கிற வழுத்தூரிலே…!

ஆண்டவனின் அகமியங்களை
அவனின் படைப்புகள் யாவும்
ஏற்க மறுத்த சமயத்தில்
ஏந்தி வாங்கியது மானுடம்!

லவ்ஹுல் மஹ்ஃபூலில் பிரதி எடுக்கப்பட்டு
உலகத்திற்கு அனுப்பபப்பட்டதல்லவா இறைமறை!
ஹக்கின் புறத்திலிருந்து
ஹாத்தமுன் நபிக்கு வந்ததல்லவா அருள்மறை!

ஒவ்வொரு முறை வஹி வரும்போதும்
உத்தமநபியின் உடலே நடுக்குமாம்
சத்திய நபியின் முகமே சிவக்குமாம்

சஹாபாக்கள் கண்டுகொள்வார்களாம்
குர் ஆன் இறங்குகிறதென்று
நாயகத்திற்கே இப்படியா
நாயனின் தூதல்லவா.. அப்படித்தான் இருக்கும்!

அதையே தம் அகத்துள் – நம்
அன்பிற்குரிய மாணவர்கள் தாங்கி இருக்கிறார்கள்
எத்தனை சந்தோசம் தெரியுமா
எங்களின் தாண்டவமாடுகிரது – எனென்றால்
நீங்களும் சஃபாஅத் செய்ய தகுதியானவர்கள் ஆயிற்றே!

மகத்துத்துவமிக்க ஹாபிஸ்களே – எங்கள்
மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

இந்த கவிதையாகப்பட்டது 1997ல் வழுத்தூர் அல்-மதரஸத்துல் முஹம்மதியா தொடங்கி முதல் பட்டமளிப்பு விழா நடந்த போது வாழ்த்துக்கவிதையாக நான் எழுத பீர்பாய்.தீன் முஹம்மத் (ஷைகு பரீதுத்தீன்) மற்றும் எனது சார்பில் அச்சடிக்கப்பட்டு பகிரப்பட்டது.  இதன் பிரதி கண்டெடுத்தால் இங்கே இன்ஷா பதிக்கப்படலாம்.

ஜா.மு.பாட்ஷா

13 மார்ச் 2012

பிரபஞ்ச மீலாது விழா!வசந்தமே.. வசந்தமே..  வருக.. வருக..!
பிரபஞ்ச வெளிச்சமே வருக... வருக..!

ஆண்டவன் ஒளியின் சொலிப்பே வருக..!
அஹமதெனும் மாணிக்க‌ விளக்கே வருக!

பூரணத்தை வெளியாக்கிய பூரிப்பே வருக..!
பூலோகம் கொண்டாடும் பெருமாரே வருக..!

அன்னை ஆமீனாவின் சிரிப்பே வருக..!
தந்தை அப்துல்லாஹ்வின் களிப்பே வருக..!

அப்துல் முத்தலீபின் லயிப்பே வருக..!
அரபிய மக்களின் சிறப்பே வருக..!

ஆம்..!

இப்றாகிஹிம் நபியின் இறைஞ்சுதல்
இறைவன் புறத்தில் ஏற்கப்பட்டது!

பூலோக இதயமாக
புனிதத்தின் உதயம் நிகழ்ந்தது!

அருந்தவம் இயற்றிய ஆமீனா
பெருந்தவத்தை பெற்றெடுத்தார்!

மணிவயிற்றில் பேறாக சுமந்தவர்
அணியணியாய் வானவர் வாழ்த்த
நனிசிறந்த புனிதப் பூவை
பூவிமீது இறக்கி வைத்தார்!

நிகழ்ந்தது ஏதோ ஓர் பிரசவம் அல்ல..!
நிகரில்லா இறைத்தூதரின் - பூலோக
அருட்பிரவேசத்திற்கு நிகழ்த்தப்பட்ட
மாபெரும் மீலாது விழா!
-ஜே.எம்.பாட்ஷா

2006 ஆம் ஆண்டு எழுதி இருப்பேன்

12 மார்ச் 2012

திருத்தூதின் துதி!


துதி பாடுவேன்.. துதிபாடுவேன்... திருத்தூதே
எந்தன் மதி தன்னில் உறைந்திட்ட அளவுக்கு..!
மதிதன்னில் முடியாத நிலையினிலே
மாய்ந்திடுவேன் மதினாவின் மடியினிலே..!

