05 டிசம்பர் 2021

சம்சுதீன் காசிமி சர்ச்சை


சம்சுதீன் காசிமி பெண்களை தவறாக விளித்து சொர்க்க நரக ஃபத்வா கொடுத்த வீடியோ பரவலாக பரப்பப்பட்டு கொண்டிருக்கிறது, இது ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றாக பகிரப்பட்டது இப்போது சூடுபிடித்து ஓரிரு நாட்களாக மேலதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இவர் சென்னை மவுண்ட் ரோடு மக்கா மஸ்ஜிதில் இமாமாக பணியாற்றியவர், அங்கே இமாமத் செய்தபோது அவருடைய பயான்கள் எல்லாம் இது போலவே தான் இருக்கும்.
இப்போது பேசியதற்கு கொஞ்சமும் குறைவாக இருக்காது அதிலும் கூடுதலாக வஹாபிஸ சிந்தனை மேலோங்கியிருக்கும். வெறி பிடித்தது போல் தான் கத்துவார் அவரை ரசிக்கவும் அவரை உசுப்பேற்றி கத்த விட்டு பார்க்கவும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும் இப்போதும் இருக்கிறது.
தான் ஒரு பழமைவாத சிந்தனையில் மூழ்கியவராக வஹ்ஹாபியிஸ கொள்கையில் இருப்பவராக இருந்தாலும் அப்படி இல்லை என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார் ஆனாலும் தானே ஒரு தனி வஹ்ஹாபியிச கிளை போல ஆரம்பித்திருந்ததால் மற்ற இயக்கங்களையும் கொள்கைகளையும் விமர்சித்து பேசித் தீர்ப்பார். உண்மையில் அவர்களுக்கும் இவருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இருக்காது.
சென்னை மவுண்ரோடு பள்ளியில் இருந்து வெளியே வந்ததும் ஐஏஎஸ்களை உருவாக்குகிறேன் என்று கோச்சிங் சென்டர் ஆரம்பித்தார் சில மாணவர்கள் இவர் நடத்தும் செண்டருக்கு சென்றபோது நானெல்லாம் ஐயோ! இந்த ஆளிடம் செல்லக்கூடியவர்களின் நிலைமையை எண்ணி வருந்தினேன்.
இவர் 90களில் நபிகள் நாயகத்தை பற்றியும் அவர்களுடைய தனித்தன்மைகளை பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய போது அந்த நேரங்களில் "மக்கா மஸ்ஜித் இமாமே மக்காக பேசலாமா" என்ற ஒரு துண்டு பிரசுரத்தை எங்கள் ஊர் வழுத்தூரிலிருந்து தஞ்சை மாவட்டம் முழுதும் வெளியிட்டோம்.
ஒரு சமூக வலைதளத்தில் பேசக்கூடியவர் குறைந்தபட்ச நாகரிகத்தைக் கூட கடை பிடிக்க வில்லை, இவர் ஒருவர் மட்டும் தான் சொர்க்கம் நரகத்திற்கு ஹோல்சேல் ஏஜென்ட் எடுத்து இருப்பது போல எல்லா பயானிலும் பேசுவது போல இப்போதும் பேசியிருக்கிறார்.
இவர் போன்றோரை சமூகத்திலிருந்து ஒதுக்கி புறந்தள்ள வேண்டும் என்பதுதான் என் போன்றவர்களுடைய மனக் கிடக்கை.
இவர் போன்றோருக்கும் நாளுபேர் கொடிபிடிக்கிறார்கள் என்பதே சமூகத்தின் கன்றாவிக் கோலம்.
ஃபத்வா: இஸ்லாமிய தீர்ப்பு
பயான்: இஸ்லாமிய மார்க்க உரை
இமாம்: பள்ளிவாசலில் தலைமையேற்று தொழுகை நடத்துபவர்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

28 செப்டம்பர் 2021

சுல்தான் பாட்ஷா மாமு



அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் என்பது குறள். அது போல பொறாமையோ, பேராசையோ, வெறுப்போ, தீஞ்சொற்களோ பேசாத மிக பாமரத்தனமான மனிதர்.

வயது பார்த்து பழக்கம் கொள்வதெல்லாம் இவருக்கு தெரியாது சிறியவர்கள் முதல் எல்லோரும் இவரின் கூட்டாளிகள்.

என் மிகச்சிறுவயதில் பள்ளி விடுமுறை நாட்களில் இவரோடு என்போன்ற சின்னஞ்சிறுவர்கள் கூட்டம் பின்னால் போகும். காடோ செடியோ வயலோ வரப்போவெனச் சுற்றுவோம்..

அந்நாளில் ஒரு மொட்டை தென்னை மரத்தில் கிளிக்குஞ்சுகள் இருக்க, வளர்க்க விருப்பமா?வேண்டுமா எனக் கேட்டு எனக்கு பரிசளித்தவர். முடியோ சிறகுகளோ முளைக்காத அதை பிள்ளை போல வளர்த்ததும், ஈராண்டுக்கு பின் பெரிதாக பின் பறந்து சென்றதும் தனிக்கதை.

சென்றமுறை ஊர் சென்றபோது கூட சந்தித்து மகிழ்ந்தேன் (போட்டோ அப்போது எடுத்தது தான்11th SEP'2020) இவர் போன்றோரை சந்திக்கும் போது தான் நம் ஆன்மாவே மகிழ்வது போல உணரலாம்.

சூதுவாதற்று மனதில் ஏதும் வைக்காமல் இருப்பவர்கள் இறைவனின் செல்லப்பிள்ளைகள். எவருக்குத் தான் இவரோடு ஆசை தீர கதைக்கவும், நேரம் செலவிடவும் அவாவிருக்காது. அவனும் விரும்பினான் போல..

செல்ல ஆன்மா விடை பெற்றுச் சென்றுவிட்டது.
இன்று சுல்தான் பாட்ஷா மாமு காலமாகிவிட்டார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
(அவனிடமிருந்தே வந்தோம் அவனிடமே மீள்வதுமாகும்.)

துஆ செய்வோம்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

பிரபல கவிஞன்

சொல்வளம் கொண்டவன்
தமிழ் மணம் நுகர்ந்தவன்
மொழியின்பம் அடைந்தவன்
வாட்டிய வறுமையை
ஓட்ட அறியாதவன்
மதுவைக் கைகொண்டு
மகிழ்ச்சி மனக்கோட்டை கட்டினான்
புவிமறக்க குடித்து விட்டு
கவிச்சொற்களைக் கொட்டினான்
அவன் மயக்க விரும்பி;
மயக்கம் அவனை மயக்கித் தனதாக்கியது
தீரும் மயக்கத்தில் மூழ்குபவனை
தீரா மயக்கம் தீரத் தீர்த்தது.
மதுவைக் குடித்து
போதையெனும் சொற்பமரணத்தை
வேண்டித் தழுவியவனை;
மரணமெனும் மது குடித்துவிட்டது
தீராத போதையில் தீர்ந்து போனான்
ஜா.மு
1:41பிற்பகல்
17-09-2021


காப்பியக்கோ சந்திப்பு :2021

காப்பியக்கோ Ahamed Jinnahsherifudeen அவர்கள் இம்முறை துபாய் வந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் சந்திக்க முடியாத சூழல்; நிலவிவந்த பெருந்தொற்று அச்சம், உடல்நிலை வயது காரணமாக சந்திப்பு நிகழவில்லை.
நிலைமை தற்போது சீராக மீண்டிருப்பதாலும், காப்பியக்கோ அவர்கள் தடுப்பூசிகள் இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்டுவிட்டதாலும், அடுத்தமாதம் ஆஸ்திரியா பயணம் இருப்பதாலும் சந்திக்க மிக ஆவல் பூண்டிருந்தார். எங்களுக்கும் ஆவல் மிகுந்திருந்தாலும் மேற்சொன்ன விசயங்களை கருத்திற்கொண்டு அமைதி காத்தோம்.
ஆனாலும் தேடிடும் வாஞ்சை நெஞ்சங்களின் கூடல் ஆத்ம மகிழ்விற்கு வழிவகுக்குமென்பதாலும், சந்திப்பு மனக்களைப்பை நீக்குமென்பதாலும் "அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும்" என்ற ஒப்பற்ற காவியத்தின் கூட்டணிச் சந்திப்பு மீண்டும் நிகழ்ந்தது.
காப்பியக்கோவின் அன்பிற்கும் ஆவலுக்கும் இணங்க காப்பியக்கோவை அவர்தம் மகனார் முஜீப் மிகுந்த கனிவோடு அழைத்துவந்திருந்தார், நேற்று எமீரெட்ஸ் டவரில் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் கழித்து, புரவலர் வெள்ளம்ஜி முகம்மது இக்பால் Jamal Mohamed Mohamed Iqbal அவர்களும் நானும் காப்பியக்கோவை நேரில் சந்தித்த்து அகமகிழ்ந்தோம்.
நேரம் போனதே தெரியாமல் பற்பல நினைவுகளையும் "அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும்" என்ற எங்கள் காவியம் குறித்தும் பேசி இன்புற்றோம்.
பிறகு காப்பியக்கோ தற்போது புதிதாக ஆக்கியிருக்கும் "மைவண்ணன்" என்ற இராமபிரானின் காவியத்தைப் பற்றியும் ஒரு இஸ்லாமியர் எழுதியுள்ள இராமகாதைக்காய் இலங்கை கம்பவாரிதி அவர்கள் தமக்கு செய்த தகைமை குறித்தும் பகிர்ந்தார் செய்திகள் செவிவழி புகுந்து உள்ளம் நிறைந்தது.
மேலும், இறைவனிடம் நபிகள் நாயகத்தின் வஸீலாவை முன்னிறுத்தி காப்பியக்கோ அவர்களால் எழுதப்பெற்றிருக்கும் இறையருள் மாலை குறித்தும் உரையாடினோம். அதை புரவலர் வெள்ளம்ஜி முஹம்மது இக்பால் அவர்களின் பெற்றோர் ஹாஜி.ஜமால் முஹம்மது - தாவூத் பேகம் இவர்களுக்கு சமர்ப்பணம் செய்த விருப்பத்தை பொருத்தத்தை அன்பை நெகிழச் சொன்னார். பிறகு அதை புரவலருக்கு அன்பாய் அளித்து மகிழ்ந்தார்.
இனிய உணவுகள் அன்பின் இசை நிறைந்த பகிர்வுகள் என உள்ளம் பூரிக்க சில புகைப்படங்கள் எடுத்து பிரியமாய் இனியொரு ஒன்று கூடலில் சந்திப்போமென விடைபெற்றோம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கொடிது


போர் தான் எத்தனை கொடிது..
ஆற்ற முடியாத வலிகளை சுமக்குமாறு
ஆயுதங்கள் எங்களை புணர்ந்தன
ஆறுதல் தரும் வழியை காட்டத்தான் ஒரு ஆயுதத்தையும் காணோம்..!!!



