30 ஜூன் 2012

மகுடத்தில் மஸ்தான்கள்!



இந்த சம்பவம் அரபு பாலையில் அன்றைய நஜ்தில், கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நடந்தது. 

பாலைவனப்பகுதியில் பயணம் செய்த இறைஞானி ஒருவர் தொழுகை நேரம் வந்ததால் தொழத் தொடங்கினார்... அந்தப்பகுதி சரித்திரப்புகழ் கருப்பழகி மஹ்தியின் மகள் லைலாவின் மீது தீரா காதல் கொண்ட மஜ்னு சஞ்சாரம் செய்யும் பகுதி, அங்கு தான் மஜ்னு என்ற பைத்தியம் சுற்றித்திரியும்.. அந்த இறைஞானி இப்போது தொழுது கொண்டிருக்கிறார், மஜ்னு உணர்வற்ற பைத்தியமாக எப்போதும் போல் லைலாவை நினைத்தே கவிகளாய் புலம்பி.. புலம்பி.. இங்கும் அங்குமாக அலைகிறான்.. அவ்வாறு அலைகையில் தொழும் இறைஞானி பக்கமும் முன்னும், பின்னும், வலதும் இடதும்  கூட சிந்தனையின்றி அவன் வர நேர்ந்தது. தொழுது கொண்டிருந்த இறைஞானிக்கோ மஜ்னுவின் இந்த செயல் தொழுகைக்கு இடையூறை செய்தது.. அவரால் தாங்க முடியவில்லை மிகுந்த கோபமுற்ற அவர்.. தொழுகையை முடித்ததும் "யே பைத்தியமே உனக்கு தெரியவில்லையா.. நான் தொழுகிறேன் என" என்றார்!

மஜ்னு சிரித்தான்!, இது அந்த இறை ஞானிக்கு இன்னும் கோபத்தை அதிகப்படுத்தியது.., மேலும் சொற்கள் பறந்தது...! இதற்கெல்லாம் நீண்ட சிரிப்பு சிரித்து முடித்துவிட்டு மஜ்னு பதில் சொன்னான், இறைநேசரைப் பார்த்து.... "நானோ ஒரு சாதாரண லைலா என்ற பெண்ணின் மீது காதலில் விழுந்து அலைகிறேன் எனக்கு அவளைத் தவிர வேறேதும் தெரியவில்லை,  நீங்களோ சர்வத்தின் மூலமான எல்லாவற்றிற்கும் மேலான இறைவனை தொழுததாக சொன்னீர்கள்.. அப்படி நீங்கள் உண்மையிலேயே  அவனை மட்டும் நினைத்து தொழுகையில் இருந்திருந்தால் அவனைத்தவிர வேறொன்றும் உங்களுக்கு தெரிந்திருக்காது.. நான் அங்கும் இங்கும் அலைந்தது உங்களை இடையூறு செய்திருக்காது..  நீங்கள் தொழுவது கூட தெரியாமல் நான் அலைந்து கொண்டிருந்தேன்.. நீங்கள் தொழுது கொண்டிருக்கிறீர்கள் ஆனால் சிந்தனை அலைந்து கொண்டிருக்கிறது என்றானாம்!  இறைஞானி தன்னை முழுவதும் செப்பனிட்டுக்கொள்ள தன் இறை நேசத்தை முழுமையாக்கிக்கொள்ள இந்த சம்பவம் காரணமானதாய் பதிவுகள் பகர்கின்றது.

எப்படி மஜ்னூனுக்கு லைலாவை தவிர வேறு எதுவும் தெரியாதோ அப்படித்தான் இக்கட்டூரை பேசும் இஸ்லாமிய சூஃபிகளான மஸ்தான்கள் என அறியப்படுபவர்களுக்கும் இறைவனை யன்றி வேறெதுவும் தெரியாது. மஸ்த் என்ற போதை சதா நேரமும் இவ்ர்களை ஆட்கொண்டிருந்ததனால் இவர்கள் மஸ்தான்கள் எனப்பட்டார்கள். இந்த மஸ்த் ஏதோ செயற்கையான போதைப்பொருளை கொண்டு வந்ததல்ல, வருவதல்ல.. செயற்கையான போதைப்பொருட்கள் இந்த போதையை தரவும் முடியாது, இது இயற்க்கையில் இயற்கையாக இயற்கையின் கர்த்தாவின் மீது வரும் மஸ்த் ஆகும். இது அறிவை மயக்கும் போதையல்ல அறிவால் அறிவாகவே இருக்கும் போதை, இந்த போதை இறை போதை.. எந்த போதையும் தெளிந்துவிடும் ஆனால் மஸ்தான்களின் இறை போதை என்றும் தெளியாது ஆகவேவும் இவர்கள் மஸ்தான்கள் எனப்பட்டார்கள். மஜ்னூன் லைலாவை காதலித்து போதையானான்’ ஆனால் மஸ்தான்கள்  லாயிலாஹ இல்லல்லாஹு வை காதலித்து போதையானார்கள்.. இவர்கள் கொண்ட காதல் போதையை சதாரண மனிதர்கள் உணர்ந்து கொள்ள முடியாது இது எதையும் தாண்டி புனிதமானது.

உலகெங்கும் வாழும் இறைநேசர்களின் கொள்கையாம் தூய அத்வைதமான எல்லாம் ஒன்றென்ற சூஃபியிஸ கொள்கையே இம்மஸ்தான்களின் கொள்கையும் ஆகும். அந்த ஒன்றையே நேசித்து.. அந்த ஒன்றையே யாசித்து தங்களின் வாழ்வை வாழ்ந்தவர்கள்..! வாழும் நாட்களில் அவர்களின் கண்கள் திறந்திருக்கும் ஆனாலும் அவர்களின் பார்வையிலெல்லாம் படந்திருந்தது பரமனின் திருக்காட்சியே! செவித்துளைகளின் மூலம்  அவர்கள் கேட்டதெல்லாம் அவர்களின் சிந்தனையின் சிம்மாசனமாய் அடந்திருந்த செம்பொருள் இறையே. மூக்காலும் முகர்ந்ததெல்லாம் இறை நுகர்வே தவிர வேறில்லை.  அங்கனம் ‘லஹூ மாஃபிஸ்ஸமா வாத்தி வமாஃபில் அர்ழ்’ ( வானங்களிலும் பூமியிலும் அவனைத் (அதை) தவிர வேறொன்று இல்லை ) என்ற இறைவசனத்திற்கேற்ப இறையே பிரதானமாக சிந்தையெல்லாம் நிறப்பி புறப்பொருளை ஏதும் காணாது புறப்பொருளின் அகப்பொருளையே எப்போதும் பார்த்து பரவசம் கண்டு நின்றவர்கள் தான் மஸ்தான்கள்.

அதனாலேயே இவர்கள் என்றும் உடலின் புற அழகு குறித்து கவலைப்பட்டது கிடையாது.., இது பற்றி மனிதர்களின் விமர்சனங்களையும் சட்டை செய்பவர்களாய் இவர்கள் இருந்ததில்லை. உணவு குறித்தோ.. உடைகுறித்தோ.. உறையுள் குறித்தோ.. இவர்கள் நம்மை போன்று கணக்கீடுகள் செய்வதறிதாதவர்கள். ஆதலாலேயே இவர்கள் மஸ்தான்கள் எனப்பட்டனர். மஸ்தான்கள் எல்லோரும் இறைவனின் அகமியத்தை உணர்ந்த இறைஞானிகள். ஆனால் எல்லா இறைஞானிகளும் மஸ்தான்களாக இல்லை, இறைஞானியாக மஸ்தானாய் இருக்கவேண்டும் என்ற சரத்தும் இல்லை. நாம் முன்னரே குறிப்பிட்டது போல் எந்த ஒரு மஸ்தான்களும் தாம் மஸ்தானாய் ஆகவேண்டும் என நினைத்து ஆவதில்லை மாறாக அவர்களது இறைபோதை அவர்களை அவர்களையும் அறியாது தன்னிலை மறக்கச் செய்ததனால் ஆனதே ஆகும்.

மேற்கூறப்பட்ட நிலையில் மஸ்தான்களாக நம் தமிழ் தரணியில் உலவி மண்ணில் புனிதப் பார்வையை தந்து ஞானமெனும் இறையருட் போர்வையால் மாந்தரை அணைத்து எல்லோருக்கும் அறிவுக்கண் திறக்கவும், ஆத்ம நிம்மதி கிடைத்திடவும் பாடுபட்டு உலகின் எதார்த்தத்தை எடுத்துக்கூறி ஒவ்வொருவரும் நித்திய ஜீவன் பெற தங்களது வாழ்வையே அற்பணித்த இறையருட் செல்வர்களாகிய மஸ்தான்கள் தமிழகத்தின் பரவலான எல்லா ஊர்களிலும் தங்கள் பூத உடலை மறைத்து வாழ்கின்றனர், அவர்களில் பிரசித்திப் பெற்றவர்களில் பிரதானமானவர்களான.. தமிழ்ச்சித்தர்களில் ஒருவராகவும் கூறப்படுகின்ற குணங்குடி மஸ்தான் சாஹிப் அவர்களும், காரைக்காலில் அடக்கமாகியுள்ள மஸ்தான் சாஹிப் அவர்களும் இன்ன பிற மஸ்தான்களும் மக்கள் நன்றே அறிந்தவர்கள்.

அந்த வரிசையில் தான் எங்கள் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் பல காலம் முன்பு வாழ்ந்து தனது பலமான இறைக்காதலால் ஆத்ம ஞான பெருஞ்சக்தியடைந்த மாமேதை, தன்னிலை இழந்தே பல ஊர் உலகங்கள் சுற்றி உலவிய இறையின் பெருநேசர், சில தருணங்களில் அவர்களில் உடலங்களே பல பாகங்களாக ஆங்காங்கே கிடத்தப்பட்டு இருக்குமாம் அந்த அளவுக்கு இறை காதலின் மஜ்தூபுடைய உச்ச நிலையில் இருந்த இறை ரகசியத்தின் பெருநெருப்பை சுமந்து வாழ்ந்த அதிசயப்பிறவி மாட்சிமை பொருந்திய மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் அவர்கள் அடக்கமாகி இருக்கிறார்கள். அவர்களின் அற்புதங்கள் அன்றிலிருந்து இன்றுவரை பல நூற்றாண்டுகளாக அண்டி வருபவர்கள் அனுபவித்து வருவதாகும்.

வழுத்தூர் வாசிகள் தஙக்ளின் எந்த ஒரு சுக துக்கமாக இருந்தாலும் இவர்களின் சந்நிதியில் வந்து வஸீலாவாக ஆக்கி இறையருளை வேண்டுவது மரபு. திருமணத்தில் மாப்பிள்ளை ஊர்வலங்கள் இங்கே நிறுத்தப்பட்டு இவர்களின் வஸிலாவை தேடி இறைவனிடம் பிரார்த்திப்பதும், பயணங்கள் செல்லும் யாராக இருந்தாலும் இவர்களின் சந்நிதி வந்து அதை இறை சிறப்பாக்கி அருள வேண்டுவதும் புராதனமாக பின்பற்றப்படும் நடைமுறைகள் ஆகும். என் தந்தைவழிப் பாட்டனார் மர்ஹூம் முஹையத்தீன் பாட்ஷா (பாவாஜி பாய்) அவர்கள் மெய்ஞான தேட்டமுள்ள மனிதர் என்றும் அவ்வகமியங்களை உணர்ந்ததாலும் தேடல் மிகுந்த வாழ்வு வாழ்ந்ததாலும் மலேசியாவிலிருந்து ஊர் வந்து இருந்தால் ஒவ்வொரு நாள் மஃரிபிற்கு பிறகும் புனித மக்பரா சென்று சற்றே தியானித்து வரும் வழக்கம் கொண்டிருந்தார்கள் எனவும் வீட்டில் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

மேற்கூறப்பட்ட எங்கள் வழுத்தூரில் அடங்கியிருக்கும் மஹானின் நினைவு நாள் இன்று (30-06-2012) கொண்டாடப்பட்டது. திரளான மக்கள் அணியணியாய் கலந்து கொள்ள சீரும் சிறப்புமாக இருந்ததாக கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாக இருந்ததாகவும் எப்போதும் போல் எல்லா சமூகத்தினரும் மதமாச்சரிங்களுக்கு அப்பாற்பட்டு மகான் அவர்களின் ஆசியை பெற நாடி வந்திருந்ததையும் ஊர்மக்களுக்காகவும், ஏழை எளியவர்களுக்காகவும் வழங்கப்படும் அன்ன தானம் இன்று மிகவும் பரக்கத்தாகவும், நன்றாகவும் அமைந்ததாக தகவல் பெற்றேன்.