குறுமதியால் நபியை உணர்ந்திடவே
சிறுமதியார் நினைத்தால் முடிந்திடுமோ..!
மதியாகவும் எதன் சுதியாகவும்
ஆகிநிற்பதை உணர்ந்தேற்றால்
அமுதாக மாறி முதுசுகம் அளிப்பீரே..(துதி..)

இதிகாசங்கள் கூறிடும் பெருந்தலைகள்
சத்தியமாய் சற்றேனும் நிகரில்லை
பெருநாச நிலையினிலே பெயர்கூறா நிலையாகி
திருவாசமாய் மணங்கமழும்
உமக்கிகத்தில் ஒருவருமே நிகரில்லை..(துதி..)

கதியாரும் இல்லை உமையன்றி
பதியே எந்தன் நற்கதியாகுமே
விதிசெய்வீர் நான் அழிந்தே 
உண்ணத அழங்கார நபித்துவ
அகமிய சங்கமத்தில் ஜொலி ஜொலிக்க(துதி..)

சகவாசம் ஒன்றே போதுமம்மா - இரு
ஜகவாச இன்பத்தில் இதற்கோர் ஒப்பில்லை
நபிநேசம் ஒன்றே எந்தன் இலக்கு
அத்திருநேசம் கிடைத்திட்டால்
என்றைக்கும் எனதுள்ளம் மகிழ்ச்சி கிழக்கு(துதி..)

சதி செய்வோர் யாவருமே ஒன்றினைந்து
சங்கமமைத்து செய்திடினும் இவர்களுக்கும்
நைல் நதி நடுவே விதி முடிந்த அந்நிலையே
ஆதியாய உமையரிந்து நாதியே என்போருக்கு
ஜோதியாய் நீர்வந்தே நிறையன்பு சொறிவீரே! (துதி..)

-ஜே.எம்.பாட்ஷா

இது வேறு வகையில் 1998 ஆம் ஆண்டு எழுதப்பெற்றது இதை சற்றே வடிவமைத்து பதித்திருக்கிறேன்.

08 மார்ச் 2012

உரிமை மீரல்!நெடுநேரம் துயில்கொள்ளாது
கழிந்தது நேற்றைய இரவு..!
துயருறுகிறோயோ..  -இல்லை நீ
துயில்கொள்ளுதல் தான் எளிதாமோவென‌
சமாதானமே ஆகாத
உள்ளுணர்வின் ஆழ்நிலை பிணக்குகள்!


முற்றத்திலும்.. கூடத்திலும்
போகயில்.. வருகையில்..
உன் சிந்தனையில்..இது யாரின் பிழை..
ஏனவன் இங்ஙனம் விசனங்கொண்டான்..
ஏனவன் சேய்போல் செயல்படவில்லை..
எனுங்கேள்விகள் எழுந்திருக்குமோ..
என்றே மனதில் கேள்விப்புரவிகள்!


செயல்களின் உண்ணதமும்..
நிலம்போல் உனது பொறுமையும்
நீங்கா நின் உயர் அழகியல்கள்!


குற்றவாளியாய் மனமுன் நிற்கையில்
தோற்றுத்தான் போகிறது நமது கட்சி!


ஆழ்மனம் அதனில் பல
கருத்தாய்வுகள் நிகழ்த்திக் கொண்டிருந்ததை
கண்டு கொள்ளாமல் இல்லை!


ஆயிரம் கேள்விகளோடு
செய்தது சரிதானா என்று கேட்டும்
அரித்துக்கொண்டே இருந்தததும் அறியவே செய்தது..


புத்திக்கெட்டவனாய் பல நேரங்களில்
ஏதும் உணராது உணர்ந்தவன் ஏன்..


பொறுமையும்.. அமைதியும்..
எங்கே வெறுண்டோடின..
சொல்லாத விளக்கங்களெல்லாம்
சொல்லும் அதிகப்பிரசிங்கிக்கு என்ன ஆச்சு..


செயலில் காட்டாத பேச்செல்லாம்
குப்பையாய் கிடந்து நாறும்!


ஆன்மீகம்… மார்க்கம்..விளக்கம்..
அவரைக்காய் சுண்டைக்காயெல்லாம்
அரக்கனாகும் வேளை உதவாதோ..!


உண்மையில் பகட்டுக்காரனும்..
பகல் வேசக்காரனும் தானா நீ.. ஐயோ பாபம்!


ஒளிவீசும் விளக்கின் கண்ணாடிகள்
சிறு கல் பட்டால் கூட
சுக்கல் சுக்கலாகிவிடும்!


வெளிச்சம் கொடுக்கும் விளக்கிற்கு
அரண் அமைத்தல்
முதல் வேளை எனக்கொள்!


இருள்சூழ்கையில்
முன்னர் வெளிச்சமெல்லாம்
இருட்டில் முகவரி இழக்கும்!


உள்ள அமைதியை
உள்ளத்தில் நிலையாக
நிறுத்த நினை..முனை!


செயல்களின் முன்
தியானம் அவசியம்
சாந்தப்படுத்திக்கொண்டும்
சரிபடுத்திக்கொண்டும் பிறகே
பணிக்கு விரை..!


கருணையில் மிக்கது பேராற்றல்..
கருணைமிக்கது பிறப்பித்தது
அது யாவையும் நன்கறிவதனால் அச்சமற்றிரு..
அருள் நிலவும் என்றும்!
தவறுகள் தொடராது
தரிபட்டிருக்க சரிசெய்து வாழ்!!!
  
-ஜே.எம்.பாட்ஷா

03 மார்ச் 2012

துபை என்பது சொர்க்கபுரி அல்ல!
இவன் தன் வீரிய எதிர்காலத்தை
வீருகொண்டு அமைக்க முற்படுகையில்
முளைக்கவே விடாமல் முழுவதுமாய்
எண்ண விதைகளை
அரபு நாட்டு ஆசையில்
அணைத்து விடுகிறார்கள்!

பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே
பாஸ்போர்ட் எடுக்கத் தூண்டி
துள்ளித் திரியும் வயதிலேயே அரபுநாட்டை
சொல்லிச் சொல்லி தூபமிட்டு
அடிமைத்தன எண்ணத்தை
கொடுமையாக புகுத்துகின்றனர்!

ஏனோ என் சமுதாயம்
வெளிநாட்டு மோகத்தில்
வீணே வீழ்ந்து…!

உறவே!
உண்மை தெரியுமா
நீங்கள் அனுப்பியவன் படும்பாடு..?

அங்கே அவன்..
உனக்காக உழைக்கிறான்
உடலெல்லாம் வியர்க்கிறான்
பாசத்தை நினைக்கிறான்
பகலெல்லாம் உழல்கிறான்
பசியாலும் துடிக்கிறான்!

எங்கே கிடைக்கிறது
ஒழுங்கான சாப்பாடு
"மறத்துப்போன மலையாளி கடை"யில்
காலையிலேயே கட்டிக்கொண்டு
செல்வதைத் தவிர!

ஆடுமாடு போல்
மனிதன் இவன் மாய்கிறான்
யாருக்காக..?
எல்லாம் உனக்காக!

கடன் சுமையும் – மகள்
வரண் சுமையும்
மகனுக்கு படிப்பு
பண்டிகைக்கு நல்ல உடுப்பு...
என்றே நீளும் சுமைப்பட்டியலை
நினைத்து நினைத்து  உழைக்கிறான்
நித்தம் செத்து பிழைக்கிறான்
ரத்தம் சுண்டும் வெயிலிலே
மனதால் புழுங்கி அவிகிறான்!

அவன் கண்களில் எல்லாம்
நீ தான்!
அவன் கனவுகளில் எல்லாம்
நீ தான்!

சர்கஸ் சாகசவீரனும் தோற்கும்
கட்டிடங்களின் மிக உயரஙக்ளில்
விதி இவனை நிறுத்தி
வேலை வாங்கிடும் வேளையில்..
சற்று அயர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடந்தால்
பாபம் இவனைத் தவிர
அகப்படுபவனும்,
உயிரைத்துறப்பவனும்
யாரும் இல்லை!

இங்கே குடும்பச் சுமை
குடும்பக்கடன்
குடும்பம்.. குடும்பம்.. என்றே
பைத்தியம் ஆனவர்கள் ஏராளம்!

ஓ!  உறவே உனக்காகவே
இவன் இங்கே உயிரையே விடுகிறான்
அனுபவித்து பார்க்க நினைத்திருந்தாலோ
அல்லல் படுமே குடும்பம். - என்றே தான்
தனக்கென்று ஏதும் செய்துக்கொள்ளவே தெரியாது
குடும்பத்திற்காகவே தியாகமாகிறான். 

அறிக!
துபை என்பது சொர்க்கபுரி அல்ல!ஜா.முஹையத்தீன் பாட்ஷா

குறிப்பு:    இரண்டாண்டுகள் முன்பு எழுதியது