12 ஜூன் 2012

பண்பாளர் பாவாஜான் மாமு


படத்தில் இருப்பது ஜனாஃப்.பாவாஜான் மாமு (எ) படே.அப்துல் கபூர் ராவுத்தர் என்ற சிறப்புயர் மனிதர். இப்படம் சென்ற ஆண்டு பிப்ரவரி எட்டாம் நாள் (08-02-2011) எடுத்தது, ஊர் சென்றிருந்த சமயம் வாரம் சில நாட்களாவது எனது மகன் நளீரையும், தங்கை மகன் சமீஹையும் அழைத்துக் கொண்டு வழுத்தூர், அய்யம்பேட்டை எல்லையில் இருக்கும் ரயில் வண்டி நிலையத்திற்கு மாலை நேரத்தில் சென்று ரயில் காட்டிவிட்டு சற்றே இயற்கை சூழலில் உலாவி வரும் எல்லா நாட்களிலும் அங்கே பாவாஜான் மாமு அவர்களின் பிரசன்னம் இல்லாதிருக்காது. ஒவ்வொரு நாள் மாலையிலும் சரியாக நாலரை மணிக்கெல்லாம் வீட்டை விட்டு புறப்பட்டுவிடுவாராம், ஒரு நாள் விடுபட்டாலும் சோர்வு வந்துவிடும் என்றார், நடைப்பயணமாக ரயில் நிலையத்திற்கு வந்து அங்கும் நீண்ட நேரம் மாலை மயங்கும் வரை உலாவிவிட்டு பிறகு அவர் வீடு நோக்கி புறப்பட்டால்... ஏழு மணிக்கு போய் சேர்வதை மோட்டார் சைக்கிளில் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அவர் புறப்பட்டு முக்கால் மணி நேரம் பிந்தி ரயில்நிலையத்திலிருந்து புறப்படும் நான், அவரை மேலவழுத்தூர் கடைத்தெருவில் வந்து கண்டு கொள்வேன். அன்றைய ஒவ்வொரு சந்திப்பிலும் அவர் சிந்திய பாசமும் பரிவும் மனதில் இன்றும் நினைக்க நினைக்க இனிப்பவைகள். என் மீதும் என் தாய் தந்தையர் உள்ளிட்ட குடும்பத்தின் எல்லா நபர்கள் மீதும் சிறந்த அன்பு கொண்டவர் அதை அவரது அளவளாவலிலேயே கண்டு கொள்ளமுடிந்தது.

அந்த ரயில் நிலைய சந்திப்புக்களில் எனது தந்தை வழி பாட்டனார் பாவாஜி பாய் (எ) ஜனாப்.முஹையதீன் பாட்ஷா ராவுத்தர் பற்றியும் எங்கள் குடும்ப பின்னணிகள் குறித்தெல்லாம் அவர் பகர்ந்ததில் தான் பல விசயங்களே நான் அறியவும் வாய்பாக இருந்தது. எனது நன்னியம்மாவிடம் மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டவர் அவர்களது உடல்நிலை சீரின்மையின் போது பலமுறை வந்து பார்த்து ''நான் புதுமாப்பிள்ளையாய் இருந்த காலங்களில் நிறைய முறை இவர்கள் சமைக்க சாப்பிட்டிருக்கிறேன்'' என்று நன்றியுணர்வோடு பழைய எண்ணங்களை என் தாயாரிடம் சொன்னாராம், என் பெரிய தந்தையின் மகள் தங்கை நஸ்ரினின் மிகச்சிறிய வயதின் அகால மறைவு குறித்து பெரிதும் வருத்தப்பட்டார். யாரும் எப்போதும் அவரின் பேச்சில் எல்லா வார்த்தைகளிலேயும் எல்லாரையும் அது மிகச்சிறிப பிள்ளைகளாக இருந்தாலும் கூட அவர் மிகுந்த மரியாதையாகவே விளிப்பதை.., அழைப்பதை.., நினைப்பதை… கண்டு கொள்ளலாம். பாரம்பரிய குடும்ப பிணைப்புகளில் அவர் கொண்டிருந்த அதிகப்படியான பிடிப்பு இன்றெல்லாம் எல்லோரும் படிக்க வேண்டிய முதன்மையான விசயம். புராதன இஸ்லாமிய விழுமியங்களில் அவரின் தெளிவு நான் உணர்தது.

தனது சிறப்பான மனைவி மர்ஹூமா.பல்கீஸ் அம்மாள் அவர்களின் திடீர் மறைவு அவரை மிக துன்பத்தில் ஆழ்த்தியது. கருத்தொருமித்து காதல் கொண்ட பேடைகளில் ஒன்று ஒன்றை இழந்தால் வரும் பிரிவுத்துயர் தாங்கத்தான் ஒன்னாதது என்பதை அவரின் சொற்கள் அன்றைய தினங்களில் எனக்கு உணர்த்தியது. மச்சி என்று தான் எல்லோரும் அழைப்பது போல அவரும் தன் அன்பு மனைவியை சொல்லி.. சொல்லி நினைவு கூர்ந்தார். ‘’மச்சி அப்படி குடும்பத்தில் அரவணைபாக இருக்கும், மச்சி அதில் ஆர்வமாக இருக்கும், மச்சி இப்படியெல்லாம் செய்வார்’’ என்றெல்லாம் தனது வாழ்க்கை துணையின் சிறப்பினை சொல்லி நெகிழ்ந்தார். என்ன தான் ஆதரவு இருந்தாலும் அன்புநிறை மனைவியின் பிரிவுத்துயர் தாங்காது அந்த உள்ளம் ஏங்கியது.. ‘’நீ ஏன் தான் என்னை இப்படி விட்டு விட்டு போனாயோ..’’ என அவரது உள்ளம் வாடியது உணரமுடிந்த ஒன்றாக இருந்தது.

இரவு ஒன்பது மணிக்கு மேல் சாலைத்தெருவின் அவரது பழைய வீட்டை நான் கடக்க நேர்கையில் மிகப்பழைய தமிழ் பாடல்கள் ஒலிக்க அந்த ஆத்மா தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கும்... இரவு அறையில் குமிழ் விளக்கு எறியும்… அந்த நேரத்து அவரின் மனநிலையை சற்றே யூகிக்க முடியும் என்னால்! ஆனாலும் என்ன செய்ய முடியும்…, அவரின் ஜன்னலை நோக்கிய ஒரு பார்வையுடனும், ஆதங்கங்களுடனும் என் கால்கள் அவரது வீட்டை கடக்கும்.

‘’ஜென்டில் மேன்’’ என்று சொல்லுவார்களே அந்த சொல்லுக்குரியவர் இவர் தான், நல்ல இதயம் கொண்ட இவருக்கு ஏனோ மருத்து உலகம் இதயக்கோளாறு இருக்கிறது என்று சொன்னது… அதற்கும் மருத்துவம் பார்த்துத்தான் மிக கவனமாக தன் உடலை வைத்துக்கொண்டார் ஆனாலும் அந்த இதயம் எதையோ தேடியது… அதனளவில் இன்று சென்று சேர்ந்தும் கொண்டது. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)

அலுவலகம் விட்டு வந்து சற்றே என் அறையில் அமர்ந்த எனக்கு ஈ.பி.ஜே.குலாபு தொலைபேசியில் சொன்னார்.. சற்றும் எதிர்பார செய்தியான இது மனம் முழுவதும் கவலை மேகத்தை சூழ செய்துவிட்டது, உடன் மகனார் சலீமுக்கு தொடர்பு கொண்டு இரங்கலை பகிர்ந்து கொண்டேன். இறைவன் அவரின் இழப்பால் வாடிடும் எல்லா பிள்ளைகளுக்கும், குடும்பத்தாருக்கும் சப்ரன் ஜமீலா-வெனும் மேலான பொறுதியை அளிப்பானாக!

யார் எப்படி போனாலும் அடுத்த வினாடி மறந்துவிட்டு மற்றதை தொடரும் உலகம் இது... ஆனாலும் இம்மாதிரி பண்பாளர்கள் என்றும் நினைத்துப் பார்க்கப் பட வேண்டியவர்கள். தனது செயல்பாடுகளாலேயே சொல்லாமல் நிறைய கற்றுக்கொடுக்கும் களஞ்சியங்கள் இவர்கள். பாவாஜான் மாமு போன்ற நல்ல உள்ளங்களின் எண்ணிக்கை உலகில் அருகி வருவது வருத்தமான செய்தி. யாருக்கும் தீங்கு நினைக்காத இன்று மறைந்த அன்னாரின் ஆத்மாவை எல்லா விதகங்களிலும் சிறப்பாக்கி சாந்தி அடைந்த ஆன்மாவாக தன் இரசூலின் நேசர்களின் கூட்டத்தில் சேர்த்து அழகுபடுத்த வல்ல அல்லாஹ் போதுமானவன். ஆமீன்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: