29 ஆகஸ்ட் 2011

இதயங்களில் இளம்பிறை விதைப்போம்!


எனது தந்தையார் மரியாதைக்குரிய ஜனாப். ஜாபர் சாதிக் அவர்களோடு கரம்பற்றி அவ்வளவாக உலகம் தெரியாத அந்த ஏழு அல்லது எட்டு வயதில் திருச்சியா அல்லது மதுரையா என்று கூட இன்றும் எனக்கு நினைவுக்கு வராத... நான் அழைத்துச்செல்லப்பட்ட‌ அந்த மிகப்பிரமாண்டமான முஸ்லீம் லீக்கின் கூட்டம் இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை.. மிக நீளமான மேடை.. மேடை எங்கிலும் மிக நீண்ட வரிசையில் தலைவர்கள்.. நடுநாயகமாக சிராஜுல் மில்லத் மற்றும் சம்சீரே மில்லத் உட்பட பல தலைவர்கள், மேடையிலிருந்து எங்கோ நான்.. அங்கிருந்து பார்க்கையில் மேடை மிகச்சிறியதாக எங்களுக்கு தென்பட, என் தந்தையாருடன் அமர்ந்து ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளின் ஊடாகத்தான் பார்க்க முடிந்த அந்நிகழ்வு இன்னும் என் நெஞ்சில் பசுமரத்தானியாய் பதிந்திருக்கிறது.

நிகழ்ச்சிக்கு முன் நடந்த பேரணி, தொடரோட்டாம்.. எல்லாம் நேற்றய கனவில் நான் கண்டது போல என் நெஞ்சத்திரைகளில் இப்போதும் வந்து வந்து போகிறது, அது என்னில் நான் அறியலேயே மனரீதியாக நிகழ்த்திய முஸ்லிம் லீக் சார்பான ஆராய்ச்சிகளுக்கும்.. தேடல்களுக்கும்.. காரணமாகி அதன் மீது எனக்கு மரியாதையும்.. பற்றையும் விதைத்தது என்றால் மிகையில்லை! இவ்வளவுக்கும் நான் பள்ளிப்பருவங்களிலோ அல்லது கல்லூரி கால முன்நாட்களிலோ கூட லீக் உடனான தீவிர களப்பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டவனில்லை அதுவெல்லாம் முடிந்து சுய சிந்தனையுடன் எப்போது நான் சமூக ஓடையில் கலக்க நேர்ந்ததோ அப்போது என் சிந்தனையில் ஒளிர்ந்த.. மிளிர்ந்த ஓரியக்கம் என்றால் அது முஸ்லிம் லீக் தான்.

சமூக அரங்கில் நாங்கள் தான் இப்போதைய மக்களின் விடிவெள்ளிகள் என்றும் இஸ்லாமியர்களுக்காவே இறைவனால் அனுப்பப்பட்ட இரட்சிக்க வந்த தேவதூதர்கள் என்றும் இழந்த உரிமைகளை மீட்டுத் தருகிறோம்.. உடைத்த பள்ளியை கட்டப்போகிறோம்.., இளைஞர்களே! வாருங்கள்.. வாருங்கள்.. என்றெல்லாம் எத்தனையோ புதுப்புது இயக்கங்கள்.. கழகங்கள்.. ஜமாத்துக்கள்.. எல்லாம் வந்து அழைத்த போதிலும் அவைகளையெல்லாம் நாடாமல் நான் தேடி சென்ற இயக்கம் முஸ்லீம் லீக் என்ற தாய்சபை என்றால் அதன் பின்னனியில் நான் சிறுவயதிலிருந்தே என் பாட்டனார் வாங்க படிக்க நேர்ந்த மணிச்சுடர் பத்திரிக்கையும் அதில் ஒவ்வொரு பிரச்சனை குறித்து முஸ்லிம் லீக்கின் கருத்தும்.. நிலைப்பாடும்.. நம் தலைவர்களின் செயல்பாடுகளும் தெரிந்திருந்ததும் மேலும் புத்தகங்கள் மூலமாகவும் மற்றும் முதிர்ந்த‌ சரித்திரம் தெரிந்த பெரியவர்களை சந்தித்து நான் பெற்ற வரலாற்றறிவும் தான் என்பதே இங்கு உண்மை!