கடந்த பதினைந்து வருடஙகளாக தர்ஹா பராமரிப்பு மற்றும் ஒவ்வொரு மாலையிலும் தர்ஹா மற்றும் அதன் சுற்றமுள்ள வீதி விளக்குகளை ஏற்றுவது பின் காலையில் சுப்ஹு தொழுதுவிட்டு அணைப்பது, காலம் தவறாது சுத்தம் செய்வது, விழாக்கான ஏற்பாடு செய்வது, அன்னதான வசூல் போன்றவற்றை நிர்வகிப்பது என எல்லாவற்றையும் பார்த்துவரும் ஜனாப். பீர்பாய். ஜைனுல் ஆபிதீன் அவர்களின் பங்கு இவ்விழா வேளையில் மிகவும் நன்றியுடன் நினைத்து போற்றத்தக்கது, இவருடன் கை கோர்த்து பங்காற்றும் ஜனாப். அஹமது சித்தீக் அவர்கள் மற்றும் ஹந்தூரிக்கு களப்பணியாற்றிய ஜனாப். கமால் அண்ணன், ஜனாப். ச.மு. அஸ்ரப் அலி, சென்ற ஆண்டுவரை ஊரில் இருந்த போது இதற்காக விருப்பமுடன் பணியாற்றிய ஜனாப்.எஃப்.சுலைமான் உள்ளிட்ட குழுவினரையும், முன்பு இதற்காக சிறப்பாக பணி செய்து மறக்கமுடியாத நினைவுகளை நம்மளவில் விட்டுச்சென்ற எல்லோராலும் ‘சிக்கந்தர் வாசகசாலை ராஜ் முஹம்மது பாய்’ என அறியப்பட்ட துருவத்தார் ராஜ் முஹம்மது அவர்களையும், இவருக்கும் முன்னோடிகளான மர்ஹூம்.வெள்ளம்ஜி. முஹம்மது ஹனீப், ‘பெரியபாவா’ அப்துல் காதர் (ஜனாப்.அஹமது சித்தீக் அவர்களின் தந்தையார்) மர்ஹூம். ஜனாப்.க.இ.ப.முஹம்மது இஸ்மாயில் இவர்களையும் காலம் காலமாக களப்பணியாற்றி இவ்விழா சிறக்க பணியாற்றி திரைக்கு பின்னால் உழைக்கும் நன்மக்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் இக்கட்டூரை நெகிழ்ந்து மனமுவந்து வாழ்த்தி மகிழ்கின்றது, இவர்களையும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ்வின் நேசர்களையும் வல்ல அல்லாஹ் அவனது தூதரின் பொருட்டாலும், இவ்வுயர் நேசர் வள்ளல் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் பொருட்டாலும் பொருந்தி அருள்வானாக! ஆமீன்.

أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

அல்லாஹ்வின் நேசர்களான மெய்நிலை கண்ட மகாத்மாக்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்
(அல்-குர்ஆன்)

  


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

19 ஜூன் 2012

மார்க்கம் பேசும் ஆட்கள்



நானும் எனது சினேகிதனும் நேற்றைய விடுமுறை நாளில் சற்றே வெளியே கிளம்பி வருவோம் என காரில் தயாரானபோது இரண்டு நபர்கள் சலாம் கூறி தாஙக்ளும் எங்களுடன் குறிப்பிட்ட தொலைவு வருவதாக சொல்லி காரில் ஏறிக்கொண்டனர், அவகள் என் சினேகிதனின் சினேகிதர்களாம். இருவரும் போட்டிக்கு தாடிப்பயிர் வளர்த்திருந்தனர், கார் கிளம்பியது… 


புதிதாக இரண்டு நபர்கள் வந்த காரணத்தினால் நாங்கள் சகஜமாக பேச முடியவில்லை, என் சினேகிதனாகப்பட்டவன் சற்றே மெளனம் கலையட்டுமே என அமீரகத்தின் ரேடியோ ஹலோ எஃப்.எம் 89.5 ஐ ஆன் செய்தார், இனிய பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது… பாட்டு காதில் விழுந்தது தான் தாமதம் பின்னால் இருந்த இருவரில் ஒருவர் ஏதோ எங்களது வாகனத்திற்கு எதிரே திடீரென மற்றொரு வாகனம் வந்து மோதப்போவது போல் சற்றும் எதிர்பார்க்காது அல்லாஹு அக்பர்..!!!! அஸ்தஃபிருல்லாஹ்..!!! என்றார் திடுக்கிட்டோம் பிறகு தான் சொன்னார்… ‘’பாய் இசையெல்லாம் ஹராம் பாய்.. அல்லாஹ் இதை விரும்பவே மாட்டான்..’’ என ஆயிரம் மடங்கிற்கு அற்புதமாக அமலுன் சாலிஹாக பீலீம் காட்டினார்.. அத்தோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை.. மார்க்கத்தை பற்றியும் அதை அக்மார் தரத்திற்கு பின்பற்றுவது பற்றியும் சமூகத்தில் உள்ள சீர்கேடுகள்.. ஹலால், ஹராம் என என்னென்னவோ பேச ஆரம்பித்தார்.. எனது சினேகிதரும் விடவில்லை வாதத்திற்கு எதிர்வாதம் வைத்து அவரை சீண்டிக்கொண்டே வந்தார், நான் மெளனமாக பேசாது கவனித்துக் கொண்டே வந்தேன்.

அவரது பேச்சு சூடுபிடித்தது அப்படி.. இப்படி என பேசிய அவர் அந்த தானாதானாவில் சேர்ந்த பிறகு தான் விழிப்புணர்வு பெற்றதாகவும்.. தாம் இன்று தூய இஸ்லாமிய வாழ்வை வாழ்வதாகவும் சொன்ன அவர்.. எங்களை பார்த்து ‘’பாய் நீங்க இன்னும் மார்க்கத்த நிறைய புரிஞ்சுக்க வேண்டி இருக்கு சிந்திச்சு பாருங்க அப்புறம் எங்க தானாதானாவ புருஞ்சுக்குவீங்க’’ …ன்னு பத்து நிமிடத்தில் பதினோறு கிலோமீட்டர் அளவுக்கு பேசினார்…!

சிறிது நேர இடைவெளியில் ஏதும் பேச்சு இல்லை.. டிராபிக் வேறு அந்த நேரம் பார்த்து அந்த தூய இஸ்லாமிய வாதிக்கு அதாங்க தானாதானாவில் இருப்பவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது நாங்களெல்லாம் அதிர்ந்தோம் அதில் …
‘’கங்கணகணவென கிண்கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி முழங்க முழங்க ஒரு சுயம்வரம் நடக்கிறதே.. இது சுகம் தரும் சுயம் வரமே…’’ என்ற எஜமான் திரைப்படப்பாடல் அழைப்பு ஓசையாய் ஒலித்து ஓய்ந்தது.. எனது நண்பருக்கும் அவருக்கும் இடையேயான விவாதமும் வாய்மொழியின்றி ஓய்ந்தது. அவரின் முகத்தை நாங்கள் மீண்டும் பார்க்க விரும்பவில்லை அவரும் இறங்கும் வரை ஏதும் பேசவில்லை!



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

12 ஜூன் 2012

பண்பாளர் பாவாஜான் மாமு


படத்தில் இருப்பது ஜனாஃப்.பாவாஜான் மாமு (எ) படே.அப்துல் கபூர் ராவுத்தர் என்ற சிறப்புயர் மனிதர். இப்படம் சென்ற ஆண்டு பிப்ரவரி எட்டாம் நாள் (08-02-2011) எடுத்தது, ஊர் சென்றிருந்த சமயம் வாரம் சில நாட்களாவது எனது மகன் நளீரையும், தங்கை மகன் சமீஹையும் அழைத்துக் கொண்டு வழுத்தூர், அய்யம்பேட்டை எல்லையில் இருக்கும் ரயில் வண்டி நிலையத்திற்கு மாலை நேரத்தில் சென்று ரயில் காட்டிவிட்டு சற்றே இயற்கை சூழலில் உலாவி வரும் எல்லா நாட்களிலும் அங்கே பாவாஜான் மாமு அவர்களின் பிரசன்னம் இல்லாதிருக்காது. ஒவ்வொரு நாள் மாலையிலும் சரியாக நாலரை மணிக்கெல்லாம் வீட்டை விட்டு புறப்பட்டுவிடுவாராம், ஒரு நாள் விடுபட்டாலும் சோர்வு வந்துவிடும் என்றார், நடைப்பயணமாக ரயில் நிலையத்திற்கு வந்து அங்கும் நீண்ட நேரம் மாலை மயங்கும் வரை உலாவிவிட்டு பிறகு அவர் வீடு நோக்கி புறப்பட்டால்... ஏழு மணிக்கு போய் சேர்வதை மோட்டார் சைக்கிளில் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அவர் புறப்பட்டு முக்கால் மணி நேரம் பிந்தி ரயில்நிலையத்திலிருந்து புறப்படும் நான், அவரை மேலவழுத்தூர் கடைத்தெருவில் வந்து கண்டு கொள்வேன். அன்றைய ஒவ்வொரு சந்திப்பிலும் அவர் சிந்திய பாசமும் பரிவும் மனதில் இன்றும் நினைக்க நினைக்க இனிப்பவைகள். என் மீதும் என் தாய் தந்தையர் உள்ளிட்ட குடும்பத்தின் எல்லா நபர்கள் மீதும் சிறந்த அன்பு கொண்டவர் அதை அவரது அளவளாவலிலேயே கண்டு கொள்ளமுடிந்தது.

அந்த ரயில் நிலைய சந்திப்புக்களில் எனது தந்தை வழி பாட்டனார் பாவாஜி பாய் (எ) ஜனாப்.முஹையதீன் பாட்ஷா ராவுத்தர் பற்றியும் எங்கள் குடும்ப பின்னணிகள் குறித்தெல்லாம் அவர் பகர்ந்ததில் தான் பல விசயங்களே நான் அறியவும் வாய்பாக இருந்தது. எனது நன்னியம்மாவிடம் மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டவர் அவர்களது உடல்நிலை சீரின்மையின் போது பலமுறை வந்து பார்த்து ''நான் புதுமாப்பிள்ளையாய் இருந்த காலங்களில் நிறைய முறை இவர்கள் சமைக்க சாப்பிட்டிருக்கிறேன்'' என்று நன்றியுணர்வோடு பழைய எண்ணங்களை என் தாயாரிடம் சொன்னாராம், என் பெரிய தந்தையின் மகள் தங்கை நஸ்ரினின் மிகச்சிறிய வயதின் அகால மறைவு குறித்து பெரிதும் வருத்தப்பட்டார். யாரும் எப்போதும் அவரின் பேச்சில் எல்லா வார்த்தைகளிலேயும் எல்லாரையும் அது மிகச்சிறிப பிள்ளைகளாக இருந்தாலும் கூட அவர் மிகுந்த மரியாதையாகவே விளிப்பதை.., அழைப்பதை.., நினைப்பதை… கண்டு கொள்ளலாம். பாரம்பரிய குடும்ப பிணைப்புகளில் அவர் கொண்டிருந்த அதிகப்படியான பிடிப்பு இன்றெல்லாம் எல்லோரும் படிக்க வேண்டிய முதன்மையான விசயம். புராதன இஸ்லாமிய விழுமியங்களில் அவரின் தெளிவு நான் உணர்தது.

தனது சிறப்பான மனைவி மர்ஹூமா.பல்கீஸ் அம்மாள் அவர்களின் திடீர் மறைவு அவரை மிக துன்பத்தில் ஆழ்த்தியது. கருத்தொருமித்து காதல் கொண்ட பேடைகளில் ஒன்று ஒன்றை இழந்தால் வரும் பிரிவுத்துயர் தாங்கத்தான் ஒன்னாதது என்பதை அவரின் சொற்கள் அன்றைய தினங்களில் எனக்கு உணர்த்தியது. மச்சி என்று தான் எல்லோரும் அழைப்பது போல அவரும் தன் அன்பு மனைவியை சொல்லி.. சொல்லி நினைவு கூர்ந்தார். ‘’மச்சி அப்படி குடும்பத்தில் அரவணைபாக இருக்கும், மச்சி அதில் ஆர்வமாக இருக்கும், மச்சி இப்படியெல்லாம் செய்வார்’’ என்றெல்லாம் தனது வாழ்க்கை துணையின் சிறப்பினை சொல்லி நெகிழ்ந்தார். என்ன தான் ஆதரவு இருந்தாலும் அன்புநிறை மனைவியின் பிரிவுத்துயர் தாங்காது அந்த உள்ளம் ஏங்கியது.. ‘’நீ ஏன் தான் என்னை இப்படி விட்டு விட்டு போனாயோ..’’ என அவரது உள்ளம் வாடியது உணரமுடிந்த ஒன்றாக இருந்தது.

இரவு ஒன்பது மணிக்கு மேல் சாலைத்தெருவின் அவரது பழைய வீட்டை நான் கடக்க நேர்கையில் மிகப்பழைய தமிழ் பாடல்கள் ஒலிக்க அந்த ஆத்மா தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கும்... இரவு அறையில் குமிழ் விளக்கு எறியும்… அந்த நேரத்து அவரின் மனநிலையை சற்றே யூகிக்க முடியும் என்னால்! ஆனாலும் என்ன செய்ய முடியும்…, அவரின் ஜன்னலை நோக்கிய ஒரு பார்வையுடனும், ஆதங்கங்களுடனும் என் கால்கள் அவரது வீட்டை கடக்கும்.

‘’ஜென்டில் மேன்’’ என்று சொல்லுவார்களே அந்த சொல்லுக்குரியவர் இவர் தான், நல்ல இதயம் கொண்ட இவருக்கு ஏனோ மருத்து உலகம் இதயக்கோளாறு இருக்கிறது என்று சொன்னது… அதற்கும் மருத்துவம் பார்த்துத்தான் மிக கவனமாக தன் உடலை வைத்துக்கொண்டார் ஆனாலும் அந்த இதயம் எதையோ தேடியது… அதனளவில் இன்று சென்று சேர்ந்தும் கொண்டது. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)

அலுவலகம் விட்டு வந்து சற்றே என் அறையில் அமர்ந்த எனக்கு ஈ.பி.ஜே.குலாபு தொலைபேசியில் சொன்னார்.. சற்றும் எதிர்பார செய்தியான இது மனம் முழுவதும் கவலை மேகத்தை சூழ செய்துவிட்டது, உடன் மகனார் சலீமுக்கு தொடர்பு கொண்டு இரங்கலை பகிர்ந்து கொண்டேன். இறைவன் அவரின் இழப்பால் வாடிடும் எல்லா பிள்ளைகளுக்கும், குடும்பத்தாருக்கும் சப்ரன் ஜமீலா-வெனும் மேலான பொறுதியை அளிப்பானாக!

யார் எப்படி போனாலும் அடுத்த வினாடி மறந்துவிட்டு மற்றதை தொடரும் உலகம் இது... ஆனாலும் இம்மாதிரி பண்பாளர்கள் என்றும் நினைத்துப் பார்க்கப் பட வேண்டியவர்கள். தனது செயல்பாடுகளாலேயே சொல்லாமல் நிறைய கற்றுக்கொடுக்கும் களஞ்சியங்கள் இவர்கள். பாவாஜான் மாமு போன்ற நல்ல உள்ளங்களின் எண்ணிக்கை உலகில் அருகி வருவது வருத்தமான செய்தி. யாருக்கும் தீங்கு நினைக்காத இன்று மறைந்த அன்னாரின் ஆத்மாவை எல்லா விதகங்களிலும் சிறப்பாக்கி சாந்தி அடைந்த ஆன்மாவாக தன் இரசூலின் நேசர்களின் கூட்டத்தில் சேர்த்து அழகுபடுத்த வல்ல அல்லாஹ் போதுமானவன். ஆமீன்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

11 ஜூன் 2012

சாரல் நேரம்!




ஒவ்வொரு நாளும்
உன் குரல் கேட்டுத்தான்
என் மனக்குயில் பாடத் துவங்கும்

*****
புலரும் பொழுதுகளில்
உன் குளிர் மனம்புகுந்தால் தான்
என் மனத் தோட்டம் துளிர்க்கும்

*****
அந்தி நேரம் அழகு நேரம்
சந்திக்க சாரல் நேரும்
சிந்திக்க வேறில்லாது
முந்திக்கொண்டு முகம் தேடும்!

*****
உன் முகப்பூ பூக்காதிருந்தால்
என் அகப்பூ கருகிவிடும்!

*****
நின் பற்களின் சூரியன் தெறிக்க
என் எண்ணச்சந்திரன்களில்
மிண்ணும் பெளர்ணமிகள்!

*****
உன்
செவ்விதழ் பட்டுவர
செந்தமிழெல்லாம் அமுதமாகி
செவிகளில் செந்தேன் மழை பொழியும்!

*****
கடிகாரத்தின் மீது கடுங்கோபம்,
நாங்கள் பேசும் போது மட்டும்
பொய்யாய் நேரங்காட்டுகிறது.

*****
சன நேர ஓவியக் கூடங்களாய்
ஆச்சரியத்தில் ஆழ்த்தி மறைகிறது
உன் உதட்டோரப்புன்னகை!

*****
உனக்கான
காத்திருப்பிலெல்லாம்
பூத்திருக்கும் பூவின் நிலையில் நான்!



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

10 ஜூன் 2012

விடைப்பெற்றார் S.Y. குரைஷி



இன்று விடைபெற்ற ஷஹாபுத்தீன் யாகூப் குரைஷி, தலைமை தேர்தல் கமிஷன் ஆணையர் டெல்லிக்காரர், 1947 ஜூன் 11ஆம் நாள் பிறந்த இவருக்கு வயது 64, பல மத்திய அரசாங்கம் சார்ந்த துறைகளில் பணியாற்றி இறுதியாக இந்திய திருநாட்டின் 17 வது தலைமை தேர்தல் ஆணையராக 30 ஜூலை 2010 அன்று பொறுப்பேற்று இன்றுவரை பல சவால்களையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டு சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். இவர் தேர்தல் ஆணையத்தில் மட்டும் 35 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக தொலை தொடர்பு மற்றும் பொது வணிகம் இவற்றை எப்படி பயன்படுத்து என்பது குறித்து ஆராய்ந்து முனைவர் (பி.எச்.டி) பட்டம் வெற்றவர். இவர் சமூக விழிப்புணர்வு குறித்தும், ஜனநாயகம், தேர்தல் முறை, பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றம், எயிட்ஸ்.. என இவைகள் குறித்து எண்ணிறந்த புத்தகங்களையும் எழுதிய எழுத்தாளர் என்பது இவருக்கு மேலும் சிறப்பு.

ஒரு பொது நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவின் தலைசிறந்வர்களின் பட்டியலில் 7வது இடத்தினை பெற்றிருந்தவர். தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பில் இவர் பணிபுரிந்த சமயத்தில் எயிட்ஸ் நோயாளிகளுக்காக இவர் பல சேவை மிகவும் போற்றுதலுக்குறியதாக இருந்ததாக கூறுகின்றனர். நமது தூர்தர்சன் தொலைக்காட்சியில் அவர் தலைமை இயக்குனராக சேர்ந்து பல மாற்றங்களை உட்புகுத்தினார் என்பதும் இவரது சாதனையாக சொல்லப்படுவதாகும். மேலும் ஹரியானாவில் மின் மற்றும் மரபுசாரா மின்சார மையத்தை உலக வங்கியிடமிருந்து 600 மில்லியன் டாலரில் புதுப்பித்து மிகச்சிறந்த லாபம் ஈட்டும் நிறுவனமாக ஆக்கிக்காட்டிருக்கிறார். இதை உலக வங்கியே சான்றுபகர்கிறது. இது அல்லாது பலதுறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டிய புகழுக்கு சொந்தக்காரர் குரைசி. இவர் ஒரு இசைப்பிரியர் என்பது கூடுதல் தகவல்.

இவர் சமய நல்லிணக்க பாதாகை, நேரு அதீத மற்றும் நவீன குழந்தைகள் நலன் அமைப்பின் தேசிய பதாகை உட்பட பல உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புகளின் சிறந்த கேடயங்களை வென்றவர்.  இப்படியான பொதுப்பணியில் தன்னை ஈடுபடுத்தி மக்கள் சேவையை அயராது செய்த நல்ல உள்ளம் கொண்ட சிறந்த மனிதர் குரைஷி அவர்களை வாழ்த்தி மகிழ்வோம் இன்னும் அவரது சேவை நமது நாட்டுக்கு மேலும் தொடரட்டும்..

இவர் போன்ற சிறந்த வெற்றிச்செல்வர்களை முன்மாதிரியாக கொண்டு நமது சமுதாய கண்மணிகள் பயணம் தொடர வேண்டும் என்பதே இந்த கட்டூரையின் நோக்கம். இளைஞர்கள் சமூதாய துடிப்பு கொண்டவராகவும் பரந்த எண்ணம் கொண்டவராகவும் சிறக்க எடுத்துக்காட்டே குரைஷி.

வாழ்க குரைஷி!

வாழ்க பாரதம்!!



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

06 ஜூன் 2012

வருங்கால வாரிசுகளை மீட்போம்..!






ஓசோனை ஓட்டை போட்டுவிட்டு குத்துதே குடையுதே என்கிறோம்.. அவரவர் தங்களின் நலன் மட்டுமே பார்க்கிறார்கள்.. தான் சுகமாய் சொகுசாய் இருந்தால் போதுமெனத்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.. இப்பேர்பட்டவர்களைப் பார்த்தாலே ஏனோ எனக்கு பாபமாய் தான் இருக்கிறது. உண்மையில் அவர்கள் நினைப்பதோ தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் தான் ஒரு சொகுசை செய்து விட்டதாகவும், கட்டிய வீட்டில், வைத்திருக்கும் ஏசியில், அழித்திருக்கும் தோப்பில், சிதைத்திருக்கும் வயலில்.. நாளை நல்ல விதமாக இருக்கப்போகிறார்கள் என்பது தான் அவர்களது அறியாமை. இவர்கள் செய்வதெல்லாம் நாளைய இவர்களின் சந்ததிக்கு சதி தான். இந்த சதி அவர்களின் விதியை எப்படி கொடூரமாக எழுதப்போகிறதோ என்று தான் மிக பயங்கரமாக கவலை கொள்ள வேண்டி இருக்கிறது.

அக்கரையில்லாத அரசுபொதுநலமில்லாத தனிமனிதர்கள் என இருக்கும் போது பூமி ஏன் வெப்பமடையாது.. புவி வெப்பமடைதலை பற்றி வாய்கிழிய பேசும் நம்மவர்களில் எத்தனை பேர் மரம் வெட்ட தடையாய் இருந்துள்ளோம்வயல்களில் வீடுகட்டுவதை தவிர்த்துள்ளோம்பிளாஸ்டிக் உபயோகத்தை குறைத்து அதை வீட்டிற்கு கொள்ளை புறத்திலும்தெருக்களிலும் நமெக்கென்ன என போடாமல் இருந்துள்ளோம் இப்படித்தானே அரசியலில் இருப்போரும் அதிகாரத்தை பயன்படுத்தி காட்டை அழிப்பதும்மணல் கொள்ளை செய்வதும்இயற்கை வளங்களை அழிப்பதும்மலைகளை அகற்றுவதும்சுரங்கங்களை தோண்டிக்கொண்டே இருப்பதும்தொழிற்சாலை கழிவுகளைபுகைகளை யோசிக்காமல் வெளிவிடுவதும் என எத்தனை எத்தனையோ அட்டகாசங்களை நிகழ்த்தி நமது மண்ணைவிண்ணை பாழாக்குகிறார்கள் அப்படி இருக்கையில் இன்று அதிகரித்து வரும் புவி வெப்படைதலுக்கு நாம் ஒவ்வொருமே பொறுப்பேற்க வேண்டியவர்கள் தான்.

இன்றெல்லாம் பார்த்தீர்களென்றால் என்றோ சீதோச நிலை மாறிவிட்டது குறிப்பாக 2004 சுனாமி இயற்கையின் சுழற்சியையே வேறு திசைக்கு சுழற்றிவிட்டிருக்கிறது. அநத வகையில் இன்னும் நாம் விழிப்புணர்வு பெறாமல் நம் ஒவ்வொருவரின் கடமையை உணராமல் நமது பாரம்பரியமும் எதற்கும் கேடு விழைவிக்காததுமான சணலை விட்டு பிளாஸ்டிக் பொருளுக்கு தாவுவதும்சுற்றுச்சூழலை கவனத்தில் கொள்ளாது நமது வாகனப்புகைகளை கட்டுப்பாடின்றி புகை கக்க ஓட்டிச்செல்வதுவும்அழிந்து கொண்டிருக்கும் மரங்களைப் பற்றி சிந்தனையே செய்யாது ஒரு மரமோ சில செடிகளோ கூட தன் வாழ்வில் வைக்க முன்வராமல் நமக்கொன்றும் இல்லை என இப்படி எந்த் ஒரு செயலிலும் அக்கரை காட்டாது ஏதோ பசிக்கு சாப்பிடுகிறேன்நான் குளிர்ந்த அறையில் தூங்குகிறேன் காரும்வீடும் இருக்கிறது என் பிள்ளைகள் இன்று நன்றாக இருக்கிறார்கள் என சென்றீர்கள் என்றால் நீங்கள் சொந்த செலவில் உங்களுக்கே சூனியம் வைத்துக் கொள்கின்றீர்கள் என்பது மட்டுமே உண்மை.

கல்கத்தாவில் இன்று மட்டும் கடும் வெயிலால் 67 பேர் சுருண்டு செத்ததாக  செய்தியைப் பார்த்து நான் வெந்தேன். இன்றைய அந்த செய்திதான் இந்த கட்டூரைக்கும் எனது கவலைக்கும் காரணமும் கூட  அங்கு வெயில்  54.9 டிகிரி  செல்சியசை எட்டி இருக்கிறதாம். இப்படி ஒரு நிலைமை நமது இந்தியாவிலா என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லைநமது தமிழகத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் வெயிலின் அளவு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. எக்கேடாவது போகட்டும் என பணம் உள்ளவர்கள் பங்களாவில் பதுங்கி கொள்கிறீர்கள் பாமர ஏழை என்ன செய்வான் இப்படி செத்து தான் மடிவான்அவன் செத்தால் என்ன நான் நன்றாக இருக்கிறேனே என நீங்கள் நினைத்தால் உங்களை விட ஒரு முட்டாள் இல்லைபங்களாவும் பாழடையும் உனக்கும் ஆப்பு மிக அருகில் என்பதை உணர்ந்து கொள். ஓடம் ஒருநாள் தரையில் ஏறினால் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறித்தான் ஆகவேண்டும்.

மரம் அழிகிறதுகாடு காணாமல் போகிறது கடல் மட்டம் உயர்கிறதுஆர்டிக் அண்டார்டிக் பனிப்பிரதேச உறைந்த பனிபாறைகள் கரைகிறதுகாற்றில் மாசு அதிகரித்துவிட்டது நவீனங்களும்நாசமாய் போனவைகளும் அதிகரித்ததால் எல்லா விலங்குகளும்பறவைகளும் அழிய தொடங்கி அழிந்து வருகிறது குறிப்பிட்ட ஆண்டுகளில் எல்லா வகையான விலங்குகளும்பறவைகளும் அழிந்து வருவதை கண்கூடாக பார்த்துத்தான் வருகிறோம்.. காடுகள் அழிந்து வருவதாலும்அங்கு நீர்நிலைகளில் நீர் வற்றி விட்டதாலும் உணவுகிடைக்காமலும்நீர் கிடைக்காமலும் தானே நீலகிரி மாவட்டத்திலும் மற்ற நமது மலைவாழ் மாவட்டங்களிலும் யானைக் கூட்டங்கள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறதுஅவைகளை நாம் மனசாட்சி இன்றி துப்பாக்கி குண்டுகள் முழங்க பயமுறுத்தி மீண்டும் அந்த வரண்ட வனாந்திரங்களுக்கே அனுப்பி வைக்கிறோம் ஆனாலும் காடு காடாக இல்லாத போது எப்படி அங்கு அவை வாழும் என்றாவது நாம் இதற்கு பதில் தேடி இருக்கிறோமா.. அவைகளின் மீது என்ன குற்றம் இத்தனை நாள் வராத கூட்டம் இந்நாட்களில் மட்டும் எல்லை தாண்ட வேண்டிய அவசியம் தான் என்ன?

இப்படி ஒவ்வொரு இனமும் இந்த மட மனிதனால் தான் வேதனைகளை சந்தித்து வருகிறது. பூமி என்ற புண்ணிய கிரகத்தை இவன் அழித்துதது போதாதென இன்னும் இன்னும் அழித்துக் கொண்டு இவனும்இவனின் சந்ததிகள் மட்டும் வாழ்வோமென்று பகல்கனவு கண்டு கொண்டிருக்கிறான். மரமும்பறவைகளும்விலங்குகளும்கடல் உயிரினங்களும் அழிந்த ஓர் கிரகத்தில் மனிதன் ஒரு நாளும் வாழ முடியாது இவைகளெல்லாம் இல்லாது போனால் பூமி உயிர்வாழவே அருகதையற்ற ஒர் கிரகமாக பரிணமிக்கும்சில நூற்றாண்டுகளாக புத்தங்களிலும்பிறர் சொல்லியும்  லேசாக     அறிந்திருந்த  சூனாமிகளும்  பூகம்பங்களும்  புயல்காற்றுகளும்  வெயில்  கொடுமைகளும் அதீத மழையும் இன்று நம் கண்முன்னே நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் உணர்ந்தே வருகிறோம். அப்படிப் பட்ட சூழலில் நாம் நினைப்பது போல நமது சந்ததி சிறப்பாய் வாழ முடியாது.. இயற்கை இடரோ அல்லது புதுப்புது உயிர்க்கொல்லி நோயோ தான் நமது உயிரான சந்ததிகளை இனி சாய்க்கும் எமனாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. ஆகையால் இதனை நாம் ஆழமாக உணர்ந்து ஆவண செய்திடல் வேண்டும். இனியேனும் நாம் இயற்க்கைக்கு நண்பனாய் இருக்க பழகுவோம். வாழ்க்கை தந்த இயற்கைக்கு துரோகம் செய்யாது செயற்கைகளை புறந்தள்ளுவோம். ஒரு சிறு இடம் கிடைத்தாலும் மரம் வளர்ப்போம் தோட்டம் அமைப்போம்பிளாட்டிக் குப்பைகளை ரீ-சைக்கிளிங் செய்யும் வகையில் தனியே பிரித்து சேர்த்தும்அதன் பயன்பாட்டை முடிந்த அளவு குறைத்தும் வரப்பழகுவோம்இன்னும் எத்தனை எத்தனை இயற்கை வழிமுறைகள் இருக்கிறதோ அதை நாம் பின்பற்றுவதோடு பிறரையும் பின்பற்ற தூண்டுவோம். விளை நிலங்களை விலைக்காகாமல் விளைச்சலுக்காய் காப்போம். காடு.. மலை வளங்களை யார் சுரண்டினாலும் ஓர் அமைப்பின் மூலமோ அல்லது வழக்கு தொடுத்தோ அவர்களின் தோல் உறிப்போம். இனி அரசை நாம் இவைகளுக்கெல்லாம் ஆவண செய்ய தூண்டிக்கொண்டே இருப்போம்.   பூமியின் இருக்கும் கொஞ்ச உயிரையாவது காப்போம்நம் வருங்கால வாரிசுகளை மீட்போம்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா



மனம்நிறை காயிதேமில்லத்!



மக்கள் நலம் மட்டுமே நாடும்
மக்கள் விரும்பிய அரசியல் ஞானியை
இந்திய துணைகண்டம் சுமந்திருந்தது,
சுமந்திருந்த காரணத்தால்
சுமை தெரியாமல்
சுகமாய் இருந்திருந்தது அவர்
சுவனம் சென்ற சனத்திலிருந்தே
தேடித்தேடித்தான் அழுத்திருந்தது
அழகிய புண்ணியத்தையும்,
உலவிய கண்ணியத்தையும்..!
ஆம்,
புவனம் தேடிடும் அப்புனிதர் தானே
கண்ணை இமைப்போல்
கவ்மை காத்த எங்கள்
கண்ணியத்தென்றல் காயிதேமில்லத்!

தலைவரென்றால் இப்படித்தான் என
தகைசால் தலைவராய்
தலையாய தலைமையின்
தன்னிகரற்ற இலக்கணமாய்
தங்கமென வாழ்ந்து சென்ற சிங்கம் தானே -நம்
தரணி கொண்டாடும் காயிதேமில்லத்!

அங்கியென ஜிப்பாசூழ் 
சங்கைமிகு சமுதாய துடிப்பு!
அழகு தாடியில் அமைந்திருந்த 
பழகுதமிழ் வனப்பு!
துருக்கி தொப்பி அணிந்திருந்த 
சன்மார்க்க சிறப்பு!
தூரத்திலும் யாரும் தூற்றமுடியா
தூய்மைவாழ்வின் சொலிப்பு!
மறைந்தும் புகழ் மகுடம் சூடி வாழும்
மாமேதை மனம்நிறை காயிதேமில்லத்!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


03 ஜூன் 2012

பழைய தென்றல்!





இளைய தென்றல்
இதமாக வீசுதே
பழைய ஞாபகம் 
படமெடுத்து ஆடுதே!

என்னருகில் நீ இருந்த
அந்நாளய நினைவெல்லாம்
இந்நாள் நெஞ்சில் வந்து சேருதே!

ஒன்றாய் கூடி பேசித்திரிந்து
நன்றாய் இருந்த நாழிகைகள்
நறுஞ்சுவை அமுதம் வார்க்குதே!

உன் கோபத்தைக் கூட
ஒரு கோலமாய் தானடி பார்த்தேன்,

சாபம் இட்ட பொழுதுகளாய்
தாபம் தாங்காமல் தவித்த நாட்கள் ஒரு
போதும் மறக்கத்தான் ஒன்னுமோ!

தலையணையாக மாறிய உன் மடிமீது
தலைவைத்து சில கீதம் இசைப்பேனே
அடியே! உனக்கு நான்
பூ கொடுத்த நாட்களும்
நீ புன்னகை உதிர்த்த நேரமும் 
நானுன்னை புரியாமல் தவித்த காலமும்
என்னால் மறக்க முடியாது (எழுதியது 4-4-1997 இரவு 10.35)

**************************************************************


அவளை நினைத்து
எழுத அமர்ந்தாள்
எழுதும் கவிதைகூட
சில சமயம்
உணர்ச்சி வசப்பட்டு
ஒரு முத்தம் கொடு
கொஞ்சம் முந்தானைக்கொடு
எனக்கேட்குமோ என அச்சப்படுகிறேன். (எழுதியது 21-4-1997)


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


குறிப்பு: இரவு பகலாக பல கவிதைகளை மட்டுமே எழுதிக்குவித்த அந்நாட்களில் உதிர்ந்த கவிகளில் மேற்கண்டவைகளும் அடக்கம்.