03 மார்ச் 2012

துபை என்பது சொர்க்கபுரி அல்ல!




இவன் தன் வீரிய எதிர்காலத்தை
வீருகொண்டு அமைக்க முற்படுகையில்
முளைக்கவே விடாமல் முழுவதுமாய்
எண்ண விதைகளை
அரபு நாட்டு ஆசையில்
அணைத்து விடுகிறார்கள்!

பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே
பாஸ்போர்ட் எடுக்கத் தூண்டி
துள்ளித் திரியும் வயதிலேயே அரபுநாட்டை
சொல்லிச் சொல்லி தூபமிட்டு
அடிமைத்தன எண்ணத்தை
கொடுமையாக புகுத்துகின்றனர்!

ஏனோ என் சமுதாயம்
வெளிநாட்டு மோகத்தில்
வீணே வீழ்ந்து…!

உறவே!
உண்மை தெரியுமா
நீங்கள் அனுப்பியவன் படும்பாடு..?

அங்கே அவன்..
உனக்காக உழைக்கிறான்
உடலெல்லாம் வியர்க்கிறான்
பாசத்தை நினைக்கிறான்
பகலெல்லாம் உழல்கிறான்
பசியாலும் துடிக்கிறான்!

எங்கே கிடைக்கிறது
ஒழுங்கான சாப்பாடு
"மறத்துப்போன மலையாளி கடை"யில்
காலையிலேயே கட்டிக்கொண்டு
செல்வதைத் தவிர!

ஆடுமாடு போல்
மனிதன் இவன் மாய்கிறான்
யாருக்காக..?
எல்லாம் உனக்காக!

கடன் சுமையும் – மகள்
வரண் சுமையும்
மகனுக்கு படிப்பு
பண்டிகைக்கு நல்ல உடுப்பு...
என்றே நீளும் சுமைப்பட்டியலை
நினைத்து நினைத்து  உழைக்கிறான்
நித்தம் செத்து பிழைக்கிறான்
ரத்தம் சுண்டும் வெயிலிலே
மனதால் புழுங்கி அவிகிறான்!

அவன் கண்களில் எல்லாம்
நீ தான்!
அவன் கனவுகளில் எல்லாம்
நீ தான்!

சர்கஸ் சாகசவீரனும் தோற்கும்
கட்டிடங்களின் மிக உயரஙக்ளில்
விதி இவனை நிறுத்தி
வேலை வாங்கிடும் வேளையில்..
சற்று அயர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடந்தால்
பாபம் இவனைத் தவிர
அகப்படுபவனும்,
உயிரைத்துறப்பவனும்
யாரும் இல்லை!

இங்கே குடும்பச் சுமை
குடும்பக்கடன்
குடும்பம்.. குடும்பம்.. என்றே
பைத்தியம் ஆனவர்கள் ஏராளம்!

ஓ!  உறவே உனக்காகவே
இவன் இங்கே உயிரையே விடுகிறான்
அனுபவித்து பார்க்க நினைத்திருந்தாலோ
அல்லல் படுமே குடும்பம். - என்றே தான்
தனக்கென்று ஏதும் செய்துக்கொள்ளவே தெரியாது
குடும்பத்திற்காகவே தியாகமாகிறான். 

அறிக!
துபை என்பது சொர்க்கபுரி அல்ல!



ஜா.முஹையத்தீன் பாட்ஷா

குறிப்பு:    இரண்டாண்டுகள் முன்பு எழுதியது





3 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அறிக!
துபை என்பது சொர்க்கபுரி அல்ல!//

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதானாலும்
அது என்றைக்குமானதாகத்தானே இருக்கிறது
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

கருத்துரைக்கு நன்றி திரு ரமானி அய்யா!

Asath சொன்னது…

அருமை ரீங்காரம்
இட்ட நினைவுகள்!!!

எனது பக்கம்
http://wp.me/phTYv-hb