மேற்படி நிகழ்வுகளை நினைவு கூர்ந்ததன் பின்னணி என்னவென்றால்..சமூகத்தில் சாதாரணத்திலும் சாதாரண குடிமகனான என்னை.. என் சிந்தனையை லீக் எப்படி ஆக்கிரமித்தது என்ற ஆராய்ச்சியும்.. இப்போதுள்ள சூழலில் நாம் எப்படி உத்வேகத்தோடு சமூகத்தில் நம் இயக்கத்தை புதுப்பித்துகொள்ள வேண்டும் என்று சிந்தனையும் தான். ஆக இளம்பசும் நெஞ்சில் இடப்பட்ட பொறியும்.. தொடர்ந்து என் சிந்தனைக்கு பலவகையிலும் கொடுக்கப்பட்ட இயக்கத்தின் தகவல்களுமே அதற்கு பிரதானம்.

அவ்வாறாயின் இன்றைய இளம்நெஞ்சங்களில் இளம்பிறையை எவ்வாறு பதிப்பது பழைய வரலாற்றுச் சுவடுகளோ தழிழ் இஸ்லாமிய சமூகம் கடந்து வந்த பாதைகளோ.. நேற்றைய அரசியல் பக்கங்களோ.. நம் கண்ணியமிக்க தலைவர்களின் முற்போக்கு சிந்தனைகளோ அவர்கள் இந்த சமூகத்தினை வழிநடாத்திய பாங்குகளோ.. தெரியாத அல்லது தெரிவிக்கப்படாத மேலும் தாய்சபை சார்ந்த அதனோடு கூடிய சூழலோ நெருங்காத மற்றும் ஏதேதோ இயக்கங்களால் கவரப்பட்ட அதுவே நமக்கு நலன் காக்கும் என்று பொய்யெண்ணம் புகுத்தப்பட்ட நமது இளம் தலைமுறையினர் இங்கே வந்து நிலைபெறுவது எங்ஙனம்.. அவர்கள் எல்லாமே தாமாக முன்வந்து நமது இயக்கத்தினை பின்பற்றி நிற்பதோ உடன் பிறைக்கொடி ஏந்தி வலம் வருவதோ இயலாத காரியம் அவ்வாறெனில் அவர்களை ஈர்க்கும் அல்லது இழுக்கும் கைங்கரியம் தான் யாது!

நமது சமுதாயத்தை தகர்க்க இனி தான் யாரும் வரவேண்டியது என்பதெல்லாம் இல்லை. பலரும் பலவித முகபாவங்களோடும், பொய்த்தோலோடும் மக்களை மயக்கி தயக்கம் இன்றி இயக்கம் நடத்திவரும் இந்த காலகட்டத்தில் நமது பிரச்சார யுக்தி நவீன மனோதத்துவ முறையில் அதி தீவிரப்படுத்தப்பட வேண்டும்.. மக்களை, இளைஞர்களை, பெண்களை குறிப்பாக நான் முன்பு கோடிட்டுக்காட்டியது போன்று இளந்தளிர்களான மாணவச் செல்வங்களை மனோ தத்துவ ரீதியில் அணுக வேண்டும். அவர்களின் இதயங்களை மீண்டும் மீண்டும் தொட்டுக்கொண்டே இருக்கும் தகவல்கள் தரப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும், அவர்களின் கண்கள் பதிக்கும் இடங்கள்.. காதுகள் வாங்கும் ஒலிகள், மனம் நாடும் விசயங்கள் என இவைகளில் நம் இயக்கத்தின் செய்திகள் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

அந்தக்காலங்களில் மேடை பேச்சுக்களும், செய்தித் தாள்களும் தான் மக்களை சேரும் அல்லது சந்திக்கும் வகையாக இருந்தது ஆனால் இன்றோ பற்பல விதங்களில் மக்கள் தொடர்பு மிகைப்பட்டு கொண்டே இருக்கிறது. உண்மையை சொல்லப் போனால் இன்று பொய்க்காலூன்றி ஆடிக்கொண்டிருக்கும் இயக்கங்களின் தற்காலிக வளர்ச்சிக்கு மேடைகள் மற்றும் செய்தித்தாள்கள் மட்டுமின்றி அவர்கள் இது போன்ற நவீன சாதனங்களை பயன் படுத்திக்கொண்டது மிகப்பெரிய காரணி.