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

13 செப்டம்பர் 2021

பெருங்காதல் உணர்வோடு - (பெண் குரலில்)


நிச்சயம் நாயகத்தின் நேசர்கள் மகிழ்வுடன் கேட்டு பரவசம் அடைவீர்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களது அகமியத்தைக் கூறும் பாடல் உங்களுக்காக இதோ..
2017ல் அபுல் பரக்காத் குரலில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற இப்பாடலை அன்பு நண்பர் ஹாஜித் இப்ராஹிம் Hajith Ibrahim சேனலில் வெளியிட நான் அனுப்பிய போது பத்துக்கும் மேற்பட்ட முறை இப்பாடலை கேட்டு உடனே எனக்கும் போன் செய்து சிலாகித்தார்.
இப்போது அவரே ரீ- ரிக்கார்டு செய்து ஷ்மாய்ளா என்னும் சகோதரி பாடி இப்பாடல் வெளிவந்திருக்கிறது.
பாடல் வரிகளும் யூ டியூப் கமெண்டில் உள்ளது.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது வ அலா ஆலிஹி வசஹ்பிஹி வஸல்லம்.
- ஜா.மு.


பல்லவி:
பெருங்காதல் உணர்வோடு நபியை 
பேரருளாக தந்தானே புவியில் – அவன்
பெருங்காதல் உணர்வோடு நபியை
பேரருளாக தந்தானே புவியில்

அனுபல்லவி:

தன் நூராக வைத்திருந்தான் ஒளிவாய்
பின்பு தாஹாவாய் அமைத்தானே நிறைவாய்

சரணம் :

அமாவெனும் இருளில் அறியாது கிடந்தான்
கமாலெனும் நிலையையே புரியாது இருந்தான்
சமாவெனும் வானும் விண்கோள்கள் இல்லை
நபி சர்தாரைக் கொண்டே  சமதவனை அறிந்தான்                                                                       
***
ஆதத்தின் சாரம் அவன் சமைக்கும் முன்பே
அஹ்மதின் நாதம் அவன் ஆக்கிவைத்தான்
நீதத்தின் ஓசை நிலமெல்லாம் ஒலிக்க
போதத்தின் வடிவாய் நபி யாஸினை தந்தான்.
***
நல்வழிகாட்ட பலரை நபியாக்கி வைத்தான்
நபித்துவ அசலாய் நம் மஹமூதை அமைத்தான்
ஃகலீல் கலீம் ரூஹென்று நபிமார்கள் வந்தார்
ஹபீபென்று அன்பால் அஹ்மதனில் லயித்தான்
***
மூஸா நபிக்கோ ஊசிமுனைக் காட்சி
முஹம்மதற்ளித்தான் மிஃராஜெனும் மாட்சி
எல்லோரும் அஞ்சும் மஹ்சரின் நாளில்
மகாமன் மஹ்மூதில் நீர் இருப்பீர் என்றான்
***
ரப்புல் ஆலமீன் என தன்னை விண்டவன்
ரஹமதுலில் ஆலமீன் எனநபியை விளித்தான்
இப்பெரும் சிறப்பெல்லாம் ஒருநபிக்கும் இல்லை
இனியுகம் ஜகமெதற்கும் நபிமஹ்மூதே என்றான்


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

குறிப்பு: சங்கைநபி ஒலிப்பேழையில் 2016ல் பாடகர் அபுல் பரக்காத் பாடி  வெளிவந்து மிக வரவேற்பை பெற்ற பாடல்.


02 ஜூன் 2021

முஸ்லிம் லீக் தலைமைக்கு கண்டனங்கள்


முஸ்லிம் லீக் தலைமை நிர்வாகிகள் அதற்கு முடிவுரை எழுதும் செயலில் மும்முரமாக இருக்கிறார்கள்.
தஞ்சை மாவட்ட முஸ்லிம் லீக் இணையத்தில் கூடி கடந்த காலத்தில் கட்சி, மாநில தலைமை செய்துள்ள தவறுகள், அடக்குமுறை, துரோகம் மற்றும் மாவட்டம் செய்ய மறந்தவைகள், இப்போதுள்ள களநிலவரம் வருங்காலத்தில் ஆற்றவேண்டிய செயல்பாடுகள் என பல கருப்பொருட்களில் பலரின் கருத்துக்களை கேட்டறிந்து அதில் பலரும் பலவித கருத்துக்களை மிக கடுமையாக சொன்ன போதிலும் அதனை சீர்திருத்தி நாகரீகமான முறையில் கோபதாபங்களுக்கு அப்பாற்பட்டு சுயபரிசோதனைக்கும் வருங்கால கட்சி வளர்ச்சிக்குமான உரிய தீர்மானங்களை அனுப்பி வைத்த போது அதை ஏற்க மறுத்து அவர்களை நோக்கி வரும் கேள்விக்கணைகள் என்பதால் அது பதியப்படக்கூடாது என மணிச்சுடரில் அதை விலக்கிவிட்டு மாவட்ட முஸ்லிம் லீக்கினரின் எண்ணங்களை கருத்துக்களை இருட்டடிப்பு செய்யும் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் செயல்பாடுகள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. வன்மையான கண்டனங்கள்.
நான் கடந்த பத்து ஆண்டுகளாக கவனிக்கும் அடக்குமுறை சர்வாதிகார போக்கு நீடித்தால் கட்சியில் இருக்கும் சிலரும் சடைவடைந்துவிடுவர். தங்களின் பதவியை தக்கவைக்க கட்சியை சீரழிக்கும் செயலால் வரலாறு மோசமான பக்கங்களை எழுதிக்கொண்டுள்ளது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
1-06-21

30 மே 2021

கி.ரா. புகழஞ்சலி


நேற்று (28-05-2021) வட்டார இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்’, ‘தலைசிறந்த கதைசொல்லி’, ‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ என்றெல்லாம் போற்றப்படும் கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் நினைவேந்தல் நிகழ்வு அமீரகத்தின் உம்முல் குவைனில் அமைந்துள்ள மாங்ரூவ்ஸ் UAQ, the Mangroves. சதுப்புநில கடற்கறையில் சிறப்பாக நடந்திருந்தது.
ஒன்றரை ஆண்டுக்கு பிறகு அமீரக எழுத்தாளர்கள் & வாசகர்கள் குழுமம் சார்பில் நடந்த கி.ரா. நிகழ்வேந்தலில் நண்பர்களை சந்தித்ததில் பெருமகிழ்வு.
நிகழ்வு சம்பிரதாய இரங்கல் கூட்டம் போல அழுது ஒழுகாமல் தொன்னுற்று ஒன்பது வயது வரை வாழ்ந்து கரிசல் இலக்கியத்தில் உச்சம் தொட்டு மறைந்த பிதாமகனை கொண்டாடித் தீர்த்த மகிழ்வான நிறைவான நிகழ்வாக அமைந்தது.
நிகழ்வில் அறிமுக உரையை Bilal Aliyar நிகழ்த்தி கி.ரா வை அறிமுகம் செய்து வைத்து பேசி அவரின் மறைவிற்கு அரசு மரியாதை வழங்கி எழுத்தாளர் சமூகத்தையே மகிமை படுத்திய முதல்வர் M. K. Stalin அவர்களுக்கும் அதற்கு முன்னெடுப்பை செய்த தொழில்துறை அமைச்சர் அண்ணன் Thangam Thenarasu அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
நிகழ்வில் கி.ராவின் முகஸ்துதி என்ற கதையை முகஸ்துதி குறித்தும் அதன் வகைகள் குறித்தும் அது எப்படி அழிவிற்கு வழி வகுக்கும் சிங்கம், நரி, கழுதை மூலமாக அவை கி.ராவின் வட்டார மொழியிலேயே மிக சுவாரஸ்யமாக பேசி அசத்தினார் நிழற்பட நிபுணர் Subhan Peer Mohamed. பேச்செல்லாம் சிரிப்பலை.
பஸ்பயணத்தில் அதுவும் கடுகடுப்பான நடத்துநர் மற்றும் இறுக்கமான சூழல் நிலவிய பஸ்பயணத்தில் ஒரு இளம்பெண் கைக்குழந்தையோடு ஏற அந்த பஸ்ஸில் பயணம் செய்தவர்களின் மனநிலையை எப்படி உற்சாகமாக மாற்றியது எத்தனை இயல்புள்ள்வர்களை எத்தனை முகபாவங்கள் உருவங்கள் கொண்டவர்களை கிரா ஒரு சகபயணியாக இருந்து கவனித்து மிகநுண்ணிய முறையில் கதையாக படைத்துள்ளார் என்று Jazeela Banu அவர்கள் கூறிய விதம் எல்லோரையும் கவர்ந்தது
அடுத்ததாக அன்பு அண்ணாச்சி Asif Meeran புறப்பாடு என்ற தலைப்பின் கதையை சொன்னால் கூட கி.ராவின் வட்டார வழக்கின் சுவையை தவற விட்டு விடுவோமோ என்று வாசித்தார்.
கிராமத்தில் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்து நிறைய பேரன் பேத்திகள் எடுத்த நஞ்சை புஞ்சைகள் கிராமத்து பெருங்குடியாக வாழ்ந்த அண்ணாரப்ப கவுண்டர் என்ற பெரியவரின் மரணப்படுக்கை பற்றியது, அவர் பல மாதங்களாகவே மரணப்படுக்கையில் கிடப்பதால் ஊரிலும் குடும்பத்திலும் எந்த விஷேசகாரியங்களும் செய்யமுடியாத அவர்கள் குடும்பம் சகிதமாக கிராமமே அவரது மரணத்தை எதிர்ப்பார்த்து கடைசியில் அவரின் கதையை முடிக்க எவ்வளவு முயற்சி எடுக்கிறார்கள்.. அத்தனைக்கும் ஈடுகொடுத்து அவர் உயிர் பிரிய மறுத்து தொடரும் முயற்சிகள் பின்பு ஒருவழியாய் மரணம் நிகழ அவரை சுடுகாடு கொண்டு செல்வதுவரை அவ்வளவு நகைச்சுவையாய் கிராமத்து அசல் தத்ரூபங்கள் குறையாத கிராவின் அந்த கதை கிராமத்து கதைமாந்தர்களை கண்முன்னே நிறுத்தியது.
முத்தாய்ப்பான மூன்று சிறப்பு பேச்சாளர்களோடு நிகழ்வு முடிந்தது. ஆசிபண்ணன் புத்தகம் அனுப்பியும் என் போன்றோர் வெட்டித்தனமாக பொழுது கழித்து படிக்காததினால் பேசவில்லை.
குழுமிய இடம் அதிகம் பேர் அறிந்திராத அழகிய சதுப்புநில கடற்கரை. நிகழ்விற்கு வந்திறங்கிய போது வடை, டீ, சமோசா, பக்கோடா தொடங்கி உட்கார சேர், விரிப்புகள், டிஸ்யூ, தண்ணீர் பாட்டில்கள் பிறகு நிலாச்சோறாக டேஸ்டி பிரியாணி, சிக்கன்65, பிரட் ஹல்வா என Balaji Baskaran Kausar Baig Bilal Aliyar, Ahamed Zayed என குழுமத்தின் அன்புள்ளங்கள் அசத்திவிட்டனர். தவிர அபுதாபியிலிருந்து Firdhous Basha நித்யா குமார் பால்கரசு போன்றோரும் துபாய் ஷார்ஜாவிலிருந்து Jazeela Banu &Family, Charu Mathi - Shroo, Sabeer Ahamed மற்றும் பல நண்பர்கள் ( மன்னிக்கவும் பெயர் தெரியவில்லை) வந்திருந்தனர்.
எழுத்தாளளின் அதிர்வலைகள் அவன் இறந்தாலும் ஓய்வதில்லை என்பதை நேற்றைய நிகழ்வு உணர்த்தியது.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
29-05-2021