நமது பிரச்சாரப்படை என்பது தாய்ச்சபை தலைமை அமைக்கும் அதி நவீன பிரச்சாரக்குழு மட்டுமல்லாது நமது இயக்க சகோதரர்களான நாம் ஒவ்வொருவரும் பிரச்சாரப் படையாக பரிணமிக்க வேண்டும். முக்கியமாக லீக் தொடங்கப்பட்ட ஆதியிலிருந்து சுதந்திர காலகட்டத்தில் அதன் வீரிய செயல்பாடு, தியாகம், அதன் தலைவர்களின் வலிமை, பெற்றுத்தந்த நலன்கள் இவ்வாறென நமது மறந்து போன அல்லது மறைக்கப்பட்ட வரலாறுகளை இன்றைய ஊடங்களில் மறுபதிப்பு செய்யவேண்டும்.

பிஞ்சு நெஞ்ங்கள் இஸ்லாமிய நெறியை கற்க செல்லும் மதரஸாக்கள் தமிழகம் எங்கும் நடைபெற கேரளாவைப் போன்று நாம் முழுதீவிரமாக செயல்பட்டு நடைமுறை படுத்தப்பட வேண்டும் அவ்வாறு நடைபெறும் மதரஸாக்களின் உஸ்தாதுமார்கள் நமது பழைய வரலாறுகளை சொல்லும் அளவுக்கு ஆங்காங்கே நமது பிரைமரி மற்றும் இளைஞரணி செயல்பட வைக்கப்பட வேண்டும். அவ்வாறு உஸ்தாதுமார்கள் செயலாற்ற அவர்களுக்கு போதிய ஆவணங்களுக்கும் ஊதியத்திற்கும் ஏற்பாடு செய்து தரப்படுதல் வேண்டும்.

முக்கியமாக ஆலிம்கள் உருவாகும் மதரஸாக்களில் நமது கவனம அதிகம் இருக்க வேண்டும். அந்த மதரஸாக்களுக்கு நமது பத்திரிக்கைகளையும் நமது இயக்க செய்திகளையும், வரலாற்று ஆவணங்களையும் சென்று சேர்க்க வேண்டும். அந்தந்த வட்டார மதரஸாக்களின் நிகழ்ச்சிகளை நாமே நடத்தி அதில் நமது கருத்துக்களை பதிக்க வேண்டும் இவ்வாறு வெளியாகும் ஆலிம்கள் மட்டுமே அவர்கள் பணியாற்றும் பள்ளித்தலங்களின் உரைகளில் முஸ்லிம் லீக்க்கின் செய்திகளை மக்கள் மன்றத்தில் எடுத்துச் செல்வார்கள். இப்போது வரை நமது இயக்கம் மட்டுமே சமுதாய இயக்கமாக எல்லா ஜமாத்துக்களாலும் அங்கீகரிக்கப்படுவதாக இருப்பது நமக்கு ஆருதல் என்றாலும் இதை நினைத்தே நாம் செயல் மவுனம் காத்தால் வருங்காலம் என்பது கேள்விக்குறியாகும் ஆகையால் நாம் இன்றே களம் இறங்குதல் சாலச் சிறந்தது.

இஸ்லாமியர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் நாமே சென்று அதன் நிர்வாகத்தை அணுகி பள்ளிவிழாக்கள் அல்லது சிறப்பு தினங்களில் பள்ளிவளாகத்தில் உரை நல்கி மாணவர்களின் மனதில் ஊடுருவுதல் முக்கியம். வாட்டாரம் தோறும் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று அந்த சமயங்களை நாம் பயன்படுத்திக்கோள்ளுதல் வேண்டும்.
இத்தோடு தொருமுனைப்பிரச்சாரங்கள்.. அந்தந்த பகுதியில் அடிக்கடி உள்ளூர் இயக்க பொதுக்கூட்டங்கள், இப்படி என பல நிகழ்வுகளை அடிக்கடி நிகழ்த்தி செய்திகள் பறிமாறப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும். மேலும் பிரச்சாரத்திற்காக சென்று போன தலைமுறைகளில் இருந்த வீர தீர பேச்சாளர்கள் மீண்டும் நடமாடுவது போன்ற பிரிதொரு கர்ஜனை சூரர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

நாம் வீடு தோறும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை இக்காலகட்டத்தில் பயன்படுத்தத் தவறக்கூடாது.. ஏனெனில் இப்போதெல்லாம் ஒரு அரசியல் கட்சி என்றால் ஒரு டிவி சேனல் இருப்பது தான் அவர்களின் பலமாகவும் அடையாளமுமாகவே போய்விட்டது. ஆக நம‌க்கென ஒரு சேனலை தோற்றுவிக்கும் முயற்சியில் இறங்கப்பட வேண்டும் என்பது அவசியத்திலும் அவசியம், அதே நேரம் அதுவரை மற்ற தொலைக்காட்சி சேனல்களில் ஏதேனும் ஆவணப்படங்கள், விவாதங்கள், உரைத்தொகுப்புக்கள் என்றெல்லாம் நிகழ்ச்சிகளை தயார் செய்து மக்களின் இதயத்தில் இன்னும் இன்னும் இடம் பிடிக்கவும் புதிய தலைமுறை இளைஞர்கள், பெண்கள் இவர்களுக்கு நமது செய்திகள் மூலமாக இதய ஒளியூட்டி நேரான பாதைகாட்டவும் இது தான் காலம். இவ்வாறெல்லாம் நாம் முயன்றே ஆக வேண்டும்.

தவிர‌வும் நமது பிரச்சாரத்தில் வரலாற்று செய்திகள் சொல்லும், நமது இயக்க சாதனைகளை சொல்லும், நமது தலைவர்களின் மகத்துவம் பற்றி பேசும், தற்கால அரசியலில் நாம் செய்ய வேண்டியது இவ்வாறெல்லாம் குறும்படங்கள் எடுத்து இன்றைய காலகட்டத்தில் மிக அதிகமானவர்கள் மனவியல் ரீதியாகவே அடிமையாகிவிட்ட இணையங்களை பயன்படுத்தி அதில் நமது கருத்துக்கள் பறிமாறப்பட வேண்டும். நமது இயக்கம் சார்பாக இன்று இணையதளம் இருந்து செயல்பட்டு வருவது மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கும் அதே வேலையில் நமது தலைவர்கள் மற்றும் நமது பேச்சாளர்களின் காணொளிகள் தினம் தினம் அதில் வெளியாகிக்கொண்டே இருப்பது போல் ஏற்பாடுகள் செய்தல் வேண்டும். ஏனெனில் இன்றைக்கு மக்களிடம் சென்று சேரும் அதிவிரைவு மக்கள் தொடர்பு சாதனம் இணையமே.

இந்நாட்களில் நம்முடைய இயக்கப்பணிகள் நன்றே நடந்து வந்துகொண்டிருந்தாலும் கால சூழலுக்கேற்பவும், இருப்பதைவிட பிரச்சாரங்கள் இன்னும் தீவிரப்படுத்தவும் நவீனப்படுத்தவும் படுதல் வேண்டும் என்பதும் மேலும் அது எவ்வாறெல்லாம் மனரீதியாக எல்லாதரப்பினரையும் குறிப்பாக புதிய இளந்தளிர்களையும்,இளைஞர்களையும், பெண்களையும் நமது இயக்கத்திற்குரியவர்களாக ஆக்குதலோடு ஒரு அழகான ஆரோக்கியமான சமூகத்தை அமைக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தே பகிர்ந்து கொண்டோம். இதற்கு நாம் ஒவ்வொருவரும் முயன்றால் நமக்கு நாம் நாடும் சமூக புரட்சியும், மறுமலர்ச்சியும் வெகு தூரத்தில் இல்லை. ஏனெனில் இறைவனின் அருளுக்குறிய சமுதாய நலனையே நூறு சதம் தன் உயிர் நாடியாக கொண்டிருக்கும் இயக்கம் நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே! வரும் நூற்றாண்டுகளுக்கும் எடுத்துச்செல்லப்பட்டு மக்கள் சேவை செய்ய தகுதியான பேரியக்கம் நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே!!

நவீன பிரச்சாரம் குறித்து பேசும் இக்கட்டுரையில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் ஊடகவியளார் சகோதரர்.முதுவை ஹிதாயத்தின் பணி பாரட்டி நினைவுக் கூற தக்கது.



வழுத்தூர்.ஜே.முஹையத்தீன் பாட்ஷா
கொள்கைபரப்புச் செயலாளர்,
அமீரக காயிதே மில்லத் பேரவை, ஐக்கிய அரபு அமீரகம்.


மணிச்சுடர் ரமலான் சிறப்பு மலர் 2011-ல் இடம் பெற்ற கட்டூரை.

கருத்துகள் இல்லை: